Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Browser’ Category

Raman Raja – Triple Play, VOIP, Apple iPhone, Wi-fi: State of the art Technologies

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

நெட்டில் சுட்டதடா…: மூவாட்டம் என்று ஒரு போராட்டம்!

ராமன் ராஜா

இந்த வாரம் கொஞ்சம் டெக்னாலஜி பேசுவோமா? டெலிகாம் எனப்படுகிற தொலைத் தொடர்புத் துறையில் லேட்டஸ்ட் முன்னேற்றம் என்ன என்று அடிக்கடி என்னிடம் உசாவுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் செல்போன்களின் எண்ணிக்கை மழைக்காலக் கொசுக் கூட்டம் மாதிரி பெருகியிருப்பதுதான் ஆச்சர்யமான செய்தி. நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் பேர் புது செல்போன் வாங்குகிறார்கள். உலகத்திலேயே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் செல்போன் மார்க்கெட் அமெரிக்காவோ, ஜப்பானோ அல்ல; இந்தியாதான்!

சமீபத்தில் மயிலாப்பூர் கோவில் போயிருந்தபோது, குளத்தங்கரையில் பட்டைச் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாமியாரின் காவித் துணி மூட்டைக்குள்ளிருந்து சுப்ரபாதம் ரிங் டோன் ஒலித்தது. சாமியார் இடது கையால் மூட்டைக்குள் துழாவி, அருமையான பன்னிரண்டாயிரம் ரூபாய் எரிக்ஸன் போன் ஒன்றை எடுத்துப் பேச ஆரம்பித்தார்; என் பழைய கறுப்பு வெள்ளை நோக்கியா வெட்கித் தலை குனிந்தது.

தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த பரிணாமம் என்னவென்றால் ஆங்கிலத்தில் Convergence என்ற வார்த்தையால் குறிப்பிடப்படுவது. தமிழில் குவிப்பு, குவிமம், குவியாட்டம் என்று ஏதாவது வைத்துக் கொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால், இந்நாள் வரை டெலிபோன், டி.வி. கம்ப்யூட்டர் எல்லாம் தனித் தனியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன; இனிமேல் இவை எல்லாமே ஒரே டப்பா வழியாக வரப் போகின்றன. நாம் ஒரே பில்லில் பணம் அழப் போகிறோம். அதுதான் குவிமம். இப்போதே இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குவிய ஆரம்பித்து விட்டதை டெக்னாலஜி ஆர்வலர்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக எட்டணா செல்போன்களில் கூட எஃப்.எம். ரேடியோவும் இருக்கிறது, எம்.பி-3 பாட்டும் கேட்க முடிகிறது. ஒரு அவசரம் என்றால் போட்டோவும் பிடிக்கலாம். அதை உடனே மல்ட்டி மீடியா எஸ்.எம்.எஸ். வழியே யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.

ஆப்பிள் நிறுவனம் ஐ-போன் என்று அகலமான செல்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஒரே நாளில் பயங்கர ஹிட்! ஐ-போனில் பாட்டு, வீடியோ, காமிரா, இண்டர்நெட் எல்லாம் உண்டு; கொசுறாக செல்போனும் பேசிக் கொள்ளலாம். ஆஸ்துமா மீன் வைத்தியத்துக்கு ஹைதராபாத்தில் கூட்டம் கூடுகிற மாதிரி எல்லாரும் கியூ வரிசையில் நின்று வாங்கினார்கள். சட்டைப் பைக்குள் நெட் இணைப்பு இருந்தால் என்னென்ன சாத்தியங்கள் திறக்கின்றன என்று பாருங்கள். செல்போனிலேயே சென்னை தியேட்டர்களின் வலை மனைகளை அலசி, ஸ்ரேயா நடித்த படம் எங்கே ஓடுகிறது என்று தேடலாம். அதிலேயே படத்தின் வீடியோ ட்ரெய்லரை வரவழைத்துப் பார்த்து, கொடுக்கிற காசு செரிக்குமா என்று முடிவு செய்யலாம். ஆம் எனில் ஒரு பட்டனை அழுத்தி டிக்கெட்டை முன் பதிவு செய்துவிட்டு, கடன் அட்டை மூலம் பணமும் செலுத்தலாம். கடைசியில் நண்பர்கள் கேங்கிற்கு “”எல்லாரும் சாயங்காலம் பால் காவடி எடுத்துக்கிட்டு தியேட்டருக்கு வந்துடுங்கப்பா” என்று எஸ்.எம்.எஸ். அனுப்புவதும் சுலபம்.

