Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Bio’ Category

Influenza, Flu – Illness, Symptoms, Transmission, Diagnosis & Treatment

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2007

ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளும் – சிகிச்சையும்

ஃப்ளூ என்று பொதுவாக அழைக்கப்படும் இன்ஃப்ளூயன்சா என்பது ஒரு வைரஸ் காய்ச்சல். இது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகளைத் தாக்குகிறது.

மூச்சுக் குழல் எனப்படும் சுவாசக் குழலைப் பாதிக்கும் மற்ற வைரஸ்களைவிட இன்ஃப்ளூயன்சா வைரஸ், தீவிரமாக நோய்க் கிருமிகளையும், சிக்கல் நிறைந்த நோய்த்தன்மையையும் கொண்டது. இன்ஃப்ளூயன்சா ஏ, பி மற்றும் சி ஆகிய 3 வைரஸ்களால் இந்த காய்ச்சல் ஏற்படலாம். இதில் ஏ ரக வைரஸ் பரவலாக தொற்றக் கூடியது, இது தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.

இந்த ஏ டைப் வைரஸ் சீரான முறையில் வளர்ந்து சில ஆண்டு களுக்கு ஒரு முறை தொற்று நோய்ப் பரவலை ஏற்படுத்தக் கூடியது. இதில் டைப் பி, டைப் சி வைரஸ்களால் சிறு சிறு உபாதைகளே தோன்றி மறையும்.

இன்ஃப்ளூயன்சாவிற்கு வயது வித்தியாசமோ, வயது வரம்போ கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும், எப்போதும் இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்படலாம். பொதுவாக குளிர்காலத்திலேயே இந்தவகை வைரஸ் காய்ச்சல் தொற்றக்கூடியது. இந்த காய்ச்சல் ஏற்பட்டோரின் இருமல், சளி ஆகியவை மூலம் இது பிறருக்கும் தொற்றுகிறது.
இன்ஃப்ளூயன்சா திடீரென, உடனடியாகத் தோன்றும். முதலில் அதிக காய்ச்சல், குளிர், வேர்வை, தசை வலி மற்றும் தலைவலி போன்ற தொடக்க அறிகுறிகள் ஏற்படும். தொடர்ந்து மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை கட்டு மற்றும் சூரிய ஒளிக்கு ஒத்துக் கொள் ளாமல் கண்ணீர் வழியும் கண்கள் என்று இதன் நோய் அறிகுறிகள் விரிவடையும். இந்த உடனடி தீவிர அறிகுறிகள் சாதாரணமாக 3 அல்லது 5 நாட்களுக்கு இருக்கும், பொதுவாக 48 மணி நேரத்தில் நோய்க்கூறுகள் அதிகரிக்கத் தொடங்கும்.
ஃப்ளூ வைரஸ்களால் கூடுதலாக, எலும்பு உட்புழை, காது மற்றும் மூச்சுக்குழல் ஆகியவற்றில் தொற்றுக் கிருமிகள் ஏற்படுகின்றன. சில சமயம் ஃப்ளூவால் நியுமோனியா ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. நியுமோனியாவானது இன்ஃப்ளூயன்சா வைரசால் மட்டுமோ அல்லது இரண்டாம் கட்ட நோய்க்கிருமிக்கு காரணமாகும் பாக்டீரியாவாலோ தோன்றலாம்.

அறிகுறிகள்

  • 104 டிகிரி வரை காய்ச்சல்
  • தலைவலி
  • தசைவலி மற்றும் பிடிப்பு
  • மூக்கிலிருந்து தண்ணீர் போல் சளி வருதல்
  • இருமல்
  • மூச்சு விடுதலில் சிரமம்
  • நடுக்கம்
  • தளர்ச்சி
  • வியர்வை
  • பசியின்மை
  • மூக்கடைப்பு
  • தொண்டைக்கட்டு

