Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Brain’ Category

National Geographic channel – Reconstructing genius: Soon, a peep into beautiful minds

Posted by Snapjudge மேல் நவம்பர் 19, 2007

“நேஷனல் ஜியாகிரஃபி சேனலில்’ அறிவுஜீவி இளம் இந்தியர்கள் நிகழ்ச்சி

மும்பை, நவ. 18: அறிவுஜீவிகளாகத் திகழும் நான்கு இளம் இந்தியர்களின் திறமையை விவரிக்கும் சிறப்பு நிகழ்ச்சி “நேஷனல் ஜியாகிரஃபி சேனலில்’ ஒளிபரப்பாக உள்ளது.

மனித மனத்தின் தன்மை மற்றும் எதன்மூலம் மனிதர்கள் அறிவாளிகளாகத் திகழ்கிறார்கள் என்பதை விவரிக்கும் “என்னுடைய அபார மூளை’ என்ற தொடராக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

10 தொடர்கள் கொண்ட இந்நிகழ்ச்சி டிசம்பர் 10 முதல் டிசம்பர் 21 வரை ஒளிபரப்பாகவிருக்கிறது, தேசியவிருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நடிகை கொங்கணா சென் சர்மா இந்நிகழ்ச்சியை தொகுத்தளிப்பார்.

நம்மில் பலர் அறிவுஜீவிகளாக உள்ளனர். அத்தகைய திறமை உடையவர்களைப் பற்றிய தகவலை அனைவருக்கும் அறியவைப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்று “நேஷனல் ஜியாகிரஃபி சேனல்’ நிர்வாக இயக்குநர் நிகில் மிர்சந்தானி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்த இதர விவரம்:

இளம்வயதிலேயே அபார திறமையுடன் விளங்கும் ஹைதராபாதை சேர்ந்த சித்தார்த் நாகராஜன் மற்றும் நிசால் நாராயணம், பெங்களூரை சேர்ந்த ததாகத் அவதார் துளசி, மும்பையை சேர்ந்த ராகவ் சச்சார் ஆகிய நான்கு இளைஞர்களைப் பற்றிய சிறப்பு அம்சங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளன.

இவர்களில் சித்தார்த் நாகராஜனின் தற்போதைய வயது 10. குழந்தைப் பருவத்திலேயே, அதாவது தனது மூன்று வயதிலேயே டிரம் இசைநிகழ்ச்சியை தனியாக நடத்திய சிறப்பு அம்சம் பெற்றவர் இவர்.

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து 12 வயதாகும் நிசால் நாராயணம் கணிதத்தில் அபார திறமை பெற்றவர். கணித கோட்பாடுகள் பற்றிய இவரது ஆறு புத்தகங்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன.

சிறுவயதிலேயே தனது தந்தையின் நிதிநிலை அறிக்கையில் தவறுகள் இருந்ததைக் கண்டறிந்த மேதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிக இளம் வயதில் கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளராக இடம்பெற்ற இந்தியர் என்பது அவரது மற்றொரு சிறப்பு.

அடுத்த அறிவுஜீவி ததாகத் அவதார் துளசி, தனது 9 வயதிலேயே பள்ளிப்படிப்பை முடித்தவர். பட்டப்படிப்பு பட்டத்தை மறு ஆண்டிலேயே பெற்றார். 12-வது வயதில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிஎச்டி பட்டம் பெற்றவர்களில் மிகவும் இளையவர் என்ற பெருமை பெற்றார். தற்போது இவரது வயது 20.

ராகவ் சச்சார் தனது 4 வயதிலேயே இசைக்கருவிகளை லாவகமாக வாசித்து புகழ்பெறத் தொடங்கினார். ஆண்டுதோறும் ஒரு இசைக்கருவி என்ற அடிப்படையில் இதுவரை 24 இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய இசை நிகழ்ச்சிகளில் குறைந்தபட்சம் 10 இசைக் கருவிகளை வாசிப்பார். இதில் புல்லாங்குழல், ஹார்மோனியம், மூன்று வகையான சாக்சபோன்கள் உள்ளிட்டவையும் அடங்கும். இவரது தற்போதைய வயது 26.

“நேஷனல் ஜியாகிரஃபி சேனலில்’ ஒளிபரப்பாகவிருக்கும் “என்னுடைய அபார மூளை’ நிகழ்ச்சியில் 7 வயது பியானோ இசை மேதை மார்க் யூவை பற்றிய சிறப்பு அம்சங்களும் இடம்பெற உள்ளன.

Posted in Brain, channel, Child, Children, Education, genius, Geography, Guiness, Intelligence, Kids, Maths, Media, minds, music, Musicians, Neurology, Performer, Prodigy, Records, Schools, Students, Study, TV | Leave a Comment »

Art therapy as a mental health profession – Treatment of Psychological Disorders

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

இது புதுசு: அமெரிக்காவிலிருந்து வந்த ஆர்ட் தெரபிஸ்ட்கள்!

ந.ஜீவா

சில குழந்தைகள் எப்போது பார்த்தாலும் துருதுருவென்று இருப்பார்கள். அவர்களை ஓர் இடத்தில் பிடித்து வைப்பது என்பது பெரும்பாடு. இங்கிருந்து அங்கே குதிப்பார்கள். அங்கிருந்து இங்கே குதிப்பார்கள். சில குழந்தைகளோ அதற்கு நேர்மாறாக எப்போதும் அமைதியாக இருப்பார்கள். “துருதுரு’ குழந்தையோ, அமைதிக் குழந்தையோ அவர்களின் மனதைப் படிப்பது எப்படி? அவர்களுடைய மனப்பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி? இதற்கு விடை சொல்லும் வகையில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரபலமாக உள்ள ஆர்ட் தெரபியை இந்தியாவில் அறிமுகப்படுத்த வந்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித் ஆரோன் ரூபினும், போடா நாரோவும். இருவரையும் இங்கே அழைத்து வந்தவர் அமெரிக்காவில் வாழும் சங்கீதா பிரசாத். இவரும் கூட ஒரு ஆர்ட் தெரபிஸ்ட்தான். சென்னையிலும், பிற நகரங்களிலும் ஆர்ட் தெரபியைப் பற்றிய அறிமுக நிகழ்ச்சியையும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆர்ட் தெரபி ட்ரெயினிங் புரோக்ராமையும் நடத்த வந்திருக்கும் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அதிலிருந்து…

“”ஆர்ட் தெரபி 60 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் புழக்கத்தில் வந்துவிட்ட ஒன்று. குழந்தைகளுக்கு என்றில்லை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் அனைவருக்கும் இந்த ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். ஆரோக்கியமாக்கலாம்.

