Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Cheran’ Category

Tamil New Year: Thai Pongal or Chithirai First Day? – S Ramachandran

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2008

சித்திரையில்தான் புத்தாண்டு

எஸ். ராமச்சந்திரன்

இக் கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க இலக்கியங்களில் “தைந்நீராடல்’ எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.

அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் – சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் – அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

இந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.

கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் Spring எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.

கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட “ஏரீஸ்’ வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.

இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி – சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது “”மீன மேஷம் பார்த்தல்” என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.

இப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா?

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.

மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். (“”நாஞ்சிற்பனைக் கொடியோன்” – புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.

பலராமனை “புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு’ குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.

பூம்புகாரில் இந்திர விழாவின்போது “”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து” மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 – 69களில் குறிப்பிடப்படுகிறது.

பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா? இவை இரண்டிற்குமே தெளிவான விடை “”அல்ல” என்பதுதான்.

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.

ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை – 360 பாகைகளை – 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.

சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

சோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் “”இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்” என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12).

தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி – பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.

பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.

வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.

“”திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 – 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட “ஏரீஸ்’ என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.

இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 – 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் – முதுவேனில், கார் – கூதிர், முன்பனி – பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் – ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.

சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 – 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “”தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்” என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

இனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் “”பிரபவ” தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை “”வியாழ வட்டம்” (Jovian Circle) எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், “இனம் புரிந்த’, இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.

இந்தியா “”தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற” காலகட்டத்தில், “”நேரங் கெட்ட நேரத்தில்” மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் “”தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு” என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் “சுதந்திர’மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: “”சித்திரையில்தான் புத்தாண்டு”.

(கட்டுரையாளர்: தொல்லியல் ஆராய்ச்சியாளர்)
—————————————————————————————————————————-
தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு

தமிழண்ணல்

இன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று, பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். கணி, கணியம் – வானநூல். கணியின் – வான நூல் வல்லவன்.

கணியர் – சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர். இதனைப் ஓர் அறிவியலடிப்படையில் தமிழர்கள் பின்பற்றி வந்ததற்கான சான்றுகள் மிகப் பலவுள. கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே எனத் தொடங்கும் பாடல், அவரது வானநூல் அறிவின் வழிப்பட்டதே யாகும். பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு புறநானூற்றுப் புலவர். இவரைப் பற்றி உ.வே.சா. அவர்கள், நன்கணியார் என்பது இவரது இயற்பெயர்; கணி – சோதிடம் வல்லவன் என் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளார்.

பதினெண்கீழ்க்கணக்கில் திணைமாலை நூற்றைம்பது, ஏலாதி எனும் இரு நூல்களை எழுதியவர் கணி மேதாவியார் அல்லது கணிமேதையார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.

சேரன் செங்குட்டுவன் வடநாட்டு வெற்றி முடித்து, கங்கைக் கரையில் இருந்தபோது, தன்னுடன் இருந்த கணியிடம், வஞ்சி நீங்கி எவ்வளவு காலம் ஆயிற்று என்று அறிய விரும்புகின்றான். அக் காலத்தில் பிறைச் சந்திரனின் வளர்ச்சியையும் தேய்வையும் வைத்துத் தான் நாட்களைக் கணக்கிட்டனர்.

சேரன் வானத்தே யுள்ள பிறையை நோக்கினானாம். அவனது குறிப்பை அறிந்த கணி நாம் வஞ்சி நகரை நீங்கி வந்த முப்பத்திரண்டு மாதங்கள் ஆயின என்றான். பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க; இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன், எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது (காதை 27: 146-149) என்பது காண்க. மதியமே பிறகு மாதம் ஆனது. திங்கள் என்பதும் அதுவே. அற்றைத் திங்கள் எனத் தொடங்கும் பாரி மகளிர் பாட்டும் காணலாம் (புறம்-112) சிலப்பதிகாரத்தில் ஆசான் பெருங்கணி அமைச்சருக்கு நிகராகவும் கருதப்படுகிறான். அவன் அரசனின் அருகில் இருக்கும் தகுதி பெற்றுள்ளான் (சிலம்பு: 22-8, 26-3).

குறுந்தொகையில், கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் பாடிய பாடலொன்றுளது. அதில் கூந்தல் தவழும் தலைவியின் நெற்றி எட்டாம் நாள் பிறைமதி போல அழகாக அளவாக இருந்தது என்ற குறிப்புக் காணப்படுகிறது.

மாக்கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் . . . (குற.129). தமிழ்த் தாத்தா உ.வே.சா. இதற்கு எட்டாவது திதி, அட்டம் என்று விளக்கம் எழுதுகிறார். எண் நாள் பக்கம் – இன்று பக்கம் என்பதையே – பக்ஷம் என வடமொழியாக்கி வழங்குகின்றனர்.

இவ்வளவும் எழுதக் காரணம் தமிழர்கள் வானில் தோன்றிய மதியத்தை, நாட்காட்டியாகக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குவதற்கேயாம். உவாப் பதினான்கு என்பது பிங்கல நிகண்டு. பதினான்கு நாள் வளர்பிறை, பதினைந்தாம் நாள் முழுமதி (பௌர்ணமி). அடுத்த பதினான்கு நாள் தேய்பிறை. பதினைந்தாம் நாள் மறைமதி (அமாவாசை). ஆக முப்பது நாட்களைக் கொண்டு மதியம் (மாதம்), திங்கள் கணக்கிடப்பட்டது.

நாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்பதே முன்னைய பொருள். கோள்-கிரகம். நாளும் கோளும் என்பது உலக வழக்கு. 27 நாள்கள் (நட்சத்திரங்கள்) என்பதாலும் இரண்டையும் சேர்த்துக் கணக்கிட்டதாலும் மாத நாட்களில் ஒன்றிரண்டு கூடுதல், குறைவானது.

கோள்களை (கிரகங்கள்) வைத்து, ஒரு வாரம் -ஞாயிறு முதலாகக் கணக்கிடப்பட்டது. இராகு கேது நீங்கலாக ஏழு கோள்களுக்கு (கிரகங்களுக்கு) ஏழு நாட்களாயின.

ஆகவே கோள்களை வைத்து ஒரு வாரம் என்பதையும், நாள்களை வைத்தும் மதியத்தை வைத்தும் மாதத்தையும், சூரியனை வைத்து ஆண்டினையும் தமிழர்கள் கணக்கிட்டனர். இதற்கு மேலும் நூறு சான்றுகள் உள.

சித்திரைத் திங்கள் இளவேனிற் காலத்தின் தொடக்கம். இதனை வசந்த காலம் என்பதுண்டு. பனிக் காலம் முடிந்து, இளவேனில் (வசந்தம்) வந்ததும் மக்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அதனை ஆண்டின் தொடக்கம் என்பதற்காகக் கொண்டாடவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் ளுயீசபே எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டு தொடக்கமாகக் கருதினர்; வசந்த காலம் தொடங்குவதற்கு அறிகுரியாகக் கொண்டாடினர் என்று கட்டுரையாளர் (தினமணி 24-1-2008) குறிப்பிடுகிறார். தமிழர்களும் இவ் வசந்த காலத்தைக் கொண்டாடிய செய்தி, நிரம்பக் குறிக்கப் பெற்றுள்ளது.

