கவர் ஸ்டோரி
வெற்றி என்னை ‘ஃபாலோ’ செய்யும்
யுகன்
“சுகாதாரமா அப்படின்னா?’ என்று கேட்குமளவுக்கு இறைந்து கிடக்கும் குப்பைக் கூளங்கள். முடை நாற்றம் எடுக்கும் சென்னை, வியாசர்பாடியின் சாமந்திப்பூ(?!) காலனி. ஓர் உலக சாம்பியனின் வீடு இங்கேதான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும்!
சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த உலகளாவிய கேரம் விளையாட்டில் பெண்கள் பிரிவில் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் இளவழகி. பத்தாவது வரை மட்டுமே படித்திருக்கும் இந்த உலக சாம்பியனை, நான்கு பேரோடு சேர்ந்து கேரம் போர்ட் கூட விளையாட முடியாத அளவுக்கு நெருக்கடியில் இருக்கும் அவரின் “ஹவுஸிங் போர்ட்’ வீட்டில் சந்தித்தோம்.
“”என்னுடைய அப்பா இருதயராஜ்தான் என் கேரம் போர்ட் குரு. அவர் ரிக்ஷா ஓட்டுகிறார். அம்மா- செல்வி குடும்பத் தலைவி. தங்கை, இலக்கியா, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.காம். படிக்கிறார். இன்னொரு தங்கை, செவ்வந்தி ஒன்பதாவது படிக்கிறார். என்னுடைய அப்பா, போட்டிகளில் கலந்து கொண்டு மெடல்கள் வாங்கவில்லையே தவிர, எனக்கு கேரம் விளையாட்டில் நிறைய ஆட்ட நுணுக்கங்களைச் சொல்லித் தருவார். அப்பாவின் நண்பர் ஆறுமுகம் என்பவர் எங்களின் வீட்டுக்கருகில் போர்ட்-ரூம் வைத்திருந்தார். அங்கு போய் விளையாடியும், பிறர் விளையாடுவதைப் பார்த்தும்தான் நான் என்னுடைய விளையாட்டை வளர்த்துக் கொண்டேன். நான் விளையாடும் முறையைப் பார்த்து என்னை டோர்னமென்ட்களில் விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்னுடைய அப்பாதான்.
நான் மாநில அளவிலும், தேசிய அளவிலும் எல்லாப் போட்டிகளிலும் பங்கெடுப்பதற்கு காரணமாக இருந்தவர், இப்போது நான் பிரான்ஸ் செல்வதற்கும் காரணமாக இருந்தவர் கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ். தான். அவர் அளித்த ஊக்கம்தான் நான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியனாகியிருப்பதற்கு அடிப்படை. என்னுடைய வெற்றியை அவருக்குத்தான் நான் சமர்ப்பிப்பேன்.
உலக அளவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே கேரம் போர்ட் விளையாட்டைப் பொறுத்தவரையில் இந்தியாதான் சாம்பியன். அதிலும் தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது. இந்த வருடம் பிரான்ஸில் நடந்த உலக சாம்பியன் போட்டியில், 20 நாடுகள் பங்கேற்பதாக அறிவித்திருந்தன. ஆனால் இறுதியாகப் பங்கெடுத்தது 12 நாடுகள்தான். ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி, கானடா, மாலத்தீவுகள், கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பங்கேற்றன. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஆண்களில் 8 வீரர்களும், பெண்களில் 8 வீரர்களும் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து சென்றவர்களில் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களே 6 பேர்!
முதலில் அனைத்து நாட்டு வீரர்களையும் நான்கு பிரிவுகளாகப் பிரித்துவிடுவார்கள். ஒவ்வொரு பிரிவில் இருப்பவர்களும், இன்னொரு பிரிவினரோடு மோதுவார்கள். இது “லீக்’. இப்படி நடந்த “லீக்’ ஆட்டத்தில் ஸ்ரீலங்கா வீராங்கனையான குமாரியுடன் ஆடிய ஆட்டம் மிகவும் சிறப்பாக அமைந்தது.
