Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Bonus’ Category

Sixth Pay Panel recommends hefty pay hikes for government staff: Deficit may widen

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

மத்திய அரசு ஊழியர்களுக்கு 40 சதவீதம் ஊதிய உயர்வு: 6-வது ஊதியக் குழு பரிந்துரை

தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 6 வது ஊதியக்குழுத் தலைவர் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா.

புதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

புதிய ஊதிய விகிதத்தை 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்தவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

முன் தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி, இரு தவணைகளில் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஊதியக் குழு தனது பரிந்துரைகளை நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தது.

இந்தப் பரிந்துரைகளை நிதியமைச்சகம் ஆய்வு செய்து அதை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும். மத்திய அமைச்சரவை இப் பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தும்.

இதன் மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.

புதிய ஊதிய உயர்வு விகிதப்படி மத்திய அமைச்சரவைச் செயலரின் ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செயலரின் ஊதியம் ரூ. 80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து அதன் அடிப்படையில் புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 2.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.

திறமைக்குப் பரிசு: திறமையான ஊழியர்களை ஊக்குவித்து பாராட்டும் வகையில் “திறமை அடிப்படையிலான ஊதிய உயர்வு’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்.

வீட்டு வாடகைப்படி: வீட்டு வாடகைப்படி உள்பட பெரும்பாலான படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. குழந்தைகளின் கல்வி செலவு உதவித் தொகை ரூ. 50-லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் 40 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியில் உள்ள 35 கிரேடுகளை (பணி நிலை) 20 கிரேடுகளாக குறைக்கவும் ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது.

50 சதவீத அகவிலைப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் ஊதியம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ வீரர்களுக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்கவும் ஊதியக் குழு சிபாரிசு செய்துள்ளது.

ராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு இணையான பதவி வரை மாதப்படி ரூ. 6000- ஆக உயர்த்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியக் குழு பரிந்துரைகளால் அரசுக்கு 2008 – 09 நிதியாண்டில் ரூ. 12,561 கோடி கூடுதல் செலவாகும்.

முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி தொகைக்கு ஆகும் செலவு ரூ. 18,060 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

* அடிப்படை சம்பளத்தில் 40 சதவீதம் உயர்வு

* 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி

யிலிருந்து அமல்படுத்த வேண்டும்.

* முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி இரு தவணை

களாக வழங்கப்பட வேண்டும்.

* அதிகபட்சமாக அமைச்சரவை செயலரின் ஊதியம் ரூ. 90,000

* கீழ்நிலை ஊழியரின் குறைந்தபட்ச

சம்பளம் ரூ. 6600

* ஓய்வு பெறும் வயது 60 என்பதில் மாற்றமில்லை

* பணி நிலை 35 கிரேடுகள் என்பது 20 கிரேடுகளாக குறைப்பு

* மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவத்தினருக்கும் ஊதியம்

* பிரிகேடியர் பதவி வரை மாதப் படி

ரூ. 6000-ஆக உயர்வு

* வார வேலை நாள் 5 என்பதில் மாற்றமில்லை

* ஆண்டுதோறும் ஊதிய உயர்வு 2.5 சதவீதம்

* திறமை அடிப்படையில் கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு

* மத்திய அரசு ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு

* வீட்டு வாடகைப் படி உள்பட பெரும்பாலான படிகள் இரு மடங்காக உயர்வு

* குழந்தைகளின் கல்விச் செலவுக்கான உதவித் தொகை ஆண்டுக்கு 50-திலிருந்து ரூ. 1000-ஆக உயர்வு

* விடுதி மானியம் ரூ. 3 ஆயிரமாக உயர்வு

* ஒரு பணி நிலையில், அதிகபட்ச ஊதியத்தை எட்டிய ஓராண்டுக்கு பிறகு, அவருக்குப் பதவி உயர்வு வழங்காவிட்டாலும் அடுத்த பணி நிலைக்கு உரிய ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.

