ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கால்கள் வலுப்பெற…
என் வயது 80. நாற்பது ஆண்டுகளாக மலக்கட்டு உள்ளவன். மூன்று ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. ஆங்கில மருத்துவமனையில் 15 நாள் இருந்தேன். குணமான பின் இடுப்புக்குக் கீழ் இரு கால்களும் வலுவிழந்துவிட்டது. கோலூன்றி நடக்கின்றேன். கால்கள் பலம்பெற வழிகள் என்ன?
தலைக்கும் காலுக்கும் நரம்பு மூலம் நேர்முகமான ஓர் இணைப்பு இருப்பதை மேல்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இதைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேதம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அடிப்படையின் மேல் ஆரோக்கிய பாதுகாப்பு முறைகளை உபதேசித்துள்ளது.
கால்களை அடிக்கடி பரிசுத்தமாய் அலம்பிக் கொள்ளுதல், கால்களுக்கு எண்ணெய் தேய்த்தல், பூட்ஸ் -செருப்பு போன்ற காலணிகளை அணிந்து கொண்டு நடத்தல் போன்ற பாதுகாப்பான நடவடிக்கைகளால் பாதங்கள் பாதுகாக்கப்படுகின்றன. பாதங்களின் பராமரிப்பால் உடலின் மற்ற அங்கங்களுக்கும் பலவிதமான நன்மை ஏற்படுகின்றன. அதிலும் கண்களுக்கு விசேஷமான பலத்தையும் தெளிவையும் அளிக்கின்றன. பாதங்களை இவ்விதம் கவனிக்காமல், எண்ணெய்த் தேய்க்காமல், செருப்பில்லாமல் நடப்பதினால், உடலின் மற்ற அங்கங்களில் கெடுதல் அதிகம் விளையும். சுத்தமான தண்ணீரால் கால்களை அடிக்கடி அலம்புவதால் தலையில் இருக்கும் மூளையின் மேதா சக்தியை வளர்க்கிறது. “”தாரணாவதீ தீ: மேதா”- ஒரு தரம் படித்ததைக் கேட்டதை ஸ்திரமாய் நினைவில் வைத்திருக்கும் புத்தி சக்தி -மேதை.
கால் பெருவிரலின் உள் பக்கவாட்டிலிருந்து மூளைக்கும், கண்கள் முதலிய தலைக்குள்ளிருக்கும் இந்திரியங்களுக்கும் நேர் இணைப்பு கொண்ட நாடி இருப்பை மிகப்பழைய ஆயுர்வேதம் கூறுவதால், நீங்கள் கால்கள் வலுப்பெற, மூளை நரம்புகளை வலுப்பெறச் செய்யவேண்டும். ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய க்ஷீரபலா அல்லது சுத்தபலா தைலத்தைத் தலையில் தடவி, சுமார் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து, இடுப்பு கால் பகுதியில் பலா அஸ்வகந்தாதி குழம்பு அல்லது மஹாமாஷ தைலத்தை இளஞ்சூடாக மேலிருந்து கீழாகத் தேய்த்து ஊறவிடவும். மூளைக்கும் கால் நரம்புகளுக்கும் நல்ல பலத்தை இந்த மூலிகைத் தைலங்கள் ஏற்படுத்தித் தரும்.
உடல் நேராக நிமிர்ந்து தள்ளாடாமல் துவண்டு விடாமலிருக்க தலையின் மூளைப் பகுதியைச் சார்ந்த செரிபெல்லம் எனும் பகுதியும், முதுகுத் தண்டு வடமும் முக்கியமானவை. முதுகுத் தண்டுவடத்தின் உள்வட்டப் பாதை சுருங்கினால் ஸ்பைனல் கார்டில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவும் கால்கள் வலுவின்றி நடக்கும்போது தள்ளாட்டத்தைத் தரும். வாயு தோஷத்தின் குணங்களாகிய வறட்சி, லேசானதன்மை, குளிர்ச்சி, மொரமொரப்பு, நுண்ணியது, அசையும் தன்மை ஆகியவற்றால் வயோதிகத்தில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்படுவதால் கூன் விழுதல், எலும்பு பலஹீனம், உடல் தள்ளாட்டம் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. பஞ்சமஹா பூதங்களில் வாயுவும் ஆகாசமும் அதிக அளவில் வாயு தோஷத்தில் உள்ளன. அதைச் சரியான அளவில் நிலைநிறுத்த மற்ற மூன்று மஹா பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு ஆகியவற்றை அதிகம் கொண்ட இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளை உணவில் சமச் சீரான அளவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளவேண்டும். மேலும் மருந்துகளிலும் இந்த மூன்று மஹாபூதங்களை அதிக அளவில் சேர்த்துள்ள விதார்யாதி கஷாயம், அப்ரக பஸ்மம், தசமூல ரஸôயனம் போன்றவற்றைத் தகுந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு நீங்கள் கால்கள் வலுப்படும்படி செய்து கொள்ளலாம்.