Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Contract’ Category

Employment Opportunities & Education Facilities – Job Guarantee Schemes & Export Processing Zones

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008

பகல் கனவாகும் வேலை வாய்ப்பு

ப.செ. சங்கரநாராயணன்

ஆண்டுக்கு 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறப்படும் இந்தியாவில், வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மாநிலங்களவையில் அண்மையில் எம்.பி.க்களின் கூச்சல், குழப்பத்துக்கிடையே (மக்களவைத் தலைவருக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது) தாக்கல் செய்யப்பட்ட தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனத்தின் 61-வது அறிக்கையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், 55 கோடிப் பேர் 30 வயதுக்கு உள்பட்டவர்கள். அதில், வேலையில்லாதோர் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரித்துவரும் தகவல் கவலையளிப்பதாக உள்ளது.

1999-2000-ம் ஆண்டில் வேலையில்லாதோர் சதவிகிதம் 7.3 ஆக இருந்தது. 2004-2005-ல் 8.35 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக, (வளர்ச்சி விகிதத்தை விடக் குறைவு) மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், உழைக்கும் வயதுப் பிரிவினர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம் என்கிறார். (உழைக்காமல் திரிகிறவர்களைச் சேர்க்கவில்லை)

இதற்காக அமைப்புசாரா தொழில்துறையில், புதிய வேலை வாய்ப்புகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்பயிற்சி மையங்களை மேம்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் விவசாயத்தை விட்டு நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களை நாடுவோர் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்விளைவாக, உணவு உற்பத்தி குறைந்து, 2015-ல் உள்நாட்டு தேவைக்கு பெருமளவிலான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்படும் என, மூத்த விவசாய விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள ஆயிரக்கணக்கான கோடி கடன் தள்ளுபடி மட்டும், விவசாயிகளை ஒருபோதும், அவர்கள் சந்தித்து வரும் உண்மையான அவலங்களில் இருந்து மீட்டெடுக்காது.

தில்லி இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.என். ராஜசேகரன் பிள்ளை, நாட்டில் 836 மில்லியன் மக்கள் தினமும் ரூ. 20 வருவாயுடன், சுகாதாரமற்ற சூழலில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 546 மில்லியன் பேர் வேலையின்றித் தவிக்கின்றனர்.

33 சதவிகிதம் பேர் எழுத்தறிவு இல்லாதவர்கள். 12 சதவிகிதம் பேர் மட்டுமே, பள்ளிக் கல்வி முடித்தவர்களாக உள்ளனர்.

இந்தியாவில் ஏறத்தாழ 400 பல்கலைக்கழகங்கள் இருந்தும் (போலிப் பல்கலைக்கழகங்கள் தனி), 10 சதவிகிதம் பேர் மட்டும் கல்லூரிக் கல்வி பயிலும் நிலை வேதனையளிப்பதாக உள்ளது என்கிறார் ராஜசேகரன் பிள்ளை.

உயர்கல்வியை 11 சதவிகிதம் பேர் பெற்றுள்ளனர். அதில் 4.3 சதவிகிதம் பேர் பெண்கள்.

இதில் ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வோரில் 90 சதவிகிதம் பேர் பன்னாட்டு நிறுவனங்களில் சேர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

இந்நிலையில், 2007-ம் ஆண்டில் நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுப் பணிக்குச் செல்வோர் 28 சதவிகிதமாகவும், உயர்கல்வி கற்கச் செல்வோர் 33 சதவிகிதமாகவும் குறைந்துவிட்டனர். தாராளமயமாக்கல் கொள்கைகளால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பது, இன்னும் அறிக்கை அளவிலேயே உள்ளது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 34,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவிகிதத்துக்கும் குறைவே. (ராணுவத் துறைக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல்).

இந்தியாவின் 2.5 லட்சம் உள்ளாட்சிகளில் அடிப்படைக் கல்வியை மேம்படுத்தாமல் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாலோ, தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்தாமல் எண்ணிக்கையை உயர்த்துவதாலோ எவ்விதப் பலனும் ஏற்படப் போவதில்லை.

