ஆட்டம் காணும் இடதுசாரி அஸ்திவாரம்
எம். மணிகண்டன்
வெனிசுலாவில் பழம்பெருமை வாய்ந்த “ரேடியோ கராகஸ்’ தொலைக்காட்சி (ஆர்சி டிவி) நிறுவனத்தின் ஒளிபரப்பு அண்மையில் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் ஹுகோ சாவேஸýக்கு எதிராக தலைநகர் கராகஸில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று வெறுமனே கூறிவிட முடியாது. ஊடகங்களைத் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கும் நாடுகள் பட்டியலில் வெனிசுலாவுக்கு எப்போதுமே 100-க்கு பின்னால்தான் இடம் கிடைக்கும். சாவேஸின் ஆட்சியில் அது இன்னும் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
எதிர்கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு சாவேஸýக்கு எதிராக வெளிப்படையாகவே செயல்பட்டு வந்தது ஆர்சி டிவி. 2002-ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் கூறப்பட்டுவந்தாலும், ஆர்சி டிவிக்கும் பெரும்பங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. தற்போது இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருப்பது, சாவேஸின் பொதுவுடமை இலக்குகளை நோக்கிய வேகமான பயணத்தின் ஒரு படியே என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கெனவே எண்ணெய் நிறுவனங்களை அரசுடையமையாக்கியது, தனியார் சொத்துக்களை கையகப்படுத்தி ஏழைகளுக்கு வழங்குதற்காக திட்டங்களை அறிவித்தது என அனைத்துமே வெனிசுலாவில் செங்கொடி பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கிவிட்டது என்பதன் அறிகுறிகளே.
இதை மறைமுகமாகக் குறிக்கும் வகையிலேயே, “இந்தப் புரட்சியை யாராலும் தடுக்க முடியாது’ என கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அனைத்துப் பத்திரிகைகளில் ஒரு பக்கத்துக்கு விளம்பரம் செய்தார். “இந்தியா ஒளிர்கிறது’ என்பது போல.
சாவேஸýக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அண்டை நாடான பொலிவியாவின் ஈவோ மாரல்ஸ், ஓராண்டுக்கு முன்பே எரிவாயு திட்டங்களை அரசுடைமையாக்கி தனது இடதுசாரி பயணத்தைத் துவக்கிவிட்டார். இதனால், சாவேஸ் தனது சீர்திருத்தங்களை முடுக்கி விடவேண்டியதாகிவிட்டது.
லத்தீன் இயக்க விடுதலைக்கு வித்திட்ட சைமன் பொலிவருக்கு நிகரான சீர்திருத்தவாதியாக அறியப்படுபவர் சாவேஸ். இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்ற முறையில், கியூபாவின் ஆட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் நெருக்கமாக இருப்பவர். லத்தீன் அமெரிக்கா முழுவதையும் இடதுசாரிப் பாதைக்கு திருப்ப வேண்டும் என்பதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார். சிலி, பொலிவியா உள்ளிட்ட நாடுகளில் இடதுசாரி அரசுகளை அமைத்ததில் இவருக்குப் பெரும் பங்குண்டு.
பலமுறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் சாவேஸýக்கும் வெனிசுலா மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். “சாவேஸ் சர்வாதிகாரி என்று கூறப்படுவது மேற்கத்திய நாடுகள் புனைந்த கதை; புஷ்ஷைவிட சிறந்த ஜனநாயகவாதி அவர்’ என்று கடுமையாகக் கூறுவோரும் உண்டு. புஷ்ஷுக்கு எதிராக அந்நாட்டுத் தொலைக்காட்சி நிறுவனம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டால் அவர் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா எனக் கேட்டு, ஆர்சி டிவி தடை செய்யப்பட்ட சாவேஸின் ஆதரவாளர்கள் நியாயப்படுத்துகின்றனர்.
சீர்திருத்தங்களை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற சாவேஸýக்கு எதிராக நிறைய விமர்சனங்களும் உண்டு. தனக்கு ஆதரவாக அரசியல் சட்டத்தை திருத்தியது, தேர்தலில் முறைகேடு, அரசுக்கு எதிரானவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவது, பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடு என சாவேஸ்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.
அதேபோல், சாவேஸின் அதிரடி நடவடிக்கைகள் அனைத்துக்கும் மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதாகவும் கூறிவிடமுடியாது. பணக்காரர்களிடம் இருந்து நிலத்தை பிடுங்கி ஏழைகளிடம் ஒப்படைக்கும் திட்டம், அவரது ஆதரவாளர்களிடமே எதிர்ப்பைச் சம்பாதித்தது. இது தவிர, அரசு அதிகாரிகள் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு வீடு வைத்திருப்பவர்களிடம் வீடுகளைப் பறித்துக் கொண்டு தவிக்க விட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன.
