ஆந்திரத்தின் 2 ஆயிரம் கோவில்களில் அன்றாட நைவேத்தியத்துக்கே வழியில்லை!
விசாகப்பட்டினம், மார்ச் 5: ஆந்திர மாநிலத்தில் விஜயநகரம், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் ஆகிய 3 கடலோர மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் அன்றாட பூஜைக்கும் நைவேத்தியத்துக்கும் வழியில்லாமல் இருக்கிறது.
ஆலயத்துக்கு கிடைக்கும் வருவாய் அடிப்படையில் கோயில்களை மாநிலத்தில் 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்கும் மேல் இருப்பவை “ஏ’ பிரிவு. ஆண்டு வருவாய் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை இருப்பவை “பி’ பிரிவு. ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கும் குறைவானவை “சி’ பிரிவு. இவை தவிர மேலும் 2,800 கோவில்கள் உள்ளன. அவை உள்ளூர் மக்களுக்கு மட்டுமே தெரிந்தவை.
இப்போது சி பிரிவு கோயில்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ரூ.1,500 அர்ச்சகர்களுக்கு ஊதியமாக தரப்படும். தூப, தீப, நைவேத்திய செலவுக்காக ரூ.1,000 வழங்கப்படும். முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிருஷ்ணா மாவட்டத்தில் இத்திட்டத்தை சமீபத்தில்தான் தொடங்கி இருக்கிறார்.