Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Color TVs’ Category

Ration Cards – Public Distribution System: Nexus between dealers and food dept officials

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

ரேஷன் முறையில் புதிய அத்தியாயம்

டி. புருஷோத்தமன்

பொதுவிநியோக (ரேஷன்) திட்டத்தில் நிலவும் குறைபாடுகளைக் களைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் ரேஷனில் விநியோகிக்க வேண்டிய கோதுமை. அரிசி, மண்ணெண்ணெய் போன்றவை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதும் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதும் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. இதற்கும் ஒருபடி மேலே சென்று வெளிநாடுகளுக்கு கடத்தவும் துணிந்துவிட்டனர் கடத்தல்காரர்கள்.

ஏழை மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் பசியாற வேண்டும் என்பதற்காகவும் கோதுமை, அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களை ரேஷன் அட்டைகள் மூலம் மிகக் குறைந்த விலைக்கு அரசு விற்பனை செய்து வருகிறது.

ஆனால் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இருப்பிடச் சான்று, பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு தொடங்குதல், வங்கிகளிலிருந்தும் நிதி நிறுவனங்களிலிருந்தும் வீட்டுக் கடன் பெறுதல், வாகனக் கடன் பெறுதல், தனி நபர் கடன் பெறுதல் போன்றவற்றுக்கும் ரேஷன் அட்டைகள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது.

எனவே அனைவரும் எப்பாடுபட்டாவது ரேஷன் அட்டைகளைப் பெற்று பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இத்தகைய ரேஷன் அட்டைகளை வைத்திருப்போரில் வசதி படைத்தவர்கள் அனைவரும் ரேஷன் கடைகள் பக்கம் செல்வதேயில்லை. அட்டை காலாவதியாகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் வீட்டு வேலைக்காரர்களை எப்போதாவது ஓரிருமுறை ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ள அனுமதிப்பார்கள்.

ரேஷன் அட்டைகள் அனைத்துக்கும் வழங்கவேண்டிய பொருள்களை ரேஷன் கடைகளுக்கு அரசு வழங்கும். ஆனால் வசதிபடைத்தவர்கள் வாங்காத ரேஷன் பொருள்கள் கள்ளச்சந்தைக்கு சென்றுவிடும். இதனால் அரசுக்கும் இழப்பு; ஏழைகளுக்கும் பயனில்லை.

இதைத்தடுக்க தில்லி மாநில அரசு புதிய திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி ரேஷன் அட்டைகளை வைத்திருப்போரில் குறைந்தபட்ச வருவாய் பிரிவினரையும் அதிக வருமானம் ஈட்டுவோரையும் இனம் கண்டறியப்படும்.

குறைந்தபட்ச வருவாய் உடையவர்களுக்கு ரேஷன் பொருள்கள் அனைத்தும் வழங்கப்படும். ஆனால் அதிக வருவாய் ஈட்டுவோரின் ரேஷன் அட்டையில், “நீங்கள் அதிக வருவாய் பெறுபவராக இருப்பதால் ரேஷன் பொருள்களைப் பெற இயலாது’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதன்மூலம் ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்களை தங்குதடையின்றி விநியோகிக்க வழியேற்படும் என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை இன்னும் 10 அல்லது 15 நாளில் செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் 30 முதல் 40 சதவீதம் பேர் ரேஷன் பொருள்களைப் பெறும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். இதன்மூலம் அரசின் நிதிச்சுமை பெருமளவு குறையும். நிர்வாகச் சீர்கேடுகளும் ஓரளவு தவிர்க்கப்படும்.

அதிக வருமானம் பெறுவோர் ரேஷன் கடைகளுக்கே செல்வதில்லை. அவர்களுக்கு அரசு ஒதுக்கிவந்த அவசியப் பொருள்கள் அனைத்தும் கள்ளச்சந்தைக்குதான் சென்றன. எனவே புதிய திட்டம் ரேஷன் முறையில் புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்று ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.

