தருமபுரி அருகே பாலம் கட்டும் பணிக்கு 3 சிறுவர்களை நரபலியிட முயற்சி?
சிறுவர்களை நரபலியிட முயன்ற சம்பவத்தால் ஆத்திரம் அடைந்து தனியார் நிறுவன கிடங்குக்கு தீயிட்டுக் கொளுத்தும் பொதுமக்கள். (உள்படம்) நரபலியிட முயன்ற கும்பலிடம் இருந்து தப்பிய சிறுவர்கள் (இடமிருந்து) தமிழரசு, சந்திரபாபு, சிவமணி.
தருமபுரி, மார்ச் 16: தருமபுரி அருகே 4 வழிச்சாலை பாலப் பணிக்காக பள்ளிச் சிறுவர்கள் 3 பேரை தனியார் நிறுவன ஊழியர்கள் நரபலியிட முயன்றதாகக் கூறி, கொந்தளித்த மக்கள் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். தனியார் நிறுவன கிடங்குக்கும் ஒரு ஜேசிபி இயந்திரத்துக்கும் தீ வைத்தனர்.
தருமபுரி, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிப் பாதையாக மாற்றும் பணியை ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பூலாப்பட்டி ஆத்துப்பாலம், பெரியாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணியிலும் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
தனியார் நிறுவனத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பூலாப்பட்டி ஆத்துப்பாலம் அருகிலும் பிற இடங்களிலும் கூடாரங்கள் அமைத்து, அந் நிறுவனம் அமைத்துள்ள கிடங்குப் பகுதியிலேயே தங்கியுள்ளனர்.
இந்நிலையில் பூலாப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயவேலின் மகன் சிவமணி (13), குமாரசாமி மகன் தமிழரசு (12), சிங்காரம் மகன் சந்திரபாபு (11) ஆகிய 3 சிறுவர்களும் வழக்கம்போல் பெரியாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதற்காக வியாழக்கிழமை காலையில் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளனர். சாலையோரம் நடந்து சென்ற 3 சிறுவர்களையும் 5 பேர் கொண்ட கும்பல், வாயைப் பொத்தி தூக்கிச் சென்றுள்ளனர். தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கியிருந்த கிடங்கில் பிற்பகல் வரை சிறுவர்களின் கையைக் கட்டி அமர வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
பிற்பகலில் பாலம் நடைபெறும் இடத்துக்கு 3 சிறுவர்களையும் அழைத்து வந்து அங்கு பூஜைகள் செய்ததாகவும், நிலைமையை உணர்ந்த சிறுவன் சிவமணி தன்னை பிடித்திருந்த நபரின் கையை கடித்துவிட்டு தப்பி ஓடி வந்ததாகவும், அதே நேரத்தில் மற்ற சிறுவர்களும் அவர்களிடம் இருந்து தப்பி ஓடி வந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்த தகவல் கேட்டு சுற்றுப் பகுதி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதுடன் அந்த தனியார் நிறுவனக் கிடங்குக்கு தீயிட்டுக் கொளுத்தியது. அதில் கிடங்கும் ஜேசிபி இயந்திரமும் தீக்கிரையானது.