Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Chetak’ Category

State of Indian Army, Navy & Air force – Defence & Military: Statistics, Analysis, Backgrounder, Budget & Options

Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007

37 போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியதால் அரசுக்கு ரூ.2091 கோடி இழப்பு

புது தில்லி, மார்ச் 9: இந்திய விமானப்படையைச் சேர்ந்த 37 போர் விமானங்கள் 2003 ஏப்ரல் 1 தொடங்கி, 2007 மார்ச் 1 வரை விழுந்து நொறுங்கியுள்ளன. இதனால் அரசுக்கு ரூ.2,091 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி இதை மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.

அவர் தெரிவித்த இதர தகவல்கள் வருமாறு:

ரஷியாவின் கிராஸ்னபோல் நிறுவனத்திடமிருந்து ரூ.520 கோடி கொடுத்து வாங்கிய 3,000-க்கும் மேற்பட்ட பீரங்கிக் குண்டுகள் திருப்திகரமாக இல்லை.

மலைப் பகுதிகளில் இவற்றைப் பயன்படுத்தி பார்த்தபோது, எதிர்பார்த்தபடி அவை செயல்படவில்லை. இந்த பீரங்கிக் குண்டுகளுக்கு வழிகாட்டும் லேசர் கருவிகளுக்கும் சேர்த்து ரூ.522.44 கோடி தரப்பட்டிருக்கிறது.

இந்த குண்டுகளின் திறனைக் கூட்டவும், அவற்றின் ஆயுளை நீட்டிக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சப்ளையரிடம் கூறப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே நாம் வாங்கியுள்ள “மிக்-29′ ரக போர் விமானங்களின் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்துவதற்கான தொழில்நுட்ப திட்டம் ரஷியாவின் மிக் நிறுவனத்திடம் தரப்பட்டிருக்கிறது. இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.

126 போர் விமானங்கள்: இந்திய விமானப் படைக்காக 126 போர் விமானங்களை வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்தவகை போர் விமானத்தை வாங்குவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

எதை வாங்குவதாக இருந்தாலும், அதை இந்தியாவிலேயே தயாரிக்கும் வகையில் தொழில்நுட்பப் பரிமாற்றத்துக்கு அந்த நிறுவனம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது உடன்பாட்டின் முக்கிய அம்சமாக இருக்கும்.

ராணுவத்தின் தரைப்படைப் பிரிவை நவீனப்படுத்துவதும் அதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதும்தான் 2002-07 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு திட்டம். அத்துடன் எந்தெந்த சாதனங்கள் அல்லது கருவிகள் அறவே இல்லையோ அவற்றை உடனே வாங்குவதும் முக்கிய லட்சியமாக இருக்கும்.

11-வது ஐந்தாண்டு திட்ட காலத்துக்கான பாதுகாப்புத் துறை திட்டம் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதமே அளிக்கப்பட்டுவிட்டது.

நிதி அமைச்சகம்தான் அதைப் பரிசீலித்துவிட்டு ஒப்புதலைத் தெரிவிக்க வேண்டும்.

ராணுவச் செலவு வீணாகலாமா?

இரா. இரத்தினகிரி

இந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில், நமது நாட்டின் பாதுகாப்புச் செலவினங்களுக்கு ரூ.96 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ராணுவத்துக்கு ரூ.34 ஆயிரம் கோடி, கடற்படைக்கு ரூ.7 ஆயிரம் கோடி, விமானப்படைக்கு ரூ. 10 ஆயிரம் கோடி, புதிய நுண்கருவிகள், சாதனங்கள், விமானங்கள் ஆகியவற்றை வாங்க ரூ.42 ஆயிரம் கோடி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மேம்பாட்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஆகியவை அடங்கும்.

நமது நாட்டின் பாதுகாப்புக்காக, குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக ஆண்டுக்கு, ஆளுக்கு ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது என்பது இதன் பொருளாகும்.

இச்செலவு நமது நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கு மட்டுமன்றி, காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, இன்னும் பயனுடையதாக அமையவேண்டியதன் அவசியம் குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பு என்பது ராணுவத்தின் பொறுப்பு மட்டும் அல்ல. குடிமக்கள் அனைவருடைய கடமையும் ஆகும். நாட்டு மக்கள் அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானாலும் அதை நிறைவேற்ற இயலாத நிதிப் பற்றாக்குறை அரசுக்கு இருந்து வருகிறது.

இப்போது ராணுவத்தில் பணியாற்றி வருவோரில் மிகத் தேவையானவர்களை மட்டும் வைத்துக்கொண்டு, பத்தாண்டுகள் பணி முடித்த இதர வீரர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்து விடுவிக்கலாம். அரசு மீண்டும் எப்போது அழைத்தாலும் உடனடியாக ராணுவ சேவைக்குத் திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே அவர்களை அனுப்பிவைக்க வேண்டும். இதனால் ஏற்படும் காலி இடங்களில் பல லட்சம் புதிய இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்து பணியாற்றச் செய்யலாம். இதன் மூலம் அடுத்த பத்து ஆண்டுகளில் இரட்டிப்பு அளவில் நம் ராணுவம் வலிமை பெறும்.

ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று விடுவிக்கப்பட்டு வெளியில் வருவோரில் கல்வித் தகுதி உடையவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து கல்வித்துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் மத்திய, மாநில அரசுத் துறைகளில் மதிப்பு ஊதியத்தில் வேலைக்கு நியமிக்கலாம்.

