ஆசியக்கோப்பை: மணிசங்கர் அய்யர் மெüனம் காப்பது ஏன்?
வி. துரைப்பாண்டி
சர்வதேச அளவிலான போட்டியில் இதற்கு மேல் ஒரு வெற்றி வேண்டுமா என வியக்கும் அளவுக்கு எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த ஏழாவது ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய ஹாக்கி அணி, திறமையை வெளிப்படுத்தியது.
தொடர்ச்சியாக 7 நாடுகளை வீழ்த்தியது! இலங்கைக்கு எதிராக 20 கோல் போட்டு, அதிக கோல்கள் அடித்த சாதனையை சமன் செய்தது உள்பட 57 கோல்கள் இந்திய அணியின் கணக்கில். இவ்வளவுக்கும் பெனால்டி கார்னரில் இந்தியா “ஹீரோ’ அல்ல, ஏறக்குறைய ஜீரோதான். தட களத்தில்தான் வினாடிக்கு வினாடி எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், குழு விளையாட்டுப் போட்டியில் அதுமாதிரியான தருணத்தை காண்பது அரிது. ஆனால் இளமையும் முதுமையும் கலந்த இந்திய அணியினர், ஹாக்கியை தட களமாக மாற்றி, ரசிகர்களுக்கு உச்சக்கட்ட விருந்தளித்தனர். அனுபவ வீரர் பிரப்ஜோத் சிங், வேகத்தில் தன்ராஜ் பிள்ளையாகவே காணப்பட்டார். அவரது “ரிவர்ஸ் பிளிக்’ கோல் முயற்சி, நிச்சயம் ரசிகர்களுக்கு கூடுதல் விருந்து.
நீண்ட போட்டிகளுக்குப் பிறகு ஓர் அணியாக விளையாடியது இந்தியா. உச்சக்கட்டமாக, ஆசியாவில் புலியாகத் திகழும் கொரியாவை 7-க்கு 2 என்ற கோல் வித்தியாசத்தில் இறுதி ஆட்டத்தில் தோற்கடித்து உலக ஹாக்கி வட்டாரத்தை தலைதூக்கிப் பார்க்கச் செய்துள்ளது பிரப்ஜோத் திர்கே தலைமையிலான இந்திய அணி. இல்லை, பயிற்சியாளர் ஜோஹிம் கார்வலோ பார்வையிலான இந்திய அணி என்று சொல்வதுதான் சாலப் பொருத்தமாக இருக்கும்.
ஹாக்கியை “தேசிய விளையாட்டு’ எனக் கூறிவருகிறோம். ஆனால் அதற்கு சட்டபூர்வமாக எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால் 1960-80-களில் இந்தியா குவித்த வெற்றிகளால், அப்போதிருந்த 80 கோடி மக்கள் இவ் விளையாட்டை ஜனரஞ்சகமான ஆட்டமாக ஏற்று, போற்றத் தொடங்கினர். அதனால், மற்ற விளையாட்டுகளைக் காட்டிலும் ஹாக்கி ஓங்கி ஒலித்தது, விளையாடப்பட்டது, மக்களும் ஏற்றுக்கொண்டனர், பின்தொடர்ந்தனர். ஆனால் அவர்களுக்கு காலப்போக்கில் அந்த அணி தீனி போடமுடியாதது வருத்தமான விஷயம்தான்.
கடைசியாக தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5-ம் இடம். அதற்கு முன்னர் வரை பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் ஏதாவது ஒரு பதக்கத்தைப் பெற்றுவந்த இந்திய அணியினர், நம்மிடம் பயின்ற சீனாவிடம் பெற்ற தோல்வி, அப் போட்டியில் அதளபாதாளத்துக்குத் தள்ளியது.
உதை மேல் உதை. ச்சீ… இதைப் போய் தேசிய விளையாட்டு என்று எப்படிச் சொன்னார்கள் என எள்ளிநகையாடாதவர்கள் குறைவு. 100 கோடிக்கும் மேலான மக்களைக் கொண்ட இந்தியாவில், ஐரோப்பிய நாடுகளை, ஏன் ஆசிய நாடுகளைக்கூட தோற்கடிக்கும் அளவுக்கு வலுவான, வீரமான 11 வீரர்கள் கிடைக்கவில்லையா என்ற ஆதங்கம் கடைக்கோடி மக்களிடம்கூட இருந்தது.
