ஆட்சிகளைக் கவிழ்க்கும் சூழல் பிரச்சினை
என். ராமசுப்ரமணியன்
பலவகை மாசுகள் நம் நாட்டைப் பயமுறுத்தினாலும், கார்பன் வாயு வெளியீடு இந்தியாவிலிருந்து 3% என்றும், தொழில் உற்பத்தி நிலை அதிகரித்த நிலையிலும், இந்த அளவே “”கார்பன் வெளியீடு” என்பது கட்டுக்குள் இருக்கும் நிலையே என்று உலகச் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கணித்திருக்கின்றார்கள்.
இருப்பினும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையால் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளும் தொடர்ந்து, பல்வேறு துயரங்களுக்கு ஆட்பட்டு வருகின்றன. இப் பிரச்சினை உலகையே மிகவும் பயமுறுத்தும் விஷயமாகப் பேசப்படுகின்றது.
சமீபத்தில், இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலால் சொத்துகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட உயிரிழப்பு என்பது மிகவும் கொடுமையானது. இந்தச் சுனாமி நமது நாட்டையும் தாக்குமோ என்ற அச்சநிலை நிலவியது. நல்ல வேளை இம் முறை நாம் தப்பித்தோம்!
அடிக்கடி இந்தோனேசியப் பகுதியில் கடல் கொந்தளிப்பு, பூகம்பம் எனப் பல்வேறு பாதகங்கள் ஏற்பட்டு வருகின்றன. அமெரிக்க நாட்டுத் தென் பகுதிகளில் சூறாவளிகள் காலம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலியாவில் சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று பேய்க்காற்று வீசிப் பெரும் பீதியையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தியது. ஜப்பான் நாடு தொடர்ந்து இயற்கைச் சீற்றத் தாக்குதலுக்கு ஆளாகின்றது.
சென்ற ஆண்டு, கத்ரீனா, ரீட்டா போன்ற சூறாவளிகளால் அமெரிக்கா நிலை குலைந்து போய்விட்டது. 2004ஆம் ஆண்டு இறுதியில் சுனாமி எனும் பேரலைத் தாக்கம் இந்தியாவின் பல பகுதிகளிலும், இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து போன்ற பல நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்தியது.
இமயமலைப் பனிப்பாறைகள் உருகி திடீர்ப் பெருவெள்ளம், ஆர்டிக் அண்டார்டிக் பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயர்தல் என்று பல்வேறு சோதனைகளை உலகம் சந்திக்கின்றது.
இத்தகைய பாதகங்கள் மனிதன் இயற்கையைப் பெருமளவு மாசுபடுத்தியதால் ஏற்பட்ட விளைவுகள் – உலகவெம்மை அதிகரிப்பு, ஓசோன் படலத்தில் ஓட்டை என்று கண்டறிந்து, இனியாவது இயற்கையோடு இணைந்து வாழவில்லையெனில், இயற்கையின் தண்டனையை உலகால் தாங்க இயலாததாக இருக்கும் என்று விஞ்ஞான உலகம் உறுதிபடக் கூறி வருகின்றது.
கார்பன் வெளியீட்டைக் குறைக்க வகை செய்யும் கியூடோ ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தராத அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்குப் பெருத்த எதிர்ப்பு அந் நாட்டிலேயே ஏற்பட்டுள்ளது. அமெரிக்கத் துணை அதிபராகப் பணியாற்றி, ஆறு வருடத்திற்கு முன் அமெரிக்க அதிபர் தேர்தலில் மயிரிழை வித்தியாசத்தில் தோல்வியுற்ற அல்கோர், விரைவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அமெரிக்கக் கடமையும் என்ற வகையில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த புத்தகம் வெளியிட உள்ளார்.
உலகின் முதல் மிகப் பெரிய நிறுவனங்களான எக்ஸôன் மொபில் மற்றும் ஷெல், ஷெவ்ரான் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி உலக மக்களுக்கே எடுத்துச் சொல்லிய வண்ணம் உள்ளன.
உலக அளவில் நடைபெறும் பொருளாதார, அரசியல் உச்சி மாநாடுகளில் இரண்டு விஷயங்கள் நிச்சயமாகப் பேசப்படுகின்றன.
1) ஏழை நாடுகளுக்கு எவ்வளவு, எவ்வாறு உதவுவது என்பது
2) சுற்றுச்சூழல் பாதுகாப்பு.
இந்தப் பேச்சுகளெல்லாம் வரவரச் சடங்குகள், சம்பிரதாயங்கள் போல ஆகிவிட்டன என்று உலகப் புகழ்பெற்ற பத்திரிகைகள் தலையங்கம் எழுதுகின்றன.
வெறும் பேச்சுடன் இல்லாமல், சுற்றுச் சூழல் பாதுகாப்பில் முனைப்புடன் செயலாக்கம் இல்லையென்றால், அரசுகள் கவிழும் என்று சில சமீபத்திய வரலாறுகள் தெரிவிக்கின்றன.