தில்லியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ரேஷன் முறையில் மேற்கொள்ளவிருக்கும் சீர்திருத்த நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுமா என்பதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ரேஷன் முறையை சீர்திருத்தி அரசின் நிதிச்சுமையைக் குறைப்பதில் உறுதியாக இருக்கிறேன். இத்திட்டத்தின் பலன்கள் அனைத்தும் ஏழை மக்களையும் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் பாமரர்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரேஷன் அட்டைகள் அனைத்துமே ரேஷன் பொருள்களை வாங்குவதற்காகத்தான் என்ற அடிப்படைக் கருத்தை மாற்றி ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்கள் என்ற உயரிய நோக்கத்தை செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட வேண்டிய மண்ணெண்ணெய் அதிக அளவில் கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தடுக்கவும் ஏழை மக்கள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பெறவும் வழிவகை செய்யப்படும் என்றும் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.

மேற்குவங்கத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் நிகழும் குளறுபடிகளால் பெரும் கலவரமே ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விற்கப்பட வேண்டிய அரிசி, தங்குதடையின்றி கேரள மாநிலத்துக்கு லாரிகளில் கடத்தப்படுகிறது. விலைகுறைவான ரேஷன் அரிசியை ஆலைகளில் பாலிஷ் செய்து உயர்ரக அரிசி என்ற பெயரில் அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.

லாரிகளிலும் இதர வாகனங்கள் மூலமும் கடத்தப்பட்டுவந்த ரேஷன் அரிசி தற்போது ஒருபடி மேலேசென்று புதுவையில் சரக்கு ரயில் மூலமும் கடத்தப்படும் நிலைக்கு முன்னேறிவிட்டது. புதுவையில் இருந்து இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை சரக்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன. இவ்வாறு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி 14 ஆயிரம் டன்கள் அளவுக்கு இருக்கும் என்றும் அவை சுட்டிக் காட்டியுள்ளன.

ஏழை மக்களைச் சென்றடைய வேண்டிய அரிசி கள்ளச்சந்தைக்கு திசைமாறியது வேதனை அளிக்கிறது.

இந்நிலையில் ரேஷன் முறையில் உள்ள குறைபாடுகளைக் களைய தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மேற்கொண்டுள்ள நடவடிக்கை புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் ஐயமில்லை.

Posted in Accounts, Allocation, bank, Biometric, Bribery, Bribes, Cards, Census, Citizen, Color TVs, Colour TV, Corruption, dealers, Distribution, Distributors, DL, Driving License, Economy, Eigen, Elections, Expiry, Finance, Food, H, Head, Id, ID Cards, Identity, Immigration, Income, Infiltration, Iris, IT, kickbacks, Lease, Licenses, Mortgage, Multipurpose, Needy, NRI, Officials, Pan, Passport, PDS, Polls, Poor, Population, Protection, Ration, Rent, Rich, Sale, Scan, Sugar, tasildar, Tax, tehsildars, Television, Terrorism, Terrorists, TV, TVs, Validation, Validity, Verification, voters, Wealthy | Leave a Comment »

TV wars of Tamil Nadu: DMK vs ADMK vs Congress vs PMK

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

அரசியல் சார்புடன் மேலும் 3 அலைவரிசைகள்: தமிழ்நாட்டில் தீவிரமடைகிறது “தொலைக்காட்சிப் போர்’

புதுதில்லி, ஆக. 13: அரசியல் சார்புடன் புதிதாக மேலும் 3 தமிழ் அலைவரிசைகள் ஒளிபரப்பாக உள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தொலைக்காட்சிப் போர் தீவிரமடைகிறது.

தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் தொடங்கும் “கலைஞர் டிவி’, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.வி.தங்கபாலு தொடங்க உள்ள “மெகா டிவி’ மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் தொடங்க உள்ள “வசந்த் டிவி’ ஆகிய மூன்றும் விரைவில் ஒளிபரப்பைத் தொடங்க உள்ளன. இவற்றில், “மெகா டிவி’ ஆகஸ்ட் 20-ம் தேதியும், “கலைஞர் டிவி’ செப்டம்பர் 15-ம் தேதியும் ஒளிபரப்பைத் தொடங்குகின்றன. இதையடுத்து தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தனித்தனியே தமக்கென ஒரு தொலைக்காட்சி அலைவரிசையைப் பெற்றிருக்கும் நிலை உருவாகியுள்ளது.

எதிர்க்கட்சியான அதிமுக ஏற்கெனவே ஜெயா டிவியை நடத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் குரலாக 2006 முதல் “மக்கள் தொலைக்காட்சி’ ஒளிபரப்பாகி வருகிறது.