இது சாதாரண ஃப்ளூ காய்ச்சலாக இருந்தால் மருத்துவர்கள் காய்ச்சல் எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளைக் கொடுத்து கட்டுப்படுத்துவர். ஆனால் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், வயதானவர்கள், இருதயம், நுரையீரல் மற்றும் கிட்னி ஆகியவற்றில் நீண்ட நாளைய பழுது இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் இருப்பது 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டால் அமான்ட டின், ரிமான் டடின் ஆகிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப் படுவது இயல்பு.
குழந்தைகளை இந்த வைரஸ் நோய் தாக்கினால் சிகிச்சை பொதுவாக தேவையில்லை என்று கருதப்படுகிறது. ஆனால் இதன் மூலம் வேறு நோய்கள், வேறு உறுப்புகளில் பழுது என்ற நிலை தோன்றுவதுபோல் தென்பட்டால் சிகிச்சை அவசியம் தேவைப்படும். குழந்தைகளுக்கு ஆஸ்ப்ரின் கொடுக்கக் கூடாது, ஏனெனில் இது ஆபத்து மிகுந்தது. ஆஸ்ப்ரினுக்கும் சுநலந’ள ளலனேசடிஅந என்ற புது வகை ஃப்ளூவிற்குமான தொடர்பு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் அவசியம்.
அதிக திரவங்களை உட்கொண்டால் எலும்பு உட்புழை மற்றும் நுரையீரலில் உள்ள சளிச்சவ்வு மெலிதடைந்து உடலிலிருந்து விரைவில் வெளியேறும்.
பொதுவாக இன்ஃப்ளூயன்சா காய்ச்சலை குறைக்காமல் அதன் முழுக்காலத்தை கடக்கவிடுவதே சிறந்தது. ஆனால் குழந்தை களுக்கும், வயதானவர்களுக்கும் சிகிச்சை அவசியம் தேவை. இது பிறருக்கு தொற்றாமல் இருக்க பாக்டீரியா – தடுப்பு சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கை கழுவுதல் நலம்.
பிற உறுப்புகளில் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா தாக்கினால், மேலும் சிக்கல் நிறைந்த நோய்களை உருவாக்க வாய்ப்பிருக்கிறது என்பது தவிர இதனால் பெரும் ஆபத்து எதுவும் இல்லை.
ஆரோக்கியமாக இருந்து வரும் நபர்களுக்கு இன்ஃப்ளூயன்சா 7 முதல் 10 நாட்களில் குணமாகி விடும். வயதானவர்கள், உடல் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், நீண்ட நாள் இருதய, கிட்னி மற்றும் நுரையீரல் நோய் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் மேலும் ஆபத்தானதாக மாறுவதற்குக் கூட வாய்ப்புகள் அதிகம்.

Posted in Advice, Antibody, bacterial, Bio, Care, Cold, Congestion, diagnosis, Doc, Doctor, Fever, Flu, Health, Illness, Immune, immunity, Infection, Influenza, medical, Medicine, Science, Shot, Sick, Symptoms, Transmission, Treatment, Viral, Virus, Wellness | Leave a Comment »

British novelist Doris Lessing wins Nobel Literature Prize

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

பிரிட்டன் நாவலாசிரியைக்கு இலக்கிய நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம், அக். 12: பிரிட்டனைச் சேர்ந்த பெண் நாவலாசிரியர் டோரிஸ் லெஸ்ஸிங் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலக்கியத்துக்கான நோபல்பரிசைப் பெறும் 11-வது பெண் இவர். “நாகரிகமயத்தைப் பகுத்தறியும் கடவுள் மறுப்பு, உத்வேகம், தொலைநோக்குத் திறன் கொண்ட பெண்ணியவாதி’ என்று நோபல் கமிட்டி இவரைப் பற்றிக் கூறியுள்ளது.

1962-ல் வெளியான “தி கோல்டன் நோட்புக்’ என்ற இவரது புத்தகம் இவரை பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பவராக அடையாளம் காட்டியது. எனினும் தனக்கு இதுபோன்ற அடையாளங்கள் வழங்கப்படுவதை விரும்பாத அவர், தனது படைப்புகளுக்கு அரசியலில் எந்தப் பங்கும் இல்லை என்று கூறிவந்தார்.

தி கிராஸ் இஸ் சிங்கிங், தி குட் டெரரிஸ்ட், எ மேன் கேவ் டூ உமென் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். கம்யூனிசம், சூஃபியிசம் உள்ளிட்ட பல்வேறு சிந்தாந்தங்களின் தாக்கங்கள் அவரது படைப்புகளில் இருக்கும்.

டோரிஸ் லெஸ்ஸிங்

ஈரானில் உள்ள கெர்மான்ஷா நகரில் 1919-ம் ஆண்டு டோரிஸ் லெஸ்ஸிங் பிறந்தார். இவரது தந்தை ராணுவ வீரர்; தாய் ஒரு நர்ஸ்.

பண்ணை ஒன்றில் பணிபுரிவதற்காக அவரது குடும்பம் 1927-ஆம் ஆண்டு வடக்கு ரொடீஷியாவுக்கு (தற்போது ஜிம்பாப்வே) குடிபெயர்ந்தது.

சாலிஸ்பரி நகரில் (தற்போது ஹராரே) உள்ள ரோமன் கத்தோலிக்க பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கிய அவர், தனது 13-வது வயதில் பள்ளியைவிட்டு விலகி சுயமாகப் படிக்கத் தொடங்கினார். டெலிபோன் ஆபரேட்டர், நர்ஸ் என பல்வேறு பணிகளைச் செய்தார்.

1939-ம் ஆண்டு ஃபிராங்க் விஸ்டம் என்பவரைத் திருமணம் செய்தார். அவர் மூலமாக 2 குழந்தைகளுக்குத் தாயான டோரிஸ், 1943-ல் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார். அதன் பிறகு காட்ஃபிரைட் லெஸ்ஸிங் என்ற அரசியல்வாதியைத் திருமணம் செய்த டோரிஸ், 1949-ல் அவரையும் விவாகரத்து செய்தார். அதன் பிறகுதான் “தி கிராஸ் இஸ் சிங்கிங்’ என்ற தனது முதல் நாவலை டோரிஸ் எழுதினார்.