—————————————————————————————————————————————————–
உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு

புதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள 6500 – 10,500 என்ற சம்பள விகிதத்தை 8700 – 34,800 என்று மாற்றி கிரேடு சம்பளம் ரூ. 4600-வுடன் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் பதிவாளர், இணைப் பதிவாளர் பணிகளை இணைத்து அப் பதவிகளுக்கான ஊதிய விகிதம் 18,400 – 22,400 தற்போது 39,200 – 67,000 என்று உயர்த்தி கிரேடு ஊதியம் 9 ஆயிரத்துடன் வழங்கப்படும்.

4 ஆண்டுகள் பணி முடிந்த சீனியர் ஜூடிசியல் உதவியாளர், சீனியர் தனி உதவியாளர், ரீடர், சீனியர் ஜூடிசியல் மொழி பெயர்ப்பாளர், நீதிமன்ற அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஊதியம் 6,500 – 10,500 என்பது தற்போது 8,000 – 13,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோன்று பல்வேறு பணிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————–
முப்படைத் தளபதிகளுக்கு ரூ. 90,000 ஊதியம்

புதுதில்லி, மார்ச் 24: தரைப்படை, விமானப் படை, கடற்படை தளபதிகளுக்கு ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்த ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது.

தற்போது முப்படைத் தளபதிகளுக்கும் மாத ஊதியமாக ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ. 60 ஆயிரம் உயர்த்தி மொத்தம் ரூ. 90 ஆயிரம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியில் மத்திய அமைச்சரவை செயலருக்குத்தான் ரூ. 90 ஆயிரம் வழங்க ஊதியக்குழு சிபாரிசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்த ராணுவ வீரர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 40 சதவீத ஊதிய உயர்வு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————–
ஆணையத் தலைவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை ஊதியம்

புதுதில்லி, மார்ச் 24: பங்கு பரிவர்த்தனையைக் கண்காணிக்கும் “செபி’ அமைப்பு, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், காப்பீட்டு ஒழுங்கு முறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட பல்வேறு ஆணையங்களின் தலைமைப் பதவிகளுக்கு மாத ஊதியம் ரூ. 3 லட்சம் வரை உயர்த்தி 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.

திறமையான நபர்களை வெளியிலிருந்து இப் பதவிக்கு ஈர்க்கும் நோக்கில் ஊதியம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஊதியக் குழு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார்.

இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ. 1.5 லட்சமும் ஆணையத்தின் தலைவருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கார் மற்றும் வீடு அளிக்கப்படாவிட்டால் தலைமைப் பதவிக்கு ரூ. 3 லட்சமும் உறுப்பினர் பதவிக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்க குழு சிபாரிசு செய்துள்ளது.

—————————————————————————————————————————————————–
வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும்: இந்திய கம்யூனிஸ்ட்

ஹைதராபாத், மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கருத்துக் கூறியுள்ளது.

மத்திய அரசுப் பணி நிலைகள் 35 கிரேடுகளில் இருந்து 20 கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்புகள் குறையும் என்று அக் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறினார்.

மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஊழியர்களுக்கு வெகுவாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு கணிசமாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இந்தியா போன்ற ஏழை நாடுக்கு இது தேவையில்லை என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
ஊதியக் குழு பரிந்துரைகள்: மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம்

சென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் தங்களுக்கு ஏமாற்றம் தருவதாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் எம். துரைப்பாண்டியன் கூறினார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

எங்களுடைய அனுபவத்தில் பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கும் ஊதியக் குழு அறிக்கையாக இது இருக்கிறது. நான்காம் நிலை ஊழியருக்கும், உயர்நிலை அதிகாரிக்கும் இடையிலான ஊதிய வேறுபாடு 12 விழுக்காடு அளவுதான் இருக்க வேண்டும் என்றபோதிலும், அந்தக் கோட்பாடு இப்போது மீறப்பட்டுள்ளது.

நான்காம் நிலை ஊழியர்களின் ஊதிய உயர்வு 18 முதல் 25 விழுக்காடு வரைதான் உள்ளது. அமைச்சரவைச் செயலர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு, ஊதியக் குழு பரிந்துரை அமலுக்கு வரும் காலத்திற்கான நிலுவைத் தொகை மட்டுமே ரூ.17 லட்சம் வரை வரும்.

