Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘civic elections’ Category

Chennai Local Civic Elections – Ma Subramanian gets elected unopposed

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 7, 2007

சென்னை மாநகராட்சி தேர்தல்: மா. சுப்பிரமணியன் போட்டியின்றி தேர்வு- சுயேச்சை வாபஸ் ஆகிறார்

சென்னை, பிப்.7-

சென்னை மாநகராட்சிக்கு 100 வார்டுகளில் வருகிற 18-ந்தேதி மறு தேர்தல் நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் முடிந்து விட்டன. பிரதான எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., ம.தி.மு.க. ஆகியவை தேர்தலை புறக்கணிப்பதால் அந்த கட்சிகள் சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து பாரதீய ஜனதா, தே.மு.தி.க. மற்றும் சுயேச்சைகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நேற்று மனுக்கள் பரிசீலனையின் போது தே.மு.தி.க. வேட்பாளர்கள் 14 பேரின் மனுக்கள் தள்ளுபடி ஆகிவிட்டது. இதனால் சில வார்டுகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து அதிகாரப்பூர்வ கட்சி வேட்பாளர்கள் யாரும் களத்தில் இல்லை.

ஒரு சில சுயேட்சைகள் மட்டுமே போட்டியிடுகிறார்கள். அவர்களும் தி.மு.க. வினருக்கு ஆதரவாக போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சில வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

140-வது வார்டில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் தி.மு.க. வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து தே.மு.தி.க. சார்பில் ஏழுமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் மனு தாக்கல் செய்யாததால் முத்து என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரும் மனு தாக்கல் செய்யவில்லை.

கடைசி நேரத்தில் சுப்பிரமணியன் என்பவர் தே.மு.தி.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரது மனுவும் தள்ளுபடி ஆவிட்டது. இப்போது தியாகராஜன் என்ற ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டும் மா. சுப்பிரமணியனை எதிர்த்து மனு செய்துள்ளார்.

அவரும் தி.மு.க.வுக்கு ஆதரவாக போட்டியில் இருந்து விலக போவதாக கூறியுள்ளதால் மா.சுப்பிரமணியன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.

அதே போல் 135-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக காஞ்சனா களத்தில் இருக்கிறார். அவரை எதிர்த்த தே.மு.தி.க. சார்பில் மேரி ஜுலியட் அறிவிக்கப்பட்டார். அவர் மனு தாக்கல் செய்யவில்லை. கடைசி நேரத்தில் உமா என்பவர் தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி ஆகிவிட்டது.

2 சுயேச்சைகள் மட்டும் எதிர்த்து நிற்கிறார்கள். அவர்களும் போட்டியில் இருந்து விலக இருப்பதால் காஞ்சனா போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். இதே போல் 138-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மேரி லூர்துசாமி, 139-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மகேஷ்குமார், 141-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் கென்னடி 86-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சேப்பாக்கம் சுரேஷ்குமார், 91-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் தீபா, 127-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் கருணாநிதி ஆகியோரை எதிர்த்து மனு தாக்கல் செய்த தே.மு.தி.க. வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி ஆகிவிட்டன.

20-வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூப்சாந்தரை எதிர்த்து தே.மு.தி.க. சார்பில் இன்பசேகரன், பாரதீய ஜனதா சார்பில் பாலாஜி மனு தாக்கல் செய்த னர். இருவரும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

இதேபோல் 11-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் கிருபாகரனை எதிர்த்து மனு தாக்கல் செய்த தே.மு.தி.க. வேட்பாளர் ஸ்ரீதர் போட்டியில் இருந்து விலகி கொண்டார்.

இதனால் அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாளை பிற்பகலில் மனுக்கள் வாபஸ் முடிந்ததும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Posted in ADMK, AIADMK, Chennai, civic elections, DMDK, DMK, Election, Ma Subramanian, Madras, Mayor, MDMK, Polls, Vijaiganth, Vijaikanth | 3 Comments »

Electronic Voting Machines – Chennai civic elections lawsuit adjourned

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 6, 2007

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக் கோரும் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

