அரசுடைமை ஆகுமா சாமி சிதம்பரனார் இல்லம்?
சென்னை, ஜூலை 8: கம்பீரமான அந்த வீடு இன்று சிதிலம் அடைந்து, கேட்பாரற்று புதர்கள் மண்டி கிடக்கிறது.
அந்த வீட்டின் அருகில் வசிப்பவர்களுக்குக் கூட அந்த வீட்டைப் பற்றியோ, அதில் வாழ்ந்தவர்களைப் பற்றியோ தெரியவில்லை.
தமிழுக்கும், தமிழருக்காகவும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொண்டாற்றிய தமிழறிஞர் சாமி சிதம்பரனாரின் இல்லம் அது.
சென்னை சூளைமேட்டில் செüராஷ்டிரா நகர் ஏழாவது தெருவில் இருக்கிறது அந்த வீடு. நிறைய அறைகளுடன் திட்டமிட்டு, கட்டப்பட்டுள்ள அந்த அழகான வீடு இடிந்து, ஜன்னல், கதவுகள் பெயர்ந்து கிடக்கின்றன.
“காலம் என்னை அழித்தாலும், என் பெயர் அழியாது’ என்று அறிவிப்பது போல், வீட்டு வாசல் சுற்றுச் சுவரில் தூசு படிந்து மங்கிய நிலையில் “சாமி சிதம்பரனார்’ என்ற கல்வெட்டு காணப்படுகிறது.
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு சமுதாயச் சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, கலப்பு மணம், பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புதல் உள்ளிட்ட பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். பிற்காலத்தில் பொது உடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
எழுத்தாளர்:
1920 முதல் 1961 வரையுள்ள காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த 30-க்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் 15-க்கும் மேற்பட்ட புனைபெயர்களில் சமுதாய, இலக்கிய கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எழுதியுள்ளார் அவர்.
பகுத்தறிவு, புரட்சி, குடி அரசு, திராவிடன், வெற்றி முரசு, லோகோபகாரி, விடுதலை உள்ளிட்ட பத்திரிகைகளில் சிலவற்றில் ஆசிரியராகவும், ஆசிரியர் குழுவிலும், எழுத்தாளராகவும் இருந்துள்ளார். பத்திரிகைத் துறையில் கொண்ட நாட்டம் காரணமாக “அறிவுக்கொடி’ என்ற பத்திரிகையை 1936-ல் கும்பகோணத்திலிருந்து இரண்டு ஆண்டுகள் நடத்தியுள்ளார்.
தமிழை முறையாகப் பயின்ற இவர் 1923-ல் பண்டிதர் பட்டமும் பெற்றுள்ளார். அதன்பின் கரந்தை தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றியுள்ளார். தஞ்சை மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
சீர்திருத்தத் திருமணம்:
சீர்திருத்தத் திருமணமாகவும், கலப்புத் திருமணமாகவும் நடைபெற்ற முதல் சுயமரியாதைத் திருமணம் இவரது திருமணம். தந்தை பெரியார் முன்னிலையில் நாகம்மையாரின் தலைமையில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஏ. குப்புசாமியின் மகள் சிவகாமி என்பவரை ஈரோட்டில் நடந்த மாநாட்டில் திருமணம் செய்தார்.
இலக்கியம், சமுதாயம், அரசியல் என 62 நூல்கள் எழுதியுள்ளார். 1948-க்குப் பிறகு இலக்கிய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் எழுதியவற்றில் இன்னும் பல படைப்புகள் வெளிவராமல் உள்ளன என்று கூறப்படுகிறது.
இலக்கிய, வரலாற்று ஆசிரியர்கள் பாராட்டுகிற பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் “தமிழர் தலைவர்’ என்ற நூலை எழுதியுள்ளார்.
அரசுடைமை ஆகுமா ?
இத்தகைய பல்வேறு சிறப்புகளுக்குரிய தமிழறிஞரான சாமி சிதம்பரனாரின் இல்லம், வாரிசு இல்லாததால் பராமரிப்பின்றி, அவலமான நிலையில் இருப்பது வேதனைக்குரியது. தமிழறிஞரான, ஆய்வாளரான சாமி சிதம்பரனாரின் இல்லத்தைப் பராமரித்து, அரசுடைமையாக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் விருப்பம் என்று சூளைமேடு செüராஷ்டிரா நகரைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் இர. அன்பரசன் தெரிவித்தார்.
வாரிசு இல்லாத இந்த வீட்டை அரசு தத்தெடுத்து இதனை நூலகமாகவோ, சமுதாயக் கூடமாகவோ மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம்.