காதலர்கள் ஆறுகளிலும் அருவிகளிலும் நீராடியும், பூங்காக்களில் விளையாடியும் இன்பம் நுகர்ந்ததோடு, மதுரையில் இலக்கிய விழாக்களும் நடை பெற்றனவாம். புதிய நூல்கள் அரங்கேற்றப் பெற்றனவாம்.
மகிழ்துணைப் புணர்ந்தவர் (காதலர்) வில்லவன் விழவினுள் விளையாடும்பொழுது; நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார், புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுது என்று இது பலவாறு குறிக்கப்படுகிறது (கலி. 35). இவ்விழா – காலப் போக்கில் சமய விழாவாக மாறி, நாயக்க மன்னர் காலத்தில் இன்றைய சித்திரைத் திருவிழா ஆனது.

அதற்காக கிரேக்க, உரோமானியரோ, தமிழரோ இதை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டனர் என்பது முறையாகாது.

இனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் – தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது – ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு – முன்பு யாடு என்றே வழங்கியது.

இதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு- ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர்.

அது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு – மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்; மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும் என்று தெளிவாக எழுதுகின்றவர், சித்திரை மாதத்தைக் குறிப்பிடுவது தடுமாற்றமாகவுளது.

மேஷம் என்பதற்கு – முற்பட்ட யாடு, ஆடு எனும் சொல் மேட இராசியைக் குறிக்க, அதனடிப்படையில் சூரியனின் சுழற்சியை வைத்து, தமிழர் ஆண்டினைக் கணக்கிட்டதால், தமிழர்களின் வானநூல் முறைப்படி – யாட்டு, யாட்டை, ஆண்டு என மாறி வழங்கிய இதனைச் சான்றாகக் கொண்டு, தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கமெனக் கொள்வதே தக்கதாகும். சித்திரை முதல்நாள் – இளவேனிலின் (வசந்தத்தின்) தொடக்கமாகும். ஆண்டுத் தொடக்கமாகாது. அது இன்று கோடை காலம் ஆனது, பருவ மாற்றங்களின் கொடுமையாகும்.

தமிழறிஞர்கள் சிலர் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, தமிழ்ப் புத்தாண்டை வகுத்துவிட்டனர் எனக் குறிப்பிடுவது, மிகைப்பட்ட நகையாடலாகவுளது. செம்மொழி என அறிவிக்கப்பட்டு, அதன்பின் அச் செம்மொழி பயின்ற தமிழறிஞர்களை அறவே புறக்கணித்துவிட்டுத் தமிழை வளர்ப்பதும், அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் கூடி வரும் இந் நாளில், தமிழறிஞர்கள் நகையாடப்படுவது இயல்பேயாகும்.

——————————————————————————————-

அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்

பழ. நெடுமாறன்



தமிழர் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் என்பதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்க ஒரேமனதாக நிறைவேற்றுவதற்கு வழிசெய்த முதல்வர் கருணாநிதியைப் பாராட்டுகிறேன்.

தொன்மை வாய்ந்த மொழியான தமிழுக்கும், மூத்த குடியினரான தமிழர்களுக்கும் தனியாகப் புத்தாண்டு என்பது இல்லையா? காலப்பாகுபாடு பற்றிய கருத்தோட்டம் தமிழர்களிடம் கிடையாதா? என்ற கேள்விகள் எழுகின்றன.

சங்ககாலத் தமிழர் ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகப் பகுத்தனர். ஒவ்வொரு பருவமும் இரண்டு மாதங்களைக் கொண்டிருந்தன. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என வழங்கப்பட்ட இந்த ஆறு பருவங்கள் தமிழுக்கே உரிய அகத்தினை மரபின் அடிப்படையாகும்.

குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தென்திசையில் நின்ற கதிரவன் வடதிசைக்குச் செல்லத் தொடங்கும் (உத்தராயணம்) நாளையும் இணைத்துக் கொண்டாடினர். இதன் மூலம் தைத்திங்கள் முதல்நாள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றது.

தமிழ்நாட்டில் கிடைத்துள்ள இலக்கிய, கல்வெட்டு சான்றுகளின்படி ஞாயிற்றை அடிப்படையாகக் கொண்டதும் சித்திரையில் தொடங்கப் பெறுவதுமான ஞாயிற்று ஆண்டுக் கணக்கு ஒன்றும், கல்வெட்டுச் சான்றுகளின்படி வியாழனை அடிப்படையாகக் கொண்ட வியாழ ஆண்டுக் கணக்கு ஒன்றும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஞாயிற்று ஆண்டை சோழ மன்னர்களும், வியாழ ஆண்டை பாண்டியர்களும், சேரர்களும் பின்பற்றியுள்ளனர் என முனைவர் க. நெடுஞ்செழியன் கூறியுள்ளார்.

சிந்து சமவெளி நாகரிக மக்களால் பின்பற்றப்பட்ட ஆண்டு வியாழ ஆண்டே என்பதை ருசிய அறிஞர்கள் நிறுவியுள்ளனர். 1985ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற மகாநாட்டில் ஆய்வுரை வழங்கிய அறிஞர்கள் இந்த உண்மையை வெளியிட்டனர். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்துசமவெளியில் பரவியிருந்த நாகரிகம் எகிப்திய மெசபடோமிய நாகரிகங்களைவிட மிக முந்தியது. அதிகமான பரப்பில் பரவியிருந்தது என்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 14-10-85ம் நாளிட்ட தினமணி இதழ் இச்செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 60 ஆண்டு கணக்குமுறை வியாழ ஆண்டிற்கு உரியதாக இருந்தது. பின்னர் ஞாயிற்றாண்டோடு இது கலந்துவிட்டது. இந்த முறை கி.பி. 312ஆம் ஆண்டில் தொடங்கியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னர்களால் இம்முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை கல்வெட்டுகள் வழியாக அறிய முடிகிறது.

ஞாயிற்று ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டிற்கு 365 நாள்கள் என வகுத்ததும் தமிழர்களே என்பதை கிரேக்க நாட்டுப் பயணியான மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புகளின் மூலம் அறிகிறோம்.

சாலிவாகன சகம் என்ற ஆண்டுமுறை சித்திரை மாதத்தை முதல் நாளாகக் கொண்டிருந்தது. இதுதவிர பசலி, கொல்லம் என்னும் தொடர் ஆண்டுகளும் தமிழகத்தில் வழக்கில் இருந்தன.

பண்டைத் தமிழ் மக்கள் ஒரு தலைநகரின் தோற்றம் அல்லது பேரரசன் பிறப்பு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடராண்டு கணித்து வந்தனர் என்பது பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுவந்த குறிப்புகளால் அறிய கிடக்கிறது என புலவர் இறைக்குருவனார் கருதுகிறார்.

