தகவல் தராத அதிகாரிக்கு அபராதம்
புதுதில்லி, டிச. 11: தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரருக்கு தகவல் தராத தகவல் அதிகாரிக்கு, மத்திய தகவல் ஆணையம் ரூ. 1,750 அபராதம் விதித்தது. மேலும் ஒரு வாரத்துக்குள் தகவல் அளிக்க உத்தரவிட்டது.
“”வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு அதற்கான குத்தகை உரிமையை மாற்றித்தரும் பணி எந்த நிலையில் உள்ளது” என்று பவன்குமார் ஜெயின் என்பவர் தகவல் அதிகாரிக்கு விண்ணப்பம் அளித்திருந்தார்.
ஒரு வாரத்துக்குள் தகவல் தரவேண்டிய அதிகாரி, ஓரிரு மாதங்கள் ஆகியும் தரவில்லை. இதையடுத்து தகவல் கமிஷனரை அணுகிய பவன்குமார், பின்னர் தில்லியில் உள்ள மத்திய தகவல் ஆணையத்தில் புகார்மனு அளித்தார்.
இம்மனுவை விசாரித்த தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா தலைமையிலான பெஞ்ச், விண்ணப்பதாரர் கேட்ட தகவல் குறிப்பாகவும், எளிமையாகவும் உள்ளது என்றது.
வேலைப்பளுவே இதற்கு காரணம் என குறிப்பிட்ட தகவல் அதிகாரி மன்னிப்பு கோரியதை அடுத்து, அபராதம் (ரூ. 1,750) மட்டுமே விதிப்பதாக கூறி பெஞ்ச் உத்தரவிட்டது. மேலும் அத்தொகையை அவரது சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிட்டது.