எது மதச்சார்பின்மை?: மோடி விளக்கம்
“துக்ளக்’ ஆண்டுவிழாவில் மோடியை வரவேற்கிறார் “சோ’ எஸ். ராமசாமி.
Dondus dos and donts: துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்: “துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்டம் – 1”
சென்னை, ஜன. 14: சமுதாயத்தில் அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதுதான் மதச்சார்பின்மை என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
வளர்ச்சித் திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றினால் நாடு வளர்ச்சி பெறும் என்றும் அவர் கூறினார்.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற “துக்ளக்’ பத்திரிகையின் 38-வது ஆண்டு விழாவில் அவர் பேசியது:
நாட்டில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்தபோது தமிழகத்தில் “சோ’ ராமசாமி எழுதிய “இரண்டு கழுதைகள்’ கதை குறித்து எனது நண்பர்கள் மூலம் அறிந்தேன். அப்போதுதான் “சோ’ குறித்து தெரிந்து கொன்டேன்.
தமிழக அரசியலில் “சோ’ ராமசாமி ராஜகுருவாக இருக்கிறார். பாஜக தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்ட அவர் தயங்குவதில்லை இதன் மூலம் ஒரு ஜனநாயகத்தை அவர் நிலை நாட்டுகிறார்.
எனக்கு முதல்வர் பதவி கிடைத்துள்ளது என்பதைவிட முதல்வருக்குரிய பணிகளை நான் செய்ய வேண்டும் என மக்கள் என்னை நியமித்துள்ளதாகவே கருதுகிறேன். அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே எனது கடமை. என்னால் முடிந்தவரை அந்த கடமையை நிறைவேற்றி வருகிறேன்.
என் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை என இங்கு பேசும்போது “சோ’ ராமசாமி குறிப்பிட்டார். எனது குடும்பம் குறித்து யாருக்கும் தெரியாது. ஒரு பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த நான் பள்ளிப் பருவம் முதல் எந்தப் பதவியையும் வகித்ததில்லை. முதல்வர் பதவியேற்கும் வரை முதல்வர் அலுவலகம் தெரியாது. சட்டப் பேரவை எப்படி இருக்கும் என தெரியாது.
முதல்வர் பதவி வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் பதவி. எனவே, நேர்மையான, தெளிவான சிந்தனையுடன் செயல்படுகிறேன். அதனால், மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கிறது.
நான் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் அனைத்து செயலர்களையும் அழைத்து பேசியபோது, குஜராத்தில் அதுவரை நிலவிய பல்வேறு பிரச்னைகள் குறித்து தெரிய வந்தது.
பெண் கல்வியில் நாட்டிலேயே 20-வது மாநிலமாக குஜராத் இருந்தது. தற்போது பெண்கல்வி அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கை 100 சதவீதமாகியுள்ளது. பள்ளிகளிலிருந்து இடையில் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் விகிதம், 45 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
குஜராத்தைப் பாதித்த மற்றொரு பிரச்னையான சிசு மரண விகித அதிகரிப்பைக் கட்டுப்படுத்த, “சிரஞ்சீவ்’ என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய “ஜோதிகிராம் திட்டம்’ உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தற்போது 24 மணி நேரமும் தடையற்ற மின் விநியோகம் நடைபெறுகிறது.
மதச்சார்பின்மை: மதச்சார்பின்மை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் மதச்சார்பின்மைக்குப் பல்வேறு விளக்கம் அளித்து வருகின்றனர்.
சிலர் சிறுபான்மையினருக்கு உதவுவது மதச்சார்பின்மை என்கிறார்கள், சிலருக்கு இந்துக்களைத் தாக்குவது மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பெயரில் தீவிரவாதிகளை ஆதரிப்பது சிலருக்கு மதச்சார்பின்மை என பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.
என்னைப் பொறுத்தவரை அனைத்துதரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் மதச்சார்பின்மை.
குஜராத்தில் பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் முடங்கும் நிலையில் இருந்தன. இவற்றில் முறைகேடுகளுக்கு காரணமான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தேன். அவர்களில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் உள்ளனர். இதுவும் ஒருவகையில் மதச்சார்பின்மைதான்.
தேர்தல் முடிவு வரும்வரை என்னைப் பற்றியே பல்வேறு ஊடகங்கள் விவாதித்தன. தேர்தல் முடிந்த பின்னர் தற்போது குஜராத் மக்களிடம் என்ன கோளாறு என ஊடகங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.
அமெரிக்கா செல்ல எனக்கு விசா மறுக்கப்பட்டது. ஆனால், தற்போது குஜராத்தை அமெரிக்காவாக உருவாக்கி வருகிறேன்.
எங்கள் கட்சியின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்கிறீர்கள். ஏழை மக்களை உள்ளடக்கிய, தனியார் பங்கேற்புடன் திட்டங்களை நிறைவேற்றுவதே வெற்றிக்கான காரணியாகும். குறைந்தபட்ச அரசு அதிகபட்ச செயலாக்கம் மூலமே நாட்டின் வளர்ச்சியைப் பெருக்க முடியும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்று சேரும்.
வளர்ச்சிப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அப்போதுதான், குஜராத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி நாடு முழுவதற்கு விரிவடையும். 21-வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக மாறும் என்றார் மோடி.
- தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் ரவிசங்கர் பிரசாத்,
- தமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசன்,
- கட்டுரையாளர் குருமூர்த்தி,
- ஜெயா ஜெட்லி,
- திருநாவுக்கரசர் எம்.பி.,
- அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத்தலைவர் முருகன்,
- மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்
மற்றும் பலர் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.