அரசர்கள் முடிசூட்டிக்கொண்ட ஆட்சித் தொடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வரசர் பெயரோடு ஆட்சி ஆண்டு என்று குறிப்பிடும் மரபு பிற்காலச் சோழர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் எடுத்துக்கூறுகின்றன.

தமிழ்நாட்டிற்கு ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு கிரிகேரியன் ஆண்டு என அழைக்கப்படும் கிறித்துவ ஆண்டுமுறை பழக்கத்திற்கு வந்தது.

கிசிரி முகமதிய ஆண்டுமுறை நபிகள் நாயகம் மக்காவிலிருந்து மதினாவுக்குப் புறப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட ஒன்றாகும். புத்த மதத்தவர் புத்தர் முக்திபெற்ற நாளின் அடிப்படையில் ஆண்டுமுறையை வகுத்துக் கொண்டுள்ளனர். அதைப்போல மகாவீரர் முக்தி பெற்ற நாளினை அடிப்படையாகக் கொண்டு மகாவீரர் நிர்வாண ஆண்டு சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.

எனவே தமிழர்களுக்கு தொடர் ஆண்டு இல்லாத குறைபாட்டினை போக்குவதற்காக கி.பி. 1921ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவராண்டு முறையை தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென முடிவு செய்தனர்.

திருவள்ளுவர் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு என கொண்டு கி.மு. 31ஆம் ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு இந்த ஆண்டுமுறை வகுக்கப்பட்டது. ஆனாலும் பிற்காலத்தில் கிடைத்துள்ள பல்வேறு புதிய சான்றுகளின் மூலம் திருவள்ளுவரின் காலம் இன்னும் பழமையானது எனக் கருதும் அறிஞர்களும் உள்ளனர்.

6-12-2001 அன்று மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாட்டில் தை முதல் நாளே தமிழ் ஆண்டின் தொடக்க நாள் என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும் இறுதியான முடிவு தெரியும்வரை மறைமலையடிகள் தலைமையில் வகுக்கப்பட்ட திருவள்ளுவராண்டு கணக்கினை தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர்.

1972ஆம் ஆண்டில் முதல்வராக கலைஞர் கருணாநிதி பதவி வகித்தபோது திருவள்ளுவராண்டு முறையினை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றது. அரசிதழிலும் அரசு வெளியிட்ட நாள்காட்டி, நாள்குறிப்பு ஆகியவற்றிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1983ஆம் ஆண்டில் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, தமிழக அரசின் அனைத்து அலுவல்களிலும் திருவள்ளுவராண்டினை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனாலும் தமிழர் ஆண்டு என்ற பெயரில் வடமொழிப் பெயர்களைக் கொண்ட ஆண்டுப்பெயர்கள் கடைப்பிடிக்கப்பட்டன. சித்திரை முதல் நாள் தமிழாண்டு பிறப்பு என்பதும் தொடர்ந்தது. இதன் விளைவாக திருவள்ளுவராண்டு வகுக்கப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அதனை அரசு ஏற்றுக்கொண்ட போதிலும் நடைமுறையில் அது செயலுக்கு வரவில்லை.

எனவே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் சித்திரை முதல்நாளா, தை முதல்நாளா என்ற குழப்பம் நிலவியது.

தமிழறிஞர் கா. சுப்பிரமணியபிள்ளை போன்றவர்கள் ஆவணி மாதமே பண்டைத் தமிழ்நாட்டில் ஆண்டுத் தொடக்க மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டது என கருதினார்கள்.

இந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் முதலமைச்சர் கருணாநிதி தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை சட்டப்பூர்வமாக ஆக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால் உலகத் தமிழர்களைக் கணக்கிலோ கவனத்திலோ எடுத்துக்கொள்ளப்படாமல் தமிழக சட்டமன்றத்தில் மட்டும் இத்தகைய சட்டமுன்வடிவு ஏற்கப்படுவது முறையானது அல்ல.

தமிழர் பண்பாட்டுத் தளத்தில் மிக முக்கியமான முடிவு இதுவாகும். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தலைமுறைதலைமுறையாகத் தமிழர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதுமாகும்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பழமையான அமைப்புகளான மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தை தமிழ்ச்சங்கம், தமிழகப் புலவர் குழு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ்த்துறைத் தலைவர்கள், தமிழ் வரலாற்று அறிஞர்கள், தமிழ் கல்வெட்டு அறிஞர்கள் மற்றும் இலங்கை, மலேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பல நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை தமிழக முதலமைச்சர் கூட்டி தை திங்கள் முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை நன்கு ஆராய்ந்து ஏற்கச் செய்து அதன்பிறகு இதனை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருந்தால் அவரது பெருமையும் உயர்ந்திருக்கும். உலகத் தமிழர்களும் இதை மகிழ்ச்சியுடன் பின்பற்றத் தொடங்கியிருப்பார்கள்.

1982ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் உரையாற்றிய கூட்டத்தின் முடிவில் மாணவர்கள் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நேரம் அது. அந்த மாணவர் அது குறித்து கேள்வி கேட்டார்.

“”தமிழ்நாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்திருக்கிறீர்களே ஏன் எங்களைக் கேட்கவில்லை. தமிழ் உங்களுக்கு மட்டுமே சொந்தமா?” என்ற கேள்வியை அவர் எழுப்பியபோது நான் ஒரு கணம் திகைத்துப்போனேன். ஆனால் மறுகணமே அந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தை, தவிப்பை உணர்ந்தேன்.

“தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிவிப்பதற்கு முன்னால் ஈழத்தமிழ் அறிஞர்களையும், பிறநாட்டுத் தமிழ் அறிஞர்களையும் அழைத்துக் கலந்துபேசி முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதை அந்த மாணவரின் கேள்வி எனக்கு உணர்த்திற்று. தமிழகத்திற்கு நான் திரும்பி வந்தபோது, தமிழக சட்டமன்றத்தில் இது குறித்துப் பேசினேன். பேரவையில் இருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்னை அழைத்துப் பேசி முழு விவரத்தையும் கேட்டறிந்தார். எழுத்துச் சீர்திருத்தம் பிரச்னையில் மட்டுமல்ல. தமிழில் கலைச்சொற்கள், அறிவியல் சொற்கள் போன்றவற்றின் உருவாக்கத்திலும் உலகத் தமிழறிஞர்கள் பங்கேற்க வேண்டிய அவசியத்தை நான் வலியுறுத்தினேன். இல்லையென்றால் வெவ்வேறு விதமான கலை, அறிவியல் சொற்கள் உருவாகிவிடக்கூடிய அபாயத்தையும் சுட்டிக்காட்டினேன். எனது கோரிக்கையின் நியாயத்தை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உணர்ந்தார். உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார்.

திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாள் எது என்பதை முடிவு செய்யும் உரிமையும் நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. உலகத்தமிழர்களுக்கும் சொந்தமானது. அவர்களையும் கலந்துகொண்டு செய்திருந்தால் மட்டுமே அந்த முடிவு நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.