இந்த ஆர்ட் தெரபி தொடர்பான ஐடியா முதன் முதலில் ஒரு மனநல மருத்துவருக்குத்தான் வந்தது. மனநல மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் சிலர் படம் வரைந்து கொண்டிருந்ததை அங்கிருந்த மருத்துவர் பார்த்தார். சாதாரணமாக ரொம்பவும் ஆர்ப்பாட்டம் செய்யும் அவர்கள் படம் வரையும் போது மிகவும் அமைதியாகக் காணப்பட்டனர். இது அவருக்கு வித்தியாசமாகப்பட்டது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்றன. அதிலிருந்து பிறந்ததுதான் இந்த ஆர்ட் தெரபி.

அமெரிக்காவைச் சேர்ந்த மார்க்கெரெட் நாம்பர்க் 1947 இல் முதன் முதலாக ஆர்ட் தெரபியைப் பற்றி புத்தகம் எழுதினார்.

ஆர்ட் என்றவுடன் ஏதோ படம் வரைவது மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். படம் வரைவது, களிமண் சிற்பங்கள் செய்தல், ஏன் நாடகம் போடுதல், நடனம் ஆடுதல் எல்லாம் ஆர்ட் என்பதில் அடங்கிவிடும். இந்தக் கலை முயற்சிகளில் ஈடுபடும் பெரியவரோ சிறியவரோ தங்களை மறந்து ஈடுபட்டிருப்பார்கள். அவர்கள் வரைந்த படங்களைப் பார்த்தோமானால் அது அவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். இதிலிருந்து அவர்களுடைய மனதைப் படித்துவிடலாம். அவர்களுடைய மனநிலைக்கேற்ப ஆர்ட் தெரபி பயிற்சிகள் கொடுத்து அவர்களுடைய மனதை ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம். இந்தப் பயிற்சி மூன்றுவிதங்களில் நடைபெறும். உளவியல் அடிப்படையிலான அணுகுமுறையுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசுவது, ஆலோசனை கூறுவது, அப்புறம் அவர்களைப் படம் வரையச் சொல்வது. இதில் படம் வரைவதன் மூலம் நோயாளியின் மனநிலையை ஓர் ஆர்ட் தெரபிஸ்ட் படிக்க முடியும். அதே சமயம் படம் வரையும் அந்தச் செயலே மனநலக் குறைபாட்டிற்கான ஒரு மருந்து போலச் செயல்படும். சாதாரணமாக ஒருவர் படம் வரையும் போது அவர் மனம் ரொம்ப ரிலாக்ஸôக இருக்கும். உதாரணமாக எப்போதும் பதட்டமாக எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் ஒருவரை இந்த ஆர்ட் தெரபி மூலம் அமைதியாக்கிவிடலாம். அவருடைய கவனத்தை ஒருமுகப்படுத்தலாம்” என்கிறார் அமெரிக்காவில் தங்கியிருந்து ஆர்ட் தெரபிஸ்டாகப் பணிபுரியும் சங்கீதா பிரசாத்.

“”அமெரிக்காவில் முதலில் எல்லாம் மனநல மருத்துவர்கள்தாம் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி பண்ணலாம் என்று எங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள். இப்போதெல்லாம் நோயாளிகளே நேரடியாக எங்களை அணுகுகிறார்கள். குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த ஆர்ட் தெரபி அங்கு நல்ல பலனளிக்கிறது. ஸ்கூல் டீச்சரே ஒரு பையன் வித்தியாசமாக இருந்தால் எங்களிடம் சொல்லி விடுகிறார்கள். நாங்கள் அந்தப் பையனுக்கு ஆர்ட் தெரபி மூலம் ட்ரீட்மென்ட் கொடுப்போம். ஸ்கூல் டீச்சர்களுக்கு ஆர்ட் தெரபி பயிற்சியும் கொடுக்கிறோம்” என்று சொல்லும் ஜூடித் ஆரோன் ரூபின் ஆர்ட் தெரபித் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர். ஆர்ட் தெரபி தொடர்பான திரைப்படங்களும் எடுத்துள்ளவர்.

“”ஆர்ட் தெரபியைக் குழந்தைகளுக்கு மட்டுமில்லை, எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம். எய்ட்ஸ் நோயாளிகள் வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டிருப்பவர்கள். விரக்தியின் உச்சியில் வாழ்பவர்கள். அவர்களுக்கு மனநலப் பிரச்சினை ஏற்படுவது இயல்பானதே.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி செய்ய முடியும். முதலில் அவர்களுடைய வியாதியைப் பற்றி அவர்களுக்குப் புரிதல் ஏற்பட உதவுவோம். சிலர் மருந்து சாப்பிடக் கூட மாட்டார்கள். சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது? எதற்கு வாழ வேண்டும்? என்றெல்லாம் யோசிப்பார்கள். வாழ்க்கையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த இந்த ஆர்ட் தெரபி பயன்படுகிறது. நோயாளிகளுக்கு மனநிலை சரியாக இருந்தால்தான் அவர்கள் உட்கொள்ளும் மருந்து நன்றாக வேலை செய்யும். மனநிலையைச் சரிசெய்ய ஆர்ட் தெரபி உதவுகிறது.” என்கிறார் போடா நாரோ. இவர் இந்தியாவுக்கு வந்திருப்பது இப்போது இரண்டாவது முறை.

சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமானுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு போடா நாரோ ஆர்ட் தெரபி முறையில் சேவை செய்திருக்கிறார். தீவிர சைவரான இவருக்கு இந்தியா பிடித்திருப்பதற்கு ஒரே காரணம், அங்கே கிடைக்காத விதவிதமான சைவ உணவுகள் இங்கே கிடைப்பதுதானாம்.

“”புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். உடலில் எந்த அளவுக்கு அவர்களுக்கு வலி உள்ளதை என்பதை அவர்கள் சொன்னாலும் யாரும் அதை உணரப் போவதில்லை; தெரிந்து கொள்ளப் போவதில்லை. அவர்களைப் பார்த்துக் கொள்ளும் நர்சுகளுக்கே கூட தெரியாது. அவர்களைப் படம் வரையச் செய்து அதைப் பார்த்தால் அவர்களின் உடல் வேதனையும் அதனால் நேர்ந்த மனவேதனையும் தெரிய வரும். “நாளைக்குச் செத்துப் போவேன்’ என்று அவர்கள் நினைப்பது அவர்கள் வரைந்த படத்தின் மூலமாகத் தெரிய வந்தது.

குழந்தைகள் உடல் தொடர்பாக ஏதாவது சொன்னால் சாதாரணமாக, “சும்மா இருடா’ என்று ஒரு வார்த்தையில் அடக்கி விடுவோம். அவர்களுடைய மனதைப் புறக்கணித்துவிடுவோம். ஆனால் அவர்களைப் படம் வரையச் சொன்னால் அவர்களுடைய மனதையே வரைந்து கொடுத்துவிடுவார்கள்.” என்கிறார் சங்கீதா பிரசாத். அவர் மற்ற இருவரையும் சந்தித்தது சமீபத்தில்தானாம். அவர்கள் மூவரும் இத்தனைக்கும் அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்கள். ஒருவர் கேன்ஸ். இன்னொருவர் பென்சில்வேனியா. மற்றவர் வெர்ஜினியா.

அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸில் நடந்த ஆர்ட் தெரபி தொடர்பாக நடந்த ஒரு கான்ஃபரன்ஸின் போது, “இந்தியாவிற்கு என்னோடு வந்து ஆர்ட் தெரபியைப் பற்றி அறிமுகம் செய்ய யார் வரப் போகிறீர்கள்?’ சங்கீதா பிரசாத் அறைகூவல் விட்டிருக்கிறார். அந்த அறைகூவலின் விளைவுதான் அமெரிக்கப் பெண்களின் இந்த வருகை.

“இந்த ஆர்ட் தெரபி அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு எட்டுமா? இல்லை பணக்காரக் குழந்தைகளுக்கு மட்டும்தானா?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தோம்.

“”எங்களுடைய முன்னாள் பிரசிடென்ட் ஜான் எஃப் கென்னடி காலத்திலேயே “வறுமைக்கு எதிரான போரை’ அமெரிக்காவில் தொடங்கிவிட்டோம். எனவே அமெரிக்காவில் உள்ள சேரிக் குழந்தைகளுக்கு எங்களுடைய சேவை தொடர்கிறது” என்றார் சற்றுச் சூடாக ஜூடித் ஆரோன் ரூபின்.

———————————————————————————————-

நனவாகுமா இவர்கள் கனவு?

வி. கிருஷ்ணமூர்த்தி

ஓரளவு மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு வசதிகள், இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளன.

குழந்தை கருவாக இருக்கும்போது, குழந்தை பிறக்கும்போது, குழந்தை பிறந்தவுடன் ஆகிய மூன்று நிலைகளில் பல்வேறு காரணங்களால் குழந்தைகளின் மூளை நரம்புகளில் வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை மனவளர்ச்சி குன்றியவர்கள் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

இந்த பாதிப்பை மூன்று நிலைகளாக டாக்டர்கள் வகைப்படுத்துகின்றனர். இதில் மூன்றாவது பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு இருப்பதை அவர்களுடன் பேசிப் பழகினாலொழிய, அவர்களைக் கூர்ந்து பார்த்தாலொழிய கண்டுபிடிக்க முடியாது.

உடலளவில் பெரிய பாதிப்பு இல்லாத இவர்களுக்கு, பேசுவதில், சிந்திப்பதில் சிரமம் இருக்கும். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள மற்ற குழந்தைகளைக் காட்டிலும் இவர்களுக்கு அதிக நேரம் பிடிக்கும். மேலும் ஏற்கனவே புரிந்த விஷயத்தை நினைவுபடுத்தி எழுதுவதற்கும் காலதாமதம் ஏற்படும். மனவளர்ச்சி குன்றியவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் – சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் – இத்தகைய நிலையில் உள்ளனர்.

முறையான பயற்சி மற்றும் செயல்வழி கல்வி போன்ற முறைகளில் சில ஆண்டுகளில் இவர்களைப் பூரணமாகக் குணமாக்க முடியும். பிற குழந்தைகளுடன் போட்டி போடும் அளவுக்குத் தயார்படுத்த முடியும். ஆனால், இதற்கான சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா என்பது கேள்விக்குறியே.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தமிழகத்தின் பின்தங்கிய மலைக்கிராமங்களில் ஒன்றான கீழானவயல் என்ற ஊரில் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் இத்தகைய பாதிப்பு காரணமாக தனது மகன் பிரேம்குமாரை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார். சிறுவன் பிரேம்குமாரால் படிக்க முடியாது என முடிவு செய்த பெற்றோர், அவனை மாடு மேய்ப்பது, வீடுவீடாகச் சென்று பால் விற்பனை செய்வது போன்ற வீட்டு வேலைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றார். இந்தப் பணிகளை எவ்விதக் குறையும் இல்லாமல் பிற குழந்தைகளைப் போலச் சரியாக செய்வதில் பிரேம்குமாரின் சாமர்த்தியம் தெளிவாகத் தெரிகிறது. “நாமும் மற்ற குழந்தைகளை போல பள்ளிக்குச் சென்று படிக்க மாட்டோமா?’ என்ற ஏக்கம் அவனுக்கு இல்லாமல் இல்லை.