“இந்தப் போக்கு ஆரோக்கியமானதும் அல்ல; போட்டிச் சூழலுக்கு உகந்ததும் அல்ல. அரசியல் கட்சிகளோ அவற்றின் தலைவர்களோ தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இந்த முயற்சிகள் எதுவும் வணிக அடிப்படையில் வெற்றிபெறப் போவதில்லை.

தொலைக்காட்சி என்ற வலிமைமிக்க ஊடகத்தை, ஒரு குறிப்பிட்ட ஆள் அல்லது கட்சியின் கருத்துகளை பரப்புவதற்குத்தான் இந்த அலைவரிசைகள் பயன்படுத்தும். பார்வையாளர்கள் மத்தியில் தமது கருத்துகளைத் திணிப்பதற்கு இந்த அலைவரிசைகள் முயற்சி செய்யும்’ என பத்திரிகையாளர் சோ கருத்துத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆசியுடன் “வசந்த் டிவி’ தனது ஒளிபரப்பைத் தொடங்கும் என்று கூறியுள்ளார் வசந்தகுமார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான இவர், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களை விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் அங்காடிகளை நடத்திவருகிறார்.

“ஒரு நாளுக்கு 6 முறை செய்தி ஒளிபரப்புடன் கூடிய, 24 மணி நேர பொழுதுபோக்கு அலைவரிசையாக வசந்த் டிவி இருக்கும். எமது செய்திகளில் காங்கிரஸ் தொடர்பான குறிப்பாக சோனியா காந்தி தொடர்பான செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் சாதனைகள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி அன்றாடம் இடம்பெறும்’ என்று கூறும் வசந்தகுமார், “தனது அலைவரிசை வணிக அடிப்படையிலும் வெற்றிபெறும்’ என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

திமுக மற்றும் அதிமுகவின் பிரசார பீரங்கிகளாக செயல்பட்டு வரும் சன் டிவியும் ஜெயா டிவியும் தொலைக்காட்சி மூலம் அரசியல் யுத்தம் நடத்தியுள்ளன. குறிப்பாக தேர்தல் நேரங்களில் பெரும் அரசியல் லாவணியை இவை நடத்தும்.

கருணாநிதியின் குடும்பத்துக்கும் மாறன் (கலாநிதி, தயாநிதி) சகோதரர்களுக்கும் இடையே வெடித்த குடும்பச் சண்டையால், மற்றொரு முன்னணி அலைவரிசையான ராஜ் டிவி திமுக ஜோதியில் ஐக்கியமாகியுள்ளது. ராஜ் டிவிதான் கலைஞர் டிவிக்கு வேண்டிய அனைத்து ஒளிபரப்பு ஒத்தாசைகளையும் செய்து வருகிறது.

“மக்களை ஏமாற்ற முடியாது. உண்மைக்கும், பொய்ச் செய்திக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பகுத்துப் பார்க்கும் திறன் அவர்களுக்கு உண்டு. செய்தியின் உண்மைநிலை ஐயத்துக்கிடமானதாக மாறும்போது உடனடியாக பார்வையாளர் வேறு அலைவரிசைக்குச் சென்று, உண்மை என்ன என்பதைத் தெரிந்துகொள்வார்’ என்கிறார் சோ.

“மக்கள் தொலைக்காட்சி, அரசியல் அலைவரிசை அல்ல. பாட்டாளி மக்கள் கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு நாங்கள் மக்கள் தொலைக்காட்சியைப் பயன்படுத்துவதில்லை. செய்தியை அரசியலுக்காகத் திரிப்பதில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் சமமுக்கியத்துவம் அளிக்கிறோம். மற்ற பிற அலைவரிசைகள் சீரழிக்கும் தமிழ்ப் பண்பாட்டை மக்கள் தொலைக்காட்சியில் உயர்த்திப் பிடிக்கிறோம். எங்களது நிகழ்ச்சிகளை குறிப்பாக செய்திகளை ஏராளமான மக்கள் விரும்புகின்றனர்’ என்கிறார் மக்கள் தொலைக்காட்சியின் மூத்த அலுவலர் ஒருவர்.