“தி கிராஸ் இஸ் சிங்கிங்’

1950 வெளியான டோரிஸின் முதல் நாவல் இது. ஆப்பிரிக்காவில் கறுப்பு இனத்தவர் மீது வெள்ளை இனத்தவரின் அடக்குமுறை குறித்து விளக்கும் நாவல். இந்த கதை முழுவதும் ஜிம்பாப்வேயில் நடப்பதாக எழுதப்பட்டது.

“தி கோல்டன் நோட்புக்’

1962-ல் வெளியான இந்த நாவல் டோரிûஸ பெண்ணுரிமைவாதியாக அடையாளம்

காட்டியது. இந்த நாவல் ஒரு பெண்

எழுத்தாளரின் கதை. பணி, காதல்,

அரசியல் போன்ற பல்வேறு பரிமாணங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னை பற்றியது.

“தி ஃபிப்த் சைல்ட்’

1988-ல் வெளியான இந்த நாவல் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஒரு மகிழ்ச்சியான தம்பதியின் வாழ்வில் 5-வது குழந்தை பிறந்த பின்னர் நிகழும் சம்பவங்களைக் கூறும் நாவல் இது.

Posted in africa, Award, Bio, Biography, Biosketch, Books, Britain, British, Commonwealth, Doris, England, Female, Feminism, Icon, Label, Lady, laureate, Lessing, Literature, London, manuscript, names, Nobel, Novel, novelist, people, Politics, Prize, Read, Reviews, Rhodesia, She, Synopsis, UK, Woman, Women, Zimbabwe | Leave a Comment »

Municipality power consumption – Self sufficiency, Water Distribution, Alternate Energy

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

கட்டிக் கொடுத்த சோறு

உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண நிலுவை மீதான அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்வதென தமிழக அரசு மேற்கொண்டுள்ள முடிவு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிச் சுமையை ஓரளவு குறைப்பதாக அமையும்.

ஆனால், மின் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலைமைதான் அபராதம் செலுத்தும் நிலைமைக்குக் காரணம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, இந்தப் பிரச்சினை முடிவுக்கு வருமா என்பது சந்தேகமாக இருக்கிறது. கட்டணத்தைச் செலுத்த முடியாத அதே நிலை நீடிக்குமானால், அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்தும் பயன் ஏற்படாது. கட்டிக் கொடுத்த சோறு ஓரிரு வேளைக்கு மட்டுமே உதவும்.

உள்ளாட்சி அமைப்புகள் (பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி) நிலுவை வைத்துள்ள ரூ.204 கோடியை அரசே இப்போதைக்கு செலுத்துவதும், இனிமேல் அவர்களது மின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும்தான் நிரந்தரத் தீர்வாக அமையும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் மின் செலவில் பெரும்பகுதி தெருவிளக்குகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் மூலமாக ஏற்படுகிறது.

தெருவிளக்குகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் கிடைப்பதில்லை. வெறும் செலவு மட்டுமே. ஒவ்வொரு மின்கம்பத்துக்கும் மின்வாரியம் நிர்ணயிக்கும் ஒட்டுமொத்த தொகையை உள்ளாட்சி அமைப்புகள் செலுத்துகின்றன.

இரண்டாவதாக, குடிநீர் விநியோகத்தில் நீரேற்று நிலைய மின்செலவைத் தவிர்க்கவே முடியாது. நீரேற்றும் மின்செலவுக்கும் குடிநீர் கட்டணம், குழாய் வரி மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் பற்றாக்குறை இடைவெளி பெரிதாக உள்ளது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் விநியோகத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலவு போக, சிறிது வருவாய் கிடைத்திருக்கலாம். இப்போது நிலைமை தலைகீழ். விரிந்துவிட்ட நகரின் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் கிடைக்க பல்வேறு இடங்களில் ஆழ்துளை போட்டு தண்ணீர் எடுப்பதால் மின்செலவு மேலும் கூடிவிட்டது. ஆனால் அதற்கேற்ப குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடியவில்லை. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

உள்ளாட்சிகளுக்கான மின்கட்டணத்தை ரூ.5-லிருந்து ரூ.2-ஆகக் குறைக்க வேண்டும் என்பதுகூட, சுமையை இன்னொரு தலைமேல் ஏற்றிவிடுவதாகவே அமையும்.

உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் புதிய வழிகளைக் காண்பதும் புதிதாக குடிநீர் கட்டண முறைகளை வகுத்துக்கொள்வதும்தான் தீர்வாக இருக்கும்.

குடிநீர் இணைப்புகளில் மீட்டர் இருந்தாலும் அவரவர் பயன்படுத்தும் நீரின் அளவுக்கு ஏற்ப (மின்சாரம் கணக்கிடுவதைப்போல) கணக்கிடப்படுவதில்லை. இதனால், உள்ளாட்சி அமைப்புகள் சுத்திகரித்து நீரேற்றம் செய்யும் குடிநீரில் 80 சதவீதம் துணி துவைக்கவும், குளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்படும் நீரின் அளவுக்கு ஏற்ப, அடுக்குமுறையில் (ஸ்லாப் சிஸ்டம்) கட்டணமும் உயரும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டால், பயன்படுத்தப்படும் குடிநீர் அளவு தானாகக் குறையும். மின்கட்டணமும் மிச்சமாகும். உள்ளாட்சிக்கு வருவாயும் கிடைக்கும்.