சமூகத்தில் மிகவும் பின்தங்கியோர் அதிக அளவில் வேலைபார்க்கும் நான்காம் நிலை ஊழியர் பணிகள் இனிமேல் இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் காப்பீடு, வங்கித் துறைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திருத்தம் செய்யப்படுகிறது. அவருடைய மேற்பார்வையில் இயங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதியத் திருத்தம் செய்யப்படுகிறது. அதிலும்கூட நான்காம் நிலை ஊழியர்களுக்கு 18 விழுக்காடுதான் உயர்வு கிடைத்துள்ளது.

விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது மிகவும் ஏமாற்றமான விஷயம்தான்.

இதைக் கண்டித்து புதன்கிழமை (மார்ச் 26) மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அடுத்தகட்டமாக அகில இந்திய அளவில் ஆலோசனை செய்து, போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
6-வது ஊதியக் குழு பரிந்துரை: “தனியாருடன் ஒப்பிடக் கூடாது’

சென்னை, மார்ச் 24: நிதித்துறை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம்:

இந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடும் வகையில் ஏதும் இல்லை. தேர்தல்கால அறிவிப்புகள் போலத்தான் இதுவும் இருக்கிறது. உயரதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு நன்றாக இருக்கிறது என்றாலும், கீழ்நிலை அலுவலர்களுக்கு அதைப் போன்ற நிலை இல்லை. அதனால் அவர்கள் போராடக் கூடிய நிலை ஏற்படுமா என்று தெரியவில்லை. நான்காம் நிலை பணியிடங்களை ஒழித்துவிட மறைமுகமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பொருத்தவரை, தனியார் துறையில் தரப்படும் ஊதியத்துடன் ஒப்பிடக் கூடாது. அரசுப் பணியில் உள்ளவரை, வீட்டு வசதி, மருத்துவ வசதி, வாகன வசதி, கல்வி வசதி போன்றவை இருப்பதை மறந்துவிடக் கூடாது. பணிக் காலத்திற்குப் பிறகு ஓய்வூதியம் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தனியார் துறையில் இதைப் போன்ற எந்த வசதியும் கிடையாது.

எனவே, அரசுத் துறையில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தனியார் துறைக்குப் போய்விடுவார்கள் என்பதில் உண்மை ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
“ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குத் தரும் சம்பளம் மிகவும் குறைவுதான்’

நமது சிறப்பு நிருபர்

சென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி பெரும்பாலான அதிகாரிகளுக்கு உயர்த்தப்படும் ஊதியத்தில் 33 சதவீதம் வருமான வரியாகப் பிடித்தம் செய்யப்பட்டுவிடும் என்பதால், அவர்களின் கைக்குக் கிடைக்கும் கூடுதல் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூறுகின்றனர்.

மத்திய அரசில் வருவாய்த் துறைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற எம்.ஆர். சிவராமன் (படம்) இதுபற்றிக் கூறியதாவது:

இப்போது உயர்த்தப்படும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் போக அரசுச் செயலாளர்களுக்கு ஏறத்தாழ ரூ.13,000 மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். அதன்படி பார்த்தால், அறிக்கையில் உள்ளவாறு நிறைய ஊதிய உயர்வு தரப்படுவதைப் போலத் தோன்றினாலும், வருமான வரி மூலமாக கணிசமான தொகை அரசுக்கே திரும்பச் சென்றுவிடும். அதனால், அரசுக்கு நிகர செலவு என்பது குறைவாகத்தான் இருக்கும்.

இயக்குநர், செயலாளர், இணைச் செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் ஏறத்தாழ 14 மணி நேரம் உழைக்கிறார்கள். நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவைகளுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டியுள்ளது. அவர்கள் மீது நிறைய பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதற்கேற்ப ஊதியம் நிர்ணயித்திருக்க வேண்டும்.

தனியார் துறையில் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தைவிட இது மிகவும் குறைவானதாகும். செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்களின் செயல்பாடுகளுக்கு ஒரு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் அல்லது ரூ.3 லட்சம் என சம்பளம் தரலாம்.