ஆர்சி டிவி தடை செய்யப்பட்டதற்கு வெனிசுலாவின் நெருங்கிய நட்பு நாடான பிரேசில் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றி இருக்கிறது. இதற்குப் பதிலடி தரும் வகையில்,”தொழிலாளர்கள் பெயரைச் சொல்லி வோட்டு வாங்கிவிட்டு, அமெரிக்காவின் கைப்பாவையாக பிரேசில் அரசு செயல்பட்டு வருகிறது’ என்று வெனிசுலா நாடாளுமன்றம் கண்டித்திருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதுவும் வெனிசுலாவுக்கு பின்னடைவே.
எதிர்க்கட்சிக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக அரசின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, குளோபோவிஷன் மற்றும் சிஎன்என் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புக்கும் சாவேஸ் அரசு தடைவிதிக்கும் என்று கூறப்படுவதால் பிரச்னை தற்போது பூதாகரமாகியிருக்கிறது.
இதற்கிடையே, தடைசெய்யப்பட்ட ஆர்சி டிவி ஒளிபரப்பை மெக்சிகோவில் இருந்து மீண்டும் துவக்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்நிறுனத்தின் தலைவர் மார்சல் கார்னியர் மெக்சிகோவில் இருக்கும் தனது “நட்பு வட்டாரத்தை’ இதற்குப் பயன்படுத்துவார் எனத் தெரிகிறது.
தொலைக்காட்சி, செயற்கைக்கோள், இன்டர்நெட் என ஏதாவது ஒரு வகையில் வெனிசுலா மக்களை தொடர்பு கொள்வேன் என கார்னியர் சபதம் செய்திருப்பதால் சாவேஸýக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
வட கொரியா, ஈரான், சூடான், ரஷ்யா, வெனிசுலா, பெலாரஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் “சாத்தானின் கூட்டணி’ என்றே அமெரிக்க ஆதரவுப் பத்திரிகைகள் பிரசாரம் செய்து வருகின்றன. இது வெறும் வயிற்றெரிச்சல்தான் என்றாலும், இப்பட்டியலில் வெனிசுலா சேர்க்கப்பட்டிருப்பது சரிதானோ என்ற எண்ணம் உலக உலக நாடுகளுக்கு வராமலிருக்க, சாவேஸ் கவனமாகச் செயல்படுவது நல்லது. அதுதான் லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி அஸ்திவாரத்தை பலப்படுத்துவதற்குச் சரியான வழி.
————————————————————————————————————————————–
இன்னொரு ஃபிடல் காஸ்ட்ரோ
எம். மணிகண்டன்
வெனிசுலாவைத் தாக்க அமெரிக்காவும் கொலம்பியாவும் சதி செய்கின்றன என அண்மையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் வெனிசுலா அதிபர் சாவேஸ். இப்போதைக்கு அமெரிக்காவால் விலை கொடுத்து வாங்கவோ, நேரடியாகப் போரிட்டு அடக்கவோ முடியாத “அச்சுறுத்தல்’களில் வெனிசுலாவும் ஒன்று என்பதால் சாவேஸின் குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது. அதற்காக லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராகப் போர் புரிய முடியுமா என்ன?
ஒருநாடு எவ்வளவு வேகமாக வளர்ச்சியடைகிறது என்பது மட்டுமல்ல, அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை எது என்பதும் முக்கியம் என்பார் சாவேஸ். அவரைப் பொறுத்தவரையில், பொருளாதார வளர்ச்சியின் பயன் அடித்தட்டு மக்கள்வரை சென்றடைய வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி, பொதுவுடமைக் கொள்கைகளைத் தீவிரமாக அமலாக்குவதுதான். இடதுசாரிகள் என்றாலே அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் என்ற பொதுவான கருத்துக்கு சாவேஸýம் விதிவிலக்கல்ல.
அமெரிக்காவை எதிர்த்து 50 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டுவரும் கியூபாவை முன்மாதிரியாகக் கொண்டிருக்கும் சாவேஸ், தம்மையும் ஃபிடல் காஸ்ட்ரோ போன்றதொரு போராளியாக முன்னிறுத்திக் கொள்பவர். அமெரிக்காவின் அடிமைப்படுத்தும் கொள்கைகளுக்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் லட்சியம். இதனால் அமெரிக்காவுக்குப் போட்டியாகப் பொருளாதார, ராணுவ பலத்தைப் பெருக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
லத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலை இயக்கத் தலைவரான சைமன் பொலிவரின் பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் “அமெரிக்காவுக்குப் பொலிவரிய மாற்று’ (ஆல்பா) என்ற அமைப்பின் கீழ் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளின் ஆதரவை சாவேஸ் திரட்டி வருகிறார். இந்த அமைப்புக்கு வெனிசுலாவும் கியூபாவும்தான் அடித்தளம் அமைத்தன.