சூரியஒளி அதிகமாகக் கிடைக்கும் தமிழகத்தில் தெரு மின்விளக்குகள் அனைத்தையும் சூரிய விளக்குகளாக மாற்றிவிட முடியும். நகரங்களில் முக்கிய வீதிகளில் உள்ள மின்விளக்குகளை சூரிய விளக்குகளாக மாற்றும்போது, குறிப்பிட்ட தொகையை அந்தந்தத் தெரு மக்களிடம் பங்கேற்புத் தொகையாகப் பெற்று, பராமரிப்புப் பணிகளை அந்தந்தத் தெருவின் மக்கள் குழுக்களிடமே ஒப்படைத்துவிடலாம்.

====================================================================
தமிழகத்தில் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்த ரூ. 2547 கோடியில் நீர்வள – நிலவளத் திட்டம்: பொதுப்பணித் துறை அமைச்சர்

சென்னை, ஏப். 5: நீர்ப் பாசன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நீர்வள – நில வளத் திட்டம் ரூ. 2547 கோடியில் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் புதன்கிழமை அறிவித்தார்.

பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்க குறிப்பை அவையில் தாக்கல் செய்து அமைச்சர் கூறியது:

நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை நவீனப்படுத்தி கால்வாய்கள், ஏரிகள் ஆகியவற்றைப் புனரமைத்து, நீர் மேலாண்மையை மேம்படுத்துவது அவசியம். அதற்கேற்ப நீர் மற்றும் வேளாண்மையைச் சார்ந்த அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் வண்ணம் நீர்வள – நில வளத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி கடனுதவியுடன் செயல்படுத்தப்படும் இத் திட்டத்தின் மொத்த ஒதுக்கீடு ரூ. 2547 கோடி. இதனை ஆறு ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 63 உப வடிநிலங்களில் அணைகள், கால்வாய்கள், கிளைக் கால்வாய்கள் அவற்றின் கட்டுமானங்கள் ஆகியவை சீரமைத்து மேம்படுத்தப்படும்.

இத் திட்டத்தின் மூலம் 5763 ஏரிகளை புதுப்பித்து புனரமைத்து சீர்படுத்துவதற்காக ரூ. 1068 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செலவில் 75 சதவிகிதம் தமிழக அரசும் 25 சதவிகிதம் மத்திய அரசும் ஏற்கும்.

ஒருங்கிணைந்த நீர்வள – நிலவளத் திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டு 12 உப வடிநிலங்கள் தேர்தெடுக்கப்பட்டு அவற்றில் 9 உப வடிநிலங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ரூ. 399 கோடியில் 71 ஒப்பந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்த நிதியாண்டுக்கு ரூ. 160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதர 3 உப வடிநிலங்களுக்கான விரிவான திட்ட மதிப்பீடு அந்தந்த துறைகளுடன் இணைந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 51 உப வடிநிலங்களுக்கு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.

நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் 6.17 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசன, நீர் உபயோகிப்போர் சங்கங்கள் 2600 அமைக்கப் பெற்று பாசன மேலாண்மையில் பாசனதாரர்களே பங்கேற்க வழிவகை செய்யப்படும்.
====================================================================
காவிரிப் படுகை மாவட்டங்களில் கால்வாய்களைச் சீரமைக்க ரூ. 40 கோடி: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப். 5: காவிரிப் படுகை மாவட்டங்களில் ரூ. 40 கோடியில் சிற்றாறு வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம், கிருஷ்ணகுப்பம் கிராமத்தில் புதிய குட்டை ரூ. 16 லட்சத்தில் அமைக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் ராசசிங்கமங்கலம் கிராமத்தில் உள்ள ஆர்.எஸ். மங்கலம் ஏரி ரூ. 5.5 கோடியில் புனரமைக்கப்படும்.

நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து வருகிறது. செயற்கை முறையில் சிறிய குட்டைகளில் நீரைத் தேக்கி நீர் வளத்தை மேம்படுத்த கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5 குட்டைகள் ரூ. 93 லட்சத்துக்கும், ஈரோடு மாவட்டத்தில் 3 குட்டைகள் ரூ. 63 லட்சத்துக்கும், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு குட்டை ரூ. 12 லட்சத்துக்கும், வேலூர் மாவட்டத்தில் 11 குட்டைகள் ரூ. 1 கோடிக்கும் ஆக மொத்தம் 20 குட்டைகள் ரூ. 2.72 கோடிக்கு நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் இந்த நிதியாண்டில் சீரமைக்கப்படும்.

