கார்டன் பிரவுன் கடந்துவந்த பாதை
கார்டன் பிரவுன் டோனி பிளேர்ருக்கு அடுத்தபடியாக பிரதமராக வரக்கூடிய அதிகபட்ச சாத்தியக்கூறுள்ளவர் என்று பல ஆண்டுகளாக கருதப்பட்டவர்.
கடந்த 10 ஆண்டுகளாக, அவர் பிரிட்டனின் நிதித்துறையின் பொறுப்பை வகித்து வந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளில் இந்த அளவு அதிக காலம் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் இவர்தான்.
சான்சலராக ( பிரிட்டிஷ் நிதியமைச்சர் அவ்வாறுதான் அழைக்கப்படுகிறார்) அவர் இருந்த காலத்தில், வெகு நீண்ட காலம் பிரிட்டனில், பொருளாதார வளர்ச்சி நீடித்தது. கடந்த மாதம் தனது இறுதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து பேசிய பிரவுன், வர்த்தக முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டுமே அதிகரித்து வருவதாகவும், கடன் வாங்குவது குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஆனால்,பிரவுனை விமர்சிப்பவர்களும் இல்லாமல் இல்லை. ஆளும் தொழிற்கட்சியின் சில உறுப்பினர்கள், சில சமயங்களில், பிரவுன் வெளிப்படுத்துகின்ற உற்சாகமற்ற – முசுட்டுத்தனமான தோற்றம், இளமையான, ஊடகங்களுக்கு நட்பான, எதிர்க்கட்சித் தலைவர், டேவிட் கேமரூனுடன் சாதகமாக கருதப்படாது போகலாம் என்று அஞ்சுகின்றனர்.
பிரவுன், ஸ்காட்லாந்தில் பிறந்து அங்கேயே கல்வி பயின்றவர். அரசியலில் அவருக்கு இருந்த ஆர்வம், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் அவர் படித்த காலத்திலேயே வெளிப்பட்டது. 1992ல் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்த போது, எதிர்க்கட்சியின் நிழல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர், அவர் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற முன்வரிசையில், கஜானவுக்கு அதாவது திரைசேரிக்கு, நிழல் தலைமைச்செயலாரகவும், வர்த்தக மற்றும் தொழில் துறை நிழல் செயலராகவும் இரண்டு மூத்த பொறுப்புகளை வகித்தார்.
புதிய தொழிற்கட்சி என்று அறியப்பட்ட கட்சியை புதுமையாக்கும் முயற்சியின் மையமாக டோனி பிளேரும் கார்டன் பிரவுனும் இருந்தனர். வழமையான சோசலிசத்தை கைவிட்டு அவர்கள் ஒரு மைய இடது சாரி அணுகுமுறையை கைக்கொண்டனர். ஆயினும், இருவருக்கும் இடையே, கருத்து வேற்றுமைகளும் வெளிவந்தன. அவர்களது ஆதரவாளர்கள் முறையே பிளேரைட்ஸ் மற்றும் பிரவுனைட்ஸ் என்று குறிப்பிடப்பட்டனர்.
சர்வதேச அரங்கில், பிரவுன் ஆப்ரிக்காவில் வறுமையைக் குறைக்கும் பிரிட்டனின் முயற்சிகளில் ஒரு முக்கியமான பங்கை வகித்தார். அவரது பரவலான அனுபவம் அவருக்கு கை கொடுக்கும் என்கிறார் பி பி சியின் பொருளாதார செய்தி ஆசிரியர் ஆண்ட்ரூ வாக்கர்
பிரிட்டிஷ் பிரதமராக கார்டன் பிரவுன் பொறுப்பேற்பு
பிரிட்டனில், புதிய பிரதமராக கார்டன் பிரவுன் அவர்கள் முறைப்படி பதவியேற்றுள்ளார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராகப் பதவி வகித்த டோனி பிளேயர் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு கார்டன் பிரவுன் பதவியேற்றுள்ளார்.
அனைவரும் தங்களுக்குரிய நல்வாயப்புக்களை அடையக் கூடிய நிலையை உருவாக்குவது தனது முக்கியப் பணியாக இருக்கும் என்று எலிசபெத் ராணியால் புதிய அரசு அமைக்குமாறு அழைக்கப்பட்ட பிரவுன் கூறினார்.
தனது பதவியை ராஜினாமா செய்யும் முன்பாக, பிளேயர் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்த பிறகு, உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இது ஒரு அபூர்வ நிகழ்வாகும்.
மனைவியுடன் கார்டன் பிரவுன்
குடும்பத்தினருடன் கார்டன் பிரவுன்
மத்திய கிழக்கு பகுதிக்கு சிறப்புத் தூதராக டோனி பிளையர் நியமனம்
![]() |
![]() |
டோனி பிளயரும் பாலத்தீன அதிபர் அப்பாஸும் |
பிரிட்டனின் பிரதமராக புதன்கிழமை பதவி விலகிய டோனி பிளயர் மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா, ரஷியா, ஐ நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நால்வர் அணியால், மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதர் என புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பதவியில் டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பை ஐநா வெளியிட்டுள்ளது.
டோனி பிளயருக்கு உதவியாக ஒரு சிறு வல்லுநர் குழு ஜெரூசலத்திலிருந்து செயல்படும். மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையே ஒரு அமைதியை ஏற்படுத்தி அந்தப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது டோனி பிளையரின் முக்கிய பணியாக இருக்கும்.
இந்தப் பொறுப்பிற்கு டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அரபு உலகத்தில் இது குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன என பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
இது குறித்த பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
பிரிட்டனின் புதிய அமைச்சரவை அறிவிப்பு
![]() |
![]() |
புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் |
பிரிட்டனின் புதிய பிரதமாரக பதவியேற்றுள்ள கார்டன் பிரவுன், தனது அலுவலின் முதல் முழு நாளான இன்று தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார்.
டோனி பிளையரிடமிருந்து நேற்று கார்டன் பிரவுன் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
டோனி பிளயரின் அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் அனைவருமே கிட்டத்தட்ட மாற்றப்பட்டுள்ளனர்.
ஆலிஸ்ட்டர் டார்லிங் புதிய நிதியமைச்சாரிகிறார். புதிய உள்துறை அமைச்சாராக ஜாக்கி ஸ்மித் நியமிக்கப்பட்டிருக்கிறார். முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
வெளியுறவுத் துறையில் புதிய அமைச்சராகிறார் டேவிட் மிலிபேண்ட். இவர் முன்னதாக சுற்றுச் சூழல் துறையின் அமைச்சராக இருந்தவர்.
இராக் மீதான போர் மற்றும் லெபனான் மீது இஸ்ரேலின் தாக்குதல் ஆகியவை குறித்து தனிப்பட்ட முறையில் அவர் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்தார்.
பொறுமையும் பயனுள்ளதாகவும் இருக்கக் கூடிய இராஜதந்திர வழிகளை தாம் கையாளவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.