அதற்காக, இந்திய ஹாக்கி அமைப்பு என்னென்னவோ முயற்சிகளை மேற்கொண்டன. 1976-வரை கட்டாந்தரையிலேயே விளையாடி பழக்கப்பட்ட இந்தியர்களுக்கு, அதன் பிறகு வந்த ஆஸ்ட்ரோ டர்ப்பில் (செயற்கை புள்தரை) விளையாடுவதுதான் இந்த பின்னடைவுக்குக் காரணம் என்றார்கள். ராஜீந்தர் (சீனியர்), ஜெரால்டு ராச், ராஜீந்தர் (ஜூனியர்), கடைசியாக வி. பாஸ்கரன் என எத்தனையோ பயிற்சியாளர்கள் இந்திய அணியை சீர்தூக்கிப் பார்க்க முயற்சித்தனர். ஆனால் ஏற்றத்துக்குப் பதிலாக ஏமாற்றம்தான்.
ஆனால், பாஸ்கரனுக்குப் பிறகு அணியை செம்மைப்படுத்திவரும் முன்னாள் ஒலிம்பியன் கார்வலோ, தான் பொறுப்பேற்றது முதலே ஆக்கப்பூர்வமான முன்னேற்றம். கோலாலம்பூர், பூம் ஆகிய நகர்களில் நடந்த சர்வதேச போட்டிகளில் வெண்கலப் பதக்கம். தற்போது ஆசியக் கோப்பையில் தங்கப் பதக்கம். 9 மாத காலத்தில் நம்பிக்கையான பார்வை.
உலக மக்கள் தொகையில் இரண்டாவது மிகப் பெரிய நாடு என்ற பெயரைப் பெற்ற இந்தியா, ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இதுவரை ஒரு தங்கப் பதக்கத்தையும் பெறமுடியவில்லை. அதே சமயம் குழுப் போட்டியான ஹாக்கி, 8 முறை இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை தேடிக் கொடுத்துள்ளது.
ஆசியக் கோப்பையை மீண்டும் வென்றுள்ள இந்தியாவுக்கு அடுத்த இலக்கு பெய்ஜிங்கில் 2008-ம் ஆண்டில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதே. உலகத் தரவரிசையில் தற்போது 8-வது இடத்தில் இருந்தாலும் அதில் விளையாடுவதற்கு இன்னும் தகுதியைப் பெறவில்லை. ஆனால், சிரமம் இருக்காது என நம்பிக்கை தெரிவித்துள்ள கார்வலோ, அதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார்.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 12 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. ஏற்கெனவே 8 நாடுகள் அதற்கான தகுதியைப் பிடித்துவிட்டன. மற்றைய நாடுகள் எவை என்பதைத் தீர்மானிக்க சிலி, நியூஸிலாந்து, ஜப்பான் ஆகிய இடங்களில் தகுதிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அவற்றில் ஒரு போட்டியில் இந்தியாவும் விளையாட உள்ளது.
இந்தியாவிலிருந்து அடுத்தடுத்து சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஒரே ஒலிம்பிக் விளையாட்டாகத் திகழும் ஹாக்கியை, முதன்மைப் பிரிவிலிருந்து மத்திய விளையாட்டு அமைச்சகம் அண்மையில் பொதுப் பிரிவுக்கு மாற்றியுள்ளது. ஆனால் ஹாக்கி வீரர்கள் அது குறித்து கவலைப் படவில்லை என்பதற்கு ஆசியக் கோப்பை வெற்றியே சாட்சி.
கோலாலம்பூரில் 2003-ல் முதன்முதலாகப் பெற்ற ஆசியக் கோப்பையை, இம்முறையும் இந்திய அணியினர் யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை. அதற்காக பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் இந்திய அணியைப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய விளையாட்டு அமைச்சகத்தை கையில் வைத்துள்ள மணி சங்கர் அய்யர் மட்டும் மெüனம் காப்பது ஏன் என்பதுதான் ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுப்பப்படும் கேள்வி.