காவிரிப் படுகை மாவட்டங்களில் உள்ள சிற்றாறுகளையும் வாய்க்கால்களையும் தூர்வாருவதற்கு இந்த அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. தூர்வாரவும் கட்டுமானங்களை புதுப்பிப்பதற்காகவும் ரூ. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ. 1.75 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணாறு தொலைகல்லில் மட்ட சுவர் அமைத்து ரகுநாத காவிரி வாய்க்காலின் பாசன நிலங்களுக்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கீழ்வளம் கிராமத்தின் அருகில் புக்கத்துறை ஓடையின் குறுக்கே ரூ. 45 லட்சத்தில் தடுப்பணை செயல்படுத்தப்படும்.

விழுப்புரம் மாவட்டம் கரடிசித்தூர் கிராமத்தில் உள்ள குமாரபாளையம் வரத்து கால்வாய்க்கு நீர் வழங்க முக்தா நதியின் குறுக்கே ரூ. 25 லட்சத்தில் தடுப்பணை அமைக்கப்படும்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம், கோமல் கிராமத்தில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே தொலைகல் 118 கி.மீ. யில் தரை மட்டச்சுவர் கட்டும் திட்டம் ரூ. 40 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

தஞ்சாவூர் மாவட்டம் சோழகம்பட்டி வாரி குறுக்கே தடுப்பணை ரூ. 20 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம், ரெட்டியாபட்டியில் இருந்து கரிகாலி உத்தன்டாம்பாடி வரையில் உள்ள வழங்கு கால்வாய் மற்றும் உத்திராட்ச கோம்பையில் உள்ள அணைக்கட்டுகளை சீரமைக்கும் திட்டம் ரூ. 1.98 கோடியில் செயல்படுத்தப்படும்.

========================================================================
இணைந்தால் வளர்ச்சி

ஒரு பக்கம் வறட்சி, மறு பக்கம் வெள்ளம். இவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரண உதவிகள். இது, ஆண்டுதோறும் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் ஒரு நிகழ்வாகிவிட்டது. இதற்கு முடிவு கட்ட முக்கிய நதிகளை இணைக்கலாம் என்று பல ஆண்டுகளாகக் கூறப்பட்டுவரும் யோசனை இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. இத் திட்டத்தை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்பதும், பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்டதால் அவற்றுக்கிடையே கருத்தொற்றுமை காண்பதில் உள்ள சிக்கலுமே இதன் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள முக்கிய அம்சங்களாகும்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஓடும் ஆறுகளில் உள்ள தண்ணீர்ப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு சில ஆறுகளை இணைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆறுகளில் மட்டுமன்றி ஏரி, குளங்களில் தொடர்ந்து நீரின் அளவைப் பராமரிக்கவும், பெரும்பாலான மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைப் போக்கவும் இத் திட்டம் உதவும்.

முதற்கட்டமாக கோரையாற்றில் இருந்து அக்னியாறு வரை புதிய கால்வாய், பெண்ணையாற்றை செய்யாற்றுடன் இணைப்பது, தாமிரபரணியில் வெள்ளம் ஏற்படும்போது வரும் நீரை நம்பியாறு, கருமேனியாறு வரை எடுத்துச் செல்வது ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டங்கள் மூலம் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பலன் கிடைக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை நீர்வள ஆதாரத்தில் எப்போதும் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது. இங்கு மேற்பரப்பு நீர் அனைத்தும் ஏறக்குறைய பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் நிலத்தடி நீரை முற்றிலும் நம்பி இருக்க வேண்டியுள்ளது. ஆனால் அதுவும் விவசாயம் மற்றும் பொது உபயோகங்களுக்குத் தொடர்ந்து உறிஞ்சப்படுவதால் காலப்போக்கில் அதற்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆனால் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், மற்றும் ஆந்திரத்தில் கணிசமான நீர் ஆதாரங்கள் உள்ளன. எனவே பற்றாக்குறையைப் போக்க அந்த மாநிலங்களின் உபரி நீரை நம்பியிருக்க வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வு காண தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை ஒரு யோசனை தெரிவித்துள்ளது. உபரி மற்றும் பற்றாக்குறை படுகையைத் தேர்வு செய்து மகாநதியிலும், கோதாவரியிலும் கிடைக்கும் உபரிநீரை கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை மற்றும் குண்டாறு படுகைகளுக்குத் திருப்பிவிடலாம் என்பதே அந்த யோசனையாகும். இதன்படி மகாநதி, கோதாவரியின் உபரி நீர் கிருஷ்ணா மற்றும் பெண்ணாற்றுக்குத் திருப்பி விடப்படும். அங்கிருந்து கல்லணைக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும். இத்தகைய இணைப்புகளை மேற்கொண்டால் அது அந்த நீர் வரும் வழியில் உள்ள மாநிலங்களில் சாகுபடிக்கும் குடிநீருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அரசின் கருத்து. இத்தகைய திட்டத்தினால் நீர்வழிச் சாலையை உருவாக்கலாம் என்று ஒரு நிபுணர் தெரிவித்துள்ள கருத்தும் பரிசீலனைக்குரியது.

