தமிழ்நாட்டின் உள்ளாட்சித்தேர்தல்கள் அக்டோபர் 13 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறும்
![]() |
![]() |
தமிழகத்தில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தபடும் |
தமிழ்நாட்டின் உள்ளாட்சித்தேர்தல்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 13 மற்றும் 15 ஆம் தேதிகளில் இரண்டுகட்டங்களாக நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமையன்று அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் புதன்கிழமை துவங்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உள்ளாட்சி மன்றங்களின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைவதால் அதற்குள் இந்த தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கும் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் ஆளும் தி.மு.க.வின் வேட்பாளராக கவுஸ் பாட்சா நிறுத்தப்படுவதாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி இன்று அறிவித்துள்ளார். கவுஸ் பாட்சா தற்போது மதுரை மாநகராட்சி துணை மேயராக இருக்கிறார்.
இது இவ்வாறிருக்க, நேபாள நாட்டின் மாவோயிச இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான சந்தர பிரகாஷ் கஜுரெல்லை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மேற்கு வங்க மாநில காவல்துறையினர் கைது செய்து தங்கள் மாநிலத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கஜுரெல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை சென்னை மத்திய சிறையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சென்னை பெருநகர மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.