ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பித்தம் – சுத்தம்!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
எனக்குப் பித்தப்பை (Gall bladder) கற்கள் சேர்க்கையால் ஆபரேஷன் மூலம் எடுக்கப்பட்டது. இந்த நிலைமையில் பித்தநீர் எப்படிச் சுரக்கிறது அல்லது சுரக்கவில்லையா என்று எனக்குத் தெரியவில்லை. மீண்டும் பித்தநீர் சுரக்க வழிமுறை என்ன? எனக்கு அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கழுத்து எலும்பு தேய்மான உபாதைகளும் உள்ளன. எடை 82 கிலோ. எடையைக் குறைக்க வேண்டும். வயது 63.
தா.விஷ்ணு கஜேந்திரன், புதுவை.
பித்தநீர் சுரப்பை கல்லீரல்தான் செய்கிறது. கல்லீரலின் சீரான செயல்பாடுகளின் மூலம் பித்தநீர் சரியான அளவில் குடலுக்குள் சென்று நாம் சாப்பிடும் உணவைச் செரிக்கச் செய்கிறது. பித்தநீர் சுரப்பை கல்லீரலின் வழியாகப் பெற ஒரு பல் பூண்டை நசுக்கி ஒரு டீ ஸ்பூன் (5 மிலி) ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து இரவில் படுக்கும் முன் தொடர்ந்து 14 நாள்கள் சாப்பிட ஏதுவாகும். அதுபோலவே எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து, சூடான சாதத்தில் சேர்த்து, காலையில் முதல் உணவாகச் சாப்பிட கல்லீரல் செயல்பாடுகள் அனைத்தும் மேம்படும். ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜூஸýடன் ஒரு டீ ஸ்பூன் கற்றாழைச்சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து ஒரு நாளில் 3 வேளை வெறும் வயிற்றில் சாப்பிட, கல்லீரலின் உட்புற குழாய்கள் அனைத்தும் சுத்தமடைவதுடன் அதன் வேலைத்திறனும் சுறுசுறுப்பாகும்.
பித்தநீர் பற்றிய ஆராய்ச்சிகள் பலவும் இன்று நவீன மருத்துவத்தில் செய்யப்பட்டிருந்தாலும், ஆயுர்வேதம் பசித் தீயை ஒரு “வ்ரீஹி பிரமாணம்’ அதாவது “நெல்மணி அளவே’ எனும் ஆச்சரியமான ஒரு தகவலைக் குறிப்பிடுகிறது. ஆத்மாவை எந்த ஆராய்ச்சியின் வழியாகவும் நவீன விஞ்ஞானத்தின் மூலம் அறிய முடியவில்லை. அதுபோலவே இந்த நெல்மணி அளவிலான ஒரு சுடரை நம்மில் இறைவன் மறைத்து வைத்திருக்கிறார் போலும். மனிதனின் மரணத்தில் இந்தச் சுடர் அணைந்து விடுகிறது. அதனால் உடல் சில்லிட்டு விடுகிறது. உயிருள்ள நிலையில் இந்தச் சுடர் வழியாகத்தான் பித்த நீர் சுரக்கிறது. பஞ்சமஹாபூதங்களில் வாயுவும், ஆகாயமும், அதிக அளவில் சேரும் பொருட்களால் வாயு தோஷமும், நெருப்பை அதிக அளவில் கொண்டுள்ள பொருட்கள் மற்றும் செய்கைகளால் பித்ததோஷமும், நிலம் மற்றும் நீரின் அம்சம் அதிகம் கொண்டுள்ள பொருட்களாலும் செய்கைகளாலும் கபதோஷமும் பாதுகாக்கப்படுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.
உங்கள் விஷயத்தில், கல்லீரலின் பாதுகாப்பு மிகவும் அவசியமாகும். சர்க்கரை உபாதையும் தங்களுக்கு இருப்பதால் நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் பாகற்காய் சாறு குடிப்பதால் உங்களுக்கு இரு நன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதுடன், கல்லீரல் பித்தநீர் சுரப்பும் நன்றாக இருக்கும்.
கசப்பும் துவர்ப்புச் சுவையும் கொண்ட மணத்தக்காளிக் கீரை, சுண்டைக்காய், அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, வாழைப்பூ போன்றவை நீங்கள் அதிகம் உணவில் சேர்க்க உடல் பருமன் குறைவதுடன் சர்க்கரையின் அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும். ரத்த அழுத்தம் சீராகும். ஆனால் இந்த இரு சுவைகளால் உடலில் வாயுவின் சீற்றம் அதிகரிக்கக்கூடும். கழுத்து எலும்பு தேய்மானத்திற்கு இந்தச் சுவைகள் அனுகூலமானவை அல்ல. அதனால் தேய்மானம் மேலும் வளராமலிருக்க, கழுத்துப் பகுதி எலும்புத் குருத்தில் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய் ஆகியவற்றை 4:2:1 என்ற விகிதத்தில் கலந்து இளஞ்சூடாகத் தடவி ஒரு மணி நேரம் ஊறவிடவும். அதன் பின்னர் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து துடைத்துவிடவும். கல்லீரல் வேலைத் திறன் மேம்பட, உயர் ரத்த அழுத்தம் குறைய சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்த, உடல் இளைக்க நீங்கள் ஆயுர்வேத மருந்தாகிய வாஸôகுடூச்யாதி கஷாயம் சாப்பிடவும். 15 மிலி கஷாயம் + 60 மிலி கொதித்து ஆறிய தண்ணீர் + 2 சொட்டு சுத்தமான தேன், காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். சாப்பிட்ட இந்த மருந்து ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். அதன் பின்னர் பாகற்காய் ஜூஸ் அருந்தலாம்.