சென்னையில் அக்டோபர் வரை குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது
சென்னை, ஜூன் 3: சென்னையில் வரும் அக்டோபர் வரை குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது என்று சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் (பணிகள் மற்றும் பராமரிப்பு) வி. சிவகுமரன் தெரிவித்தார்.
போதுமான நீர் கையிருப்பு உள்ளதால், தினமும் 64 கோடி லிட்டர் நீர் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியது:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம் மற்றும் புழல் ஏரிகளில் 332 கோடி கன அடி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 109 கோடி கன அடியும், வீராணம் ஏரியில் 42 கோடி கன அடியும் நீர் உள்ளது.
இவற்றைத் தவிர, தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நதியிலிருந்து ஜூலை முதல் ஆகஸ்ட் வரை 8 டி.எம்.சி. நீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் வரும் அக்டோபர் மாதம் வரை சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 64 கோடி லிட்டர் நீர் தொடர்ந்து வழங்கப்படும்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கடந்த ஏப்ரல் முதல் நாளொன்றுக்கு 11 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் ஆதாரங்களிலிருந்து நாளொன்றுக்கு 3 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தேவைப்பட்டால் நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் அளவாக உயர்த்தப்படும் என்றார்.