அவர்கள் ஆசிரியர்களானால் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகள் இல்லாத சிறந்த மாணவர்களை உருவாக்க இயலும். நமது நாட்டின் ஆறு லட்சம் கிராமங்களில் ஆராய்ந்து பார்த்தால் பெரும்பாலான மக்கள் மனத்தளவிலும் உடல் அளவிலும் பலவீனமாக இருந்து வருவதை அறியலாம். அவர்களை தன்னம்பிக்கையும் மனஉறுதியும் கொண்டவர்களாக உருவாக்கும் பொறுப்பை முன்னாள் படை வீரர்களுக்கு அளிக்கலாம்.

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பது என்பது எவ்வளவு கடினமான வேலை என்பது அந்தத் தேர்வுக்குப் போய் வந்தவர்களுக்குத்தான் தெரியும். உடல் திறன் தேர்வுக்கு நூறுபேர் வந்தால் அதில் ஒருவரே தேர்வு செய்யப்படுவார். அப்படித் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏராளமான பணம் செலவிடப்படுகிறது.

அவர்கள் பெற்ற பயிற்சி, நாட்டு மக்களை எதிரிகளிடமிருந்து, வெளிநாட்டுப் படையெடுப்புகளிலிருந்து பாதுகாப்பது என்ற அளவில் முடிந்துவிடக் கூடாது. நாட்டு மக்களைக் கடமையுணர்ச்சி உள்ளவர்களாக மாற்றும் முக்கியப் பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது. பாதுகாப்புத் துறைக்குச் செலவிடப்படும் ரூ.96 ஆயிரம் கோடியும், “மன்னர்களின் பட்டத்து யானை அலங்கரிப்பு’ போல இருந்துவிடக் கூடாது.

பிற நாடுகளில், ராணுவத்தினர் காடு வளர்ப்பதற்கும், பாலைவனங்களை சோலைவனங்களாக மாற்றுவதற்கும், கடற்கரையோரங்களில் அலையாற்றிக் காடுகளை வளர்ப்பதற்கும், நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கும், பாலங்கள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றனர்.

இத்தகைய நடைமுறையை நமது நாட்டிலும் அமல்படுத்த வேண்டும். கட்டாயப் பணி முடித்து விருப்ப ஓய்வில் வரும் ராணுவ வீரர்களை கிராமப்புற நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தலாம். இதன்மூலம் கிராமங்கள் அபரிமித வளர்ச்சியை எட்ட முடியும்.

கடற்படையில் 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறுவோர், கடல் வளங்களை கடற்கரையோர கிராம மக்கள் பயன்பெற பயிற்றுவிக்கலாம். கப்பல் கட்டும் தளங்களிலும் அவர்களுக்குப் பணியாற்ற வாய்ப்பளிக்கலாம்.

தரிசு நில மேம்பாடு, மரம் வளர்ப்பு, குளம் வெட்டுதல், மீன் வளர்ப்பு போன்ற நிர்மாணப் பணிகளுக்கும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன்மூலம் பாதுகாப்புத் துறைக்கான நிதிச் செலவின் முழுப் பயனும் கிராமங்களைச் சென்றைடையும். இதுகுறித்து மத்திய அரசு சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

(கட்டுரையாளர்: நிறுவனர், சிந்தனையாளர் மன்றம், தஞ்சாவூர்).

========================================================

ராணுவத்திலிருந்து “சீட்டா’, “சேட்டக்’ ரக ஹெலிகாப்டர்களை விலக்க முடிவு

புது தில்லி, மார்ச் 22: இந்திய ராணுவப் பணியிலிருந்து இலகு ரக வகையைச் சேர்ந்த சீட்டா மற்றும் சேட்டக் ஹெலிகாப்டர்கள் விலக்கிக்கொள்ளப்படுகின்றன.

இத்தகவலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, புதன்கிழமை மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: 1960 மற்றும் 1970-ம் ஆண்டு வகையைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டர்கள், ராணுவத்தின் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இல்லாததால் அவற்றை விலக்கிக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்திய ராணுவத்துக்கு ரூ.3600 கோடி மதிப்பில் 197 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

உலகில் ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் இரு பெரிய நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன.

————————————————————————————————–

“மிக்-21′ போர்விமானம் விழுந்து நொறுங்கியது?

ஜம்மு, மே 23: இந்திய விமானப்படையின் மிக்-21 ரக போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 2 விமானிகளின் நிலை குறித்த விவரம் தெரியவில்லை.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் விமானதளத்தில் இருந்து வழக்கமாக மேற்கொள்ளப்படும் போர் பயிற்சிக்காக மிக்-21 ரக விமானம் புறப்பட்டு சென்றது. ஆனால் ரியாசி மாவட்டம் வசந்த்கல்-மஹோர் மலைப்பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானக் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்தது.

இதனால் விமானம் விபத்துக்கு உள்ளாகி இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. விமானப்படையினர் அப்பகுதியில் விபத்துக்குள்ளான விமான பாகங்கள் மற்றும் விமானிகளை தேடி வருகின்றனர்.

Posted in Accidents, Air Force, Aircrafts, Airforce, AK Antony, Allocations, Analysis, Antony, Arms, Army, Attacks, Backgrounder, Biz, Bofors, Bombs, Budget, Business, Cavalry, Cheeta, Cheetah, Chetak, Chethak, Chopper, Commerce, Company, crash, Death, Defense, Economy, Expenses, Fighter, Finance, Fire, Flights, Funds, Growth, Helicopter, HR, Human Resources, Imports, Infantry, J&K, Jammu, Jets, Kashmir, Loss, Maintenance, MIG, MiG-29, Military, Navy, Planning, Procurements, Rathnagiri, Ratnagiri, Rural, Russia, Safety, Sea, Security, Soviet, Tanks, Udhampoor, Udhampur, USSR, Uthampoor, Uthampur, Villages | 1 Comment »