Posted in abuse, ADMK, Anbumani, Cho, Color TVs, Colour TV, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dinamalar, DMK, Entertainment, Jaya, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya TV, Jeyalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Makkal, Makkal TV, Manipulation, Media, MSM, News, PMK, Power, Ramadas, Ramadass, Ramadoss, Tamil Nadu, TamilNadu, Television, Thangabalu, Thankabalu, Thuglaq, TN, Vasanth, Vasanth&Co, Wars | Leave a Comment »

ADMK’s Lies – Mu Karunanidhi Press release

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 13, 2006

சமையல் பண்டங்கள் விலை உயரவில்லை: கருணாநிதி அறிக்கை 

சென்னை, அக். 13-

முதல்-அமைச்சர் கருணா நிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“அம்மா” அடுத்த அஸ்திரம் தொடுத்து விட்டார்” என்று வார ஏடுகள் வர்ணனை செய்ய, விலைவாசிப் பட்டியல் என்னும் வில் ஏந்தி மேடைக்கு மேடை, விளாசித் தள்ளினார்-அய்யோ பாவம், அத்தனையும் பொய், பித் தலாட்டம், புளுகு மூட்டை!

அம்மா படித்தது அ.தி.மு.க. ஆட்சியில் துவரம் பருப்பு கிலோ 28 ரூபாயாம், இப்போது 52 ரூபாயாம்!

சேலத்தில் என்னிடம் தெரிவிக்கப்பட்ட துவரம் பருப்பு விலை-அ.தி.மு.க. ஆட்சியில் 32 ரூபாய்-இப்போது விலை 30 ரூபாய் என்பது தான்!ஆனால் “அம்மா” படித்ததாக பத்திரிகையில் பட்டியல் வெளியிட்டிருப்பது-துவரம் பருப்பு கிலோ 52 ரூபாய்!

அம்மா படித்தது அ.தி.மு.க. ஆட்சியில் பாசிப் பருப்பு கிலோ 28 ரூபாயாம், இப் போது தி.மு.க. ஆட்சியில் 55 ரூபாயாம்! ஆனால் சேலத்தில் என்னி டம் தெரிவிக்கப்பட்ட பட்டி யல்படி பாசிப் பருப்பு விலை-அ.தி.மு.க. ஆட்சியில் 44 ரூபாய்-இப்போது விலையும் 44 ரூபாய் என்பதுதான்!

அம்மா படித்தது அ.தி.மு.க. ஆட்சியில் புளி கிலோ 25 ரூபாயாம், இப்போது 50 ரூபாயாம்! சேலத்தில் என்னிடம் தெரிவிக்கப்பட்ட விலை பட் டியல்படி புளி ஒரு கிலோ விலை-அ.தி.மு.க. ஆட்சியில் 45 ரூபாய்-இப்போது விலை 45 ரூபாய் என்பதுதான்! சென்னையில் புளி ஒரு கிலோ முதல் ரகம் 38 ரூபாய், இரண்டாவது ரகம் 35 ரூபாய். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கிலோ 25 ரூபாய் என்றும், அது இப்போது 50 ரூபாயாக உயர்ந்து விட்டது என்றும் ஜெயலலிதா மேடையில் படித் திருக்கிறார், ஏடுகளும் வெளி யிட்டுள்ளன.

அம்மா படித்து ஏடுகளில் வந்துள்ள விவரப்படி அ.தி. மு.க. ஆட்சியில் ரவா கிலோ 14 ரூபாயாம், இப்போது 22 ரூபாயாம்!

ஆனால் சேலத்தில் என் னிடம் தெரிவிக்கப்பட்ட விவரப்படி ரவா விலை- அ.தி. மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 18 ரூபாய்- இப்போதைய விலையும் அதே 18 ரூபாய் என்பதுதான்! ஆனால் ஜெய லலிதா மேடையில் இதை 22 ரூபாய் என்று பொய்யாகத் தெரிவித்திருக்கிறார்.

அம்மா படித்தது அ.தி.மு.க. ஆட்சியில் மைதா ஒரு கிலோ 12 ரூபாயாம், இப்போது தி.மு.க. ஆட்சியில் 28 ரூபாயாம்!

சேலத்தில் என்னிடம் தெரி விக்கப்பட்ட, அங்குள்ள வியா பாரிகள் சங்கத் தலைவர் கொடுத்த விவரப்படி மைதா அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 18 ரூபாய்-இப்போது தி.மு.க. ஆட்சியில் மைதா விலை ஒரு கிலோ அதே 18 ரூபாய் என்பதுதான்! சென்னையில் மைதா ஒரு கிலோ ரூ. 15.80தான்.