இது தவிர ஏரிகளைப் பாதுகாக்கச் சட்டம் கொண்டு வரவும் அரசு உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் விளைநிலங்களும், ஏரிகளும் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் சாகுபடி நிலங்களின் அளவு படிப்படியாகக் குறைந்து ஒரு நேரத்தில் கடும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். இதற்கு முடிவு கட்ட மேற்கண்ட திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
=====================================================================

————————————————————————————————-
தாகம் தணியும் நாள் எந்நாளோ?

உ.ரா. வரதராசன்

வெளிநாட்டுப் பயணம் ஒன்றின்போது, விமானத்தில் படிக்கக் கிடைத்த லண்டன் நாளேடு ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட விளம்பரம் ஒன்று, அதிர்ச்சி அளிக்கும் ஓர் உண்மையைப் பளிச்சென்று பறைசாற்றியது.

“லண்டன் நகரின் ஆடம்பரக் குடியிருப்புகளில் வசிப்பவர்களை விட, குடிதண்ணீருக்கு அதிக விலை கொடுப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள்?’ என்ற கேள்வியை எழுப்பிய அந்த விளம்பரம் அதற்கான பதிலையும் தந்தது: – அது – “”வளரும் நாடுகளின் வறுமைமிக்கக் குடிசைப்பகுதிகளில்தான்!” ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் – 2006-ஆம் ஆண்டின் மனித வளர்ச்சி அறிக்கை தண்ணீர்ப் பிரச்னையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

“உணவு இல்லாமல் பட்டினி கிடக்க நேரிட்டால்கூட, 21 நாள்கள் வரை உடலில் உயிர் ஒட்டிக் கிடக்க முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் 10 நாள்களுக்கு மேல் உயிர் வாழ்வது அரிது; பிராணவாயு இல்லாமல் எட்டு நிமிடங்களுக்கு மேல் உயிர் தாங்காது’, என்பது ஒரு கருத்து. தண்ணீரும், பிராணவாயுவும் இன்றி மக்கள் உயிர் வாழ முடியாது என்பதால்தான், ஐ.நா. சபை 2002-ஆம் ஆண்டில் “தண்ணீர் – ஒரு மனித உரிமை, என்று அறிவித்தது. அந்த தண்ணீர் போதுமானதாகவும், பாதுகாப்பானதாகவும், ஏற்புடையதாகவும், எளிதில் எட்டக் கூடியதாகவும் மற்றும் வாங்கும் சக்திக்கு உட்பட்டதாகவும் – அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியது.

மக்கள்தொகைப் பெருக்கம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட 19-ஆம் நூற்றாண்டின் விஞ்ஞானி தாமஸ் மால்த்தூஸ், உணவுப் பற்றாக்குறை எதிர்காலத்தில் உலக நாடுகளை மிரட்சியில் ஆழ்த்தும் பரிமாணத்தை எட்டிவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். “மால்தூசின் தத்துவம்’ என்றே மக்கள்தொகை பற்றிய அவரது ஆய்வு சுட்டப்படுகிறது. இதே கோணத்தில்தான் தண்ணீர் பற்றிய சர்வதேச அரங்கிலான விவாதங்களில் கருத்துகள் இடம்பெற்று வந்துள்ளன. “மக்கள்தொகை பெருகப்பெருக, தண்ணீர் தேவையும் அதிகமாகிறது; விளைவு – எதிர்காலத்தில், தண்ணீர் பற்றாக்குறை தவிர்க்க முடியாதது” என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

மனித வளர்ச்சி அறிக்கை – 2006 இந்த வாதத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறது. “ஒரு சில நாடுகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு கவலைதரும் பிரச்னையாக இருக்கலாம்; ஆனால் சர்வதேச ரீதியில், பற்றாக்குறையும், நெருக்கடியும் எழுவதாகச் சொல்ல முடியாது. வறுமையும், ஏற்றத்தாழ்வும், அரசியல் அதிகாரம் யாருடைய நலனுக்காகச் செயல்படுகிறது என்பவையே, உலக தண்ணீர் நெருக்கடியின் மையமான பிரச்னைகள்’ என்று ஆய்வின் அடிப்படையிலான ஏராளமான விவரங்களைக் கொண்டு நிலைநாட்ட முற்படுகிறது அந்த அறிக்கை.

உயிர் வாழ்வதற்கான தண்ணீர்ப் பிரச்னை மூன்று அம்சங்களை உள்ளடக்கியது. அவை ~

  1. சுத்தமான குடிநீர் வழங்குவது,
  2. கழிவு நீரை அகற்றுவது,
  3. உடற்கழிவுகளை (சிறுநீர், மலம்) வெளியேற்றுவதற்கான சுகாதாரமான ஏற்பாடு.

மனித வாழ்வின் மேம்பாட்டுக்கு இவை மூன்றும் இன்றியமையாதவை. ஆனால், உண்மையான நிலவரம் என்ன?
வளரும் நாடுகளில் 110 கோடிபேர் போதுமான தண்ணீருக்கு வழியில்லாமல் திண்டாடுபவர்கள்; 260 கோடிபேர் கழிப்பறை வசதிகள் இன்றி அவதிப்படுபவர்கள். இது வளரும் நாடுகளின் மக்கள்தொகையில் பாதிக்குமேல். இது தண்ணீர்ப் பற்றாக்குறையால் நேரிடும் கொடுமையா என்றால், இல்லை.