இவனைப் போல பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் சூழல் காரணமாக வீட்டு வேலைக்கும், தோட்ட வேலைக்கும் பெற்றோர்களால் பயன்படுத்தப்படுகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை மாநிலப் பாடத்திட்டம் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இத்தகைய குழந்தைகளை வயது வரம்பு பார்க்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இத்தகைய குழந்தைகள் தேர்வு எழுதுவதற்கு, பார்வையற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது போல, ஓர் உதவியாளரை வைத்துக் கொள்வது, டேப்ரெக்கார்டர் வைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. தேசிய திறந்த நிலை கல்வித் திட்டத்திலும் இத்தகைய குழந்தைகள் கல்வி பெற மத்திய அரசு பல்வேறு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

“ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு’ என்ற அமைப்பு மூலம் இவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளை அரசு நடத்தி வருகிறது.

அரசின் இந்தத் திட்டங்கள் எல்லாம் அணையில் தேங்கியுள்ள நீராகவே உள்ளன. அது பிரேம்குமார் போன்ற கடைமடைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குச் சென்று சேரவில்லை. இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு சமுதாய அடிப்படையிலான செயல் திட்டங்களை வகுத்து அனைத்து மாவட்டங்களிலும் குழுக்களை அமைத்துள்ளது.

அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் இந்தக் குழுக்களின் செயல்பாடு பல மாவட்டங்களில் இன்னமும் பெயரளவிற்குத்தான் உள்ளது. களப்பணிக்கு இந்தக் குழுக்கள் நம்பியுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தொலைதூர கிராமங்களுக்குத் தேடிச்சென்று இத்தகைய குழந்தைகளைத் தேடிப்பிடித்து பள்ளிகளில் சேர்ப்பதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.

நகர்ப்புறங்களில் செயல்படும் தொண்டு நிறுவனங்களில் பணம் படைத்தவர்களின் குழந்தைகளே அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர். குறைந்த வருவாய்ப் பிரிவினரில் பல குழந்தைகள் உள்ள குடும்பங்களில், மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தைக்கு மட்டும் சிறப்புக் கவனம் செலுத்துவதற்கு அவர்களுடைய பெற்றோர்களால் முடிவதில்லை. இதுவே பல குழந்தைகள் கல்வி பெற முடியாததற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.

புரிந்து கொள்ளும் திறன் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டியது தங்களின் கடமை என்பதைப் பெற்றோர்களும், அரசு நிர்வாகமும் புரிந்து கொண்டால் மட்டுமே பிரேம்குமார் போன்ற குழந்தைகளின் கல்விக் கனவு நனவாகும்.

இத்தகைய குறைபாடு இனி பிறக்கும் எந்தக் குழந்தைக்கும் இருக்கக் கூடாது என்பதற்கு போலியோ ஒழிப்புப் பிரசாரம் அளவுக்கு விழிப்புணர்வுப் பிரசாரப் பணிகள் தேவை. அதேசமயம் இவ்வாறு பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதைப் பற்றி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

திட்டங்களை அறிவித்து விட்டோம் என்பதுடன் நின்றுவிடாமல், அந்தத் திட்டம் சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா? அவ்வாறு சென்று சேரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? என்பன போன்றவற்றை ஆய்வு செய்து அதற்கேற்ப செயல்பட வேண்டியது அரசின் கடமை.

Posted in Active, Add, Affected, AIDS, Arts, Attention, Baby, Brain, Challenged, Child, Children, Colleges, Community, Crafts, cure, Deficiency, Disabled, Disorder, Donate, Education, Europe, Group, Handicrafts, Health, Help, Kid, medical, Mental, Needy, Neuro, NGO, Patient, Poor, Procedure, Project, Pshychic, Pshychology, Relax, Releiver, Reliever, Rich, Schizo, School, service, Shrink, Sick, SNEHA, Spastic, Stress, Suicide, Tax, Tension, Therapist, Therapy, Trauma, Treatment, univ, University, univs, US, USA, Volunteer, Wealthy, Work | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid Exhaustion

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோர்வுக்குக் காரணம் என்ன?

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771

எனக்கு வயது 60 ஆகிறது. காலைக்கடன் முடித்தவுடன் நீராகாரம் சாப்பிடுகிறேன். மதியம் 11 மணி சுமார் கேழ்வரகு கஞ்சி சாப்பிடுகிறேன். கைகால் உடம்பு வலி உள்ளது. காலையில் சீக்கிரம் பசி எடுக்கிறது. அடிக்கடி உடல் சோர்வு அடைந்துவிடுகிறது. இது எதனால்?

இரவு படுக்கும்முன் சிறிது சிந்தனை தேவை. இன்று பகல் பொழுதைக் கழித்த விதம், நேற்றிரவைக் கழித்த விதம், இரண்டும் சிந்தனைக்குரியவை. நேரான முறையால் ஏற்பட்ட நன்மை, மன நிறைவு, சீர்கெட்ட முறையால் ஏற்பட்ட உடல்-மனப்பாதிப்பு, இரண்டின் பின்விளைவுகள், இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து அதன் அடிப்படையில் நாளைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டியது, என இவை அனைத்தையும் தினமும் சிந்திக்க வேண்டும். சிந்திப்பது செயலுடன் நெருங்கி இருக்க வேண்டும். செயல் சிந்தனையுடன் நெருங்கி இருக்கவேண்டும். இப்படி நினைப்பவன் துக்கமடைவதில்லை என்று வாக்படர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.

உங்களுடைய உடல்சோர்வு பற்றி அறிவதற்கு கீழ்காணும் கேள்விகள் உதவும்.

1. நீங்கள் செய்யும் பணி உங்கள் சக்திக்கு மீறியதா?

