மனிதக் கழிவுகளை சுத்திகரிப்போருக்கு 2009 ல் மறுவாழ்வு திட்டம் அறிமுகம்: மத்திய அரசு முடிவு
புது தில்லி, ஜன. 31:மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது. 2009 ம் ஆண்டு முதல், நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் பேர் இத்திட்டத்தால் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மனிதக் கழிவுகளை மனிதர்கள் சுத்தம் செய்யும் நிலையை மாற்றவேண்டும் என இடதுசாரிக்கட்சிகள் கோரிவந்தன. இதையடுத்து அவர்களுடைய நலனுக்காக மத்திய அரசு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சுத்திகரிப்பு தொழிலாளிகளுக்கு ஒரு ஆண்டு சுயதொழில் பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தொழில் துவங்க ரூ. 5 லட்சம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு, உரிய வங்கிகள் மூலம் மத்திய அரசு மானியம் அளிக்கும்.
மாநிலங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப்படி, நாடு முழுவதும் தற்போது 7 லட்சத்து 70 ஆயிரத்து 338 சுத்திகரிப்பு தொழிலாளிகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்களது குடும்பத்தினர் மற்றும் இவர்களைச் சார்ந்தோருடன் மொத்தம் 40 லட்சம் பேர் இந்தத் திட்டத்தால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய சஃபாய் கர்மாச்சாரி நிதி மற்றும் வளர்ச்சி வங்கி அல்லது குறிப்பிட்ட உயர்நிலை நிறுவனங்கள் மூலம் மானியங்கள் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் அதேவேளையில் நாடுமுழுவதும் உலர் கழிவறைகள் ஏற்படுத்தப்படும். மத்திய வீட்டுவசதித்துறை மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகம், மாநில நகராட்சி அமைப்புகள் ஊராட்சி அமைப்புகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இவை ஏற்படுத்தப்படும்.
இவர்களும் மனிதர்கள்தான்
நாட்டில் மனிதக் கழிவை மனிதனே எடுத்துச் செல்லும் கொடுமையை முற்றிலுமாக அகற்ற அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பெரும் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சுமார் 8 லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இத்துடன் இவர்களை நம்பியுள்ள சுமார் 40 லட்சம் பேருக்குப் பலன் அளிக்கும் வகையில் இத் திட்டம் தீட்டப்படுகிறது.
இதன்படி இத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் தொடங்க மானியத்துடன் சலுகை வட்டியில் கடனுதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அவர்கள் தேர்வு செய்யும் தொழிலைப் பொருத்து குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். சுயஉதவிக் குழுக்கள் அல்லது என்ஜிஓவினர் மூலம் இதை வழங்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய முறையை அகற்ற 1992ல் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆந்திரம், கோவா, கர்நாடகம், மகாராஷ்டிரம், திரிபுரா, மேற்குவங்க மாநிலங்களில் இத்தகைய தொழிலாளர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு மாற்றுத் தொழிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ரூ. 600 கோடி செலவிட்டும் சில ஆயிரம் பேரே இதில் பலன் அடைந்தனர்.
இத்திட்டம் சரிவர அமல்படுத்தப்படாததால் 2003ல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. பல மாநிலங்களில் குறிப்பாக ரயில்வேயில் இது அதிகம் காணப்படுகிறது. இதை அகற்ற மத்திய, மாநில அரசுகள் கால வரம்புடன் கூடிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரில் 92 சதவீதம் பேர் தலித்துகளில் ஒரு பிரிவினர் என்றும் குறிப்பிடப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் சரியான முறையில் கணக்கெடுத்து, அவர்களின் மறுவாழ்வுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
முன்னதாக, 1993ல் இந்த முறைக்குத் தடைவிதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி இத்தகைய தொழிலில் யாரையாவது ஈடுபடுத்தினால் சம்மந்தப்பட்டவருக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரை மாற்றுத் தொழிலில் ஈடுபடுத்த ரூ.58 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இத்தொழிலில் அவர்கள் தொடருவதற்கு வறுமையும் சமூக நடைமுறைகளும்தான் காரணம். பண்டைக்காலத்தில் நவீன கழிப்பறை வசதிகள் இல்லாததால் இந்த முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய நவீன சூழ்நிலையிலும் இம்முறை தொடர்வது கவலை அளிக்கிறது.
நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் இந்த நிலை காணப்படுகிறது. அங்கு குறைந்த செலவில் மானியத்துடன் கழிப்பறைகள் அமைக்கும் திட்டம் உள்ளது. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் தனி கழிப்பறை ஏற்படுத்திக் கொள்ள வசதி இல்லாதோர்க்கு பொதுக் கழிப்பறைகள் கட்டித் தரப்படுகிறது. ஆனால் அவை சரிவர பராமரிக்கப்படுவதில்லை. அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
இதன் மூலம் கிராமங்களிலும் தூய்மையை ஏற்படுத்த முடியும். மேலும் இத்தொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாகத் தெரிய வருகிறது. இதைத் தடுக்க முறையான மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இத்திட்டம் வெற்றி பெற அரசுகளுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.