இதுபோன்ற பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கு முன்பாக, பொதுமக்கள் முன்பாக நிறுத்தி, அவரின் சொத்து விவரம், பணித் திறன் போன்றவற்றைக் கேட்டுப் பதிவு செய்யலாம். அதில் திருப்தி ஏற்பட்டால் அப் பதவிக்கு நியமிக்கலாம். தகுதி, பணித் திறன் அடிப்படையில் அதிகமான சம்பளத்தைத் தரலாம் என்பதுதான் சரியானதாக இருக்கும்.

வெளிநாடுகளில் உயரதிகாரிகளுக்கு வாகனங்கள் தரப்படுவதில்லை. இந்தியாவில் வாகனங்கள், அதற்கு ஓட்டுநர்கள் என தேவையற்ற செலவுகள் இருக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, மொத்தமாக ஒரு சம்பளத்தை உயரதிகாரிக்குக் கொடுத்துவிட்டால், வாகன ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்வார்கள். வாகனப் பராமரிப்பு போன்ற செலவுகள் அரசுக்கு மிச்சமாகும்.

மேலும், சில துறைகளில் செயலர் அந்தஸ்துக்கு மேல் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியில் இருப்பது தேவையற்றது என்று அவர் கூறினார்.

தற்போது தமிழக அரசுப் பணியில் இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறியதாவது:

15 முதல் 20 ஆண்டு வரை அனுபவம் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை சம்பளம் தருவதற்குத் தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந் நிலையில் இப்போது செயலர் அளவில் ரூ.80 ஆயிரம் என சம்பளம் நிர்ணயித்திருப்பது போதுமானதல்ல. இதில் வரிகள் பிடித்தம் போக ரூ.50 ஆயிரம் அளவுக்குதான் கைக்கு வரும். ஆக, ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருப்பதைவிட கூடுதலாக ரூ.10 ஆயிரம் மட்டுமே கிடைக்கும்.

அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, தக்க வைத்துக் கொள்வதற்கு இந்தச் சம்பள விகிதம் உதவாது. ஊதியக் குழு அறிக்கை அமலுக்கு வருவதற்காக பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இது அமலுக்கு வந்து, நிலுவைத் தொகைகள் கைக்கு வந்ததும் சில மாதங்களில் அவர்கள் விருப்ப ஓய்வு கேட்டு மனு செய்வார்கள்.

வெளியில் மாதம் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். அதிலும் பெரும் பகுதி வருமான வரி பிடித்தத்தில் வராத வகையில் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். அதனால், அதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.

20 ஆண்டு அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளியேறினால், அதிக அனுபவம் இல்லாத, புதிய அதிகாரிகளை வைத்துக் கொண்டு அரசு நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.

எனவே, அனுபவம் பெற்றவர்கள் வெளியேறாமல் தடுக்க வேண்டுமானால், தனியார் துறையில் உள்ள சம்பளத்துக்கு இணையான அளவுக்கு சம்பளம் தர அரசு முன் வர வேண்டும். ஏனெனில், 20 வருட அனுபவம் பெற்றவர்களை திடீரென உருவாக்கிட முடியாது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுத் துறையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்ப்பதே சிரமமாகிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.

—————————————————————————————————————————————————–
ஊதியக் குழு பரிந்துரை: “பண வீக்கம் அதிகரிக்கும்’

சென்னை, மார்ச் 24 : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத் தலைவருமான என். முருகன் கூறினார்.

ஊதியக் குழு பரிந்துரை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகள்:-

“”மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்ட பிறகு, விலைவாசி வெகுவாக உயர்ந்துவிட்டது. மேலும் பண வீக்கமும் 4 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக அதிகரித்துவிட்டது. ஊதியக் குழு பரிந்துரை அமலாகும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும். இது தன்னிச்சையாக ஏற்படும்.

சம்பள உயர்வு அவசியம்: இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட சம்பளக் கமிஷன்கள், விலைவாசி உயர்வு, தகுந்த ஊதிய ஊக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊதிய உயர்வு விகிதத்தை பரிந்துரை செய்தன.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் உலக தாராளமயமாக்கலுடன் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டு விட்டதாலும் தனியார் துறையில் மிக அதிக அளவு தொழிற்சாலைகள், தொழில் வாய்ப்புகள் பெருகியதாலும் அவற்றில் வேலை செய்வோருக்கு சம்பள விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன.