வரும் வருடங்களில் நாம் அதிகம் கேள்விப்படப் போவது, ஐ.பி. ( IP) என்ற ஒரு வி.ஐ.பி. பற்றித்தான். இண்டர்நெட் வழியே கம்ப்யூட்டர்கள் பேசிக் கொள்வதற்காக ஏற்பட்ட சில சுலபமான விதி முறைகளுக்குத்தான் ஐ.பி. என்று பெயர். நெட்டில் இணைக்கப்படும் எந்த ஒரு பொருளுக்கும்- அது கம்ப்யூட்டரோ, காப்பிக் கொட்டை அரைக்கும் மிஷினோ- ஒரு தனிப்பட்ட ஐ.பி. முகவரி தேவை. நம் டெலிபோனுக்கும் ஒரு ஐ.பி. எண் கொடுத்து அதை நெட்டில் இணைத்துவிட்டால் என்ன என்ற கில்லாடி சிந்தனை, பொல்லாத சிலருக்குத் தோன்றிவிட்டது. இந்தத் தொழில்நுட்பத்துக்கு “வாய்ப்’ ( VOIP) என்று பெயர். ஆரம்பித்த புதிதில் அசட்டுப் பிசட்டு என்றுதான் இருந்தது. நிமிஷத்துக்கு நிமிஷம் லைன் கட் ஆகிவிடும். அல்லது எதிர்முனையில் பேசுபவரின் குரல்வளைப் பிசையப்படுகிறதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு வெட்டி வெட்டி இழுக்கும். இப்போது மிகவும் உடல் நலம் தேறி, சாதாரண போன் போலவே ஒலிக்கிறது. “வாய்ப்’ அளித்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஸ்கைப் போன்ற கம்பெனிகள் பிரம்மாண்டமாக வளர்ந்து விட்டன. இதில் செüகரியம், நீங்கள் எந்தக் குக்கிராமத்தில் இருந்தாலும் உலகின் எந்த ஊர் டெலிபோன் நம்பரையும் வைத்துக் கொள்ள முடியும். உதாரணமாக சென்னையில், என் அலுவலக மேஜை மேல் இருக்கும் டெலிபோனுக்கு அமெரிக்க நம்பர்தான். அதில் அமெரிக்காவில் யாரைக் கூப்பிட்டாலும் லோக்கல் கால்! பேசுவதற்கு ஆகும் செலவோ, தூசு!

வாய்ப் தொழில்நுட்பம், திரேதா யுகத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த மாதிரி ஒரு யுத்தத்தையே ஆரம்பித்து வைத்து விட்டது: உலகத்தில் பாரம்ரியமாக டெலிபோன் கம்பெனிகள்தான் இண்டர்நெட் இணைப்பும் கொடுப்பது வழக்கம். கேபிள் டி.வி. நிறுவனங்கள் மெகா சீரியல்களை மட்டுமே வழங்கி வந்தன. பிறகு அவர்கள் “”நாங்களே உங்கள் வீட்டுக்கு இண்டர்நெட்டும் கொடுக்கிறோமே” என்று மெல்ல ஒட்டகம் போல் மார்க்கெட்டில் தலை நீட்டினார்கள். கேபிள் மோடம் என்ற சிறு கருவியை வாங்கி வைத்துக் கொண்டு நெட்டை மேய்கிற வசதி இது. (நம் ஊரிலும் வந்துவிட்டது). இதற்குப் பிறகு டெலிபோன்காரர்களுக்கு அவர்கள் அடித்ததுதான் பயங்கர டபுள் ஆப்பு!