சென்னை, பிப். 7: சென்னை மாநகராட்சி மன்றத்தில் 100 வார்டுகளுக்கு நடக்கவிருக்கும் மறுதேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துமாறு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏ.கே. வெங்கடசுப்பிரமணியன் இவ்வழக்கைத் தொடர்ந்தார்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி கே. சந்துரு ஆகியோர் இவ்வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்தனர். அப்போது மாநிலத் தேர்தல் ஆணையர் சார்பாக பதில் மனுவைத் தாக்கல் செய்தார் மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி. பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தபிறகு இவ்வழக்கு தொடரப்பட்டிருப்பதால், இம்மனு விசாரணைக்கு ஏற்றதல்ல. சென்னை மாநகராட்சியில் 100 வார்டுகளில் தேர்தல் நடத்த 4,830 வாக்கு இயந்திரங்கள் தேவை. அதற்காக 11,050 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒவ்வொரு இயந்திரத்தையும் பரிசோதித்து, சான்றிதழ் வழங்க வேண்டும். வரும் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்த நடைமுறைகளை மேற்கொள்ள போதுமான அவகாசம் இல்லை. எனவேதான் வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இத்தேர்தலை விடியோ மூலம் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வாக்குச் சீட்டுகளில் வாக்களிக்கப்பட்ட கடந்த தேர்தலில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதை யாரும் குறை சொல்லவில்லை. அது மட்டுமின்றி மின்னணு வாக்கு இயந்திரத்திலும் நம்பிக்கை இல்லை என்று சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன என்றும் மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி வாதாடினார்.

மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் எல்.என். ராஜா வாதாடினார். வாக்கு இயந்திரங்களை உடனே பயன்படுத்த நம்மிடம் திறமை உள்ளது. ஆனால் அரசுக்கு அதைப் பயன்படுத்தும் எண்ணம் இல்லை என்றார் அவர்.

இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Posted in AB Shah, abuse, AK Venkatasubramanian, Ballot Paper, BEL, Bharath Electronics, Booth, booth capturing, civic elections, Corruption, DMK, EC, election commission, Electronic Voting Machines, EVM, G Masilamani, Government, K Chandru, Law, LN Raja, Local Body, Municipality, Order, Polls, Power, voter | Leave a Comment »

Electronic Voting Machines to be used at 25% of Voting booths in Chennai

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையர்

பழனி, பிப். 3: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது 25 சதவீத இடங்களில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வாசுகி, எஸ்.பி. பாரி, டி.ஆர்.ஓ. பெர்னாண்டஸ், ஆர்.டி.ஓ. கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் கூறியது: தமிழகத்தில் காலியாகவுள்ள 533 பதவிகளுக்கு வரும் 8-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத் தேர்தலின் போது முதன் முறையாக சோதனை அடிப்படையில் 25 சதவீத இடங்களில் மிண்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் வாக்குச் சீட்டுகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

கிராம ஊராட்சி வாரியாக வாக்காளர் கணக்கெடுப்பு விரைவில் நடைபெறும். தேர்தல் செலவு கணக்குகளை சமர்பிக்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கள்ள வாக்குகளை காட்டிக்கொடுக்கும் ஏற்பாட்டுடன் உ.பி.யில் வாக்குப்பதிவு!: தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்

லக்னெü, மார்ச் 2: கள்ள வாக்குகளைப் போடவிடாமல் தடுக்கும் ஏற்பாட்டுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் என்று அறிவித்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி.

மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய லக்னெüவுக்கு வியாழக்கிழமை வந்த கோபாலசாமி நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

“மாநிலத்தில் வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி சராசரியாக 70% முதல் 71% வரைதான் நிறைவேறியிருக்கிறது. இது 90% முதல் 95% வரை நடைபெறாமல் தேர்தல் நடைபெறாது. எனவே வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் என்ன செய்வது என்பது, அப்படி வழங்க முடியாத நிலை ஏற்பட்டால் -அதன் பிறகு தெரிவிக்கப்படும்.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் புதிய அம்சங்கள்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைத்தான் இம் மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் முதல்முறையாக பயன்படுத்தப் போகிறோம். அவற்றில் 2 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 1. கண்பார்வை அற்றவர்களும் தொட்டு உணரும் வகையிலான எண்கள் அதில் பொறிக்கப்பட்டிருக்கும். 2. ஒவ்வொரு வாக்கு பதிவானதும் அந்த வாக்கு அளிக்கப்பட்ட நேரமும் சேர்ந்தே பதிவாகும். இதனால் வாக்குப்பதிவு எப்போது தொடங்கியது, எப்போது முடிந்தது என்பது தெரிந்துவிடும். வாக்குப் பதிவு முடிந்து சீல் வைத்த பிறகு அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை யாரும் முறைகேடாகப் பயன்படுத்த முடியாது. இப்படி சில ரகசிய ஏற்பாடுகள் அதில் உள்ளன. எனவே முறைகேடுகள் தவிர்க்கப்படும். அப்படி நடந்தால் இயந்திரமே சொல்லிவிடும் (மெஷின் போலேகா!).

