மோதல்கள், ஆட்கடத்தல்கள் குறித்து இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு கவலை
வடக்கு இலங்கை மோதல்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்கள் காணாமல் போதல் ஆகியவை குறித்து, டிசம்பர் மாதம் 16 ஆம் திகதியுடன் முடிவடையும் வாரத்துக்கான தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு, அவை குறித்து கவலையும் வெளியிட்டுள்ளது.
![]() |
![]() |
மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு மற்றும் அடம்பனுக்கு அருகில் உள்ள பகுதிகளிலும் மற்றும் யாழ் குடாநாட்டின் முகமாலையிலும் இடம்பெற்ற கடுமையான மோதல்கள் குறித்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் பெருமளவு மக்கள் பாதுகாப்புக் கோரி மனித உரிமைகள் ஆணையத்தில் தஞ்சம் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மன்னார் மற்றும் வவுனியா மோதல்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு, வன்னியில் இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத்தாக்குதல் காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுளமுனை மகாவித்தியாலயம் மற்றும் அலம்பில் றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலயம் ஆகியவற்றில் இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இந்தப் பரீட்சையில் சுமார் 300 மாணவர்கள் தேற்றியிருந்தனர்.
அதேவேளை கிழக்கு மாகாணத்தில் ஆட்கள் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
கிழக்கு பிராந்தியத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் உட்பட 11 பேர் இந்த காலகட்டத்தில் கடத்தப்பட்டதாகவும், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பை அடுத்து அந்த மூன்று பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆட்கடத்தல்கள் சில தொடர்பில் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் எனப்படும் கருணா அணியினர் சப்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுவதாகவும் கண்காணிப்புக்குழு கூறியுள்ளது.
தாம் கடத்திய சிலருக்கு இந்த அணியினர் ஆயுதங்களை கொடுத்து பலவந்தமாக ரோந்தில் ஈடுபடப் பணித்ததாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்று கண்காணிப்புக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் கருணா அணியின் தலைவரான கருணா, லண்டனில் கைது செய்யப்பட்டதை அடுத்து, பிள்ளையான் மற்றும் கருணா பிரிவினருக்கு இடையே கிழக்கு மாகாணத்தில் மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
வவுனியா, மன்னார், வெலிஓயா, முகமாலை பிரதேசங்களில் கடும் மோதல்
![]() |
![]() |
இலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், விடுதலைப் புலிகளுடன் மோதல்களில் ஈடுபட்ட படையினரில் இராணுவச் சிப்பாய் ஒருவர் முகாமுக்குத் திரும்பவில்லை என்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
வவுனியா, மன்னார், வெலிஓயா, முகமாலை பிரதேசங்களில் உள்ள இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
மன்னார் மற்றும் யாழ் முன்னரங்கப் பகுதிகளில் புதன்கிழமை இராணுவத்தினருடன் ஏற்பட்ட சண்டைகளில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
வவுனியா தாலிக்குளம் பகுதிக்கு வாகனம் ஒன்றில் சென்றபோது, அடையாளம் தெரியாதவர்களினால் கடந்த புதன்கிழமை கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் ஒருவரது சடலம் வாரிக்குட்டியூர் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர் கண்டி பகுதியைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பான புலன் விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பெய்த அடைமழை இன்று ஒய்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் கிளிநொச்சி கல்லாறு மற்றும் கண்டாவளை பகுதிகளில் பெய்த அடைமழை காரணமாக 400 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அப்பிரதேச வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், இதனால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கை படையினரின் குறுக்கீடின்றி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வழிவேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை
![]() |
![]() |
தமிழக மீனவர்கள், இலங்கை பாதுகாப்புப் படையினரின் குறுக்கீடுகள் இல்லாமல், இந்தியக் கடற்படையின் பாதுகாப்புடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று புதுடெல்லியில் நடந்த மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கருணாநிதியின் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக, கருணாநிதி இந்த மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை. அவரது சார்பில், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு, முதல்வரின் உரையை வாசித்தார்.
இந்திய மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நடப்பு ஆண்டில் இந்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்ட 26 தாக்குதல் நிகழ்வுகளில் 8 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 13 பேர் காயமடைந்திருக்கிறார்கள் என்று கருணாநிதியின் உரையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
தெளிவாக எல்லை வரையறுக்கப்பட்ட பகுதிகளில், இலங்கைப் படையின் குறுக்கீடு இல்லாமல், இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிப்பதில் உள்ள பாரம்பரிய உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது. இதில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்வது, கடல் பகுதியில் மனிதர்களாலும், பிற பொருள்களாலும் சட்டத்துக்குப் புறம்பாக நடைபெறும் எந்த ஒரு நடவடிக்கையையும் கட்டுப்படுத்துவதற்கு உதவும் என கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அகதிகள் வருகை, தமிழகத்தால் எதிர்கொள்ளப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்றாக வடிவெடுத்துள்ளதாக கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 1983-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இதுவரை நான்கு கட்டங்களில் தமிழகத்துக்கு வந்த 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள், 25 மாவட்டங்களில் உள்ள 117 முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
இலங்கை அகதிகளுக்காக மாநில அரசு செலவிடும் தொகையை மத்திய அரசு திருப்பித்தர வேண்டும் என்றும், அகதிகளுக்காக கிலோ 57 காசு என்ற மானிய விலையில் அரிசி வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.