Posted in 60+, Ambedkar, Ancient, Anniversary, Aries, Arya, Aryan, Astronomy, Beeshma, Beeshmar, Belief, Bheeshma, Bheeshmar, Bhishma, Bhishmar, Bishma, Bishmar, Brahminism, Calendar, Celebrations, Cheran, Chithirai, Cholan, Cholas, Chozan, Chozhan, Chozhas, Culture, Customs, Days, Devas, DMK, Dravida, Dravidian, Dravidianism, Events, EVR, Festivals, first, Functions, Greece, Greek, Hindu, Hinduism, Hindutva, History, Holiday, Horoscope, Indhira, Indhiran, Indhra, Indhran, India, Indiran, Indra, Indran, Inthiran, Issues, January, Jovian Circle, Kural, Leave, Literature, months, Moon, New, Paappaan, Pandian, Pandias, Pandiyan, Pandiyas, Pappaan, Parsian, Periyaar, Periyar, Persia, Persian, Pisces, Pongal, Poombugar, Poombuhar, Poombukar, Poompugar, Poompuhar, Poompukar, Religion, Roman, Sangam, Sangamam, Sanskrit, Seasons, Signs, Sithirai, Spring, Summer, Sun, Temples, Thai, Thamil, Thirukkural, Thirukural, Thiruvalluvar, TN, Tradition, Valluvar, Winter, Year, Years | 3 Comments »

New Cinema Releases for Pongal – Tamil Film updates & Movie Reviews

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

பொங்கல் படங்கள் முன்னோட்டம்

இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு விக்ரம், மாதவன், சேரன், சிம்பு, பரத், அசோக், சத்யராஜ், வடிவேலு ஆகியோரின் எட்டு படங்கள் வெளியா கின்றன. அவற்றைப் பற்றிய முன்னோட்டம்…

காளை

சிம்பு, வேதிகா, நிலா நடித்துள்ள படம். “திமிரு’ படத்தை இயக்கிய தருண்கோபி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். காதல், ஆக்ஷன் கலந்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது வழக்கம்போல சிம்புவுக்கும் இயக்குநருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அது ஒரு வழியாகத் தீர்க்கப்பட்டவுடன் தயாரிப்பாளரின் ஃபைனான்ஸ் பிரச்னை தொடங்கியது. இளைஞர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.

இசை -ஜி.வி.பிரகாஷ்குமார். பாடல்கள் -வாலி. ஒளிப்பதிவு -ஆர்.டி.ராஜசேகர். சண்டைப் பயிற்சி -கனல்கண்ணன். படத்தொகுப்பு -ஆண்டனி. தயாரிப்பு -நிக் ஆர்ட்ஸ்.

பலம் -ஆக்ஷன்.

பிரிவோம் சந்திப்போம்

இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடிக்கும் இன்னொரு படம். சினேகா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை வலுவான கதை, திரைக்கதையின் பின்னணியில் உருவாக்கியிருக்கிறார் கரு.பழனியப்பன். “பார்த்திபன் கனவு’, “சிவப்பதிகாரம்’ படங்களுக்குப் பிறகு இவர் இயக்கும் படம் இது. முன்னது வெற்றியையும் பின்னது தோல்வியையும் சந்தித்ததால் இந்தப் படத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முனைப்புடன் கடுமையாக உழைத்திருக்கிறார் கரு.பழனியப்பன். பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளன.

இசை -வித்யாசாகர். பாடல்கள் -யுகபாரதி, கபிலன், ஜெயந்தா. ஒளிப்பதிவு -எம்.எஸ்.பிரபு. தயாரிப்பு -ஞானம் ஃபிலிம்ஸ் (பி) லிட்.

பலம் -இயக்கம்.

இந்திரலோகத்தில் நா.அழகப்பன்

“இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தையடுத்து வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் பிரமாண்டமான படம். இதில் பூலோகவாசி, இந்திரன், எமன் என வித்தியாசமான மூன்று வேடங்களில் நடித்துள்ளார் வடிவேலு. தீதா சர்மா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். பூலோகத்தில் வாழும் வடிவேலு இந்திரலோகத்துக்கும் எமலோகத்துக்கும் சென்று காமெடி கலாட்டா செய்வதுதான் கதை. படத்தை வடிவேலுவின் நண்பரும் அவருக்குக் காமெடி ட்ராக் எழுதுபவருமான தம்பி ராமையா இயக்கியுள்ளார். படத்துக்கு மிகப் பெரிய பலம் தோட்டாதரணி உருவாக்கியுள்ள பிரமிக்க வைக்கும் அரங்குகள். “சிவாஜி’யில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயா இந்தப் படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இசை -சபேஷ்முரளி. பாடல்கள் -புலமைப்பித்தன். ஒளிப்பதிவு -கோபிநாத். படத்தொகுப்பு -ஹர்ஷா. தயாரிப்பு -செவன்த் சேனல் நிறுவனம்.

பலம் -புதுமையான நகைச்சுவை.

வாழ்த்துகள்

“தம்பி’ வெற்றிப் படத்துக்குப் பிறகு இயக்குநர் சீமான்-மாதவன் கூட்டணி சேர்ந்துள்ள படம். தன்னைப் போல பிறரையும் நேசிக்க வேண்டும்; பெற்றவர்களைக் காப்பாற்றாதவன் மற்றவர்களைக் காப்பாற்ற முடியாது என்ற கருத்தை மையமாக வைத்து ஆபாசம், ஆங்கிலக் கலப்பில்லாமல் படத்தை உருவாக்கியிருக்கிறார் சீமான். “ஆரியா’ படத்துக்குப் பிறகு மாதவனுடன் பாவனா ஜோடியாக நடிக்கிறார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பாளர் சிவா இந்தப் படத்தை சாய்மீரா நிறுவனத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறார். சிவாவின் “அரவிந்தன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன்ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

பாடல்கள் -நா.முத்துக்குமார். ஒளிப்பதிவு -பெ.லோ.சஞ்சய். படத்தொகுப்பு -கா.பழனிவேல். தயாரிப்பு -அம்மா கிரியேஷன்ஸ்.

பலம் -வலுவான கதை.

பிடிச்சிருக்கு

“முருகா’ படத்தில் நடித்த அசோக், புதுமுகம் விசாகா நடித்துள்ள படம். சம்பத், சரண்யா, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லிங்குசாமியின் உதவியாளர் கனகு இயக்கியிருக்கிறார். காதலில் வெற்றி பெற கத்தியின்றி ரத்தமின்றி ஒரு புதுமையான வழியைக் காட்டும் படம். சண்டைக் காட்சிகள் இல்லாத குறையை இந்தப் படத்தின் திருப்பம் நிறைந்த திரைக்கதை நீக்கும் என்கிறார் இயக்குநர். இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் மூலம் மனு ரமேஷன் என்ற புதிய இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். கதாநாயகன் அசோக் மும்பையில் நடன இயக்குநராகப் பணியாற்றியதால் நடனக் காட்சிகள் புதுமையாக அமைக்கப்பட்டுள்ளன.

