கோடிக் கோடி இன்பம் பெறவே…
இரா.சோமசுந்தரம்
“”ரூ. 52 கோடியும் தொண்டர்கள் கொடுத்த பணம்”
உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி இதைச் சொன்னபோது இந்தியாவின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் நெஞ்சமும் குளிர்ந்திருக்கும். சிலர் ஆனந்த நடனமாடியிருப்பார்கள். எங்கும் நிம்மதிப் பெருமூச்சு!.
ஏனென்றால் எல்லாக் கட்சித் தலைவர்களின் சொத்துக் குவிப்பையும் மாயாவதி ஒரே வரியில் நியாயப்படுத்தி விட்டார், எல்லா கறுப்பு பணத்துக்கும் “மஞ்சள் நீர்’ தெளித்து வெள்ளைப்பணமாக மாற்றிவிட்டார்.
இந்த வாதம் எல்லா முதல்வர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தும். எல்லாமும் தொண்டர்கள் கொடுத்தது என்று எளிதாகச் சொல்லிவிடலாம். எல்லாம் அவன் (தொண்டன்) செயல்!
தற்போது கட்சிக்குத் தரும் பணம் மட்டும்தான் யார் கொடுத்தது என்ற கணக்கு வழக்கு இல்லாமல் வந்து குவியும் நிலைமை இருந்து வருகிறது. ஒரு மாநாடு நடத்தி, கட்சி நிதியாக ரூ.5 கோடியை அளித்தால் அது அந்த மாநாட்டில் தொண்டர்கள் தந்ததாக வரவு வைக்கப்படும்.
ஆனால், அமெரிக்காவில் தேர்தல் நிதி திரட்டும் ஒவ்வொரு வேட்பாளரும் கணக்கு காட்ட வேண்டும். 200 டாலர்களுக்கு அதிகமாக நன்கொடை அளித்தவர் பெயர், முகவரி, அனைத்தையும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் அந்த நடைமுறை இல்லை. ஆகவே தொல்லையில்லை.
கட்சி வளர்ச்சி நிதியைப் போலவே, இனிமேல் கட்சித் தலைமை வளர்ச்சி நிதிக்கும் கணக்கு கேட்கக் கூடாது என்பதாக மாயாவதியின் பதில் அமைந்துள்ளது.
ஒரு முதல்வர் பேசியது இப்படி என்றால், பிரதமர் பேச்சு இதற்கு ஒரு படி மேலே.
“”பிரதிபா பாட்டீல் மீது காழ்ப்புணர்ச்சியால் சேறு பூசுகிறார்கள். அவரது சர்க்கரை ஆலை வங்கிக் கடனை (பல கோடி ரூபாய்) “சூழ்நிலை காரணமாகச்’ செலுத்தவில்லை. மகாராஷ்டிரத்தில் இப்படிக் கடனைச் செலுத்தத் தவறிய 72 சர்க்கரை ஆலைகளை ஜனசத்தா நாளிதழ் பட்டியலிட்டுள்ளது” என்று பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறியிருக்கிறார் பிரதமர்.
இதை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சொல்லியிருந்தால் அது வெறும் பதில் என்பதாக மட்டுமே முடிந்துபோகும். ஆனால் நாட்டின் பிரதமர் இத்தகைய பதிலை சொல்வது முறையல்ல.
வங்கிக் கடனைத் திருப்பித் தர முடியாத தொழில் நெருக்கடி இயல்பானது ஒன்றுதான். ஒரு சாதாரண நபர் வங்கிக் கடன் வாங்கி, தொழில் தொடங்கி, நலிந்து போகும்போது பிணையாக வைக்கப்பட்ட சொத்துகள் ஏலத்தில் விடப்படுகின்றன. ஆனால், பிரதிபா பாட்டிலுக்கு இப்போது சொத்து எதுவுமே இல்லை எனச் சொல்ல முடியுமா?
