மீனவர் வாழ்வு விடியுமா?
உதயை மு. வீரையன்
அண்மைக்காலமாக, தமிழக மீனவர்கள் தொழில்செய்து பிழைக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்றன.
நாகை துறைமுகத்திலிருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் 17 படகுகளைக் கடத்திச் சென்றனர். அந்தப் படகுகளில் 99 மீனவர்கள் இருந்தனர்.
மீனவர் கிராமப் பஞ்சாயத்தார் இதுபற்றி நாகை மாவட்ட ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டனர். தகவலறிந்த முதல்வர், உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அகமதுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் தந்த உறுதியின்பேரில் 99 மீனவர்களும் விடுவிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.
“இந்தியா – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவினைக் கவனத்திற்கொண்டு இம்மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்தது.
இந்திய அரசாங்கம் இந்த மீனவர்கள் தனது நாட்டுக் குடிமக்கள் என்பதை மறந்துவிட்டதா? “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன? தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா? நமது குடிமக்கள் வேற்று நாட்டுப் படையினரால் கைது செய்யப்படுவது நம்நாட்டு இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால் இல்லையா?
இந்தியாவின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1076 கிலோமீட்டர். இவற்றில் 600க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள்; இந்தக் கிராமங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம்.
ராமேசுவரம் முதல் நாகைவரை நீண்டிருக்கும் கடலில் மீனவர்கள் சுதந்திரமாக கட்டுமரம், படகு, தோணிகள், விசைப்படகுகளைச் செலுத்தித் தொழில்செய்துவந்த காலம் கடந்த காலமாகிவிட்டது. இப்போது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழும் நிலை.
சாதாரணமாகவே கடற்பயணம் ஆபத்தானது. எந்த நேரத்தில் அலை எப்பக்கம் அடிக்குமோ என்ற கவலை; சூறாவளியும், புயலும் அலைக்கழிக்குமே என்ற அச்சம்; பாம்புத் தொல்லை – இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு வலைவீசி பிடிக்கப்பட்ட மீன்களைப் பிடுங்கிக் கொள்வதும் தாக்குவதும், சுடுவதும், சிறைபிடிப்பதும் தொடரும் பேரவலம். இதற்கு முடிவே கிடையாதா?
கரையில் நடப்பவை, உடனே “சுடச்சுட’ செய்திகளாகி வெளிவருகின்றன; கடலில் நடப்பவை, பல நேரங்களில் வெளியே தெரிவதில்லை. கணக்கில் வராமல் கடலிலேயே மாய்ந்து போனவர்கள் எத்தனையோ பேர்?
பலமுறை இலங்கைக் கடற்படை இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்தமுறை இந்திய எல்லைக்குள் வந்த இலங்கைக் கடற்படை, தென்தமிழக மீனவர்கள் ஐந்து பேர்மீது துப்பாக்கியால் சுட்டது. வழக்கம்போல சட்டப்பேரவையில் இதைக் கண்டித்துத் தீர்மானம், இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் அறிவிப்பு; அரசின் கடமை இத்துடன் முடிந்துவிட்டது.
இம்மாதிரி நேரங்களில் அரசியல் கட்சிகளின் கண்டன அறிக்கைகள், அனுதாபச் செய்திகளால் மட்டும் பயன் என்ன? அந்த மீனவர்களை நம்பியுள்ள அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்தியக் கடலோரக் காவல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியக் கடற்படை என்ன செய்கிறது? இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா? ஆயுதக் கடத்தலைத் தடுக்கிறோம் என்று கூறுகின்றனர். தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது யார்?
தமிழகத்தின் பாரம்பரியக் குடிகள் மீனவர்கள். இவர்களது பாரம்பரியத் தொழில் மீன்பிடித்தல். இதனால் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மீனவர்களுக்குக் கடற்கரைத் தொகுதிகளை ஒதுக்கவேண்டுமென்ற கோரிக்கையின் நியாயம் புரிந்து கொள்ளப்படவில்லை. மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற மண்டல் குழுவின் பரிந்துரையும் நடைமுறைப்படுத்த்பபடவில்லை.
தமிழக மீனவர்களின் பெரிய இழப்பு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததுதான்தான். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தீர்க்கமாக ஆலோசிக்காமல் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கச்சத்தீவைத் தாரைவார்த்துவிட்டார்.
கச்சத்தீவு 3.75 சதுர மைல் பரப்பளவு கொண்டது; ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை எல்லையிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ள சின்னஞ்சிறிய பகுதி.
இது மீனவர்களின் சொர்க்கபூமி; மீன்களின் உற்பத்திச் சுரங்கம். இங்கு பல்லாண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அன்னியமாக்கிவிட்டது கச்சத்தீவு ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக குற்றம்சாட்டப்படுவதும் இப்பகுதிதான்.
இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும்நோக்கில் “கச்சத்தீவை மீட்க முயற்சி எடுக்கப்படும்’ என்று ஆளுநர் உரைகளில் கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
கச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கவும், வலைகளை உலர்த்தவும், சுற்றுலாப் பயணிகள் சென்றுவரவும் அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் 5,6 ஆம் பிரிவுகளை இலங்கை அரசும், கப்பற்படையும் பொருள்படுத்துவதில்லை. 1977-க்குப் பிறகு இத்தீவுக்குச் செல்லத் தடை விதித்து விட்டதால், இங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவே நடப்பதில்லை. இக்கோயிலை இலங்கை அரசு இப்போது மூடிவிட்டது.
இலங்கை அரசு எந்த ஒப்பந்தத்தையும் மதித்ததில்லை; நடைமுறைப்படுத்தியதும் இல்லை. தமிழ்நாட்டில் இதுபற்றி திடீரென கோரிக்கை எழும்; அடங்கிவிடும்; மக்களும் மறந்துவிடுவார்கள். இறுதிவரை கோரிக்கைகள் நிறைவேறாமல் அப்படியே இருக்கும்.
இந்திய – இலங்கை உடன்பாட்டின் விதிகள் தெளிவாக இருக்கின்றன. “”இந்திய மீனவரும், இறைவழிபாட்டுப் பயணிகளும் இதுவரை கச்சத்தீவுக்கு வந்துபோய் அனுபவித்ததைப் போலத் தொடர்ந்து வந்துபோய் அனுபவிக்கும் உரிமையுடையவர்கள். இப்பயணிகள் இவ்வாறு வந்துபோக, இலங்கை அரசிடமிருந்து எவ்விதப் பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியையோ பெற வேண்டியதில்லை”.
“”இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் படகுகள் மற்றும் கப்பல்கள் விஷயத்திலும் பரஸ்பர கடல் உரிமை தொடரும்’.
இவ்வாறு திட்டவட்டமான விதிகள் இருந்தும் இவற்றை அப்பட்டமாக மீறும் இலங்கை அரசிடம் கெஞ்சுவதும், அவர்கள் மிஞ்சுவதும் ஏன்? அத்துமீறி நடப்பது யார்? இலங்கைக் கடற்படையா, இந்திய மீனவர்களா? முடிவு செய்வது யார்?