பாடல்கள் -யுகபாரதி, விவேகா, ச.ரமேஷன் நாயர். ஒளிப்பதிவு -த.வீ.ராமேஸ்வரன். படத்தொகுப்பு -கு.சசிகுமார். நடனம் -காதல் கந்தாஸ். தயாரிப்பு -கூல் புரொக்ஷன்ஸ்.

பலம் -திரைக்கதை.

பழனி

“திருப்பதி’ படத்துக்குப் பிறகு பேரரசு இயக்கும் படம். பரத், புதுமுகம் காஜல் அகர்வால், குஷ்பு ஆகியோர் நடித்துள்ளனர். அக்கா-தம்பி பாசத்தை மையமாக வைத்து காமெடி, சென்டிமெண்ட் கலந்து படத்தை உருவாக்கியுள்ளார் பேரரசு. வழக்கம்போல இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ள பேரரசு முதல்முறையாக இந்தப் படத்தில் சொந்தக் குரலில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். பரத் முதல்முறையாக முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். பாடல் காட்சிகள், பிரமாண்டமான க்ளைமாக்ஸ் காட்சி ரசிகர்களைக் கவரும். வழக்கமான பரத் படங்களை விட இந்தப் படத்தை அதிக பட்ஜெட்டில் தயாரித்துள்ளார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம்.

வசனம் -ரவிமரியா. இசை -ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு -விஜய் மில்டன். படத்தொகுப்பு -வீ.ஜெய்சங்கர். சண்டைப் பயிற்சி -தளபதி தினேஷ். தயாரிப்பு -சினிமா பாரடைஸ்.

பலம் -ஆக்ஷன், சென்டிமெண்ட்.

பீமா

லிங்குசாமி இயக்கத்தில் விக்ரம்-த்ரிஷா நடித்துள்ள படம். பல பிரச்னைகளால் இரண்டு வருடம் தாமதமாக வெளியாகிறது. நிழல் உலக தாதாக்கள் பற்றிய இந்தப் படத்துக்காக சுமார் 15 கிலோ எடையைக் கூட்டி முரட்டு இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ரம். த்ரிஷாவின் காஸ்ட்யூம்களுக்காகவே இந்தப் படம் பேசப்படும் என்கிறார்கள். ஹாலிவுட் தரத்துக்கு நிகரான சண்டைக் காட்சிகள் வித்தியாசமான கோணங்களில் படமாக்கப்பட்டுள்ளன. பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. லிங்குசாமி, விக்ரம் ஆகியோரை விட படத்தின் வெற்றியை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.

வசனம் -எஸ்.ராமகிருஷ்ணன். இசை -ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள் -தாமரை, நா.முத்துக்குமார், பா.விஜய், யுகபாரதி. ஒளிப்பதிவு -ஆர்.டி.ராஜசேகர். சண்டைப் பயிற்சி -கனல் கண்ணன். படத்தொகுப்பு -ஆண்டனி. தயாரிப்பு -ஸ்ரீசூர்யா மூவிஸ்.

பலம் -பெரிய கலைஞர்களின் கூட்டணி.

Posted in Actors, Actress, Alagappan, Ashok, Azhagappan, Barath, Bharath, Bhavana, Bhavna, Bhawana, Bhawna, Bheema, Cheran, Cinema, Films, INA, Indralogathil Naa Azhagappan, Kaalai, Kalai, Karu Pazhaniappan, Lingusami, Lingusamy, Madhavan, Mathavan, Movies, Nila, Palani, Palaniappan, Pazani, Pazhani, Pazhaniappan, Perarasu, Pidichirukku, Pongal, Privom Santhippom, Releases, Reviews, Sathyaraj, Satyaraj, Seemaan, Seeman, Seran, Simbu, SNEHA, Thambi, Thimiru, Thirupathi, Thirupathy, Thiruppathi, Thiruppathy, Thrisha, Trisha, Vaalthugal, Vaazhthugal, Vaazhthuhal, Vaazhthukkal, Vaazthukkal, Vadivelu, Vedhika, Vethika, Vikram | Leave a Comment »

Sun TV Top 10 Movies & Rights to a Cinema – Collusion, Mixing news with monetary interests

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

சர்ச்சை: டாப் 10… 20… 30..!

உலக அதிசயங்களை ஏழு என்று வகைப்படுத்தியதற்கு என்ன காரணமோ அதே காரணம்தான் “டாப் டென்’ என்று டி.வி. சானல்கள் வரிசைப்படுத்தியதற்கும். அதாவது ஏழு, பத்து என்பதெல்லாம் பழக்க தோஷம்தான். வார வாரம் டாப் டென் நிகழ்ச்சிகள் போக ஆண்டுக்கு ஒருமுறை டாப் டென் தேர்ந்தெடுக்கிறார்கள். சன் டி.வி., இப்போது கலைஞர் டி.வி. இரண்டிலும் இந்த வரிசைப்படுத்தல் நடக்கிறது.

சன் டி.வி.யில் நடக்கிற அரசியல் சுவாரஸ்யமானது. எப்போதும் விஜய் நடித்த படத்தை மட்டுமே டாப் டென்னில் முதலாவதாகக் கொண்டுவருவது அவர்கள் வாடிக்கை. வாரப் பட்டியலிலும் அவர்தான் எப்போதும் முதலிடத்தைப் பிடிப்பார். அப்படியில்லை என்றால் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரித்த படம் முதலிடத்தைப் பிடிக்கும். அல்லது ரஜினி படம் வெளிவந்தால் அது முதலிடத்தைப் பிடிக்கும்.

கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு “ஆட்டோகிராஃப்’ தேசிய விருது பெற்ற போது அதற்கு சன் டி.வி. போதிய விளம்பரம் செய்யவில்லை என்று வருத்தப்பட்டார் சேரன். விளைவு அடுத்த ஆண்டில் அவர் இயக்கிய “தவமாய் தவமிருந்து’ திரைப்படம் ஆண்டு டாப் டென்னில் இடம்பெறவேயில்லை. அடுத்து வெளியான “மாயக் கண்ணாடி’ முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது. ஒரு வழியாக சேரன் இறங்கிவந்து சன் தரப்பில் பேசி, பிறகு அந்தச் சானலிலும் அவருடைய பேட்டி இடம் பெற்றது. அந்த வகையில் புறக்கணிக்கப்பட்டு இப்போது பேட்டி கொடுக்க வைக்கப்பட்டிருப்பவர் அஜீத்.

விஜய் நடித்த “வசீகரா’ படத்தையும் நிராகரித்திருக்கிறார்கள். காரணம் அதை ஜெயா டி.வி. வாங்கியிருந்தது.

அவர்கள் முடிவு செய்தால் அது பட்டியலில் இடம் பெறும். வேறு சானல்களில் வாங்கப்பட்ட படங்களை அவர்கள் பட்டியலில் சேர்ப்பதில்லை. ரஜினி, விஜய், ஆஸ்கர் ஃபிலிம்ஸ் போக அவர்களுக்குப் படம் விற்றவர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறுவார்கள்.