2. தூக்கம் அதிகமா? குறைவா? படுத்தவுடன் தாமதமாகிறதா? அயர்ந்த தூக்கம் ஏற்படுகிறதா? பிறர் நீங்கள் குறட்டை விடுவதாகக் கூறினாலும் நீங்கள் அவ்விதம் தூங்கவில்லை என்று உணர்கிறீர்களா? தூக்கத்தை எது தடைசெய்கிறது?

3. சீக்கிரத்தில் விழிப்பு ஏற்படுகிறதா? விழித்ததும் தெளிவு காண்கிறதா? சோம்பல் தலைவலி, மயக்கம், உடல்வலி வாய் உலர்ந்திருத்தல், கழுத்தில் வலி, மார்பில் வலி, தொண்டையில் இறுக்கம், படபடப்பு, கோபம், தாபம், அழுகை, மனத்தளர்ச்சி, உணர்ச்சிவசப்படுதல், இவற்றில் ஏதாவது ஒன்றா? பல்வேறு காரணங்களா?

நீங்கள் முதுமையில் காலடி எடுத்து வைத்திருப்பதால் உடல் சோர்வு வயது முதிர்ச்சியால் ஏற்படுமானால், ஓரளவு இதற்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும்.

மனதைப் பாதிக்கும் நோய்கள் உடலைப் பாதிக்கின்றன. இவற்றில் மனம் கெட்டபின் உடல் கெடுவதாயின் மனநோய்கள் எனவும், உடல் கெட்டபின் மனம் கெடுவதாயின் உடல் நோய்கள் எனவும் ஓரளவு வரையறுக்க முடியும். சில நோய்களை இப்படித் தரம் பிரிக்க முடிவதில்லை. எது முதலில் கெட்டது? உடலா? மனமா? எனத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இவற்றை “ûஸகோ úஸôமாடிக்’ நோய்கள் என்று கூறுவர்.

இன்றைய சூழ்நிலையில் கவலைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் பெரும்பாலானவர் உட்படுகின்றனர். அதனால் உடல் நோய்களுக்கு அளிக்கப்பெறும் மருந்துகள் போதாமல் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் அடக்கவல்ல மன அமைதி தரும் மருந்துகள் சேர்த்தே தரப்படுகின்றன.

நீங்கள் நீராகாரம், கேழ்வரகு, கஞ்சி போன்ற நல்ல உணவு வகைகளை சாப்பிட்டும் உடல் வலி, உடல் சோர்வு போன்ற உபாதைகளால் அவுதியுறுவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். பசியும் நன்றாக எடுக்கிறது. அப்படி என்றால் மனதளவில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? மன உணர்ச்சிகளை கொந்தளித்துப் பொங்குமளவிற்கு விட்டுவிடாமல் அவ்வப்போது போக்குக்காட்டி வடித்துவிட முயற்சி செய்யலாம்.

தூக்கம் சரியாக இல்லை என்று தோன்றினால் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய சந்தனாதி தைலம் தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிக் குளிக்கலாம். உள் மருந்தாக மஹாகல்யாணககிருதம் எனும் நெய் மருந்தை 10மிலி காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். உடல் வலி நீங்க தசமூலம் கஷாயம் காலை, மாலை வெறும் வயிற்றில் 60மிலி மேலுள்ள நெய் மருந்துடன் கலந்து சாப்பிடலாம்.

சோர்வை அளவிடமுடியாது. எக்ஸ்ரே, ரத்தப்பரிசோதனை முதலியவற்றால் இதனைக் கணக்கிட முடியாது. நீங்கள் உடல் சுறுசுறுப்பிற்காக வில்வ இலை, கருந்துளசி இலை, மஞ்சள் பூவுள்ள கரிசலாங்கண்ணி இவற்றில் ஒன்றை அரைத்து விழுதாக்கி 5-10 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் சாப்பிடவும்.

Posted in Aches, Active, Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Bodyaches, Boredom, Brain, Cures, energy, Exhausted, Exhaustion, fatigue, Fresh, Health, Healthcare, Hunger, Hungry, Medicines, Pain, Positive, Strength, Thinking, Tired, weary | Leave a Comment »

Health Education – Teaching about adulthood, sex & biology to Students

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

அலசல்: பட்டாம்பூச்சிகளின் மேல் கல்லை வைக்கலாமா?

ரவிக்குமார்

பாரம்பரியத்திலும் கலாசாரப் பெருமையிலும் ஊறிய இந்தியாவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5.7 மில்லியன் என அலறுகிறது ஒரு புள்ளிவிவரம்.

பெண் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான இந்திய அமைப்பு இந்தியாவில் 53 சதவிதம் குழந்தைகள் பால் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என்ற அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்தியாவையே கலக்கியது ஒரு மல்ட்டி மீடியா மெசேஜ் (எம்.எம்.எஸ்). எட்டாவது படிக்கும் மாணவன் அவனுடைய சக மாணவியிடம் நடத்தியிருக்கும் பால் ரீதியான குறும்புகளை அவனே செல்போனில் படம் எடுத்த காட்சிகள்தான் அவை.

மேற்சொன்ன கொடுமைகளிலிருந்து எதிர்கால இந்தியாவின் இளைய தலைமுறையைக் காப்பாற்றுவதற்கு என்ன வழி? என்று யோசித்த அரசாங்கம், இந்த ஆண்டு முதல் யுனிசெஃப் அமைப்பால் வடிவமைக்கப்பட்ட (ஏ.இ.பி.) வளர்இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை பள்ளிகளில் அறிமுகப்படுத்தவுள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தக் கல்வித் திட்டத்தில் இருக்கும் சாதக, பாதக விஷயங்களைப் பற்றி சிலரிடம் கேட்டோம்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம், பால் ரீதியான விழிப்புணர்வை வழங்கி வரும் சென்னையைச் சேர்ந்த “துளிர்’ அமைப்பின் இயக்குனர் வித்யா ரெட்டி, “”வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை அவர்களிடம் ஆலோசிக்காமல் வடிவமைக்கக் கூடாது. இன்னொரு விஷயம், இந்தக் கல்வித் திட்டத்தை குழந்தைகளின் பெற்றோர், கல்வியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், உளவியல் அறிஞர்கள் கொண்ட குழுவின் ஒப்புதலோடு ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்தக் கல்வித் திட்டத்தைச் சாதாரணமாக மற்ற வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களைக் கொண்டு நடத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அது பத்தோடு, பதினோராவது வகுப்பாக முடிந்துவிடும்.” என்றார்.

