![]() |
![]() |
ஜனாதிபதிக்கு அர்ச்சகர் வரவேற்பு கொடுத்த போது எடுக்கப்பட்ட படம் |
ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் கொலை
இலங்கை ஜனாதிபதி அண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் வாகரைக்குச் சென்ற போது, அங்கு அவரை வரவேற்ற இந்து அர்ச்சகர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இலங்கையின் கிழக்கே, மட்டக்களப்பு மாவட்டத்தில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்ட வாகரைப் பகுதிக்கு கடந்த வெள்ளிகிழமை இலங்கை ஜனாதிபதி விஜயம் செய்திருந்தார்.
அப்போது அங்கு அவரை வரவேற்றவர்களில் சந்திவெளிப் பிள்ளையார் கோயிலின் அர்ச்சகர் செல்லையா பரமேஸ்வரக் குருக்களும் அடங்குவார். அவர் அப்போது ஜனதிபதிக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.
இந்த நிலையில், நேற்று அவரது வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரை வீட்டுக்கு வெளியே அழைத்து சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
![]() |
![]() |
கொலை செய்யப்பட்ட அர்ச்சகரின் குடும்பம் |
ஜனாதிபதியின் வாகரைக்கான விஜய தினத்தன்று தனது கணவரை இராணுவத்தினர் பூசைக்கென்றே அழைத்துச் சென்றதாகவும், ஜனாதிபதிக்கு மாலை அணிவித்ததன் காரணமாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் கொல்லப்பட்ட அர்ச்சகரின் மனைவி தெரிவித்துள்ளார்.
ஆயினும் கொலையாளிகளை தன்னால் அடையாளம் காணமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விடுதலைப்புலிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் விடுதலைப்புலிகள் இதனை மறுத்துள்ளார்கள்.
இந்தக் கொலை குறித்து தான் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.