தொலைத் தொடர்புத்துறை ஆணையால் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை இழப்பு!
மும்பை, மார்ச் 9: தங்கள் துறையிடம் நேரடியாகப் பதிவு செய்து கொள்ளாத, வெளிப்பணி ஒப்படைப்பு நிறுவனங்களின் (பி.பி.ஓ.) இன்டெர்நெட் தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்துவிடுமாறு தொலைத் தொடர்புத்துறை பிறப்பித்த உத்தரவு காரணமாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்படும் ஆபத்து நேரிட்டிருக்கிறது.
இந் நிலை நீடித்தால், இந்திய நிறுவனங்களிடம் “”அயல்பணி ஒப்படைப்பு” (அவுட்-சோர்சிங்) சேவையைப் பயன்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் வேறு நாடுகளை நாடிச் செல்லக்கூடிய ஆபத்தும் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு சிறிய பிரச்சினைக்காக, மிகப்பெரிய தண்டனை நடவடிக்கையை துறை அதிகாரிகள் மின்னல் வேகத்தில் எடுத்துள்ளனர். இதன் விளைவுகள் மிகப் பெரிதாக இருக்கும் என்று தோன்றுகிறது.
நடவடிக்கை ஏன்? கோல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பி.பி.ஓ. நிறுவனம், அமெரிக்காவில் வசிக்கும் போதைப்பொருள் உபயோகிப்பாளர்களுக்காக போலியான மருந்துச் சீட்டுகளை ஆன்-லைனில் தயாரித்து அனுப்பியதாம். இது தொலைத்தொடர்புத்துறையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. உடனே அந்த நிறுவனத்தின் தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
அதிகாரிகள் இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், இதே போல தங்களிடம் முறையாகப் பதிவு செய்யாமல் இன்டெர்நெட் தொலைபேசி இணைப்புகள் மூலம் அயல்பணி சேவை செய்யும் அனைத்து நிறுவனங்களின் இணைப்புகளையும் துண்டித்துவிடுமாறு உத்தரவிட்டது. இத்தகைய நிறுவனங்கள், இன்டெர்நெட் சேவை அளிக்கும் சிறு நிறுவனங்கள் மூலம் இந்த இணைப்புகளைப் பெற்று தொழில் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய பி.பி.ஓ. நிறுவனங்கள் இப்படி, தொலைத்தொடர்புத் துறையிடம் பதிவு செய்யாமல் பணிபுரிந்து வருகின்றன. ஒவ்வொன்றிலும் 50 முதல் 100 பேர் வரை நேரடியாக பணி புரிகின்றனர். இவர்களைத் தவிர இதில் மறைமுக வேலைவாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை பல மடங்கு. இனி இவர்கள் அனைவரும் வேலை இழப்பர்.
இன்டெர்நெட் தொலைபேசி இணைப்பு தொடர்பாக அரசு இன்னமும் தெளிவான கொள்கையை வகுக்கவில்லை என்று பி.பி.ஓ. வட்டாரங்கள் கூறுகின்றன.
அதில் இறுதி நிலை என்ன என்று தெரியும்வரை, துறையிடம் நேரடியாகப் பதிவு செய்வதைத் தவிர்த்து, இச்சேவையை அளிப்பவர்களிடம் பெற்று, அயல்பணி வேலையைச் செய்வதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவு பி.பி.ஓ. நிறுவனங்களுடன் கால்-சென்டர்களையும் பாதிக்கும். கால் சென்டர்கள் பாதிக்கப்பட்டால் அரசுக்கு ஆண்டுதோறும் 600 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை வருவது அறவே நின்றுவிடும்.
பதிவு செய்யாமல் இருப்பதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், படிப்படியாக அதைச்செய்ய துறை அவகாசம் அளித்திருக்க வேண்டும், இப்படி இணைப்பைத் துண்டிப்பது நல்லதல்ல என்று வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.