வாக்குச் சாவடியில் மத்திய போலீஸ்: ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் மத்திய போலீஸ் படைதான் காவல் பணியில் ஈடுபடுத்தப்படும். எனவே தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறும்’ என்றார் கோபாலசாமி.

Posted in ADMK, Amar Singh, Amitabh, Anomaly, Assembly, BJP, booth capturing, Boothcapturing, BSP, candidate, Chennai, Chief Election Commissioner, civic elections, Commissioner, Congress, DMK, EC, Elections, Electorate, Electronic Voting, EVMs, Gopalasami, Gopalasamy, Gopalsami, Gopalsamy, Jayaprada, Local Body, Madras, MDMK, Mulayam, Municipal, Party, Politics, Polling Booth, Polls, SJP, UP, Voting Machines | Leave a Comment »

Ka Pazhanithurai – State of Dalits in Leadership roles

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006

நீங்கியது அவமானம்

க. பழனித்துரை

பத்தாண்டு காலமாக நாம் எங்கே சென்றாலும், நம்மைக் கேட்பது

“பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டாங்கச்சியேந்தல் பஞ்சாயத்துத் தேர்தல் நடக்குமா? இதை எப்படி மத்திய அரசு, தமிழக அரசு, நிர்வாக இயந்திரம், அரசியல் கட்சிகள், அறிவு ஜீவிகள், நீதிமன்றங்கள் சகித்துக்கொண்டு உள்ளன’ என்பதாகத்தான் இருந்தது.

இடஒதுக்கீட்டிற்கு இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலம் தமிழகம். ஆனால் இந்த இடஒதுக்கீட்டை இந்தப் பஞ்சாயத்துகளில் வாழும் ஜாதி இந்துக்கள் புரிந்துகொள்ளவும் இல்லை. புரிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை. புரிய வைக்க யாரும் முனையவுமில்லை. நமக்கு அண்டை மாநிலமான கேரளத்தில் சமூக நீதிக்காக நம் பெரியார் சென்று வைக்கத்தில் போராட்டம் நடத்தினார். அந்த மாநிலம் இன்று சமூக நீதிக்கும் மனித வளத்திற்கும் மனித உரிமைப் பாதுகாப்பிற்கும் உலகிற்கு வழிகாட்டும் மாநிலமாக உருவாகிவிட்டது. ஆனால் நம் தமிழ்நாட்டில் அறுபது ஆண்டு ஜனநாயக ஆட்சியில் நம் அரசியல் சாசன ஷரத்துகளைச் சமுதாயப் பழக்கவழக்கங்களுக்குக் காவு கொடுத்து பார்க்கத்தான் முடிந்ததே தவிர, அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க முடியவில்லை. இதுதான் இந்த நான்கு பஞ்சாயத்துகளிலும் அண்மைக்காலம் வரை நடைபெற்றது. அரசியல் கட்சிகளோ, குறிப்பாகத் தமிழகத்தை ஆளும் கட்சிகள், பிரதான எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையைச் சமூகநீதி என்ற அடிப்படையில் அணுகினால், தென்மாவட்டங்களில் ஜாதி இந்துக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற போலிக் காரணத்தைப் பின்னணியில் வைத்து வாளாவிருந்தன. “”இந்தப் பஞ்சாயத்துகள் எல்லாம் நாட்டில்தான் இருக்கின்றனவா அல்லது காட்டில் இருக்கின்றனவா? இந்தப் பஞ்சாயத்துகளில் நடப்பதற்கு என்ன பெயர்? இவை நாட்டிற்குள் ஒரு காடுபோல் அல்லது ஒரு தீவுபோல் இருந்து வந்துள்ளனவே” என்றுதான் அனைவரும் கேட்டவண்ணம் இருந்தனர். ஆனால் நம் அரசாங்கமோ, இது அரசு இயந்திரத்திற்கு அரசியல் ஆட்சிக் கட்டமைப்பிற்கு விடப்பட்ட ஒரு சவால் என்று கருதவில்லை.

