போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகல்
இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து பிபிசியிடம் கருத்து வெளியிட்ட இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், கள நிலவரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் பத்தாயிரம் தடவைகளுக்கும் மேலாக மீறியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
அமைதி வழியில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமா என்பதை பார்ப்பதற்காகத் தான் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் அதற்கு மாறாக தேசத்தின் பாதுகாப்பு பலவகையிலும் அச்சுறுத்தப் படுவதாகவும் ரம்புக்கவெல்ல கூறினார்.
ஒவ்வொருநாளும் இத்தகைய அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை இனிமேலும் நடைமுறைப் படுத்தும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை என்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான நடைமுறைகளை இன்றிலிருந்தே தாங்கள் துவங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் குண்டுத்தாக்குதல்-நான்கு பேர் பலி 28 பேர் காயம்
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இராணுவத்தினர் பயணம் செய்த ஒரு வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் பலியாகி, இருபத்தி எட்டு பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
கொழும்பின் இதயப் பகுதியான கொம்பனி வீதியில் இராணுவ பஸ் வண்டியை இலக்கு வைத்து, இன்று-புதன் கிழமை காலை நடத்தப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுத்தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவரும், மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவர் பெண். பதினொரு இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலின்போது பொதுமக்கள் பயணிக்கும் பஸ்வண்டியொன்றும் சேதமடைந்திருக்கிறது.
![]() |
![]() |
சம்பவ இடத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு |
இராணுவத் தலைமையகம், விமானப்படைத்தலைமையகம் போன்ற பல்வேறு பாதுகாப்புக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையங்களிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவிலுள்ள நிப்பொன் ஹோட்டல் சந்திக்கு அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நால்வர் மிகவும் மோசமாக காயமடைந்திருப்பதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குண்டுவெடிப்பில் நிப்பொன் ஹோட்டலின் முன்புறம் மோசமாகச் சேதமடைந்திருக்கிறது.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், ஆயுதப் படையினரும் குவிக்கப்பட்டதோடு, இந்தப்பகுதியின் போக்குவரத்து பல மணிநேரம் பாதுகாப்பு படையினரால் தடை செய்யப்பட்டிருந்தது.
![]() |
![]() |
குண்டு தாக்குதலுக்குள்ளான பேருந்து |
இன்றைய சம்பவம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, இன்று கலை சுமார் 9.30 மணியளவில் நோய்வாய்ப்பட்டுள்ள இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ்வண்டியை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்த குண்டு தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் புலிகள் இதை மறுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
இந்த சக்திவாய்ந்த கிளேமோர் குண்டு நிப்பொன் ஹோட்டலின் குளிரூட்டும் இயந்திரத்தின் வெளிப்பாகத்தின் உட்புறத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்திருப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பான புலன் விசாரணைகளை காவ்ல்துறையினர் ஆரம்பித்திருக்கிறார்கள்.
மகேஸ்வரன் படுகொலை, கொழும்பு குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம்
நேற்று, செவ்வாய்க்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தினுள் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத துப்பாக்கி நபரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையையும், இன்று கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையும் அமெரிக்க அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது.
![]() |
![]() |
படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன் |
இது தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், மகேஸ்வரனின் கொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குப் பொறுப்பானவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த இரண்டு தாக்குதல்களின்போதும் கொல்லப்பட்டவர் களினதும், காயமடைந்தவர்களினதும் குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக்காண சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இதேவேளை, மகேஸ்வரனின் பூதவுடல் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து வெள்ளவத்தையிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்றையதினம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் அவரது பூதவுடலிற்கு தமது அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.
கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் குறித்த விவரங்கள்
மகேஸ்வரனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் குறித்து, இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், பிபிசி தமிழோசையிடம் பின்வரும் விவரங்களை தெரிவித்தார்.
அவரது பெயர் வசந்தன் என்றும் அவரது தனிப்பட்ட விபரங்கள் கிடைத்திருப்பதாகவும், ஆனால் அவரிடம் இருந்து வாக்குமூலம் எதையும் பெறவில்லை என்றும் கூறிய கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், வசந்தன் தற்காலிகமாக தங்கியிருந்த வத்தளை வீட்டில் அவர் பயன்படுத்திய மைக்ரோ பிஸ்டலுக்குத் தேவையான தோட்டாக்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.
வசந்தன் 1996 அம் ஆண்டு யாழில் இருந்து வெளியேறியதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் பணியாற்றியுள்ளதாகவும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளதாகவும், அரசுப் பணியில் இருந்துள்ளதாகவும், காவல்துறை பணியில் இருந்திருப்பார் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்த கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், அனால் தமக்கு இது குறித்த காவல்துறை உயரதிகாரியின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்றும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்தார்.