குறிப்பாகத் தமிழகத்தில் பாலிடெக்னிக்குகளை விட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதற்குக் காரணம் முற்றிலும் வணிகமயமாகி விட்ட உயர் கல்விதான்.

சாப்ட்வேர் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் கிடைக்கும் ஊதியமும், அத்துறையில் எப்பாடுபட்டாவது தங்கள் குழந்தைகளை நுழைக்க விரும்பும் பெற்றோர்களின் ஆசையும் ஒரு காரணம். அனைத்துத் துறைகளிலும் தகவல் தொழில்நுட்பம் தொடங்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இத்துறையில் வேலைவாய்ப்பு குறையும் நிலையும் உள்ளது.

இந்நிலையில், அதிகமாக வெளிவரும் அரைகுறை பொறியாளர்களால், வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது.

பொறியியல் கல்வி முடித்து வெளிவருவோரில் 22 சதவிகிதம் பேர் மட்டுமே, வேலைக்கான தகுதியுடன் உள்ளதாக, கல்வியாளர் மு. அனந்தகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

மத்திய அரசு அடிப்படைக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி, பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் முழுமையான திறன்களை மேம்படுத்தும் பாடத் திட்டங்களையும் அமைத்தால்தான், உயர்கல்வியின் நோக்கம் நிறைவேறும் என்பதை மறுப்பதற்கில்லை. அத்துடன் மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பிற்கான பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களையும் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

அதுவரை தினம் ஒரு பன்னாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என, அரசு பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது பகல் கனவுதான்.

Posted in Agriculture, City, Contract, Contractors, Education, Employment, EPZ, Export, Farmers, Farming, IIM, IIT, Industry, Jobs, Loans, Metro, MNC, Opportunities, SEZ, Suicides, Union, Villages, Work | Leave a Comment »

Staff strength in government hospitals vs secondary health centres in Tamil Nadu: Healthcare

Posted by Snapjudge மேல் ஜனவரி 6, 2008

இது என்ன விபரீதம்?

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற சேவையில் ஈடுபடுவது தொடர்பான சர்ச்சை இன்னும் முற்றுப்பெறாத நிலையில், ஒரு புதிய சர்ச்சைக்குப் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறார் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

அரசு மருத்துவமனைகளில் தேவைக்குக் குறைவான செவிலியர்கள் இருக்கும்நிலையில், அதற்குப் பரிகாரம் தேடுவதை விட்டுவிட்டு துணை சுகாதார நிலையங்களில் எட்டாயிரம் செவிலியர்களை நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது ஏன் என்பது புதிராக இருக்கிறது.

தமிழகத்தில் 1,417 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 8,683 துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துணை சுகாதார நிலையங்களில், கிராமப்புற மக்களுக்குச் சேவையாற்றுவதற்குத் தனிப்பயிற்சி பெற்ற கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சுமார் 5,000 பேருக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் நியமிக்கப்படும் இந்தக் கிராம சுகாதார செவிலியர்கள்தான், கிராமப்புறங்களில் வீடுவீடாகச் சென்று அரசின் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துபவர்கள். கிராம மக்கள் மத்தியில், குறிப்பாக, அதிகம் படிப்பறிவோ வசதியோ இல்லாத அடித்தட்டு மக்கள் மத்தியில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் தடுப்பூசி போடுதல், பிரசவம் பார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபடுபவர்கள் இவர்கள்தான். இவர்கள் செயல்படும் விதமும் செயல்படும் சூழலும் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களின் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலைமை பாராட்டும்படியாக இருக்கிறதா என்றால் இல்லை. துப்புரவுப் பணியாளர்களில் தொடங்கி மருத்துவமனைப் பணியாளர்கள், ஆய்வகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என்று இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்கள் நிறையவே இருக்கின்றன. ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு அதை ஓட்டுவதற்கு ஓட்டுநர் இல்லாத நிலைமைகூட சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளது.