இதனால் பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு தனியார் வேலைக்குப் போக துணிந்து விட்டனர். அரசு வேலையில் சம்பளம் எனும் விஷயம்போக, சம்பளம் அல்லாத பல சலுகைகள் (உதாரணம்: பங்களா வசதி, வாகன வசதி உள்ளிட்டவை) இருப்பதால் கவர்ச்சி இருந்தது. ஆனால், தனியாரும் இத்தகைய வசதிகளைக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

எனவே இந்த ஊதிய உயர்வு பரிந்துரை மிகவும் தேவையான ஒன்று. இந்த ஊதிய உயர்வாவது இல்லையெனில் அரசுப் பணிக்கு திறமையானவர்கள் வர மாட்டார்கள்.

ஊதியக் குழு பரிந்துரை காரணமாக அரசுக்கு ரூ.12,561 கோடி செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. விவசாயக் கடன் ரூ.60,000 கோடி அளவுக்குத் தள்ளுபடி, வருமான வரி வரம்பை அதிகரித்தது போன்ற சலுகைகளைக் கணக்கில் கொள்ளும்போது இது ஒன்றும் பெரிய செலவு அல்ல.

குறிப்பாக இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 3.2 கோடி சம்பளதாரர்களுக்கு அளிக்கப்பட்ட வருமான வரி வரம்பு உயர்வுச் சலுகையினால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய இழப்பு ரூ.30,000 கோடி.

ஆனால், இந்த சம்பள உயர்வு பரிந்துரையைப் பார்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களது ஊழியர்களுக்கும் அதே விகிதத்தில் மாநில அரசுகள் கொடுத்து விடும். இதுதான் நமது பழைய அனுபவம்.

இவ்வாறு கொடுப்பது மாநில நிதி நிலைமையை வெகுவாகப் பாதிக்கும். ஏனெனில் மத்திய அரசின் பொருளாதார நிலை வேறு, மாநில அரசுகளின் பொருளாதார நிலை வேறு” என்றார் முருகன்.

—————————————————————————————————————————————————–

Posted in 6, Army, Bonus, Bribery, Bribes, Commission, Compensation, Corruption, defence, Defense, Deficit, Economy, employee, Employers, Employment, Females, Finance, Flexitime, Government, Govt, hikes, Hours, Income, Increases, Increments, Inflation, job, kickbacks, Ladies, Military, Navy, panel, Pay, pension, Raises, recommendations, Remuneration, retrospective, salaries, Salary, She, SriKrishna, Staff, Timings, Women | Leave a Comment »

Double decker trains and ‘Own Your Coach’ schemes in new budget likely

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

இரட்டை அடுக்கு ரயில்கள் அறிமுகமாகின்றன! 2007-08 பட்ஜெட்டில் அறிவிக்கிறார்- லாலு

புது தில்லி, பிப். 12: பயணிகள் நெரிசல் அதிகம் உள்ள மார்க்கங்களில் இரட்டை அடுக்கு ரயில் சேவையை அறிமுகப்படுத்த அமைச்சர் லாலு பிரசாத் திட்டமிட்டிருக்கிறார்.

சரக்கு ரயில்களில், “”உங்கள் பெட்டியைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக, சுற்றுலாத்துறையில் உள்ள தனியார் டூர் ஆபரேட்டர்களும், நிறுவனங்களும் தங்களுக்கென்றே தனியாக பயன்படுத்த “”உங்கள் ரயிலை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறார் லாலு.

அத்துடன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், அவர்கள் பார்க்க விரும்பும் இடங்களை ஒரே டூரில் சேர்ந்தார் போல பார்க்கவும் சிறப்பு திட்டங்கள் அமலாகவிருக்கின்றன.

உள்நாட்டு ரயில் பயணிகளும் வெளிநாட்டு ரயில் பயணிகளும் வாய்க்கு ருசியாகவும் சுகாதாரமாகவும் நல்ல தின்பண்டங்கள், சிற்றுண்டி, உணவு ஆகியவற்றைச் சாப்பிட, “பட்ஜெட் ஹோட்டல்களை’ கட்டி, நிர்வகித்து, சிறிதுகாலம் பொறுத்து ரயில்வே வசம் ஒப்படைக்கும் திட்டத்தை சிறந்த தனியார் நிறுவனங்களைக் கொண்டு நிறைவேற்ற திட்டமிட்டிருக்கிறார் லாலு.

