இவர்களும் இந்தியர்கள்தான்!
பி. சக்திவேல்
சமீபகாலமாக இந்தியாவில் வெளிமாநிலத்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தாக்கப்படுவதும், அவர்களுடைய உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் நடைபெறுவதும் அதிகரித்து வருகின்றன.
இந்தச் சம்பவங்களால் “பிராந்திய உணர்வுகள்’ முக்கியத்துவம் அடைந்து “தேசிய உணர்வுகள்’ முக்கியத்துவம் இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த வளர்ச்சி இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் சமூகக் கட்டமைப்புக்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கும் ஆரோக்கியமானதல்ல.
“பிராந்திய உணர்வுகளை’ காட்டிலும் “இந்தியா’ என்ற தேச உணர்வுக்கு முன்னுரிமை அளித்துதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது. உதாரணமாக, அரசியலமைப்புச் சட்ட விதி 1-ல் இந்தியா என்பது “”மாநிலங்களை உள்ளடக்கிய ஓர் ஐக்கியம்” என்றுதான் வரையறுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளைக் காட்டிலும் மத்திய அரசு மிகவும் வலிமையானதாகவும் அதிக அதிகாரம் படைத்ததாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அந்நாட்டுக் குடிமக்களுக்கு “இரட்டைக் குடியுரிமை’ வழங்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இந்தியாவில் தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்காகவும், இந்தியா என்கிற உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காகவும் ஒரே ஒரு குடியுரிமையைத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.
மேலும் அடிப்படை உரிமைகளில் இந்திய குடிமக்களுக்குச் சுதந்திரமாக இடம் பெயர்ந்து செல்வதற்கும், ஓர் இடத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தி வசிப்பதற்கும், விரும்பிய தொழில் செய்வதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாக, பல மாநிலங்களில் நடக்கும் சம்பவங்கள், அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், மற்ற மாநிலத்திலிருந்து வந்தவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாகப் பாவித்து நடத்தக்கூடிய சூழ்நிலையும் உருவாகி உள்ளது. மகாராஷ்டிரத்தில் வசித்து வரும் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரைச் சார்ந்தவர்கள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும்; அதேபோல், வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மகாராஷ்டிரத்தில் நுழைவதைக் கட்டுப்படுத்த வேண்டும்; இது சிவசேனையின் பிரதான கோஷம். இதை வலியுறுத்தித்தான் சமீபத்தில் நடைபெற்ற மும்பை உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றது. “வாக்கு வங்கியை’ கவர்வதற்காக இனிவரும் காலத்தில் இந்தக் கோஷம் மேலும் வலுப்பெறும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
சென்ற ஆண்டு ரயில்வே பணிக்கான எழுத்துத் தேர்வு எழுதச் சென்ற வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அசாமில் ரயில் நிலையத்தில் தாக்கப்பட்டனர். அவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. ஹிந்தி பேசும் மாநிலத்தைச் சார்ந்த அனைவரும் அசாமை விட்டு வெளியேற வேண்டும் என “உல்பா’ தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர். ஹிந்தி பேசும் மக்கள் மீது தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். அசாம் மாநில அரசும் மத்திய அரசும் உறுதி அளித்தபோதிலும் பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த ஹிந்தி பேசும் மக்கள் தங்கள் உடமைகளை விட்டு விட்டு குடும்பத்தோடு அகதிகளாக வெளியேறும் அவலமும் நீடித்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் அரசியலமைப்புச் சட்டங்களின் மூலம் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள், குடிமக்கள் அனைவராலும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அசாம் மாநில அரசும் மத்திய அரசும் இந்த விஷயத்தில் சரிவர செயல்படாதது மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட சூழ்நிலையிலும் தேசிய உணர்வுகள் முக்கியத்துவம் இழந்து பிராந்திய உணர்வுகள் மேலோங்கி விட்டன. இதையடுத்து நாள்தோறும் உருவாகிவரும் சச்சரவுகளும் முரண்பாடுகளும் நமது ஜனநாயகத்திற்கு கேடுகளை விளைவித்து வருகின்றன. இந்நிலை நீடிக்குமானால், மக்கள் படிப்படியாக அரசின் மீது நம்பிக்கை இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும்.
குஜராத்தில் நடப்பது வேறுவிதமான நிகழ்வுகள். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் “கோத்ரா’ சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் இவர்கள் எவ்வாறு தங்களை தேசிய நீரோட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும்?
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிய பல்வேறு இனம் மற்றும் மொழி பேசக்கூடிய மக்களைப்பற்றி ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவு நாம் அனைவரும் கவனிக்கப்படக்கூடியதாக அமைந்துள்ளது. அதாவது, மற்ற எல்லா நாட்டினரைக்காட்டிலும் இந்தியாவிலிருந்து குடியேறிய மக்களிடம் மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு வேற்றுமைகள் குறைந்து காணப்படுகிறது.
தெளிவாகக் கூற வேண்டுமென்றால், மற்ற நாட்டினரைக் காட்டிலும் இந்தியர்கள் மிகவும் ஒற்றுமையோடு, தங்கள் மொழி மற்றும் கலாசார அடையாளத்தை மறந்து, வாழ்ந்து வருகின்றனர். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஒற்றுமையோடு செயல்படும்போது ஏன் இந்தியாவில் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை. இது கண்டிப்பாக நாம் கவனம் செலுத்தப்பட வேண்டிய கேள்வி.
அடிப்படையில் நம்மிடம் “இந்தியா’ மற்றும் “இந்தியன்’ என்கிற உணர்வு உள்ளது. இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதனால்தான் சுனாமி வந்தபோதும், குஜராத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்தபோதும், வடமாநிலங்களில் வெள்ளச் சேதம் ஏற்பட்டபோதும் கார்கில் போர் நடைபெற்ற தருணத்திலும் நம்முடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், நம்மால் முடிந்த உதவிகளை அளித்தோம்.
தங்களுடைய அரசியல் செயல்பாட்டிற்காகவும் மற்றும் லாபத்திற்காகவும் பிராந்தியத்தில் செயல்படும் ஒரு சில அமைப்புகள்தான் இந்த வேற்றுமை விதையை விதைத்துத் தங்களுடைய குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன. இந்த அமைப்புகளுக்கு நாம் துணைபோகக் கூடாது. உடனடியாக இத்தகைய அமைப்புகளை தடை செய்ய உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இந்தியக் குடிமக்களாகிய நாம் தேசிய உணர்வுகளுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன் பிறகே மாநில அல்லது பிராந்திய உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பல்வேறு காரணங்களால் மாநிலங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அந்த மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதியைப் பாதித்துவிடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அன்னிய நேரடி முதலீடுகள் மற்ற மாநிலங்களுக்குச் சென்றடையக்கூடிய நிலையும் ஏற்பட்டுவிடும்.
எனவே அண்டை மாநிலங்களையும் பிற மாநிலங்களையும் சார்ந்தவர்களை சமமாக நடத்தக்கூடிய மனோபாவத்தையும் பண்பையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களும் இந்தியர்கள்தான்!
(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).