வீட்டு உபயோகத்திற்காக மட்டும் தேவைப்படுகிற தண்ணீரின் அளவு, உலகளாவிய நீர்வளத்தில் 5 சதவிகிதத்திற்கும் குறைவுதான். அடிப்படையான மனிதத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 20 லிட்டர் தண்ணீர் அவசியமானது. தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாத நிலைக்குக் காரணம் பற்றாக்குறை அல்ல; இன்றைய ஆட்சி அமைப்பும், அரசியல் அதிகாரத்தைச் செலுத்துவோரின் தலைகீழான முன்னுரிமைகளுமே.

உலக நாடுகள் பெரும்பாலானவற்றின் பெருவாரி மக்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகள் மறுக்கப்படுவதன் கோர விளைவுகள் சில வருமாறு:

வாந்திபேதியால் ஆண்டுக்கு 18 லட்சம் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது; அதாவது – நாளொன்றுக்கு 4900 சாவுகள். 1990-களில், ஆயுத மோதல்களில் இறந்தோரைவிட அசுத்தமான குடிநீர், சுகாதாரமின்மை காரணமான நோய்களில் இறந்த குழந்தைகள் எண்ணிக்கை ஆறு மடங்காக உயர்ந்தது.

தண்ணீர்ப் பிரச்னை தொடர்பான உடல்நலப் பாதிப்பு காரணமாக பள்ளிக்குச் செல்ல முடியாத பள்ளி நாள்கள் ஆண்டொன்றுக்கு 44 கோடிக்கு மேல்.

வளரும் நாடுகளின் மக்கள்தொகையில் பாதிக்குமேல் தண்ணீர் – சுகாதாரக் குறைபாடுகளால் ஏதாவதொரு வியாதியால் பீடிக்கப்பட்டு அவதியுறுவது அன்றாட நிகழ்வு. ஒவ்வொரு நாளும், தண்ணீருக்காக லட்சக்கணக்கான பெண்கள் பல மணி நேரம் செலவிட நேரிடுகிறது.

இளமையில் தண்ணீர் – சுகாதாரமின்மை காரணமாக நோய்வாய்ப்பட்டும், கல்வி வாய்ப்பை இழந்தும் பாதிப்புறுகிற லட்சக்கணக்கான குழந்தைகள், வளர்ந்த நிலையில் வறுமையைத் தழுவ நேரிடுகிறது. இவ்வாறெல்லாம் பாதிப்புற்று இழக்கப்படுகிற மனித வள ஆதாரங்கள் காரணமாக, உலக நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார இழப்புகள் அளவிட முடியாதவை.

இந்த நிலைமைகளுக்கு மாற்றமே இல்லையா?

20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஒன்று கூடி 21-ஆம் நூற்றாண்டுக்கான மனித வளர்ச்சி இலக்குகளை வரையறை செய்தனர். 2015-ஆம் ஆண்டுக்குள் வறுமை, பட்டினி, குழந்தை இறப்புகள், கல்வியின்மை, பாலின சமத்துவமின்மை ஆகியவற்றை, சரிபாதியாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. “பாதுகாப்பான குடிநீரும், அடிப்படை சுகாதார வசதிகளும் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெறாத உலக மக்களின் எண்ணிக்கையை 2015-க்குள் சரிபாதியாகக் குறைக்க வேண்டும்’ என்பது திட்டவட்டமான இலக்கு.

ஆனால், இந்த இலக்குகளை எட்ட நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு பத்தாண்டுகளுக்கும் குறைவாகவே உள்ள இன்றைய தருணத்தில், இதற்கான முயற்சிகள் காததூரத்திலேயே உள்ளன என்பதுதான் வேதனையான அம்சம்.

தாகத்தால் நா வறண்டு நிற்கும் மக்களின் தண்ணீர்த் தேவைகளை நிறைவேற்றுவதற்குக் குறுக்கே நிற்பது எது? நிதிப்பற்றாக்குறையா?

குடிதண்ணீர், சுகாதாரத் தேவைகளை மட்டுமல்ல, வளர்ச்சி இலக்குகள் அனைத்தையுமே 2015-க்குள் எட்டுவதற்குத் தேவையான நிதி ஆயிரம் கோடி டாலர்கள். (சுமார் ரூ. 40 ஆயிரம் கோடி)

“ஓ, இவ்வளவு பெரிய தொகையா? என்று மலைக்கத் தேவையில்லை. இது, உலகநாடுகள் ராணுவத்திற்காகச் செலவிடும் தொகையில், ஐந்தே நாள்களுக்கான செலவுக்கு மட்டுமே ஈடான தொகைதான்! பணக்கார நாடுகள் ஆண்டுதோறும் “மினரல் வாட்டருக்காக’ச் செலவிடும் தொகையில் சரிபாதிக்கும் குறைவே! எனவே, இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவது, அவற்றை வரையறுத்த உலக நாடுகளின் தலைவர்களின் உறுதியான நிலைப்பாடு என்ற உரைகல்லைப் பொருத்த விஷயம்தான்.