ஜெயா டி.வி.யில் இவர்களில் இருந்து விடுபட்ட மற்ற படங்கள் இடம் பெறும். உதாரணத்துக்கு அவர்களுக்கு “பில்லா’, “சென்னை -28′ உள்ளிட்ட படங்கள் அவர்களால் சிலாகிக்கப்பட்ட படங்கள்.

செய்திகளே அப்படி அவரவர் வசதிக்கு ஏற்ப உருவாக்கப்படுவதும் ஒளிபரப்பப்படுவதுமாக இருக்கும்போது டாப்டென்கள் எம்மாத்திரம்.

கலைஞர் டி.வி.க்குத்தான் தர்மசங்கடம் அதிகம். அவர்கள் தற்போது வெளியாகும் எல்லா திரைப்படங்களையும் வெளியிடும் உரிமையை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம். அது தவிர திரைத்துறையினரை தம் வசம் வைத்திருப்பது அவர்களுக்கு மறைமுக ஆதரவாக நினைக்கிறார்கள். (கடந்த இரண்டாண்டு திரைத்துறை அரசு விருதுகள் பட்டியலிலேயே அனைத்துத் திரைப்படங்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் கெüரவித்தவர்கள் ஆயிற்றே?)

வாங்கிய படங்கள், பெரிய நடிகர்கள்- பெரிய இயக்குநர்களின் படங்கள் என எல்லோரையும் டாப் டென்னில் இடம் பெறச் செய்ய வேண்டும். “பெரியார்’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற “சன்’னால் புறந்தள்ளப்பட்ட படங்களுக்கு இங்கே ஆதரவு காட்ட வேண்டிய நெருக்கடி. கூட்டிப் பார்த்தால் படத்தின் பட்டியல் 17-ஐத் தாண்டியது. என்ன செய்வதென்று புரியவில்லை. எந்த ஏழு பேரை நீக்குவது என்று குழப்பம். இறுதியாக ஒரு உத்தி கண்டார்கள். ஏன் டாப் டென்? அது யார் போட்ட சட்டம்? இனி ஒரு விதி செய்வோம் என டாப்- 20 ஆக்கினார்கள். புத்தாண்டு படப்பட்டியலில் 20 படங்கள் இடம் பெற்றன. புதிதாக இன்னொரு மூன்று படத்தைச் சேர்ப்பதுதானா கஷ்டம்?

ஆக, டாப் இருபது இப்போது மட்டும்தானா என்பது தெரியவில்லை. தேவைப்பட்டால் “டாப் 25′, “டாப் 30′ என்று பெருகவும் வாய்ப்பு உண்டு.

இறுதியாக ஒரு கேள்வி… கலைஞர்களின் மனம் புண்படாத வண்ணம் இந்த ஆண்டு ரிஸீஸôன திரைப்படங்களின் பட்டியலை வாங்கி அத்தனை டாப்புகளையும் போட்டு புண்ணியம் கட்டிக் கொள்ளப் போகும் சானல் எது?

Posted in Actors, Actress, Ajith, Arrogance, Arts, Business, Cheran, Cinema, Corporate, Critic, Critique, deal, Distribution, Distributors, Economy, Films, Finance, Jaya, Jeya, K, K TV, Kalainjar, Lists, Maran, Media, Monetary, Money, Movies, MSM, News, Raj, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Reviews, Seran, Star, Star Vijay, Sun, Sun TV, Sunday, Top 10, TV, Vijay | 2 Comments »

‘Kaalpurush’, ‘Rang De Basanti’ Receive National Film Awards For 2005

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு

புதுடெல்லி, ஆக. 8-

2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.

இதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.

தேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.

மற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:

சிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)

அறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.

சிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)

சிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.

நடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).

தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).

சமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)

சிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)

சிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)

சிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)

சிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)

சிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).

சிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)

சிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)

சிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).

தமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.


சேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.

டி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.

ஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.


 ஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007

திரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.

திரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.

இவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.


Posted in 2005, Aadum Koothu, Aamir, Aamir Khan, Actor, Actress, Amir, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Animation, Anniyan, Anupam, Anupam Kher, Apaharan, Art, Audio, Audiography, Award, Awards, Bengal, bengali, Best, Black, Bollywood, Bombay, Bommalata, Bommalatta, Budhadeb, Budhadeb Dasgupta, Camera, CG, Chandhran, Chandran, Cheran, Child, Children, Chopra, choreographer, choreography, Cinematography, Computer, Costume, Costumes, Daivanamathil, Dasgupta, Direction, Director, Dutt, Editing, Effects, Elxsi, Engg, Entertainment, Environment, Film, Gaurav A. Jani, Geek, Ghoshal, Graphics, Gujarat, Hindi, Indira Gandhi, Integration, Iqbal, Jayaraman, Jeyaraman, Kaalpurush, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Kher, Kid, Lalgudi, Lalgudi Jayaraman, Lalkudi, Lyrics, Malayalam, Mumbai, music, Nargis, National, Paheli, Parineeta, Parineetha, Parzania, Playback, Pradeep Sarkar, Prizes, Rang de basanthi, Rang De Basanti, Recognition, Riding Solo to the Top of The World, Sarika, Screenplay, Sets, Shreya, Singer, Software, Special Effects, Sreya, Sringaram, Swarna Kamal, SwarnaKamal, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil Writer, TamilNadu, TATA, Tata Elxsi, Technology, Tharani, Thavamai Thavamirunthu, Thotta, Thotta Tharani, Thutturi, TV Chandran, Urvashi, Urvasi, Vidhu Vinod Chopra, Welfare | Leave a Comment »

Cheran praises Mu Ka Azhagiri in Arima Association Meet

Posted by Snapjudge மேல் ஜூலை 24, 2007

தொல்லைக்காட்சிகளாக மாறிய தொலைக்காட்சிகள் பார்க்கும் ஆர்வம் குறைவதாக டைரக்டர் சேரன் வருத்தம்

மதுரை, ஜுலை.24- தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சியாக இருப்பதால் அவற்றை பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறது என்று சினிமா டைரக்டர் சேரன் கூறினார்.

அரிமா சங்க விழா

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய அரிமா மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவும், அரிமா சங்க பொன்விழாவும் மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடந்தது.இந்தவிழாவில், முன்னாள் பண்பாட்டு இயக்குனர் கோவை ராமசாமி கலந்து கொண்டு மதுரை மாவட்ட அரிமா கவர்னர் டி.பாண்டியராஜன் தலைமையிலான அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் சினிமா டைரக்டர் சேரன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மனப்போராட்டம்

இன்றைய சூழ்நிலையில் மனித வாழ்க்கையில் பல பிரச்சினைகள் எழுகின்றன. செல்போன்களாலும், தொலைக்காட்சிகளாலும், மனப்போராட்டம், கோபம் போன்றவை ஏற்படுகிறது.இப்போது டி.வி. பார்க்க கூட மக்களுக்கு ஆர்வம் இல்லை. அது தொல்லைக்காட்சியாக இருப்பதால் ஆர்வம் குறைந்துவருகிறது.

