மக்கள் அறியச் செய்யுங்கள்
இரு தினங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தில் பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு மானிய நிதி (பி.ஆர்.ஜி.எப்) திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள “தேசிய தொழில் முன்னேற்ற’த் திட்டத்தை மேம்படுத்தி, மேலும் 95 புதிய மாவட்டங்களையும் கூடுதல் நிதியையும் கொண்டுள்ளது இத்திட்டம்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ.20 கோடி வீதம் 250 மாவட்டங்களுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது இத்திட்டத்துக்கு ரூ.3750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆண்டுதோறும் ரூ.15 கோடி வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தில் அதிகம் பயனடையப் போகும் மாநிலம் பிகார். ஏனெனில்
- பிகாரின் 36 மாவட்டங்கள் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அடுத்து
- உத்தரப் பிரதேசத்தில் 34 மாவட்டங்கள்.
- மத்தியப் பிரதேசம்-24,
- ஜார்க்கண்ட்-21,
- ஒரிசா-19,
- ஆந்திரம்-13 மாவட்டங்கள்.
- தமிழகத்தில் 6 மாவட்டங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன:
- கடலூர்,
- திண்டுக்கல்,
- நாகப்பட்டினம்,
- சிவகங்கை,
- திருவண்ணாமலை,
- விழுப்புரம்.
தேர்வு செய்யப்பட்டுள்ள பின்தங்கிய மாவட்டங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், மேம்படுத்துதல், பஞ்சாயத்து மற்றும் கிராம அளவில் தொழிற்பயிற்சிகள் கொடுத்து அம்மக்களைத் திறனுடைய தொழிலாளர்களாக மாற்றுதல், வேளாண் தொழில்நுட்பம் மற்றும் விரிவாக்கம் என பல திட்டங்களுக்கு 100 சதவீத மானியநிதியைப் பெறலாம். இதற்காக செய்யவேண்டியதெல்லாம், கிராம சபை மற்றும் பஞ்சாயத்து அளவில் கொடுக்கப்படும் திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மதிப்பீடு தயாரித்து மத்திய அரசுக்குக் கொடுத்து நிதியைப் பெற்றுச் செயல்படுத்துதல் மட்டுமே.
ஆனால் நடைமுறை தலைகீழாக இருக்கிறது. திட்டம் குறித்த முழுவிவரமும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட அலுவலர், எம்எல்ஏ, எம்பி ஆகியோருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
களஆய்வு என்ற பெயரில் தன்னார்வ நிறுவனங்களை நியமித்து, அவை தரும் அறிக்கைகளின் அடிப்படையில் பின்தங்கிய மாவட்டத்தின் தேவைகளை அதிகாரிகளே முடிவு செய்கிறபோது, திட்டத்தின் நோக்கம் பாழ்படுகிறது. வெறும் கணக்குக் காட்ட செய்யப்படும் செயல்பாடாக அமைந்துவிடுகிறது. மாவட்ட மக்களுக்கு முழுப் பயன் கிடைப்பதில்லை.
ஆண்டுக்கு ரூ.15 கோடி மானியம் என்பது அந்த மாவட்டத்துக்கு கிடைத்துள்ள பெரும் வாய்ப்பு. இதை மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமமும் அறிந்திருக்கவும், தங்களுக்கான திட்டத்தை கிராம சபை மூலம் மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவிக்கவும் இப்போதாகிலும் வழிகாண வேண்டும். அத்துடன், தங்கள் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் எந்தெந்தப் பகுதிக்கு, எந்தத் திட்டம், எவ்வளவு செலவில் செயல்படுத்தப்பட்டது என்ற தகவலைக் கேட்கும் உரிமை உள்ளதையும் அறிந்திருக்க வேண்டும்.
பயனாளிகளின் அறியாமை எப்படி அப்பகுதி மக்களுக்குப் பாதகமாக அமைகிறது என்பதற்கு அனைவருக்கும் கல்வித் திட்டம் (சர்வ சிக்ஷ அபியான்) ஓர் எடுத்துக்காட்டு. இது மத்திய அரசின் 75 சதவீத மானியத் திட்டம். பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கழிப்பறைகள் கட்டுதல், கல்வி உபகரணங்கள் வாங்குதல், பண்பாட்டு நிகழ்ச்சிகள், பள்ளி சார்ந்த செயல்பாடுகளுக்காக மாவட்டத்துக்கு ரூ.50 லட்சம் அனுமதிக்கப்படுகிறது. இதில், உள்ளாட்சி கணக்குத் தணிக்கைத் துறை கண்டுபிடித்துள்ள முறைகேடுகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தாலும்கூட அப்பகுதி மக்கள் நிச்சயம் அரசுக்கு நன்றி கூறுவார்கள்.