இம் மாதம் 26-ம் தேதி 2007-08-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பிக்கிறார் லாலு பிரசாத். பட்ஜெட் குறித்து ரயில்வே பவன் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

“ரயில்களில் பயணக் கட்டணமோ, சரக்குக் கட்டணமோ, சீசன் கட்டணமோ அதிகரிக்கப்படமாட்டாது. அதே சமயம் சில கட்டண விகிதங்கள் சீரமைக்கப்படலாம்.

சில மார்க்கங்களில் ஆண்டு முழுக்க பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயில்களில் 24 பெட்டிகளுக்கு மேல் இணைத்து ஓட்ட முடிவதில்லை. எனவே இருக்கும் பெட்டிகளிலேயே படுக்கை, இருக்கை வசதிகளை அதிகப்படுத்த, இரட்டை அடுக்கு ரயில் பெட்டிகளைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

படுக்கை வசதி கீழ் தளத்திலும், உட்கார்ந்தே பயணம் செய்யும் வசதி (சேர்-கார்) மேல் தளத்திலும் இருக்குமாறு பெட்டிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பெüத்த தலங்களுக்கு சிறப்பு ரயில்கள்: புத்தர் பிறந்து 2,500 ஆண்டுகள் ஆனதையொட்டி அவர் பிறந்த இடம், அவருடைய வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்த இடம், அவர் புனிதப்பயணம் சென்ற தலங்கள் போன்றவற்றை ஒரு சேர பார்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

வரலாற்று ரீதியான, கலாசார ரீதியான சுற்றுலாப் பயணங்களுக்கென்று தனித்தனி ரயில்கள் விடப்படும். ரயில்கள் செல்லும் இடங்களுக்கு ஏற்றவாறு ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு, உள் அலங்காரம், பணியாளர்களின் சீருடைகள் போன்றவை இருக்கும்.

தில்லி-ஆக்ரா, தில்லி-ஜெய்பூர், தில்லி-ஸ்ரீநகர் மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் விடப்படும். உத்தரப் பிரதேசத்திலும் பிகாரிலும் உள்ள புத்த தலங்களுக்கு தனி ரயில் விடப்படும். இதில் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ரயில்வேதுறை செயல்படும்.

90 நாள்களுக்கு முன்னதாகவே முன்பதிவு: வெளியூர் பயணம் செய்ய முன்கூட்டியே திட்டமிடுகிறவர்கள் வசதிக்காக, 90 நாள்களுக்கு முன்னதாகவே டிக்கெட் வழங்கும் திட்டம் அமலுக்கு வரவிருக்கிறது. இதில் ரயில்வேதுறைக்கு நல்ல வருவாய் கிடைக்கவிருக்கிறது.

உபரி ரூ.20,000 கோடி: ரயில்வேயின் வருவாய் பெருகியதால் ரூ.20,000 கோடிக்கு உபரி இருக்கிறது. இது மார்ச் 31-ம் தேதிவரை நீடிக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரயில் ஊழியர்களுக்கு ரூ.37 கோடி பரிசு

பாட்னா, மார்ச் 2: இருபதாயிரம் கோடி ரூபாய் உபரி வருமானம் பெற உதவிய ரயில்வே ஊழியர்களைப் பாராட்டி அமைச்சர் லாலு பிரசாத் ஹோலிப் பரிசாக ரூ.37 கோடியை வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார்.

நாலாவது பிரிவு ரயில்வே ஊழியர்களுக்கு தலா 400 ரூபாய் ரொக்கம் தரப்படும். அவர்களுடைய நல நிதியில் (ஸ்டாஃப் பெனிஃபிட் பண்ட்) தலா ரூ.100 சேர்க்கப்படும். இதர அலுவலர்களுக்கும் ரொக்கப் பரிசு உண்டு.