சூடான் நாட்டு அனுபவம்: ஆப்பிரிக்க நாடான சூடானின் மேற்குப் பகுதியிலுள்ள டர்ஃபர் மழைப்பொழிவு அதிகமற்ற வறண்ட பூமியைக் கொண்ட பகுதி. இங்கு வாழும் மக்கள் கால்நடைகள், ஆடு, ஒட்டகம் போன்றவற்றை மேய்ச்சல் பகுதிகளில் வளர்த்து, குறைந்த மழையில் கிடைக்கும் தண்ணீரில் விவசாயம் செய்து வந்தனர். அங்கு சுற்றுச் சூழலுக்குப் பங்கமேற்பட்டு மழை பொழிவது மிகவும் குறைந்ததால், ஏழ்மை அதிகரித்து, மக்கள் கூட்டம் இரு பிரிவாகி ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு கொல்வது 1980-ல் தொடங்கி, அரசியல் மற்றும் ராணுவக் கலவரங்கள் மிகவும் பெருகி விட்டன. இது தற்போது உலக அளவில் கவலையுடன் பேசப்படுகின்ற விஷயமாகிவிட்டது.
ஈக்குவேடார்: சுற்றுச் சூழல் பாதுகாப்பின்மையால் உண்டாகும் “”எல் நினோ” என்பதால் வெள்ளப் பெருக்கு அல்லது பெரும் வறட்சிகள் ஏற்படுகின்றன. 1998-ல் இந்த “எல் நினோ’வினால் ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்கினால், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய உணவுப் பண்டங்கள், மீன் பண்ணைகள் அழிவினால் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன்கள் திருப்பிக் கட்டப்படாததால், பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக, ஈக்குவேடார் நாட்டை அப்போது ஆண்ட அரசு தூக்கி எறியப்பட்டது.
இந்தோனேசியா: எல் நினோவின் இந்தோனேசியத் திருவிளையாடல், வரலாறு காணாத வறட்சி. இந்நிலையில் ஆசிய நிதிச் சந்தையும் நிலை குலைந்தது. இதன் விளைவு 31 வருடம் ஆட்சி புரிந்த சுகர்தோவின் அரசுக்கு முடிவு கட்டப்பட்டது.
தட்பவெப்ப மாறுதல்களால், பெரும் வறட்சி, வெள்ளப்பெருக்கு, புயல்கள், பல்வேறு வியாதிகள் அதிகரிப்பு என்று பல கொடிய விளைவுகள் ஏற்படுகின்றன.
ஆயினும் பொது மேடைகளில் அரசியலுக்கே முக்கியத்துவம் தருகின்றோம். சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய சம்பிரதாயமாக ஏதோ பேசுகிறோம். ஆக அரசும் பொதுமக்களும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி சரியாக உணர்ந்ததாகத் தெரியவில்லை.
பொருளாதார வளர்ச்சி, நாட்டுப் பாதுகாப்பு ஆகியவைகளுக்குச் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் மிக அவசியமாகின்றது.
“”இனி யார் சுற்றுச் சூழலை உண்மையாகப் பாதுகாக்கத் தேர்தல் வாக்குறுதி தருகின்றார்களோ அவர்களுக்கே நமது ஓட்டு (Vote for environment)’’ என்று பொது மக்கள் முடிவெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. அமெரிக்காவில் 20% மக்கள் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டுள்ளனர் என்று ஒரு கணிப்பு டியூக் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.
பல்வேறு பொருளாதார, நாட்டு நலப் பணித் திட்டங்களைப் பற்றி பேசும் அரசியல் கட்சிகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மிக அவசியம் என்று உண்மையாக உணர்ந்து, செயலாக்கம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இதைப்பற்றி உணரத் தவறினால், மக்களின் நலனுக்கும், நாட்டிற்கும் துரோகம் இழைப்பவர்களாகவே ஆவார்கள். மக்கள் இதைப் பற்றி, தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், ஆட்சி மாற்றங்கள் கட்டாயம் ஏற்படும்.
இது உலக நாடுகள் அனைத்துக்கும் சொல்லப்படுகின்ற அறிவுரை.
ஐ.நா. மிலினியம் ப்ராஜக்ட் இயக்குநர், ஜெஃப்ரி டி.சாச் இது பற்றி எழுதியுள்ள மிகத் தெளிவான, ஆழமான, ஆய்வுக்கட்டுரையை, உலக நாடுகளிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் படித்து, தகுந்த செயல்முறை வடிவங்கள் அமைப்பது, அரசியல் அமைதிக்கு வழிவகுக்கும்.
இயற்கையின் தீவிரவாதம் சுற்றுச் சூழல் பாதுகாப்பின்மையால் ஏற்படும் என்பது உறுதி. இதன் சக்தி முன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது என்பதும் உறுதி.
இந்நிலையில், “”சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்று தேவையில்லாமல் பயமுறுத்துவோர் எண்ணிக்கையில் அதிகமாகி விட்டனர், இதெல்லாம் சுத்த வெங்காயம், புகைபிடிப்பது ஒன்றும் கெடுதியில்லை, நமக்குப் பிடித்த எந்த உணவையும் (துரித உணவு – Fast food, Junk food, தண்ட உணவு ) ஒதுக்காமல் நாவிற்குப் பிடித்ததைச் சாப்பிடுங்கள். போலி ஆர்வலர்களைக் கண்டு மிரளாதீர்கள். இருக்கிற சில நாள் அனுபவிப்போமே! எதுதான் குறைந்து விடும்” என்றும் ஒருசாரார் வாதிட ஆரம்பித்துள்ளனர்.
இது எப்படி இருக்கு? கழுதைக்கு உபதேசம் காததூரமோ?