திடீரென்று ஒரு காலைப் பொழுதில், “”இனி நாங்களே எங்கள் வாடிக்கையாளர்களுக்கு “வாய்ப்’ மூலம் டெலிபோன் பேசும் வசதியும் கொடுத்து விடுகிறோம். எனவே நீங்களெல்லாம் கடையை மூடிக்கொண்டு நடையைக் கட்டலாம்” என்று அறிவித்துவிட்டார்கள். ஆடிப்போய்விட்டார்கள் டெலிபோன்காரர்கள். Triple play  (மூவாட்டம்) எனப்படுவது இதுதான்: போன், நெட், வீடியோ மூன்றையுமே ஒரே கேபிள் வழியே அனுப்புவது.

எதிரி தட்டியில் நுழைந்தால் கோலத்தில் நுழைகிற டெலிபோன்காரர்கள், கேபிள் டிவியை வேரறுக்க அவசரமாக என்ன செய்யலாம்? என்று யோசித்தார்கள். கடப்பாறையை எடுத்துக் கொண்டு தெருவெல்லாம் பள்ளம் தோண்டி வீட்டுக்கு வீடு ஒயர் இழுத்தார்கள். ஃபைபர் எனப்படும் கண்ணாடி இழைகளை வீட்டு வரவேற்பறை வரை நீட்டிவிட்டார்கள். இதில் கேபிளை விட நல்ல தரத்தில் வீடியோ கொடுக்க முடியும். “”நீ என் வியாபாரத்தில் கை வைக்கிறாயா, நான் உன் பிளக்கையே பிடுங்கி விடுகிறேன்” என்று தாங்களும் போட்டிக்கு மூவாட்டம் ஆட ஆரம்பித்தார்கள். வார்னர், டிஸ்னி போன்ற சினிமா கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நூற்றுக்கணக்கான சானல்களை வெள்ளக் காடாக வீட்டுக்குள் பாய்ச்சினார்கள்; குழந்தைகள் படிப்பு மேலும் குட்டிச் சுவராகியது. இதுதான் குவிமம் பிறந்த கதை.

இப்போது ஒயர்மெஸ் தொழில் நுட்பத்தையும் இதில் கலந்து நாலாட்டம் என்று ஆரம்பித்துவிட்டார்கள். டிவி அல்லது கம்ப்யூட்டர் முன்னால் ஆணி அடித்த மாதிரி உட்கார்ந்திருக்கத் தேவையில்லாமல் அவற்றைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டில் எங்கே வேண்டுமானாலும் சுற்றலாம். இதற்குத் தேவையானது “வை-ஃபை’ ( wi-fi்) எனப்படும் வாண வேடிக்கை. கொத்தவரங்காய் மாதிரி ஒரு சின்னஞ் சிறிய ஆண்டென்னாவை வைத்துக் கொண்டு கம்பிகள் இல்லாமலே கம்ப்யூட்டர், டிவி, ஆட்டுக்கல் எதை வேண்டுமானாலும் இணைக்க முடியும்.

சமீபத்தில் சுந்தர் வீட்டுக்குப் போயிருந்தேன். அவன் மனைவி “”உக்காருங்க. இவர் யாருக்கோ ஈ-மெயில் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்” என்றாள். ஆனால் வீட்டில் சுந்தர் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்கே அவன் என்று கேட்டேன். மனைவி பதில் சொல்லாமல் தலையில் அடித்துக் கொண்டு “”கல்லுக் குடல். ஒருமணி நேரமாக உட்கார்ந்திருக்கிறார்” என்று புரியாமல் ஏதோ சொன்னாள். கடைசியில் சுந்தர் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான். அவன் கையில் ப்ளாக் பெர்ரி எனப்படும் சின்னஞ் சிறிய கம்ப்யூட்டர்! வை-ஃபை தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு ஒய்ஃபை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறான்.

இனிமேல் சுந்தரிடமிருந்து எந்த மின்னஞ்சல் வந்தாலும் பினாயில் ஊற்றி அலம்பி விட்டுத்தான் படிக்க வேண்டும்.

Posted in Apple, broadband, Browser, Browsing, cable, Calls, computers, Dish, DSL, Entertainment, fiber, fibre, Information, InfoTech, International, Internet, iPhone, IT, Kathir, LD, Mobile, Net, Optical, Optics, phone, Raman Raja, Ramanraja, Technologies, Technology, Telecom, Television, Triple Play, TV, Voip, Web, Wi-fi, Wifi | Leave a Comment »