புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆபாச நடனம்: நடிகை மல்லிகா ஷெராவத் மீது போலீஸ் விசாரணை
வதோதரா, ஜன.17-
கடந்த டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவு, புத்தாண்டை வரவேற்பதற்காக மும்பையில் உள்ள மாரியட் ஓட்டலில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் கலந்து கொண்டு நடனம் ஆடினார்.
இந்த நடனம் ஆபாசமாக இருந்ததாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த பரோடா பார் அசோசியேஷன் தலைவர் நரேந்திர திவாரி, வதோதராவில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நடிகை மல்லிகா ஷெராவத் ஆடிய ஆபாச நடனம் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை நானும், என் குடும்பத்தினரும் பார்த்தோம். அதில் மல்லிகா ஷெராவத்தின் உடலில் சில பாகங்கள் மட்டுமே ஆடையால் மறைக்கப்பட்டு இருந்தன. அதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்து டி.வி.யை அணைத்து விட்டோம். மல்லிகா ஷெராவத் நடனம், இந்திய கலாசாரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும்.
இந்த ஆபாச நடனத்தை பார்க்க வந்தவர்களிடம் ஓட்டல் உரிமையாளர் பெரும் பணம் வசூல் செய்துள்ளார். மல்லிகா ஷெராவத்துக்கு ரூ.50 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆபாச நடன நிகழ்ச்சி, விபசார தடுப்பு சட்டத்தின் கீழும், இ.பி.கோ. 366, 244 ஆகிய பிரிவுகளின் கீழும் குற்றம் ஆகும். ஆகவே, மல்லிகா ஷெராவத், ஓட்டல் அதிபர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு டி.வி.வைத்யா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு வதோதரா நகர போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். 30 நாட்களுக்குள் விசாரணையை முடித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.