பொதுவாக உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தடையிலா வர்த்தகப் பிராந்தியங்கள் போல் அல்லாமல், சமூக அக்கறையும் அடித்தட்டு மக்கள் மீது கரிசனமும் கொண்ட பொருளாதார வளர்ச்சியை எட்டும் வகையிலான வர்த்தகக் கூட்டுகளைச் செய்துகொள்ளப் போவதாக இந்த அமைப்பு கூறியிருக்கிறது.
இது நிறைவேறினால், தற்போது இடதுசாரிகள் மட்டுமே கூறிக்கொண்டிருக்கும் “அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பொருளாதார வளர்ச்சி’ என்பது உலக நாடுகளில் பலவற்றைக் கவரக் கூடும். இந்தியா போன்ற நாடுகள்கூட தங்களது அமெரிக்க அடிமைத்தனத்தை விட்டுவிடுவது குறித்து யோசிக்கும்.
ஆனால், ஆல்பா அமைப்பில் கியூபாவையும் வெனிசுலாவையும் விட்டால் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த நாடும் இல்லை என்பதுதான் பலவீனம். சாவேஸ் என்ன செய்தாலும் அதை இம்மி பிசகாமால் அப்படியே பின்பற்றும் பொலிவியாவும் இந்த அமைப்பில் இணைந்திருக்கிறது. ஈக்வடார், நிகரகுவா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகள் இந்த அமைப்பில் சேர்ந்துவிட்ட போதிலும் உள்நாட்டில் எழுந்திருக்கும் எதிர்ப்புகளால் முடிவைப் பரிசீலித்து வருகின்றன. இதுபோக, கரீபியன் கடலில் உள்ள ஆன்டிகுவா, டொமினிகா உள்ளிட்ட குட்டி நாடுகள் மட்டுமே ஆல்பாவில் இணைந்திருக்கின்றன.
அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கும் கொலம்பியா, பிரேசில், அர்ஜென்டினா போன்ற வலுவான நாடுகளின் ஆதரவு சாவேஸýக்கு இன்னும் கிடைக்கவில்லை. கிடைக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.
அமெரிக்க வங்கிகளில் இருக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் நிதியை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது சாவேஸின் மற்றொரு திட்டம். ஆசிய வளர்ச்சி வங்கி போல் பிராந்திய வங்கி ஒன்றை ஏற்படுத்தி அதில் இந்தப் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கலாம் என்பது அவரது எண்ணம்.
ஆனால் அமெரிக்காவுக்கு எதிராகக் கூட்டு ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று சாவேஸ் அழைப்பு விடுத்திருப்பது வலியச் சென்று போரை வரவழைப்பதற்குச் சமம். சமூக, பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவித்துவரும் பொலிவியா போன்ற பின்தங்கிய நாடுகளுக்குக் கூட்டு ராணுவத்தை ஏற்படுத்தி போர்புரியும் திட்டமெல்லாம் ஒத்துவராது. கெட்டதும்கூட. லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா தாக்கினால் பார்த்துக் கொள்ளலாம்; அதற்காகக் கூட்டு ராணுவம் அமைப்பது என்பது பிராந்திய அமைதியைக் குலைக்கும் வேலை என நிகரகுவாவும், ஈக்வடாரும் கருதுகின்றன.
அண்டை நாடான கொலம்பியாவுடன் சேர்ந்து வெனிசுலாவைத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக சாவேஸ் கூறுவதையெல்லாம் வெனிசுலா மக்களே நம்பவில்லை. அப்படியே கொலம்பியாவுடன் போர் வந்தாலும் அதை லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்று கூறுவதெல்லாம் சுயநலத்தின் உச்சகட்டம். தொடர்ந்து அதிபராக நீடிக்கும் வகையில் வெனிசுலாவில் அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் தேர்தலில் சாவேஸýக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இந்தத் தோல்விகளை மறைத்து தனது செல்வாக்கை நிலைநாட்டுவதற்குத்தான் சாவேஸ் இந்த அபத்தங்களைச் செய்துவருவதாகக்கூட பத்திரிகைகள் எழுதுகின்றன.
வெனிசுலாவில் பத்திரிகைகளுக்குச் சுதந்திரமில்லை, நாட்டின் பல பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள்கூட செய்து தரப்படவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகள் சாவேஸின் புரட்சியாளர் என்ற பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தனது பெயரை மீட்டெடுக்க வேண்டுமானால், அமெரிக்காவுக்கு எதிராகப் போரிடும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, நாட்டுக்கும் பிராந்தியத்துக்கும் உருப்படியாக ஏதாவது செய்யலாம், கோகோ பயிரிடுவதைத் தவிர!