இந்தப் பஞ்சாயத்துகளில் தேர்தல் வரும்போதெல்லாம், அந்தத் தலைவர் பதவியைத்தான் குறி வைத்து அரசு இயந்திரமும் சரி, அரசியல் கட்சிகளும் சரி செயல்பட்டனவே அன்றி ஒட்டுமொத்தப் பஞ்சாயத்தை – அதாவது தலைவர், வார்டு உறுப்பினர் அனைவரும் சேர்ந்த ஓர் அமைப்பாகத் தேர்தல் மூலம் உருவாக்கிட வேண்டும் என்று யாரும் முயலவில்லை. இதுதான் இவ்வளவு நாள் தோல்விக்கும் காரணமாக இருந்தது. தேர்தல் நடத்த முடியவில்லை அல்லது அப்படி நடந்தாலும் தலைவரால் நீடித்துப் பதவியில் இருக்க முடியவில்லை. இந்த நாடகங்கள் நான்கு பஞ்சாயத்துகளில்தான் நடந்தன என்றாலும் இதன் விளைவுகள் எவ்வளவு கொடியதாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்து தமிழகத்தில் உள்ள பெரிய அரசியல் கட்சிகள் வலுவாகச் செயல்படவில்லை. இடதுசாரிக் கட்சிகளும் ஒரு சில தலித் இயக்கங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சில பத்திரிகைகளும்தான் இந்தப் பிரச்சினையைத் தாங்கித் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தனவே தவிர, மற்ற அரசியல் கட்சிகள் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை. அரசு இயந்திரமும் எப்படியாவது தேர்தலை நடத்தி முடித்தாக வேண்டும் என்ற கடப்பாட்டுடன் செயல்படுவதற்குப் பதிலாக மேலதிகாரிக்கு தாங்கள் “கடமைகளைச் செய்து கொண்டுதான் உள்ளோம், இருந்தும் முடியவில்லை’ என அறிக்கை சமர்ப்பிப்பதில்தான் கவனமாக இருந்தது. மாறாக, “கண்டேன் சீதையை’ என்று ராமனிடம் அனுமன் கூறியதுபோல் “முடித்தேன் வேலையை’ எனச் சொல்லும் ஓர் அமைப்பாகச் செயல்படவில்லை என்பதை தற்பொழுது நடந்து முடிந்துள்ள தேர்தலுக்குப் பிறகு புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இந்த முறை பல்முனைத் தாக்குதலை, மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் பத்திரிகைகளும் ஒரு சில இடதுசாரி மற்றும் தலித் கட்சிகளும் கூட்டாக நடத்தி வெற்றி பெற்றுள்ளன. கொள்கை முடிவைச் சரியாக எடுத்து உறுதியாக மாநில அரசும் நின்றதால், தமிழக அரசு ஒரு செய்தியை அந்த ஜாதியத் தலைவர்களுக்குத் தெளிவாக அறிவித்துவிட்டது. “நாம் என்னதான் செய்தாலும் மாநில அரசு அசைந்து கொடுக்காது. அது மட்டுமல்ல, எத்தனை முறை நாம் இப்படித் தடுத்தாலும் அதனால் நம் பஞ்சாயத்து பொதுத் தொகுதியாக மாறப்போவது இல்லை’ என்ற செய்தியினைத் தெளிவாகத் தந்துவிட்டது. அடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழுச்சுதந்திரம் தந்து செயல்பட வைத்தது. மாவட்ட நிர்வாகம் இந்தத் தேர்தலைச் சந்திக்கத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு, களத்தில் உள்ள அமைப்புகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது. அடுத்த நிலையில் இந்த முறை களத்திற்கும் – அதாவது பஞ்சாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை, நிமிடத்திற்கு நிமிடம் கவனித்து, முடிவுகளை அவ்வப்போது எடுத்து அவற்றை நிறைவேற்றும்போது ஏற்படும் விளைவுகளை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்குக் கிடைக்கும் வகையில் ஓர் உயிரோட்ட செய்தித் தொடர்பினை ஏற்படுத்தி அனைவரும் முழு மூச்சுடன் செயல்பட்டுள்ளனர். ஏனென்றால் களத்தில் மணித்துளியில் கருத்துப் பரிமாறும் அளவிற்கு – களத்தில் இறங்கி வேலை செய்த அமைப்புகள், அதிகாரிகள், அனைவருடனும் மாவட்ட நிர்வாகம் தொடர்பு வைத்துக்கொண்டு கணநேரத்தில் முடிவுகளை எடுத்துக் கொண்டேயிருந்தது. இந்தப் பஞ்சாயத்துகளில் ஜாதி இந்துக்களின் தலைவர்கள் வகுக்கும் அனைத்திற்கும் பதில் திட்டங்களை வைத்து ஒட்டுமொத்தப் பஞ்சாயத்திற்கும் தேர்தலை நடத்த முனைந்ததால் மிகப்பெரிய வெற்றியினை மாவட்ட நிர்வாகம் பெற்றுவிட்டது. இதில் மிக முக்கியமாக மாவட்ட ஆட்சித்தலைவரின் பார்வையும் பிரச்சினைகளின் ஆழ அகலங்களைப் பற்றிய புரிதலும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவியாக இருந்துள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்தக் கடுமையான நடவடிக்கையையும் எடுத்து மாநில அரசிற்கு எந்த விதத்திலும் தர்மசங்கடத்தை உருவாக்கவில்லை. ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தமக்கிருந்த அதிகாரங்களை வைத்தே சாதுரியமாக, தெளிவான திட்டத்தை உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாகப் பாராட்டுக்குரியவர்கள். இந்தத் தேர்தலுக்குப் பெரிதும் உதவிய காவல்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அனைவரும் பாராட்டுக்குரியோராவர்.