“”நமக்கென்று ஒரு கலாசாரப் பின்னணி இருக்கிறது. அதன் அஸ்திவாரத்தையே ஆடவைக்கும் பல வேலைகளில் ஒன்றாகத்தான் இதையும் பார்க்கிறேன். வளர் இளம் பருவத்தினருக்கான இந்தக் கல்வித் திட்டத்தை பெற்றோர்களின் வழிகாட்டுதலோடுதான் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் விபரீதமாகத்தான் போய் முடியும். முதலில் பெரியவர்களுக்கே பால் ரீதியான கல்வியில் பெரியதாகத் தெளிவு இல்லாதபோது, குழந்தைகளுக்கு அது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்” என்றார் சுயம் அறக்கட்டளையின் தாளாளரான உமா.

“”இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி ஒருசில வீடுகளில் தான் இருக்கும். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. குடிதண்ணீருக்காக மக்கள் கஷ்டப்படும் கிராமங்களில் கூட வீட்டுக்கு வீடு பெரும்பாலும் டிவி இருக்கிறது. கூடவே கேபிள் கனெக்ஷனும். நாளுக்கு நாள் மீடியாவில் விதவிதமான திரைப்பாடல்கள் எந்தவிதமான சென்சாரும் இல்லாமல் அரைகுறை ஆடைகளுடன் அப்படியே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோதாததற்கு செல்போன், இன்டர்நெட்… என்று எத்தனையோ தகவல் தொடர்புச் சாதனங்கள். அதைப் பயன்படுத்தி எந்த மாதிரியான தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள் என்று நான் சொல்லத் தேவையில்லை. மீடியா இன்றைக்கு எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு நாம் பார்த்த சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் தற்போதுள்ள சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்கள் படிக்கும் முறை, மிகவும் தாராளமாக அவர்களிடம் புழங்கும் செல்போன்கள் எல்லாமே அடுத்தகட்டத்துக்கு அவர்களை மிக அவசரமாகத் தூண்டுபவையாக இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு வளர் இளம் பருவத்தினருக்கான பால்ரீதியான விழிப்புணர்வுக் கல்வி அவசியம் என்றுதான் நினைக்கிறேன். இந்த பருவத்தின் வாயிலில் இருப்பவர்களுக்குத்தான் நிறைய குழப்பங்கள் இருக்கும். பால் ரீதியான அவர்களின் குழப்பங்களுக்குச் சரியான விளக்கங்களை அவர்களுக்கு பெற்றோர்களும் விளக்குவதற்கு முன்வரமாட்டார்கள். பருவ வயதை அடையும் பெண்ணுக்கு உடலில் ஏற்படும் மாறுபாடுகளை “இது இயல்பான ஒன்றுதான்’ என்று பெண்ணுக்கு எடுத்துச் சொல்வதற்கு யோசிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? பெண்களுக்கு இப்படி என்றால், ஆண் பிள்ளைகளுக்கும் உடலில் இயல்பான மாற்றங்கள் நடக்கும். இந்தச் சமயத்தில் பெற்றோர்களின் அனுசரனை இல்லாதபோது,

அவர்களுக்கு கேட்காமலேயே கிடைப்பது சக நண்பர்களிடம் கிடைக்கும் ஆலோசனைகள்தான். அவை பெரும்பாலும் தவறான அறிவுரைகளாகவே இருக்கும். முதலில் அவர்களின் உடலை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நல்லவிதமான தொடுதல் என்பவை எது, கெட்டவிதமான தொடுதல் என்பவை எவை என்ற புரிதல்கள் எல்லாம்,இந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் அறிவுறுத்தப்படவேண்டும். கலாசாரம், பாரம்பரியம் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு இந்த விஷயத்தை அணுகாமல், அடுத்த தலைமுறைக்கு இன்றைய சமூகத்தில் இருக்கும் ஆபத்துகளை எதார்த்தமான முறையில் நாம் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.” என்றார் உளவியல்பூர்வமான ஆலோசனைகளை கிராமத்தில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு அளித்துவரும் சி.ஆர். செலின்.

“”ஸ்டேட்-போர்டு, மெட்ரிகுலேஷன் போர்ட் என எல்லா வகையான கல்வி அமைப்பிலும் வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை வழங்குவதில் தவறில்லை. இதனால் எண்ணற்ற கிராமப்புற மாணவர்களுக்கு பெரிதும் பயன் விளையும். பொதுவாக மேல்தட்டு மக்கள் பெருவாரியாகப் படிக்கும் பள்ளிகளில், வளர் இளம் பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்கு “கவுன்சலிங்’ கொடுப்பதற்கென்றே தனியாக வசதி செய்திருப்பார்கள். வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை தகுந்த அறிதலுடன் அறிவியல் பூர்வமான புரிதல்களுடன் கற்றுக்கொடுப்பதற்கு ஆசிரியர்கள் ஆத்மார்த்தமான பங்களிப்பை அளிக்கவேண்டும். அதேநேரத்தில் எல்லா பள்ளிகளிலும் நிச்சயமாக “புகார் பெட்டி’ வைக்கப்படவேண்டும். அவை மாவட்ட கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். கல்வித் துறையில் ஜனநாயகத்தின் வெளிப்பாடாகவே இதை வலியுறுத்துகிறோம்.” என்றார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் செல்வா.