இது ஒருபுறமிருக்க, அரசு மருத்துவமனைகளில் கடுமையான செவிலியர் பற்றாக்குறை நிலவுகிறது. பல இடங்களில் மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாமல் நோயாளிகள் வேதனைப்படுவது அரசு மருத்துவமனைக்குப் போய் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். பயிற்சி மருத்துவர்களைப் போன்று செவிலியர் படிப்பு முடித்தவர்களைத் தாற்காலிக ஊழியர்களாக அரசு மருத்துவமனைகளில் நியமித்து குறைந்தது இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிப்பது என்று அரசு முடிவெடுத்தால் அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

அதையெல்லாம் செய்யாத மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8,000 செவிலியர்களை ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தச் செவிலியர்கள் கிராம சுகாதார நிலைய செவிலியர்களைப்போல வீடுவீடாக, தெருத்தெருவாக, கிராமம் கிராமமாகச் சென்று பணியாற்றுவார்களா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அனுபவம் இல்லாத ஒப்பந்தப் பணியாளர்களாக செவிலியர்களை நியமிப்பதன் மூலம் கிராமப்புற அடித்தட்டு மக்களுக்குத் தரமற்ற மருத்துவ சேவையை வழங்குவதுதான் அரசின் நோக்கமா என்கிற கேள்வி எழுகிறது.

தாற்காலிகமாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அந்தச் செவிலியர்கள் மீண்டும் மருத்துவத் துறைக்கே சென்று விடுவார்கள் என்கிறார் அமைச்சர். அப்படியானால் அனுபவம் இல்லாத இந்த செவிலியர்களைக் கொண்டு கிராமப்புறங்களில் பிரசவம் பார்க்க அனுமதிப்பது என்பது ஏழை மக்களுக்கு அரசு தெரிந்தே செய்யும் துரோகம் என்று ஏன் கருதக்கூடாது?

இதுபோன்ற முன்யோசனையே இல்லாத, எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகள் மிகப்பெரிய விபரீதங்களுக்கு வழிகோலுமே தவிர, மக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்காது. சேவையைப் பற்றிக் கவலைப்படாமல் செய்யப்படும் தேவையற்ற நியமனங்கள், அரசின் செயல்பாடு பற்றி தேவையில்லாத உள்நோக்கம் கற்பிக்க வழி வகுக்கும் என்பது அமைச்சருக்கு ஏன் புரியவில்லை?

——————————————————————————————————–

ஆரம்ப சுகாதார நிலையங்களில்
1000 செவிலியர்கள் புதிதாக நியமனம்

ஜன.6-இல் முதல்வர் கலைஞர் ஆணை வழங்குகிறார்

சென்னை. ஜன. 5- தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யங்களில் புதிதாக 1000 செவி லியர்கள் நாளை (6-1-2008) நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான நியமன ஆணை களை முதல்வர் கலைஞர் அவர் கள் தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார்.
சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இதனைத் தெரிவித்ததோடு, மேலும் கூறியதாவது:
தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, தமிழ கம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம் படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறைக்குக் கூடு தல் நிதி ஒதுக்கி, வருமுன் காப் போம், கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பு ஆகிய திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கப் புதிதாக மருத்துவர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். பேறுகால மரணத்தைத் தடுக்கவும், கிராமப்புறச் சேவை யைச் சுகாதாரத் தறை மேம் படுத்தியுள்ளது.

அதன் அடிப் படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேலும் 1000 செவிலியர்கள் நியமிக்கப் பட உள்ளனர். கிராமப்புற மக்க ளுக்கு அடிப்படை மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என் பதில் முதல்வர் தீவிரமாக உள் ளதால், கிராமப்புற மருத்துவ சேவையை விரிவு படுத்தி வருகி றோம்.