மாவட்ட நிர்வாகத்திற்கு ஒரு சரியான தலைமை கிடைக்கும்போது, அது தன்னகத்தே உள்ள சக்தியை எப்படிப் பயன்படுத்தி வெற்றி பெற்றுத் தருகிறது என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த சான்றாகும். மாநில அரசு, அரசுத்துறைச் செயலர், மாவட்ட நிர்வாகம், அடிநிலை அரசு அலுவலர்கள், மக்களுடன் பணியாற்றும் அரசியல் அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்த நான்கு பஞ்சாயத்துகளிலும் தேர்தலை நடத்தித் தலைவர்களை மட்டும் தேர்ந்தெடுக்காமல் பஞ்சாயத்து அமைப்பையே உருவாக்கி விட்டனர். இதுவரை பஞ்சாயத்துத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத்தான் நம் அரசு இயந்திரமும் தேர்தல் ஆணையமும் பிரயத்தனப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறை ஒட்டுமொத்தப் பஞ்சாயத்துக்கான அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தலை முடித்துவிட்டது மாவட்ட நிர்வாகம். இனிமேல் இந்தப் பஞ்சாயத்துகளில் தலைவர் ராஜிநாமா செய்தாலும் உதவித்தலைவரை வைத்துப் பஞ்சாயத்தை நடத்தி விடலாம். இந்தப் பஞ்சாயத்துகளைப் பின்பற்றி செல்லம்பட்டி ஒன்றியத்தில் இன்னொரு கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலை முறியடிக்க எடுத்த முடிவையும் மாவட்ட நிர்வாகமும் அமைப்புகளும் தகர்த்திருக்கின்றன. இவர்களின் செயல்களால் நம் அவமானம் நீங்கியது. சென்னையில் நடந்த மாநகராட்சித் தேர்தலில் நமக்கு ஓர் அவமானம் நிகழ்ந்தது. ஆனால் இந்த நான்கு பஞ்சாயத்துகளிலும் தேர்தல் நடந்து பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட்டதன் மூலம் நமக்கு ஏற்பட்ட இந்த அவமானம் நீங்கியது. இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நாம் உண்மையிலேயே நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள். ஏனென்றால் அவர்கள்தான் நமக்கு ஏற்பட்ட அவமானத்தை நீக்கியவர்கள்.

Posted in civic elections, Leader, Local Polls, Religion/Politics, Tamil Nadu | Leave a Comment »

Procession condemning the violence in Civic Elections taken out by CPI(M)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 26, 2006

தேர்தல் வன்முறையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஆர்ப்பாட்டக்காரர்கள்

தமிழக தலைநகர் சென்னையின் மாநகராட்சி மன்றத்துக்கு அக்டோபர் 13ஆம் தேதி நடந்த தேர்தல் வாக்குப் பதிவின்போது நடந்த வன்முறையை கண்டித்து ஆளும் திமுகவின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று வியாழக்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

இந்த வன்முறைகளுக்கு ஆளும் திமுகவைச் சேர்ந்த முன்னணி கட்சியினர் சிலரே தலைமைதாங்கி நடத்தியதாகவும் அவர்கள் மீதும், வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறை மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் என்.வரதராஜன் சென்னை மாநகராட்சித் தேர்தலில் நடந்த வன்முறை சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடந்தால், அது தமது கட்சிக்கும் திமுகவுக்கும் இடையிலான கூட்டணியையே பாதிக்கும் என்று எச்சரித்தார்.