“”பட்டாம்பூச்சியின் மேல் கல்லை வைப்பது போன்ற செயல்தான் இது. நாகரிகத்தில் நம்மை விட முன்னேறிய நிலையில் இருக்கும் மகாராஷ்டிரம் மாநிலத்திலேயே இந்தச் செக்ஸ் கல்விக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளுக்கு, அன்னிய நாடுகளின் இத்தகைய கல்வி முறைகள் தேவையே இல்லை. நம் வீடுகளிலேயே நாம் காலம்காலமாக கடைப்பிடிக்கும் ஒழுக்கமுறைகள் அப்படியேதான் இருக்கின்றன. இத்தகைய செக்ஸ் எஜுகேஷன்களால் தேவையில்லாத சந்தேகங்கள்தான் மாணவர்களிடேயே ஏற்படும். அப்படி பால் ரீதியான சந்தேகத்தை செக்ஸ் எஜுகேஷன் தெளிவுபடுத்துவதாகவே இருக்கட்டும். ஆறாவது முதல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இது தேவையில்லாத தெளிவுதானே? குழந்தைகள் பால் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாகும் கொடுமையைக் காரணம் காட்டி செக்ஸ் எஜுகேஷனை ஆதரிக்க முடியாது. வெளிநாடுகளில் கூட இத்தகைய செக்ஸ் எஜுகேஷன் எதிர்மறையான விளைவுகளையே அளித்திருக்கிறது. இந்த கல்வித் திட்டத்துக்குப் பின், முறைகேடான பால் உறவுக்குப் பின் காலை வேளையில் கர்ப்பத் தடைக்காக தயாரிக்கப்பட்ட மாத்திரைகளின் விற்பனையும், அதையும் தாண்டி இளம் குழந்தைத் தாய்மார்களின் எண்ணிக்கையும்தான் செக்ஸ் எஜுகேஷனால் வெளிநாட்டிற்கு கிடைத்த பரிசு என்பது “ரெட் அலர்ட்’ என்னும் புத்தகத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர்களுக்கே பதினெட்டு வயது ஆனவுடன்தான் அனாடமி வகுப்புகள் நடக்கின்றன. ஆறாம் வகுப்பிலேயே இதைத் தெரிந்து கொள்ளட்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?” என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை செüந்தரராசன்.

“”அடலசன்ட் எஜுகேஷன் புரோக்ராம் என்பது செக்ஸ் எஜுகேஷன் அல்ல என்பதை சி.பி.எஸ்.இ.-யின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்திலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இன்னமும் இதற்கான பாடத்திட்டங்கள் வரையறுக்கப்படவில்லை. இந்த ஆண்டே பள்ளிகளில் இந்தத் திட்டத்தை தொடங்குவார்களா என்றும் தெரியாது. அதற்குள் இவ்வளவு எதிர்ப்புகள்.” என்றார் டி.ஏ.வி. பள்ளியின் முதல்வரான டாக்டர் சதீஷ்.

– எந்தத் திட்டமாக இருந்தாலும் அதில் சாதகமான விஷயங்களும் பாதகமான விஷயங்களும் நிச்சயம் இருக்கும். அதிலிருக்கும் குறைகளைப் போக்கிவிட்டால் எல்லாத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் திட்டங்கள்தான்.

Posted in A, abuse, adult, adulthood, Adults, AIDS, Awareness, Biology, Boy, Brain, Censor, Chat, Children, Cinema, Computer, Condom, Controversy, Culture, Development, discussion, Education, Exposure, Female, Formal, Gentleman, Girl, Glamour, Health, HIV, Imagination, Insights, Intercourse, Interview, Issue, Kid, Kiss, Lady, Love, Lust, male, masturbate, masturbating, Mature, Media, menstruation, MMS, Movies, NC-17, Opinions, Period, PG, Physchology, PMS, Private, Rape, Rating, Sex, SMS, solutions, Students, Suggestions, Tamil, Teachers, Teen, Teenage, Textbooks, Thamizh, TV, UNICEF, Violence, VT, Vulgar, WHO | Leave a Comment »

Experienced Intelligence – Basis, Facts, Research, Analysis, Observations

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007

அறிவுத்திறனுக்கு எது அடிப்படை?

ஜி.எஸ். பூர்ண சந்திரக்குமார்


எப்போது பார்த்தாலும் ஏதாவது ஏடாகூடமாகச் செய்யும் ஆசாமிகளைப் பார்த்து, “”உனக்கு மூளையில மசாலா ஏதாவது இருக்கா, இல்லையா?” என்று நாம் கிண்டலாகக் கேட்பது வழக்கம். சுமார் 1.5 கிலோகிராம் எடையுள்ள நம் மூளையில் மசாலா இருக்கிறதோ, இல்லையோ, நிறைய சாம்பல் இருக்க வேண்டும் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

சாம்பல் என்றதும் பயப்பட வேண்டாம். மூளையிலுள்ள சாம்பல்நிறத் திட்டுகளைதான். நமது மூளையில் உள்ள நரம்பு செல்கள் அனைத்தும் நூடுல்ஸ் மாதிரி கொத்து கொத்தாகக் காணப்படும். அவற்றின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி அளவு. அதன் துணைத் திசுக்களையும் சேர்த்தால் எண்ணிக்கை ஒரு லட்சம் கோடியையும் தொட்டுவிடும். இவைகளே சாம்பல்நிறத் திட்டுகள் என்றழைக்கப்படுகின்றன.

நினைவுகளை ஒருமுகப்படுத்தி மூளையில் நன்கு பதிய வைக்கவும், அந்நினைவுகளைப் பயன்படுத்தி வேலையை ஒழுங்காகச் செய்யவும் மேற்சொன்ன சாம்பல் நிறப்பகுதிகள் மூளையில் நிறைய வேண்டும். அப்படிப்பட்ட சாம்பல்நிறப் பகுதிகளை அதிகம் பெற்றிருப்பவர்கள்தான் கிராண்ட் மாஸ்டர்களாக எல்லா இடங்களிலும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். எப்படி?

