சமூகம்: விதி வரைந்த பாதை!
வானுயர்ந்த கட்டிடங்கள். பளபளக்கும் தார்ச்சாலை. நுனி நாக்கில் ஆங்கிலம் என்று பார்த்துப் பழகின நமக்குச் சென்னையின் மறுபக்கத்தை அறிமுகப்படுத்துகிறது, “மாநகர் ஜித்தன் மரண கானா விஜி‘ என்ற ஆவணப்படம். வி. இராமு படமாக்கியிருக்கிறார். சாலையோரங்களில், குப்பங்களில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களின் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் பல விதங்களில் உள்ளன. இந்த மக்களின் மகிழ்ச்சியை, சோகத்தைப் பாடல்களாக அந்த மக்களே பாடுகின்றனர். இந்த விளிம்புநிலை மக்களின் தவிர்க்க முடியாத இசை, கானா பாடல்கள். நம் கிராமங்களின் இழவு வீட்டில் ஒப்பாரி பாடுவது போல் சென்னை மாநகரங்களில் மரண கானா பாடப்படுகிறது.
இந்த ஆவணப் படத்தின் நாயகன் விஜி சுமார் மூவாயிரம் சாவுகளுக்குப் பாடல் பாடி உள்ளார். “”அப்பா, அம்மா யாருன்னே தெரியாது. பேப்பர் பொறுக்கும் சிறுவர்களே என் சிறுவயது நண்பர்கள். எந்த வேலையும் தெரியாது. பீச்சுக்கு வர்றவங்ககிட்டே திருடறது. விபச்சாரத் தொழிலுக்குத் தூது வேலை பார்க்கறதுனு பொழப்பு ஓடுச்சு. அப்பவே ஏங்கூட இருந்தவங்க நானூறு, ஐநூறு சம்பாரிப்பாங்க. ஆனா எல்லா ரூபாயையும் போதைக்குதான் செலவு பண்ணுவாங்க. இப்படி போய்கிட்டிருந்த என் வாழ்க்கையில கானா நுழைஞ்சது” என்று தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார் விஜி.
“”தண்டையார் பேட்டை பக்கம் ஒரு அம்மா தீபாவளி, கார்த்திகை நேரத்தில எங்களை மாதிரி ஆளுகளுக்குச் சாப்பாடு போடுவாங்க. செவப்புனா செவப்பு அப்படி ஒரு செவப்பு. அந்தம்மாவுக்கு முதுகில அழகா ஒரு மச்சம் இருக்கும். ஒரு தடவ நான் அதைத் தொட்டேன். “அப்படிலாம் தொடக்கூடாது ராசா. நீ எனக்கு புள்ள மாதிரி’னு சொன்னாங்க. மனசு உருகிப் போச்சு. அப்புறம் அந்தம்மாவப் பார்க்கல. கொஞ்ச நாள்ல அந்தம்மா, உடம்பு சீரியஸôகி ஹாஸ்பிடல்ல சேர்ந்திருக்கிறதா சொன்னாங்க. ஓடிப் போய் பார்த்தேன். நான் போனபோது அவங்க இறந்து போயிட்டாங்க. அந்தம்மாவுக்கு யாருமில்ல. ஒரே ஒரு பொண்ணு மட்டும் பக்கத்தில அழுதுகிட்டிருந்தது. அந்தம்மாவோட மக’னு சொன்னாங்க. ஏதோ சேட்டோட தயவுல இருந்தாங்கனு தெரிஞ்சது. பொண்ணு கையில அம்பது, அறுபது ரூபாதான் இருந்துச்சு. பேப்பர் பொறுக்கிறவங்க போட்டு வைச்சிருந்த பழைய டயர், பிளாஸ்டிக் வாளி எல்லாம் கிடந்துச்சு. அதை விலைக்குப் போட்டதுல 300 ரூபா கிடச்சுது. நானும் அந்தப் பொண்ணும் கண்ணம்மா சுடுகாட்டுல அந்தம்மாவுக்கு ஈமச் சடங்கு பண்ணினோம். மரண கானா ஆரம்பிச்சது அங்கதான்.
அந்தப் பொண்ணுக்குத் தெரிஞ்சவங்க யாரும் இல்லாததால ஹாஸ்டல்ல விடலாம்னு பார்த்தா வேண்டாம்னு சொல்லிடுச்சு. எனக்குத் தெரிஞ்சவங்க வீட்ல விட்டுட்டு ஜெயிலுக்குப் போயிட்டேன். கஞ்சா வித்த கேசுல அரெஸ்ட் பண்ணுவாங்க. நாங்க வித்ததில்ல. யாரோ விப்பாங்க. நாங்க ஜெயிலுக்குப் போவோம். சும்மா கணக்குக்காக அரெஸ்ட் பண்ணுவாங்க. அப்படி போனதுல பதினைஞ்சாயிரம் கிடைச்சது. ஜெயில்ல மாமுல் போக பனிரெண்டாயிரம் கிடைச்சது. அத வெச்சுகிட்டு நானும் அந்தப் பொண்ணும் வாழறோம். ரெண்டு குழந்தைங்க இருக்கு” என்கிறார் விஜி.
இந்த ஆவணப் படம் சென்னையின் பூர்வகுடி மக்களை, அவர்களுடைய வாழ்க்கையை- பண்பாட்டை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த மனிதர்கள் வாழ்க்கை குப்பைகளிலும், சேரிகளிலும், சாலை ஓரங்களிலும் சுடுகாட்டிலும் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மாதிரி இடங்களில் படப்பிடிப்பை நிகழ்த்தாமல் ஓவியக் கல்லூரியில் படத்தை எடுத்திருப்பது நெருடுகிறது.
“பம்பரக் கண்ணாலே’ என்ற சந்திரபாபு பாட்டு கானா வகையைச் சேர்ந்தது. இந்த மாதிரி கலைஞர்களுக்குச் சமூகத்தில் அங்கீகாரம் வேண்டும் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்வது இன்னமும் எட்டா கனியாகவே இருக்கிறது. இந்த விளிம்புநிலை கலைஞர்களை ஆவணப்படுத்திய வி. இராமு இந்தச் சமூகம் அங்கீகரிக்க வேண்டிய அவசியத்தை உணர வைக்கிறார்.
விதிக்கும் விஜிக்கும் ஓரெழுத்து வித்தியாசம்தான். எங்கோ பிறந்து எப்படியோ வளர்ந்து மரணங்களை நம்பி வாழும் இந்த மனிதர்களின் வாழ்க்கையும் மனித சமுத்திரத்தின் ஒரு துளிதானே?
முத்தையா வெள்ளையன்