இலங்கையில் வன்முறைகள் அதிகரித்தால் நிதியுதவி நிறுத்தப்படலாம் என ஜப்பான் அறிவிப்பு
இலங்கையில் இந்த மாதத்தின் முற்பகுதியில் அரசு போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த பிறகு அங்கு இடம் பெற்றுகின்ற வன்முறைகள் மேலும் அதிகரிக்குமாயின் அந்நாட்டுக்கு அளிக்கப்படும் நிதி உதவிகளை நிறுத்த நேரிடலாம் என ஜப்பானின் சிறப்பு சமாதானத் தூதர் யஷூஷி அகாஷி எச்சரித்துள்ளார்.
இலங்கைக்கான நிதியுதவிகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினை ஜப்பான் தான் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களில் அதிகரித்துள்ள வன்முறைகள் தொடருமாயின், ஜப்பான் தான் அளித்துவரும் நிதியுதவி குறித்து மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என அகாஷி தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும், இலங்கையில் இன்னும் பல தசாப்பதங்களுக்கு இலங்கையுடன் உறவுகளை பேணவே தமது அரசு விரும்புகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உயிரிழப்புகளைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு
இலங்கையில் நடைபெறும் உயிரிழப்புக்களை தடுக்கத் தேவையான சர்வதேச நடவடிக்கைகள் மெதுவாகவே மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான ஹ்யூமன் ரைட் வாட்ச் கூறியுள்ளது.
இலங்கையில் மோசமைடந்து வரும் மனித உரிமைகள் நிலை குறித்து சர்வதேச கவலைகள் அதிகமானாலும், இதைத் தடுக்கத் தேவைப்படும் நடவடிக்கைகள் மெதுவாகவும் , ஒருமித்ததாக இல்லாமல் இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
அதே நேரம் அமெரிக்க அரசின் புத்தாயிரமாவது சவால்களுக்கான நிறுவனம் மனித உரிமைகள் தொடர்பாக எழுந்த கவலைகள் காரணமாக இலங்கைக்கு கொடுக்கப்படவிருந்த 110 மில்லியல் டாலர் உதவியை இடை நிறுத்தி வைத்துள்ளதாகவும், அதே போல பிரிட்டன் 3 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ் கடன் நிவாரணத்தை இடை நிறுத்தி வைத்துள்ளதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
இலங்கையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரிக்கும் – 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடையேயான கால கட்டத்தில் 110 பேர் காணமல் போயுள்ளதாகவும் இதில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்றும் கூறியுள்ளது.
இந்த கடத்தல்களுக்கு அரச படைகளும், அரச படைகளுடன் இணைந்து செயல்படும் ஆயுதக் குழுக்களும் காரணமாக இருக்கிறது என்று அது கூறியுள்ளது.
ஹ்யூமன் ரைட் வாட்ச் அமைப்பின் அறிக்கை குறித்த மேலதிகத் தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
கொழும்பிலுள்ள தமிழர்களிடம் போலீசார் தகவலைத் திரட்டுவதால் அவர்களிடம் அச்சம் நிலவுகிறது எனத் தகவல்
![]() |
![]() |
யோகராஜன் (இடது புறத்தில்) |
கொழும்பின் வடக்குப் பகுதியிலிருக்கும் மோதரைப் பகுதியிலிருக்கும் தமிழ் குடும்பங்களுக்கு, மோதரைப் போலீஸ் நிலையத்தின் மூலமாக அரசாங்க முத்திரைகள் ஏதும் இல்லாமல் வழங்கப்பட்டிருக்கும் ஒரு படிவத்தின் காரணமாக அங்குள்ள தமிழ் குடும்பங்கள் அச்சமடைந்துள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த துணைத் தலைவரான யோகராஜன், இந்த படிவத்தில் பெயர், விலாசம், வங்கிக் கணக்குத் தகவல்கள், சாதி உட்பட பல விடயங்கள் கோரப்பட்டுள்ளன எனக் கூறுகிறார். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரின் விபரங்களும் அதில் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இவ்வாறு பெறப்படும் தகவல்கள் சமூக விரோதிகளின் கைகளில் கிடைக்குமாயின் அது குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கும் எனவும் யோகராஜன் மேலும் தெரிவிக்கிறார். ஒவ்வோரு தனி நபரும் இவ்வாறாக கேட்கப்படும் விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்கிற நியதி எந்த சட்டத்திலும் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
தாம் போலீஸ் உயரதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து யோகராஜன் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டும் என இடதுசாரிகள் வலியுறுத்தல்
![]() |
![]() |
கொழும்பில் இடதுசாரிகள் போராட்டம் |
இலங்கையின் தலைநகர் கொழும்பில் வியாழக்கிழமையன்று அங்கு நடக்கும் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இடதுசாரி முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் பல அரசியல் கட்சிகளின் பரதிநிதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இடது சாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணரட்ணவில்ன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையில் நடைபெற்று வரும் போரினை நிறுத்த வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நாட்டில் நடைபெற்று வரும் யுத்தத்தின் காரணமாக மக்கள் வறுமையை எதிர்கொள்கிறார்கள் என அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா கூறினார்.
இதே கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொருஉறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் இலங்கை அரசு யுத்தத்துக்காக இந்த ஆண்டு பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கிறது என்றும் அதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களுமே பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறினார்.