6 ஆம் தேதி முதல்வர் 5 மருத் துவத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். 10 லட்சம் குழந்தை களுக்கு போலியோ சொட்டு அளிக்கும் திட்டத்தை அன்று காலை தனது இல்லத்தில் அவர் தொடங்கி வைக்கிறார்

11.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பு ஊசித் திட்டம், கிராமப்புற மருத்துவ சேவைக்கு 100 ஆம் புலன்ஸ், புதிதாக 1000 செவிலி யர்கள் நியமன ஆணைகளை வழங்குதல், 1036 ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கு ரூ 5 . 2 கோடி செலவில் கணினி மற் றும் இணையதள வசதி போன் றவற்றை தலைமைச் செயல கத்தில் காலை 10 மணிக்கு முதல்வர் வழங்குகிறார்.
ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு 660 பேரும், அரசு மருத்துவமனைகளுக்கு 340 பேரும் 98 மய்யங்களில் அவசர சிகிச்சைகளுக்காகவும் இந்தப் புதிய செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தவிர 66 சுகாதார ஆய்வாளர்களுக்கு நியமன ஆணைகளையும் வழங்குகிறார். 380 வட்டாரங் களுக்கு மொபைல் ஆம்புலன்ஸ் வழங்கப்படுகிறது. ரூ 6 கோடி செலவில் செயல்படுத் தப்படும் இத்திட்டத்தில் ஒவ் வொரு குழுவிலும் ஒரு மருத் துவர், ஒரு செவிலியர், ஓட்டுநர் ஆகியோர் இடம் பெறுகின் றனர்.

பேறு சாரா மற்றும் குழந்தைகள் நலன் காப்பதற் காக இக் குழுவினர் கிராமங்களுக்குச் சென்று சிகிச்சை அளிப்பார்கள். இதன் முதல் கட்டமாக இன்று 100 வட்டா ரங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங் கப்படுகிறது. பின்னர் படிப் படியாக மற்ற வட்டாரங் களுக்கு வழங்கப்படும்.

——————————————————————————————————————
ஆரம்பமே சுகாதாரமாக இல்லை!

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவதைப் பெரும்பாலான ஏழைகள் கூட தவிர்க்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அதற்கு முக்கியமாக 4 காரணங்கள் கூறப்படுகின்றன. 1. டாக்டர், நர்ஸ், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட ஊழியர்கள் கிராமப்புற மையங்களுக்குச் சரியாக வேலைக்கு வருவதில்லை. 2. அப்படியே வந்தாலும் நோயாளிகளைக் கனிவாகக் கவனிப்பதில்லை. 3. அவசரத்துக்கு இங்கே வந்துவிட்டோம், அருகில் உள்ள நகரத்துக்குச் சென்றிருந்தால் இன்னும் நன்றாகக் கவனித்திருப்பார்கள் என்றே பெரும்பாலான நோயாளிகள் நினைக்கின்றனர், 4. சுகாதார நிர்வாகத்தில் நிலவும் ஊழல் மற்றொரு முக்கியமான காரணம்.

ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல், வியாதி வந்துவிட்டால் உடனே நாடுவது தனியார் மருத்துவமனைகளைத்தான். டாக்டர் இல்லை, மருந்து இல்லை, படுக்கை இல்லை என்றெல்லாம் அவர்கள் திருப்பி அனுப்புவதில்லை. “முதலில் நீ, அப்புறம் உன் பணம்’ என்று தனியார் மருத்துவமனைகளில் அக்கறை காட்டி வசூலித்துவிடுகிறார்கள். எனவே நோயாளிகளும் செலவைப்பற்றி கவலைப்படுவதில்லை.

மேலை நாடுகளில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு மாத ஊதியம் என்ற முறையைக் கைவிட்டு, அவர்கள் எத்தனை நோயாளிகளைப் பார்க்கின்றனர் என்ற கணக்கை வைத்து ஊதியம் தருகின்றனர். எனவே டாக்டர்களும் அக்கறை காட்டுகின்றனர். அதை இங்கேயும் அமலுக்குக் கொண்டுவரலாம்.