“கடனைத் திருப்பிச் செலுத்தாத 72 ஆலைகளில் பிரதிபா பாட்டீலின் ஆலையும் ஒன்று’ என்று பிரதமர் மன்மோகன் சிங் சொல்வது, ஒரு தவறை வலிந்து நியாயப்படுத்துவதாக உள்ளது.
மகாத்மா காந்தி சென்ற இடமெல்லாம் பெண்களும், நாட்டுப் பற்றாளர்களும் தங்கள் உடைமைகளையும் பொன்நகைகளையும் அள்ளிக் கொடுத்தனர். அவை அவரிடம் கொடுக்கப்பட்டவை. அவர் மீது நம்பிக்கை வைத்து கொடுக்கப்பட்டவை. அதை அவர் விருப்பம்போல செலவிடலாம் என்ற உரிமையையும் சேர்த்துக் கொடுத்த பொருள்கள்தான். ஆனால் காந்தி அவற்றை தனது சொத்தாக மாற்றிக் கொள்ளவில்லை.
வினோபா பவே இந்தியா முழுவதும் நடையாய் நடந்து பெரும் பணக்காரர்களிடம் பூமிதானம் பெற்றார். அதில் ஒரு சிறு பகுதியைக்கூட அவர் பெயரில் மாற்றிக் கொள்ளவில்லை.
காமராஜர் கை காட்டினால் கொண்டு வந்து கொட்டித்தர ஆட்கள் இருந்தனர். அவரும் கை காட்டினார். ஆனால் அது தனக்காக அல்ல, கட்சிக்காகவும், கட்சித் தொண்டர்களுக்காகவும் மட்டுமே. சத்தியமூர்த்தி பவனும், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானமும் அதற்கு சாட்சி.
அண்ணா துரை முதல்வர் ஆன பின்னரும் எளிய மனிதர்தான். பெரும் சொத்துகளுக்குச் சொந்தக்காரர் அல்லர். அவரது வளர்ப்பு மகன் டாக்டர் என்ற போதிலும் சென்னையில் பெரிய மருத்துவமனையைக் கட்டி, மருத்துவக் கல்லூரியாக மாற்றிக்கொள்ள எந்த ஏற்பாடும் அவர் செய்யவில்லை.
இப்படியான தலைவர்களின் வரிசையில், மாயாவதி தனது சொத்து ரூ.52 கோடிக்கு கணக்கு சொல்லியிருக்கும் விதமும், பிரதீபா பாட்டிலின் சர்க்கரை ஆலைக்குப் பிரதமரின் நியாயப்படுத்தலும் இந்திய அரசியலமைப்பை கேலி செய்வதாக இருக்கிறது. நமது தமிழக அரசியல் கட்சித் தலைவர்களைப் பற்றியும் அவர்களது வாரிசுகளையும், நண்பர் வட்டங்களையும் பற்றி புத்தகமே போடலாம்.
அரசு ஊழியர் ஒருவரோ, பொதுமக்களில் ஒருவரோ தனது வருமானத்துக்கு மீறிய சொத்து குறித்த கேள்விக்கு மாயாவதியின் பதிலைச் சொல்ல முடியுமா? “என் நண்பர்கள் கொடுத்தது’ என்றும், “எனக்குக் கிடைத்த அன்பளிப்புகள்’ என்றும் அவர் சொன்னால் அரசு ஏற்குமா?
ஆனால் அரசியல் கட்சித் தலைவர்களால் சொல்ல முடியும்.
ஏனெனில், இந்தியக் குடிமகன் சட்டத்துக்கு கட்டுப்பட்டவன். ஆனால், இந்திய அரசியல்வாதிக்கு சட்டம் கட்டுப்பட்டது.
எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வல் எழுதிய அரசியல் அங்கதச் சுவை நாவல் “அனிமல் ஃபார்ம்’. இதில் இடம்பெறும் சொற்றொடர் என்றைக்கும் பொருத்தமானது: “”எல்லாரும் சமம். சிலர் மற்றவர்களைவிட கூடுதல் சமம்”. (All are equal. But some are more equal than others).