தொழிலதிபர் நுஸ்லி வாடியாவின் சூட்கேஸில் கைத்துப்பாக்கி, குண்டுகள்: விமான நிலையத்தில் பறிமுதல்
மும்பை, ஜன. 20: மும்பையிலிருந்து ஏர்~இந்தியா விமானத்தில் துபைக்குச் சென்ற பிரபல தொழிலதிபர் நுஸ்லி வாடியாவின் சூட்கேஸில் கைத்துப்பாக்கியும் 30 குண்டுகளும் இருந்தது துபை விமான நிலையத்தில் நடந்த பாதுகாப்புச் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடந்த வாரம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உலகம் முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதை அடுத்து விமான நிலையங்களில் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அனைத்துப் பாதுகாப்புச் சோதனைகளையும் கடந்து கைத்துப்பாக்கியையும் குண்டுகளையும் ஒருவர் தன்னுடன் எடுத்துச் செல்ல அனுமதித்தது எப்படி என்பது குறித்து ஏர்~இந்தியா நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பணியில் கவனக் குறைவாக இருந்ததாக இரு ஊழியர்களை ஏர்~இந்தியா நிறுவனம் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 13-ம் தேதி, மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் அவர் சென்றுள்ளார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளும் கவனக் குறைவாக இருந்துள்ளனர்.
ஆனால், துபையில் அவர் இறங்கியபோது விமான நிலையத்தில் நடந்த பாதுகாப்புச் சோதனையில் அவரது சூட்கேஸில் கைத்துப்பாக்கியும் குண்டுகளும் இருப்பது தெரியவந்தது. துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமத்தை அதிகாரிகளிடம் வாடியா காட்டியதை அடுத்து, அவரிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதற்கான ரசீதை அதிகாரிகள் அளித்தனர்.
பாம்பே டையிங் நிறுவன அதிபரான நுஸ்லி வாடியா, “கோஏர்’ என்னும் விமானப் போக்குவரத்து நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.
இச் சம்பவம் குறித்து விசாரித்தபோது, “”வாடியாவின் வீட்டுப் பணியாள், அந்தத் துப்பாக்கியையும் குண்டுகளையும் தெரியாமல் வாடியாவின் சூட்கேஸில் வைத்து, விமான நிலையத்தில் கொண்டுவந்து அவரிடம் கொடுத்துவிட்டார்” என்று அவரது நிறுவனத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் விளக்கம் அளித்தார்.