சடங்கு: சுகன்யாவாகிய நான்…
திரு
சென்னை, ஜி.எஸ்.டி. சாலையிலிருக்கும் அந்த சுமாரான திருமண மண்டபத்திற்குள், கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருந்தனர் அரவாணிகள். அவர்கள் மட்டுமல்ல ஆண்களும், பெண்களும் கூட பெருமளவில் திரண்டிருந்தனர் அந்த மண்டபத்திற்குள். யார் வீட்டில் என்ன விசேஷம்? என்று கூட்டத்திலிருப்பவர்களிடம் கேட்டோம். “”சந்தோஷிமாதாவுக்குப் பால் ஊத்துற விழா நடக்குது” என்றனர் கோரஸôக. “”விழாவின் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே…” என்றோம். “”எதுக்கு இந்த விழான்னு தெரிஞ்சா இன்னமும் வித்தியாசமா இருக்கும்?” என்ற சிலர் நம்மை, அந்தப் பகுதியிலிருக்கும் அரவாணிகளின் தலைவியிடம் அழைத்துச் சென்றனர். ராஜேஸ்வரி என்னும் அவர் நம்மிடம் பேசியதிலிருந்து…
“”துளிர்’ அறக்கட்டளையின் மூலமாக எயிட்ஸ் விழிப்புணர்வு பிரசாரங்களை மிகவும் பின்தங்கிய மக்களின் இடங்களுக்கே சென்று செய்து வருகிறோம். சமூகத்தில் எங்களுக்கான உரிமைகளுக்காக போராடும் அதேவேளையில், எயிட்ஸôல் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் கருணையோடு அணுகவேண்டியதின் அவசியத்தையும் மக்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
இந்த விழா எதற்காக என்பதைச் சொல்லுகிறேன். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சுகன்யா, ஹேமா, சத்யா, சிவகாமி ஆகியோர் தங்களை முழுமையாகப் பெண்ணாக மாற்றிக் கொள்வதற்கான அறுவை சிகிச்சையை செய்துகொண்டனர். ஏறக்குறைய பதினைந்தாயிரம் ரூபாய் செலவாகும் இந்த அறுவைச் சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் தான் செய்துகொண்டிருக்கிறோம். அரசு பொது மருத்துவமனைகளில் இலவசமாக செய்து கொள்ளும் வசதி இனிமேல் வரும் என்கிறார்கள். இந்த அறுவைச் சிகிச்சை எங்களைப் பொறுத்தவரை ஜீவமரணப் போராட்டம். இதில் நல்லபடியாக அறுவைச் சிகிச்சை முடிந்து, 40 நாட்களுக்குப் பிறகு எங்கள் சமூகத்தில் செய்யப்படும் சடங்கு நிகழ்ச்சிதான் இந்த “பால் ஊத்துற விழா’. சந்தோஷிமாதா தெய்வத்திற்கு 21 இனிப்புகளைக் கொண்டு படையல் போடுவோம். பெண்ணாக மாறியவர்கள், மூத்த அரவாணிகளிலிருந்து தங்களின் மாமியாரைத் தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாமியார்கள் தங்கள் மருமகள்களுக்கு புதுத் துணி, நகைகள், அணிந்து சீர் செய்வார்கள். காலம்காலமாக நடக்கும் இந்த பாலூத்தற விழாவை எங்கள் சமூகத்திற்குள்தான் நடத்திக் கொள்வோம். இந்த விழாவிற்கு எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கூட வந்திருந்தனர். சமூகத்தோடு எங்களின் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்குக் கிடைத்த வாய்ப்பாகத்தான் இந்த விழாவை நான் பார்க்கிறேன்” என்றார் ராஜேஸ்வரி.
“”இந்த விழா எங்களின் குலக் கடவுளான சந்தோஷிமாதாவுக்கு நன்றி செலுத்தும் விழா. இருபத்திரண்டு வயதில் நான் மீண்டும் பிறந்ததைப் போல் உணர்கிறேன். என்ன பாக்கறீங்க? சுகன்யாவாகிய நான் பிறந்து 40 நாள்தான் ஆகிறது!” என்றார் பெண்ணுக்கேயுரிய நாணத்துடன் சுகன்யா.