நல்ல சினிமா படங்கள் எடுத்தால் சில நேரங்களில் ஓடுவது இல்லை. ஆனால் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் எப்படியோ ஓடின.

ஒரு மனிதனுக்கு அவன் செய்யும் சமூக சேவைதான் நிம்மதியை தருகிறது. நாம் ஒதுக்கப்படும்போது சமூகத்தில் நம்மை அடையாளம் காட்ட தேவைப்படுவது தொண்டு தான். இதனால் பலன் பெற்றவர்கள் நம்மை மதிக்கும்போது எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் போன்ற உயர்ந்த பதவிகளை பெற்றது போன்ற மனபூரிப்பு ஏற்படுகிறது.

நான் டைரக்டு செய்த மாயக்கண்ணாடி படத்தின் கதாநாயகன் தோல்வியை மட்டுமே தழுவி வருவார். ஒருமுறை தனக்கு எந்த மாதிரியான திறமை உள்ளது என்று உணர்ந்து அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வார்.

வாழ்க்கையே பாடம்

நமக்கு தன்னம்பிக்கையை கொடுப்பது தொண்டு தான். காதல் இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் நட்பு இல்லாமல் வாழ முடியாது. எனவே தோழமை மிகவும் அவசியம். நான் சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தேன். ஆனால் அந்த இடத்தை பிடிக்க 10 ஆண்டுகள் ஆகியது. பல தியாகங்கள் செய்த பின்னர் தான் லட்சியத்தை அடைய முடிந்தது.

சேவை செய்ததன் மூலம் பெரிய மனிதர்களாகியவர்கள் தான் இந்த விழாவில் பங்கேற்று இருக்கிறார்கள். எனவே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சேவை செய்து நட்பை வளர்த்துக்கொள்ளக்கூடிய மனப்பான்மையை பெறவேண்டும்.

பட்டறிவு தான் ஒரு மனிதனுக்கு நல்ல பாடமாகும். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவர்களுக்கு பாடமாகும். நல்ல வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சேரன் பேசினார்.

விழாவில், குழு தலைவர் சங்கரலிங்கம், இணைத்தலைவர் ரவிச்சந்திரன், பன்னாட்டு இயக்குனர் நாகராஜன், மக்கள் தொடர்பு அதிகாரி சோமசுந்தரம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


:: Paraparapu Tamil Daily News :: – Connecting People Across the Web: “வைகோ ‘டூ’ அழகிரி- சேரன் அடித்த செம ‘பல்டி’!

முன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை வானுயர வாழ்த்திப் பேசிய இயக்குநர் சேரன், மதுரையில் நடந்த விழாவில் முதல்வரின் மகன் மு.க.அழகிரியை ‘வாய்க்கு வாய்’ அஞ்சா நெஞ்சன் என்று புகழ்ந்து ஆச்சரியப்படுத்தினார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிரசாரம் படு சூடாக நடந்து கொண்டிருந்தபோது, சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சேரன், வைகோவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

இந் நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மு.க.அழகிரியை பாராட்டிப் புகழாரம் சூட்டியுள்ளார். மதுரை அரிமா சங்க அமைச்சரவை பதவியேற்பு விழா ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதில் மு.க.அழகிரி, இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சேரன்,

தொண்டுகள் மூலம் சாதனை செய்த மனிதர்கள் தான் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர். யாரும் எடுத்த எடுப்பில் உயர முடியாது. படிப்படியாகத்தான் உயர முடியும். ஒரு மனிதன் வாழ்வில் உயர லட்சியம், தோழமை வேண்டும். காதல் கூட இல்லாமல் வாழ்ந்து விடலாம். ஆனால் நட்பு இல்லாமல் வாழவே முடியாது. பிறருக்கு சேவை செய்வதன் மூலமே நமது வாழ்க்கை உயரும். அஞ்சா நெஞ்சன் என்றால் அது ஒருவருக்குத்தான் பொருந்தும். அஞ்சாத உள்ளம், உள்ள உணர்வுடன் பிறருக்கு உதவக் கூடிய ஒருவரைத்தான் அஞ்சா நெஞ்சன் என்கிறோம்.

வெற்றிக்கு இலக்கணமாக நமது அஞ்சா நெஞ்சன் திகழ்கிறார். வார்த்தையால் பேசுவதை விட செயல்களில் காட்டி வருகிறார். அவரைப் போல அனைவரும் வெற்றி பெற வேண்டும். மாயக்கண்ணாடியாக இல்லாமல், மக்கள் முன் உண்மைக் கண்ணாடியாக உள்ளார் அஞ்சா நெஞ்சன் என்று சேரன் கூறிக் கொண்டே போக அழகிரியே ஒரு கட்டத்தில் நெளிந்துவிட்டார். வைகோவின் தீவிர பக்தராக அறியப்பட்டவரான சேரன், தடாலடியாக அழகிரியை வாய்க்கு வாய் புகழ்ந்து பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in Alagiri, Alakiri, Arima, Attend, Attendance, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Cheran, Cinema, Films, Function, Gossip, Kisukisu, Madurai, Mayakannaadi, Mayakannadi, Mayakkannaadi, Mayakkannadi, MDMK, Meet, Meeting, MK Alagiri, MK Alakiri, MK Azhagiri, MK Azhakiri, Movies, MuKa Alagiri, Party, Politics, Rumor, Rumour, Seran, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Blog, Tamil Blogs, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Meet, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Pictures, Tamil Theater, Tamil Theatres, Vambu, Vampu | Leave a Comment »

Upcoming Tamil Movie Releases – Cheran’s Nagara Kannaadi

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

திரைக்கதிர்: ‘நகரக் கண்ணாடி’!

மனோஜ் கிருஷ்ணா

சேரன் இயக்கி நடிக்கும் “மாயக் கண்ணாடி’ படத்தின் ஸ்டில்கள் வழக்கமான அவருடைய படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கின்றன. “”உங்கள் படங்களிலுள்ள யதார்த்தம் இந்தப் படத்திலும் இருக்குமா?” என்று கேட்டதற்கு…

“”இதுவும் யதார்த்தமான வாழ்க்கையைச் சித்திரிக்கும் படம்தான். இவ்வளவு நாள் கிராமத்துப் பின்னணியில் படங்கள் எடுத்திருக்கிறேன். முதன்முறையாக இந்தப் படத்தில் நகர்ப்புற வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறேன். நகரத்திலும் ஒரு யதார்த்தம் இருக்கிறது. நகரத்துப் படங்கள் என்றாலே காதல் கதையையும், அடிதடி கதையையும்தான் எல்லாரும் சொல்கிறார்கள்.