பொதுவாக ஐம்புலன்களின் மூலமாக ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான தகவல்கள் நரம்புத்தூண்டல் வடிவில் நமது மூளையை அடைந்து பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் புதுப்புதுத் தகவல்களைக் கிரகித்துக் கொள்ளும்போதும் மூளையானது அதற்கேற்றாற்போல் புதுப்புது நரம்புச் சந்திகளை உருவாக்கி, அந்நரம்புச் சந்திகள் மூலமாக தாம் பெற்ற தகவல்களை அனுபவங்களாகப் பதிவு செய்து கொள்கிறது. அவ்வனுபவங்களைக் கொண்டுதான் ஒவ்வொரு மனிதனும் வெற்றிகரமான மனிதனாக உலகில் பவனி வருகிறான்.

பிரிட்டிஷ் மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நம்முடைய மூளையை ஸ்கேன் செய்து மேலும் பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளைச் சொன்னபோது மூளையில் அம்மொழிக்கான நரம்புப் பகுதிக்குள் மட்டும் ரத்த ஓட்டம் பாய்ந்து அப்பகுதி வெளிச்சமானதைக் கண்டார்கள். புதிய செய்திகள், செயல்கள் முதலியவற்றை விரைவில் நினைவு வைத்துக் கொண்டு தேவைப்படும் போது விரைவில் பிரதிபலிக்கவும் கூடியதான சிறப்பு நியூரான்கள் நமது மூளையில் இருப்பதே இதற்குக் காரணம் என்று கண்டறிந்துள்ளனர். சரி. மூளையில் நினைவு எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது?

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல அறிவியல் அறிஞர்கள் மூளையின் இயல்பு பற்றியும், பட்டறிவும் படிப்பறிவும் மூளையில் எவ்வாறு நினைவாகப் பதிவு செய்யப்படுகிறது என்பது பற்றியும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

யூரி ஒவ்சினிகோவ் எனும் அறிவியல் அறிஞர் 1965-ம் ஆண்டு ஒரு விளக்கத்தை வெளியிட்டார். பெப்டைடுகள் தான் நினைவிற்கு அடிப்படையாக விளங்குகின்றன என்பதே இவருடைய கருத்து. இந்த பெப்டைடுகள் அமினோ அமிலங்களால் ஆனவை. சுமார் 20 அமினோ அமிலங்கள் பல்வேறு விதங்களில் இணைந்து பல்வேறு வகைப் புரதங்களை உண்டாக்குகின்றன. இவற்றின் 15 அமினோ அமிலங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்த 15 அமினோ அமிலங்களும் பல்வேறு விகிதங்களில் இணைந்து உருவாகும் புரதங்கள் எத்தனை மனிதர்களின் நினைவாற்றலுக்கு போதுமானதாய் இருக்கும் தெரியுமா? சுமார் 10 ஆயிரம் மனிதர்கள்.

அதாவது நம் வாழ்நாளில் நாம் இன்னும் எத்தனை கோடி புதிய தகவல்களைப் பெற்றுக் கொண்டாலும் அவற்றை மூளையில் பதிவு செய்வதற்குத் தேவையான புரதங்கள் தீர்ந்து போகாது. அத்தகைய சிறப்பு வாய்ந்த பெப்டைடுகளை சில ரசாயன மாற்றங்களால் மூளையில் சிதையாமல் பார்த்துக் கொண்டால் போதும், நம் வாழ்நாளில் நினைவுப்பஞ்சமே இராது.

மேற்சொன்ன பெப்டைடுகளைப் பற்றி ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானிகள் மேற்கொண்ட சில ஆய்வு முறைகளைப் பார்த்தால் “”இப்படியும் இருக்குமா” என்று நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும். ஒரு பரிசோதனையில் ஒரு குறிப்பிட்ட அனுபவமுடைய ஒரு பிராணியின் மூளைச்சாற்றை எடுத்து அதை அந்த அனுபவம் துளியுமில்லாத வேறொரு பிராணியின் மூளையில் செலுத்திப் பார்த்தனர். விளைவு என்ன தெரியுமா? மூளைச்சாறு செலுத்தப்பட்ட பிராணியானது, அம்மூளைச்சாறுக்குச் சொந்தமான முந்தைய பிராணியின் அனுபவம் முழுமையும் பெற்று அதைப்போலவே செயல்பட ஆரம்பித்துவிட்டது.

இப்போது நமக்கு ஒன்று தெளிவாகிவிட்டது. மூளையில் நினைவாகப் பதிவாகும் தகவல்கள் அனைத்தும் பெப்டைடுகளாகவே பதிவாகின்றன என்பதே அது. இந்தத் தகவல்களை ஒத்துப்பார்ப்பதில்தான் விலங்குகளுக்கும் நமக்கும், நமக்கும் கிராண்ட் மாஸ்டர்கள் போன்ற அறிவுஜீவிகளுக்கும் வித்தியாசம் ஏற்படக் காரணமாய் அமைந்து விடுகிறது. அறிவுஜீவிகளின் அறிவிற்குக் காரணம் இந்த பெப்டைடுகளை நிரம்பப் பெற்றிருக்கும் அவர்களின் மூளையிலுள்ள சாம்பல்நிறப் பகுதியானது அதிக அடர்த்தியைப் பெற்றிருப்பதே.

ஆக, அறிவுத்திறன் என்பது தனிப்பட்ட ஓர் இனத்திற்கோ, ஒரு குழுவிற்கோ சொந்தமில்லை என்பது உறுதியாகிவிட்டது. சரிவிகித உணவும், முறையான பயிற்சியும், வள்ளுவர் கூறும் அசைவிலா ஊக்கமும் இருந்தால் வாழ்வில் வெற்றிக்குத் தடையேதுமில்லை.

(கட்டுரையாளர்: சித்த மருத்துவர், எஸ்.கே. சித்த மருத்துவமனை, கோபி).

Posted in Analysis, Ayurveda, Ayurvedha, Brain, Doctor, EQ, Experience, Intellectual, Intelligence, Intelligent, Medicine, Research, Science, Siddha, Social | Leave a Comment »