“உலக வெம்மை’ ஏமாற்று வேலையா?
ந.ராமசுப்ரமணியன்
மனித குலத்திற்கே மிகப் பெரிய எதிரியாகவும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிய தடைக் கல்லாகவும் “குளோபல் வார்மிங்’ எனும் உலக வெம்மைதான் விளங்கப் போகிறது என பல விஞ்ஞான ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
“கார்பன்’ வெளியீட்டினால் ஏற்படும் உலக வெம்மை அதிகரிப்பைத் தடுக்க வேண்டும் என்று உலக நாடுகள் முடிவெடுத்து, கியூட்டோ ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
கியூட்டோ நகரம் ஜப்பானில் உள்ளது. இந்நகரில்தான் கியூட்டோ ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் 150-க்கும் அதிகமான நாடுகள் கையெழுத்திட்டன.
ஆனால் உலக வெம்மைக்குப் பெரிய காரணகர்த்தாவான அமெரிக்கா “கியூட்டோ’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது. வளர்ச்சி பெற்ற ஆஸ்திரேலியாவும் கையெழுத்திடவில்லை.
தற்போது மிக முக்கியமான இயற்கையின் தீவிரவாதம் உலக வெம்மைதான். இதற்கு மனித இனத்தின் பொறுப்பற்ற செயல்களே காரணம் என விஞ்ஞான உலகம் அறிவித்துவிட்டது.
உலக வெம்மையால் ஏற்பட உள்ள அபாயங்கள்: அதிக கார்பன் வெளியீட்டால் உண்டாகும் ராட்சத சக்தி கொண்ட “எல்நினோ’வினால் பயங்கரமான சூறாவளிகள் ஏற்படும் என அமெரிக்க நாசா விஞ்ஞானிகளும், அமெரிக்க விஞ்ஞான தேசிய அகாதெமியும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
30 ஆண்டு காலத்தில் ஆண்டுக்கு 0.2 செல்சியஸ் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு துயரங்களை உலகம் சந்திக்க இருக்கிறது என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
“நிலத்தின் நண்பர்கள்’ எனும் சமூக ஆர்வலர் நிறுவனம், நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞான, பொருளாதார ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆராய்ந்து 2100-ம் ஆண்டு நிறைவடைந்ததும் உலகப் பொருளாதாரம் ஆண்டுக்கு ரூ.900 லட்சம் கோடி அளவு பொருளாதார இழப்பை எதிர்கொள்ளும் எனக் கணித்துள்ளது.
நாசாவின் காட்டர்ட் விண்வெளி ஆய்வு நிலையம், தனது 2005-ம் ஆண்டு அறிக்கையில், தொழிற் புரட்சி தொடங்கியபோது பத்து லட்சத்துக்கு 280 கார்பன் துகள்கள் விண்வெளியை மாசுபடுத்தின; தற்போது இதன் அளவு 10 லட்சத்துக்கு 380 கார்பன் துகள்களாக அதிகரித்து, மேலும் தொடர்ந்து அதிகரிக்க உள்ளது.
மேலும் மனிதனால் ஏற்படும் கார்பன் தீங்கினால் உலக வெம்மை இன்னும் 1 டிகிரி செல்சியஸ் என்று அதிகரித்தால், 10 லட்சம் ஆண்டுகளில் உலகம் காணாத அளவுக்கு, உலக வெம்மை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.
பொருளாதார ரீதியாக 2050-ம் ஆண்டு வாக்கில் உலகம் ரூ.315 லட்சம் கோடிகளை (அதாவது உலக பொருளாதார வளர்ச்சியில் 20%) இழக்கும்.
விவசாய உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டு, நோய்கள் ஏராளமாகப் பரவும், மின் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும் என ஸ்டர்ன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஹாக்கி மட்டை வரைபடம்: மைக்கேல் மேன் என்பவர், கி.பி. 900 ஆண்டு முதல் உலக வெம்மை எவ்வாறு அதிகரித்துள்ளது என்பது பற்றிப் பல்வேறு சோதனைகளை நடத்தியுள்ளார். பல்வேறு சாதனங்களைக் கொண்டும், மரவளையம் போன்றவற்றை வைத்தும், வெம்மை அதிகரிப்பைக் கணக்கிட்டுள்ளார். இதன்படி உலக வெம்மை மிகவும் அதிகரித்துள்ளது.
உலக வெம்மை எனும் மோசடி: இந்நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற அமெரிக்க நாட்டு “வால் ஸ்’டிரீட் ஜெர்னல்’ எனும் பத்திரிகை 2006 ஜூலை மாதம் 14-ம் தேதி இதழில் “ஹாக்கி மட்டை வரைபடம் வெறும் பிதற்றல்’ என்று தலையங்கம் எழுதியுள்ளது.
பல கற்பனைகளுடன், இரண்டுங்கெட்டான் வழிமுறைகளைப் பின்பற்றி, விஞ்ஞான உண்மைகளுக்குப் புறம்பான வகையில் “ஹாக்கி மட்டை வரைபடம்’ ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. உலக வெம்மை என்பது விஞ்ஞான பூர்வமான விளக்கமில்லை என்று கொல்ம்பியா பல்கலைக் கழக புவியியல் ஆய்வு நிறுவன இயக்குநர் ஜெப்ரிசாச் கடுமையாகச் சாடியுள்ளார்.
1960-களில் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிறது. இது அதிகரித்து குளிர்மிகுந்து, உலகம் குளிர்ச்சி அதிகரிப்பால் உறைந்து அழியும் என்ற ஒரு விஞ்ஞான ஆய்வுக் கட்டுரை வெளியானது.
1945-லிருந்து 30 ஆண்டுகள் அதாவது 1975 வரை உலகம் மிகவும் குளிர்ச்சியடைந்தது. இதையொட்டி 1975-ல் “நியூஸ் வீக்’ எனும் உலகப் புகழ் பெற்ற பத்திரிகை அட்டைப் படக் கட்டுரையாக “அடுத்த ஊழிப் பனிக்காலம் உலகத்தை நெருங்குகிறது’ என்ற விஞ்ஞான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது.
தற்போது உலக வெம்மை என்று பேசப்படுகிறது. அப்படியானால், உலகம் குளிர்ந்து போகும் என்ற விஞ்ஞான ஆய்வுக்கு அர்த்தமென்ன?
ஆக இத்தகைய கணிப்புகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. 1970களில் “உலகக் குளிர்ச்சி’ என்ற கணிப்பு எவ்வாறு சரியில்லையோ, அதேபோல தற்போதைய கணிப்பான “உலக வெம்மை’ என்பதும் விஞ்ஞான அடிப்படையில் அமைந்ததல்ல. இவைகளெல்லாம் சோதிடம் போன்றதே.
“கியூட்டோ’ ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடாதது சரியே. இந்தியாவும் உலக வெம்மை என்ற விஞ்ஞானத்திற்கு ஒவ்வாத வாதத்தை ஒதுக்கி விட்டு, உற்பத்தி அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி என்ற வகையில் முனைப்பைக் காட்ட வேண்டும்.
உலக வெம்மையால் 2100-ல் உலகம் பல்வேறு பயங்கர இழப்புகளை சந்திக்கும் என்பது மோசடியே என்ற வகையிலும் பல ஆய்வுக் கட்டுரைகள் தற்போது வெளியாகின்றன.
(கட்டுரையாளர், சென்னை மண்ணிவாக்கம், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவனர்).