இதைப் போலவே மேலும் பல பொருட்களின் விலைகளை அவர்கள் ஆட்சியிலே குறைத்து காட்டியும், இப் போதுள்ள விலையை அதி கரித்துக் காட்டியும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூட்டத்திலே படித்து, அதை ஏடுகளும் வெளியிட்டுள்ளன. ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சமையல் பண்டங்கள் எல்லா வற்றின் விலையும் இறங்கியே இருக்கிறது- ஏறினாலும் “அம்மா” சொன்னது போல அவ் வளவு உயரம் விலைவாசி ஏறவில்லை.

இந்த விலைவாசி வலையை வீசி மக்களை பிடித்து விட லாம் என்று அம்மா கனவு காண்பாரேயானால், உணவுப் பண்டங்களில் முக்கியப் பொருளான அரிசியின் விலை ஒரு கிலோ இரண்டு ரூபாய்தான்-எனவே அரிசி யில் மாந்தோறும் ஒரு குடும் பத்துக்கு எவ்வளவு மிச்சம் ஏற்படுகிறது என்பதை அந்த மக்கள் கணக்கிட்டுப் பார்க் காமல் இருந்து விட மாட் டார்கள்.

“கடந்த ஐந்தாண்டுகளில் அவர் அறுபதாயிரம் கோப்புகள் பார்த்ததாக ஓர் அண்டப்புளுகை அள்ளி விடுகிறார்”

முதல்வருக்கு வரும் கோப்புகள் நெம்பர் குத்தி- முத்திரை வைத்துத்தான் வருமென்றும்-ஜெயாவுக்கு ஐந்தாண்டில் அப்படி வந்த கோப்புகள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 49 தான் என்றும் நான் ஆண்டு வாரியாக செய்தி யாளர்களிடம் நிரூபித்துக் காட்டிய பிறகு பொய், வாயைப் பொத்திக் கொண்டு விட்டது. என் செய்வது, பலித்த வரையில் பார்க்கலாம், பாமர மக்களை ஏமாற்றுவது சுலபம் தானே என்று, பரந்த “மனோபாவத்து”க்கு எங்கே போய் பரிகாரம் தேடுவது என்றே புரியவில்லை.

“உள்ளாட்சி மன்றத் தேர்தல்களும், மதுரை இடைத் தேர்தலும் முடிந்த பிறகு அடுத்த நாளே இதுவரை யில் வழங்கியுள்ள இலவசங் களையும், சலுகைகளையும், தரிசு நிலங்களையும், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி களையும் தி.மு.க. ஆட்சி திரும்பப் பெற்று விடும்” என்றும் ஓர் கண்டு பிடிப்பை திடீர் என்று வெளியிட்டிருக்கிறார் ஜெயலலிதா.

பெரியார் நினைவு சமத்துவபுர வீடுகளுக்கும், இரவலர் மறு வாழ்வு இல்லங்களுக்கும், சென்னையில் இரண்டு குடிசை மாற்று வாரிய குடி யிருப்புகளுக்கும் முதல் கட்டமாக வழங்கியுள்ள முப்பதாயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி களை “டப்பா” பெட்டிகள் அவை என்றும் கேலி செய் கிறார்.

அதே போல முதல் கட்டமாக நிலமற்ற விவசாயிகள் 28,321 ஏக்கர் நிலங்களையும் தி.மு.க. ஆட்சி திரும்ப எடுத்துக் கொள்ளுமாம்! திட்ட மிட்டுப் புளுகியிருக்கிறார் ஜெய லலிதா.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதி களை ஒன்றன்பின் ஒன்றாக- நிறைவேற்றி வருகிற இந்த ஆட்சி, அவற்றையெல்லாம் திரும்பப் பெற்றுக் கொள்ளும் என்று ஏடுகளில் அறிக்கை விடுவதும்-மேடைகளில் அலறுவதும்-என்ன நாகரீகம் என்பதை நாட்டு மக்கள் தான் நன்குணர்ந்து நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்! இவ்வாறு அந்த அறிக்கை யில் கருணாநிதி கூறி உள்ளார்.

Posted in ADMK, Campaign, Color TVs, DMK, Elections, Free, Jayalalitha, Karunanidhi, Local Body, Polls, Press release, Tamil Nadu, War, Words | Leave a Comment »