Posted in Alliance, Chennai, civic elections, CPI(M), DMK, local body elections, Madras, N varadharajan, partner, Procession, Tamil Nadu, varadarajan, Violence | Leave a Comment »

Mayors announced by M Karunanidhi

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006

சென்னை மேயர் மா.சுப்பிரமணியம்: கருணாநிதி அறிவிப்பு 

சென்னை, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய நான்கு மாநகராட்சி மேயர், துணை மேயர் பெயர் விவரங்களை முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று மதியம் அறிவித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

சென்னை

மேயர்-மா.சுப்பிரமணியம்
துணை மேயர்-ஆர்.சத்தியபாமா

மதுரை
மேயர்-தேன்மொழி கோபிநாதன்
துணை மேயர் – பி.எம்.மன்னன்

நெல்லை
மேயர்-ஏ.எல். சுப்பிரமணியம்
துணை மேயர்-கா.முத்துராமலிங்கம்

சேலம்
மேயர்-ரேகா பிரியதர்ஷினி
துணை மேயர்-பி.பன்னீர் செல்வம்

கோவை
துணை மேயர்-ந.கார்த்திக்

திருச்சி
துணை மேயர்-மு.அன்பழகன்

Posted in candidates, Chennai, civic elections, Coimbatore, Deputy Mayors, DMK, Kovai, Local Body Polls, M Karunanidhi, Madras, Madurai, Mayors, Nellai, Salem, Tamil Nadu, Thiruchirappalli, Thirunelveli, Trichy | 1 Comment »

‘DMK Alliance victory is Asurargal’s victory’ – Thol Thirumavalavan

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

விடுதலை சிறுத்தைகள் இணைந்ததால் தி.மு.க. கூட்டணியின் வலிமை கூடியிருப்பது நிரூபணம்: திருமாவளவன் அறிக்கை

சென்னை, அக்.20-

விடுதலை சிறுத்தைகள் பொது செயலாளர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலிலும் 31 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இது கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்-அமைச்சர் கூறியிருப்பது அவருடைய பெருந்தன்மையான – முதிர்ச்சியான தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறது.

கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும் அவரது இயல்பான அணுகுமுறைகளே தி.மு.க. கூட்டணியின் இந்த அமோக வெற்றிக்கு அடிப்படையாகும். விடுதலை சிறுத்தைகளின் வரவால் தி.மு.க. கூட்டணியின் வலிமை மேலும் கூடியிருக்கிறது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தேர்தலுக்கு முன்பே வெளிப்படையாக அறிவித்தது, இந்த அமோக வெற்றியின் மூலம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடைசி நேரத்து வரவால் விடுதலை சிறுத்தைகளுக்கு பெரிதும் பயனில்லை என்றாலும், போட்டியிட்ட குறைவான இடங்களில் கணிசமான வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம்.

குறிப்பாக

  • கடலூர் மாவட்டத்தில் 3 நகராட்சி கவுன்சிலர்கள், 4 பேரூராட்சி கவுன்சிலர்கள்,
  • விழுப்புரம் மாவட்டத்தில் 2 நகராட்சி கவுன்சிலர்கள், 2 பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒரு ஊராட்சி மன்ற தலைவர்,
  • தர்மபுரி மாவட்டத்தில் 2 நகராட்சி கவுன்சிலர்கள், 3 பேரூராட்சி கவுன்சிலர்கள், 5 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர்,
  • பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு பேரூராட்சி கவுன்சிலர்,
  • வேலூர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி கவுன்சிலர், 2 பேரூராட்சி கவுன்சிலர்கள், 8 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒரு ஒன்றிய கவுன்சிலர்,
  • சேலம் மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

அத்துடன், தி.மு.க. கூட்டணியின் அமோக வெற்றிக்கு மிகப்பெருமளவில் பயன்பட்டிருக்கிறோம் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த தீபாவளி நரகாசுரனை கொன்றதற்காக அல்ல; நரகாசுரனும், நரகாசுரனின் வாரிசுகளும் வென்றதற்காக கொண்டாடப்படும் தீபாவளி ஆகும். தி.மு.க. கூட்டணியின் தேர்தல் வெற்றி அசுரர்களின் வெற்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Posted in Alliance, Asurar, civic elections, Dalit Panthers, DMK, Local Body Polls, Tamil Nadu, Thirumavalavan, Thol Thirumaa, Thol Thirumavalavan, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal | Leave a Comment »