ரயில் பெட்டிகளில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை நிறுவ நடவடிக்கை

புதுதில்லி, மார்ச் 2: சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை ரயில்களில் நிறுவ உள்ளது ரயில்வே. இதற்காக தற்போதைக்கு ரூ.3 கோடியில் 80 கழிப்பறைகள் நிறுவப்பட உள்ளன. அதற்குரிய ஆர்டர் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது.

மக்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரயில்வே துணை அமைச்சர் ஆர்.வேலு இதனைத் தெரிவித்தார்.

================================================

முக்கிய நகரங்களை இணைக்க அதிவேக பயணிகள் ரயில் சேவை: ரயில்வே துறை திட்டம்

புதுதில்லி, ஏப். 2: முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக பயணிகள் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள முக்கியமான நகரப்பகுதிகளை இணைப்பதில் இந்திய ரயில்வே முனைப்பு காட்டி வருகிறது. 600 முதல் 1,000 கி.மீ. வரையிலான தூரத்தை இரண்டரை முதல் நான்கு மணி நேரங்களில் கடக்கும் வகையில் அதிக வேக ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்திட்டத்தை அரசும் தனியாரும் இணைந்து செயல்படுத்துதல் உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.

சரக்குப் போக்குவரத்துக்கென முக்கியமான 4 வழித்தடங்களான தில்லி-மும்பை, தில்லி-கோல்கத்தா, சென்னை-கோல்கத்தா, மும்பை-சென்னை ஆகியவற்றை இணைக்கும் வகையில் தனி ரயில்பாதைகளை அமைக்க ரயில்வே ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. அவற்றில் தில்லி-மும்பை, தில்லி-சென்னை ஆகிய தனி சரக்கு ரயில் பாதைகள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்த திட்டங்களுக்கு ஜப்பான் கடனுதவியும், தொழில்நுட்ப உதவியும் வழங்க முன்வந்துள்ளது. இருப்பினும், அரசும் தனியாரும் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றும் சாத்தியக்கூறும் உள்ளது.

ரயிலுக்கு தேவையான என்ஜின்கள், பெட்டிகள், சரக்கு வேகன்கள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்தவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ரயில் பெட்டிகளின் தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள வித்தியாசத்தை குறைக்கும் வகையில் சென்னை பெரம்பூரில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை ஆகிய நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும். மேலும் அரசும் தனியாரும் இணைந்து புதிய ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலை உருவாக்கப்படும்.

ஏப்.06 முதல் பிப். 07 இடைப்பட்ட காலத்தில் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் இலக்கைக் காட்டிலும் 24 பெட்டிகள் கூடுதலாக 1,110 பெட்டிகளும், கபூர்தலாவில் 4 பெட்டிகள் கூடுதலாக 1,164 பெட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டன.

11வது திட்ட காலத்தில் மின்சாரம், டீசலில் இயங்கும் என்ஜின்களின் தேவை 1,800 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 360 என்ஜின்கள் தேவை.

ஆனால் தற்போது ஆண்டுக்கு 150 என்ஜின்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

அதை 200 ஆக அதிகரிக்க முடியும். எஞ்சியுள்ள தேவையை பூர்த்தி செய்ய புதிய தொழிற்சாலையை உருவாக்க வேண்டியது அவசியம்.

கடந்த ஆண்டு டீசல் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையில் 175 என்ஜின்களும், சித்தரஞ்சனில் உள்ள மின்சார ரயில் என்ஜின் உற்பத்தி நிறுவனத்தில் 133 ரயில் என்ஜின்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

Posted in 2007, Analysis, Bombay, Bonus, Buddhism, Budget, Calcutta, Carriage, Chennai, City, Coach, Crap, Delhi, Double decker, Economy, Engines, Environment, Express, Finance, Freight, Goods, Guide Operator, human waste, Hygiene, ICF, Incentives, Interlink, Japan, Kapurthala, Kolkata, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Loans, Madras, Manufacturing, Ministry, Mumbai, New Delhi, Own Your Coach, passenger, Perambur, Piss, Pollution, Predictions, Preview, Public-Private-Partnership, Railways, Reservation, Restrooms, Safety, Schemes, Security, Shit, Smell, Superfast, Toilets, Tour, Trains, Transportation, Travel, Urin, Urine, Velu, Waste | 1 Comment »