இவை இரண்டும் இல்லாமல் இடைப்பட்ட, மெஜாரிட்டியாக வாழக்கூடிய நடுத்தர வர்க்கத்தினரும் இருக்கிறார்கள். அவர்கள் எந்த அடிதடிக்கும் போவதில்லை; எந்த கமர்ஷியல் விஷயங்களுக்கும் போவதில்லை; வாழ்க்கையை ஓட்டுவதில்தான் அவர்கள் கவனமெல்லாம் இருக்கும். அவர்களைப் பற்றிய கதைதான் “மாயக் கண்ணாடி’. இந்தப் படத்தில் என்னைப் பார்க்க மாட்டீர்கள்; உங்களைத்தான் பார்ப்பீர்கள்” என்கிறார் சேரன்.

அவார்டு பெறுமா “அடைக்கலம்’?

பிரஷாந்த், தியாகராஜன், உமா நடிப்பில் நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருக்கும் “அடைக்கலம்’ படம் மீண்டும் புத்துணர்வு பெற்று திரைக்கு வருகிறது. படத்தைப் பற்றி கதாநாயகனிடம் கேட்ட போது… “”இன்றைய கமர்ஷியல் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம். எந்த ஒரு ஜீவராசிக்கும் ஓர் அடைக்கலம் தேவை. அப்படி அன்பு தேடி அலையும் ஒருவனுக்கு அடைக்கலமாக கிடைக்கும் மனது பற்றியதுதான் கதை. தந்தை -மகன் போராட்டத்தையும், அண்ணன் தங்கை பாசத்தையும் சினிமாத்தனமில்லாமல் காட்டியிருக்கிறார் டைரக்டர் ஆர்.புவனராஜா. தந்தை கேரக்டரில் என்னுடைய அப்பாவும், தங்கை கேரக்டரில் உமாவும் நடித்துள்ளார்கள். நான் ஆத்ம திருப்தியோடு நடித்த படம் இதுதான். தேசிய விருது பெற்ற “வீடு’ படத்தைத் தயாரித்த ஸ்ரீநாராயணதாஸ்தான் “அடைக்கலம்’ படத்தின் தயாரிப்பாளர். நல்ல படங்கள் எடுக்கும்போது வழக்கமாக ஏற்படும் பணப் பிரச்சினைதான் இந்தப் படத்துக்கும் ஏற்பட்டது. இப்போது அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்துவிட்டன. தேசிய விருதுக்கு அனைத்து விதத்திலும் தகுதியான படம் என்பது என் கருத்து” என்றார் பிரஷாந்த்.

விறுவிறு பந்தயம்!

சிபிராஜ், நிலா நடித்து வரும் “லீ’ படத்தை எப்படியும் பெரிய வெற்றிப் படமாக்கிவிட வேண்டும் என்று இயக்குநர் பிரபுசாலமன் யூனிட் மிகுந்த கவனத்தோடு உழைத்து வருகிறார்கள். பிரபுசாலமனின் முந்தைய படமான “கொக்கி‘ ஒண்ணேமுக்கால் மணி நேரத்தில் விறுவிறுப்பாக சென்றதைப் போலவே “லீ’ படமும் இருக்கும் என்கிறார்கள்.

இதைப் பற்றி இயக்குநரிடம் கேட்டால்… “”படத்தின் கதைக்கு ஏற்பத்தான் நேரம்; கோடிக்கணக்கான முதலீட்டில் ஒன்றரை மணி நேரத்தில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்கள் எத்தனையோ உள்ளன; அதே சமயம் ” டைட்டானிக்’, “லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’ போன்ற மூன்றரை மணி நேரப் படங்களும் உள்ளன. எல்லாமே வெற்றிப் படங்கள்தான். ஐந்து நிமிட, அரை மணி நேர குறும்படங்களில் எவ்வளவோ விஷயங்கள் சொல்லப்படுகின்றன.

கால்பந்து தொடர்பான எங்கள் “லீ’, மிகப் பெரிய இரண்டு கால்பந்து அணிகள் மோதும்போது எப்படி விறுவிறுப்பாய் இருக்குமோ அதேபோல இருக்கும். அதற்கு நான் கியாரண்டி” என்கிறார்.

கமல் புராணம் பாடும் ஆர்யா!

சமீபத்தில் கமல்ஹாசனுக்காக “வட்டாரம்’ படத்தின் சிறப்புக் காட்சியைத் திரையிட்டார்கள். படத்தைப் பார்த்த கமல், இயக்குநர் சரணிடம் சில விஷயங்களைப் பற்றி விமர்சித்தார். அருகிலிருந்த ஆர்யாவை அழைத்து “”நன்றாக நடித்திருக்கிறீர்கள்; சண்டைக் காட்சிகளில் எதற்கு இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கிறீர்கள்?

அதெல்லாம் வேண்டாம். உடல்தான் சொத்து; அதைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்” என்றும், “”நல்ல கதையைத் தேர்வு செய்து நடித்தால் தமிழ் சினிமாவில் உங்களுக்கு நல்ல இடம் காத்திருக்கிறது” என்றும் அறிவுரை வழங்கியிருக்கிறார். இதை அனைவரிடமும் சொல்லி மகிழ்ந்து “கமல் புராணம்’ பாடி வருகிறார் ஆர்யா.

Posted in Adaikkalam, Arya, Cheran, Kamal, kamalahasan, Kamalhassan, Lee, Nagara Kannaadi, New Films, Nila, Prashanth, Sibiraj, Tamil Cinema, Tamil Movies, Thiagarajan, Vattaaram | Leave a Comment »

Three tamil Movies make it to the Goa International Film Festival

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006

சர்வதேச திரைப்பட விழாவுக்கு 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வு

புது தில்லி, அக். 28: கோவாவில் அடுத்த மாதம் துவங்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக மூன்று தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

  1. சேரன் இயக்கத்தில் வெளியான “தவமாய் தவமிருந்து‘,
  2. சாரதா ராமநாதன் இயக்கிய “சிருங்காரம்‘,
  3. டி.வி.சந்திரன் இயக்கிய “ஆடும் கூத்து‘ ஆகிய திரைப்படங்கள் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன.

மேலும், திரைப்பட விழாவில், ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கிடையிலான போட்டிக்கு சிருங்காரம் படத்தை நடுவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

கோவா மாநிலம் பனாஜியில் நவம்பர் 23-ம் தேதி துவங்கி, டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும் இத் திரைப்பட விழாவில், பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 20 திரைப்படங்களும், 20 குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன.

முன்னாள் ஹிந்தி நடிகர் சஷிகபூர், விழாவைத் துவக்கி வைக்கிறார். நிறைவு விழாவில், பிரபல நடிகரும் இயக்குநருமான அபர்னா சென் கலந்துகொள்கிறார்.

திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவுக்கு சயீத் அக்தர் மிர்ஸô தலைமை வகித்தார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எம். வசந்த், கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் மாத்யூ உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட திரைபடங்கள் அனைத்தும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் 31-க்குள் தயாரிக்கப்பட்டவை.

Posted in Aadum Koothu, Aparna Sen, Cheran, Dasmunshi, Dosar, Goa, IFFI-2006, International Film Festival, Rituparno Ghosh, Saratha Ramanathan, Shashi Kapoor, Srungaram, Tamil Cinema, Tamil Movies, Thavamai Thavamirunthu, TV Chandran | Leave a Comment »