மூலிகை மூலை: இரத்தக்கொதிப்புக்கு நெல்லி
விஜயராஜன்
மிகச்சிறிய இலைகளையும் இளம் மஞ்சள் நிறக் காய்களையும் உடைய மர வகையைச் சேர்ந்ததாகும் நெல்லி. காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகளைக் கொண்டது. இலை, காய், வற்றல் மருத்துவக் குணமுடையது. இஃது ஒரு கற்ப மருத்துவக் குணம் உடையது. காய் வெப்பத்தை அகற்றும், சிறுநீரை பெருக்கும், மலச்சிக்கலைப் போக்கும், குடல்வாயுவை அகற்றும். வேர், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். நெல்லி வற்றல் குளிர்ச்சியை உண்டாக்கி உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். தமிழகம் எங்கும் காடுகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றன.
இதன் வேறுபெயர்கள்: அத்தகோரம், அந்தகோளம், அமுதம், ஆமலகம், அந்தோர்.
வகை: அரிநெல்லிக்காய்.
ஆங்கிலப் பெயர்: phyllamthus emblica, Linn, Euphorbiaceae
மருத்துவக் குணங்கள்:
நெல்லிக்காய்ச் சாறு, தேன், எலுமிச்சப்பழச் சாறு வகைக்கு 15 மில்லியளவு எடுத்துக் கலந்து காலையில் மட்டும் குடித்து வர மதுமேகம் குணமாகும்.
நெல்லிக்காய்ச் சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரை லிட்டர், செவ்விளநீர் 2 லிட்டர், நல்லெண்ணெய் ஒன்றரை லிட்டர் கலந்து அதில் அதிமதுரம் ஏலம், கோசுட்டம், பூலாய்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய், சாதி பத்திரி, திரிகடுகு, தான்றிக்காய், கடுக்காய்த் தோல் வகைக்கு 15 கிராம் எடுத்து இடித்துப் பொடி செய்து கலந்து சிறுதீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் 2 முறை தலைமுழுகி வர கண் காசம், காமாலை, மாலைக்கண், பொடுகு, முடி உதிர்தல் குணமாகும்.
நெல்லி வற்றல் 2 கிலோ எடுத்து 4 லிட்டர் நீரில் அரை கிலோ சர்க்கரை சேர்த்துப் பாகாக்கி அதில் திரிகடுகு வகைக்கு 30 கிராம், கிராம்பு, ஏலம், வெற்றிலை, குங்குலியம், கற்பூரம், வாய் விளங்கம், அதிமதுரம், கூகை நீறு, கொத்தமல்லி, சீரகம், ஓமம் வகைக்கு 10 கிராம் எடுத்து பொடி செய்து போட்டுக் கிளறி, நெய் அரைலிட்டர் சேர்த்து இறக்கவும். கழற்சிக்காய் அளவு 2 வேளை சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்து வர மேகச்சூடு, எலும்பைப் பற்றிய காய்ச்சல், என்புருக்கி, இருமல், ஈழை, காசம், வாயு, கபம், பீனிசம், பொருமல் குணம் ஆகும்.
நெல்லி இலையை நீரில் கைப்பிடியளவு போட்டுக் காய்ச்சி வடிகட்டிக் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும்.
நெல்லி வேர்ப்பட்டையைத் தேனில் தோய்த்து தடவ நாக்குப் புண் குணமாகும்.
நெல்லி வற்றலும், பச்சை பயறும் வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியாக 2 வேளை குடித்து வர தலைச்சுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு குணமாகும்.
நெல்லிக்காயை 15 கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி தேன் 20 மில்லி கலந்து 40 மில்லியாக 3 வேளை 4 நாள்கள் குடித்து வர மிகுந்த பித்தம் தணியும்.
நெல்லி வற்றல் கியாழம் வைத்து 100 மில்லியளவு எடுத்து சிறிது சர்க்கரை கலந்து ஒரு டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர பித்தசூடு, ஆண் குறியில் சிறு கொப்பளம், வாந்தி, அரோசகம் குணமாகும்.