சீனா பயப்படத் தேவையில்லை: மன்மோகன்
புதுதில்லி, ஜூன் 29: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டணியினால் தங்கள் நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என சீனா பயப்படத் தேவையில்லை என பிரதமர் மன்மோகன் தெரிவித்தார்.
தில்லியில் புதன்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது செய்தியாளர்களிடம் பிரதமர் இவ்வாறு கூறினார்.
நான்கு நாடுகள் கூட்டணி, போர் தொடர்பான கூட்டணியல்ல, இது யாருடைய நலனுக்கும் எதிரானதும் அல்ல என்று கூறிய பிரதமர், இது குறித்து அண்மையில் ஜெர்மனியில் நடந்த ஜி-8 மாநாட்டின் போது சீன அதிபரிடம் விளக்கிக் கூறியதாகவும் தெரிவித்தார்.
பேரிடர்களைக் கையாளுவது குறித்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளும் அண்மையில் உடன்பாடு செய்து கொண்டன.
கடந்த மாதம் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த 4 நாட்டுப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் தாக்கும்போது எடுக்கவேண்டிய நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயலாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஏற்கெனவே, தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் பலதரப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளதாக இந்தியா அக் கூட்டத்தில் தெரிவித்தது.
கடந்த 2005 டிசம்பரில் சுனாமி தாக்கியபோது 4 நாடுகளும் ஒருங்கிணைந்து செயலாற்றின. அந்த அனுபவத்தைக் கொண்டு முழுமையான உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே மணிலா பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டணி எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என ஏற்கெனவே அமெரிக்கா தெளிவுபடுத்தி இருக்கிறது.
இந்திய-யு.எஸ். அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும்: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசிய பிரதமர், “அது விரைவில் அமலுக்கு வரும், ஒன்றிரண்டு பிரச்னைகள் மட்டுமே இன்னும் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது’ என்றார்.
“இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் அதை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு, அதன்மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நிலையையும் நான் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கிறேன். இதுபோன்று இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை’ என்றார் பிரதமர்.
அணுசக்தி ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸô ரைஸ் கூறியதைத் தொடர்ந்தே பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார்.