சுகாதாரம் என்பது தடுப்பூசி போடுவது, முகாம்களில் கண், பல், காது-மூக்கு-தொண்டையைச் சோதிப்பது மட்டும் அல்ல. கிராமம் ஆனாலும், நகரம் ஆனாலும் சாக்கடைகள் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகள் சேராமல் அகற்றுவது, கொசுக்கள் பெருகாமல் மருந்து தெளிப்பது, அடிப்படைச் சுகாதாரம் குறித்து மக்களுக்குக் கற்றுத்தருவது போன்றவையுமாகும். டாக்டர்கள், நர்சுகள் மட்டும் அல்ல; ஆசிரியர்கள், பொறியாளர்கள், அரசு ஊழியர்கள் சேர்ந்து இயக்கமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை இது.

நம்முடைய ராணுவத்துக்கும், கல்விக்கும் ஒதுக்கும் தொகையைவிட அதிகத்தொகையை சுகாதாரத்துக்கு ஒதுக்க வேண்டும்.

பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருள்கள், கைனி, ஜர்தா போன்ற போதை பாக்குகள், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், பீர் போன்ற மதுபானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அனுமதித்துவிட்டு பிறகு சிகிச்சை அளிப்பதென்பது தும்பைவிட்டு வாலைப்பிடிக்கிற கதை. மக்கள் நலனில் அக்கறை உள்ள, நலவாழ்வை நாடும் முற்போக்கு ஜனநாயக அரசுகள் இவற்றுக்குத் துணிச்சலாக தடை விதித்து மக்களின் சுகாதாரத்துக்கே முன்னுரிமை தர வேண்டும். வருமான இழப்பை ஒரு பொருட்டாகவே கருதக்கூடாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, வயதுவந்த எல்லோரும் மருத்துவ இன்சூரன்ஸ் செய்துகொள்வது கட்டாயம் என்று சட்டம் இயற்றி, மிகக் குறைந்த பிரீமியத்தை வசூலிக்க வேண்டும். இதனால் திரளும் கோடிக்கணக்கான ரூபாயில் ஏழை நோயாளியின் சிகிச்சைக்குக்கூட எத்தனை லட்சம் செலவானாலும் அதை இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்கும் நிலை வேண்டும். அப்படிச் செய்தால்தான் அனைவருக்கும் மருத்துவ வசதி என்பது வெறுங்கனவாக நிற்காமல் நனவாக முடியும்.

நகர்ப்புறங்களில் பெரிய மருத்துவமனைகளில் வேலைபார்ப்பது டாக்டர்களுக்கு மன மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. அத்துடன் தங்களுடைய குழந்தைகளின் எதிர்கால படிப்புக்கும், எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் பொழுது போக்கவும் நகரமே ஏற்றது என்று டாக்டர்கள் கருதுகின்றனர். இதனாலேயே கிராமங்களுக்குச் செல்லத் தயக்கம் காட்டுகின்றனர். இந்தநிலை மாற கிராமப்புற சேவைகளுக்கு பண ஊக்குவிப்பு முதல், பதவி உயர்வு வரை பலவிதமான சலுகைகளை அளிப்பதே விவேகமான வழிமுறையாக இருக்கும்.

வளமான நாட்டின் சொத்து, வலிமையான அதன் மக்கள்தான். இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்ல நம்முடைய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும், சுகாதார அமைச்சர் அன்புமணியும். எனவே வரும் பட்ஜெட்டில், ஏழைகளுக்கும் முதியோருக்கும் 100% பலன் கொடுக்கும் எளிமையான மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அறிவிப்பை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Posted in Anbumani, Awareness, Birth, Care, Chennai, Child, Childbirth, Children, City, Contract, Contractors, DMK, Doc, Docs, doctors, Employment, Experience, Free, Full-time, GH, Govt, Health, Healthcare, Hospital, Hygiene, Immunization, Jobs, Kids, Labor, Labour, M.R.K.Paneerselvam, Madras, medical, Medicine, Metro, MRK Paneerselvam, newborns, Nurses, Pamphlets, Paneerselvam, Panneerselvam, Pannirselvam, Part-time, PMK, Policy, Polio, Poor, Pregnancy, Prenatal, Ramadoss, Rural, service, Shortage, TN, vaccinations, Vaccines, Villages, Work, workers | 1 Comment »