செமி-ஃபைனல் முழுவதும் நாக்-அவுட் முறையில் நடந்தது. செமிஃபைனலில் நான் (25, 11) (25, 14) ஆகிய பாயின்ட்களில் பீகாரைச் சேர்ந்த ராஷ்மி குமாரியைத் தோற்கடித்தேன். இன்னொரு செமிஃபைனலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிர்மலா, முன்னாள் உலக சாம்பியனான ரேவதியைத் தோற்கடித்தார்.
ஆக, நான் ஃபைனலில் சக இந்திய வீரரான நிர்மலாவுடன்தான் ஆடினேன். என்னுடைய ஆட்டமுறை, “டிஃபென்ஸ்’ பற்றியெல்லாம் யோசிக்காமல், காய்களைப் பாக்கெட் செய்வதில் குறியாக இருப்பதுதான். மிக..மிக.. நெருக்கடியான போட்டியாக இது அமைந்தது. (25, 11) (25,11) ஆகிய பாயின்ட்களில் நான் வெற்றி பெற்றேன். இந்தப் போட்டியில் பங்கெடுத்த பெண்களிலேயே நான்தான் மிகவும் வயது (23) குறைவானவள். இரட்டையர் போட்டியிலும் நான் “ரன்னர்-அப்’பாக வந்தேன்.
ஸ்ரீலங்கா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் நடந்த கேரம் விளையாட்டுகள் பலவற்றில் நான் ஜெயித்திருக்கிறேன். தில்லியில் 2006-ல் நடந்த உலகக் கோப்பை கேரம் போட்டியிலும் நான் சாம்பியன் பட்டத்தை வென்றேன். ஏறக்குறைய 12 வருடங்களாக கேரம் போர்டில் தேசிய அளவிலும், உலக அளவிலும் சாதித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களின் மீது மீடியாவின் வெளிச்சம் இப்போதுதான் மிக அதிகமாகப் பட்டிருக்கிறது.
வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம். இருப்பதற்கு வீடும், விளையாட்டுத் துறைக்கான ஒதுக்கீட்டில் எனக்கு ஓர் அரசுப் பணியும்தான் என்னுடைய கோரிக்கை.
“”ரிக்ஷா ஓட்டியான உன்னோட பொண்ணுக்கு கேரம்போர்டெல்லாம் தேவையா? பேசாம ஏதாவது வேலைக்கு அனுப்புறதைப் பார்ப்பியா…” என்று என் காதுபடவே, என் அப்பாவிடம் கிண்டல் தொனிக்கப் பேசியவர்கள்… (கண்கள் கசிய… பேச்சு தடைபடுகிறது.. சமாளித்துக் கொண்டு பேசுகிறார்) எத்தனையோ பேர். அப்பா வாங்கிக் கொடுத்த “பில்லியர்ட்ஸ் பால்’ ஸ்டிரைக்கரில் தான் இப்போதும் ஆடுறேன். எட்டு வருஷத்திற்கு முன்பே இதன் விலை 300 ரூபாய்!
நான் ஒவ்வொரு முறையும் “ரெட்’ காய்னப் பாக்கெட் செய்துவிட்டு, “ஃபாலோ’வுக்குக் குறிபார்க்கும் போதெல்லாம், தொடர்ந்து எங்கள் குடும்பத்தை “ஃபாலோ’ செய்து கொண்டிருக்கும் வறுமைதான் என் நினைவுக்கு வருகிறது. வறுமையில் இருந்தாலும்… என் திறமையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் வெற்றி என்னை “ஃபாலோ’ செய்கிறது. இனிமேலும் செய்யும். வெளிநாட்டிற்காக விளையாட எனக்கு ஐந்து வருடங்களாகவே வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. என் திறமைக்கு என் நாட்டிலேயே மரியாதை கிடைக்கும் என்று காத்திருக்கிறேன்…” என்றார் சென்டர்-கட் செய்து, ஃபாலோவை போட்டபடி இளவழகி!