சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்
சென்னை, செப். 14: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். சிவகுமார் (52), கடலூர் மாவட்ட நீதிபதி ராஜசூரியா ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீதிபதி சிவகுமாரின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் பெத்தான்வலசை. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. படித்து, புதுச்சேரி சட்டக் கல்லூரியில் பி.எல். படித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
1989-ல் சப் ஜட்ஜாக நியமிக்கப்பட்ட சிவகுமார், பல மாவட்டங்களில் நீதிபதியாகப் பணிபுரிந்தார். 1997-ல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இந்த ஆண்டு மே மாதம் சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ஜி.ராஜசூரியா
கடலூர், செப். 14: நீதிபதி நீதிபதி ராஜசூரியா புதுவையைச் சேர்ந்தவர். 23-8-1951-ல் பிறந்தார். தந்தை கோவிந்தராஜ். தாயார் அம்மணி அம்மாள். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் மற்றும் எம்.எல். பட்டம் (முதல் வகுப்பு) பெற்றவர். புதுவை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பிரெஞ்சு சட்டத்தில் முதுகலை டிப்ளமோ படித்தவர்.
20-8-1975-ல் புதுவையில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். 9-1-1980-ல் புதுவையில் மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பதவி ஏற்றார். பின்னர் சார்பு நீதிபதியாகவும், மாவட்ட அமர்வு நீதிபதியாகவும் பணிபுரிந்தார்.
2005-ல் சென்னையில் குடும்ப நீதிமன்ற நீதிபதியாக இருந்தார், 4-5-2005-ல் கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக மாற்றப்பட்டார்.