2015-ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி நிர்வாகம் இன்னோர் இலக்கையும் நிர்ணயித்திருக்கிறது. வியாழன் கிரகத்தின் பனிநிலவுகள் பற்றிய ஆராய்ச்சிக்காக விண்கலத்தை அனுப்பி, அந்த சந்திர மண்டலங்களின் பனிப்படலங்களுக்கு அடியில் உள்ள உப்புநீர் ஏரிகளை ஆய்வு செய்து, அங்கு உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா என்று அறிவது அதன் நோக்கம். அதற்காகச் செலவிடப்படும் ஆயிரம்கோடி டாலர்கள் – அதற்குத் தேவைப்படும் தொழில் நுணுக்கம் – இவற்றோடு ஒப்பிடுகையில், மனித வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான செலவும், முயற்சியும், அற்பசொற்பமானவையே!

உலக மக்களின் தாகம் தணியும் நாள் எந்நாளோ?..

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ)

Posted in Alternate, Analysis, Aquafina, Arms, Backgrounder, Backgrounders, Bathroom, Bills, Bio, Bottled, Budget, Cauvery, Charges, Coke, Crap, Dasani, defecate, Developed, Developing, Diarrhea, Distribution, Drinking, Electricity, energy, Environment, Excrement, Expensive, Exploit, Fights, Finance, Fine, Gold, Govt, Ground, HR, Hunger, Income, Interlink, Interlinking, Kaviri, Local Body, Loss, Municipality, Nations, oil, Op-Ed, Options, Pee, Pepsi, Plans, Pollution, Poop, Power, Private, Privatization, PWD, Restroom, Revenues, River, Sand, Schemes, Shit, Soda, Solar, solutions, Tax, Toilets, Urine, Water, Weapons, World | 4 Comments »

Jeeva – Lifesketch

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 21, 2006

ஜீவா எனும் குறிஞ்சிப்பூ

இரா. நாறும்பூநாதன்

“”ஜீவா உங்களுக்கு என்ன சொத்து இருக்கும்?” காரைக்குடி வந்த தேசப்பிதா காந்திஜி, ராஜாஜியை அழைத்துக்கொண்டு, சிராவயலில் இருந்து காந்தி ஆசிரமத்தை நடத்திக் கொண்டிருந்த 20 வயது இளைஞன் ஜீவாவைப் பார்க்கச் சென்றபோது கேட்ட கேள்வி இது.

“”சொத்தா.. அது கோடிக்கணக்கில் உள்ளது…” என்று சிரித்தார் ஜீவா.

“”புரியும்படி சொல்லுங்கள்…” என்றார் காந்திஜி.

“”இந்தியாதான் எனது சொத்து” என்று கூறினார் ஜீவா. “”இல்லை ஜீவா! நீங்கள்தான் இந்தியாவின் சொத்து…” நெஞ்சாரப் பாராட்டினார் காந்திஜி.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்படும்போது, செய்தித்தாள்களைப் படிக்கும் இளைஞர்கள் ஆவேசப்படுகிறார்கள். சாதாரணப் பொதுமக்கள் பொருமுகிறார்கள். “அரசியலே சாக்கடை’ என்று வியாக்யானம் செய்கிறார்கள். “இந்தியாவின் சொத்து’ என்று காந்தியடிகளால் புகழப்பட்ட ஜீவாவும் இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர்தான்!

சென்னை வீதியில் கையில் ஒரு துணிப்பையுடன் வேகவேகமாய் நடந்து செல்லும் ஜீவாவைப் பார்த்து எதிரே வந்த நண்பர் கேட்டார், “”தோழர் ஜீவா! ஏன் நடந்து செல்கிறீர்கள்?”

“”பஸ்ஸில் செல்வதற்கு காசில்லை. அதான் நடந்து செல்கிறேன்” என்றார் ஜீவா.

நண்பர் விடவில்லை. “”கையிலே என்ன வைத்திருக்கிறீர்கள்?”

“”அதுவா? தோழர்கள் கொடுத்த கட்சி நிதி. கட்சி அலுவலகத்திற்குத்தான் கொண்டு போகிறேன்” என்றார் ஜீவா.

“”பஸ்ஸிற்குத் தேவையான காசை அதிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே?” என்றார் நண்பர்.

“”கட்சி நிதி என்று தோழர்கள் தந்த பணமுடிப்பிலிருந்து ஒரு சல்லிக்காசு எடுத்தால்கூட அது பெரிய குற்றம். அந்தக் கணக்கை அப்படியே கட்சி அலுவலகத்தில் ஒப்படைப்பதுதானே சரி” நடந்தபடியே கூறினார் ஜீவா.

உதிரம் சிந்தித் தந்த தொழிலாளர்களின் நிதியை, சொந்த உபயோகத்திற்காக சல்லிக்காசு எடுக்கத் துணியாத ஜீவானந்தம் போன்றோர்கள் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய பெருமை தமிழகத்திற்கு உண்டு.

கம்பராமாயணத்திலிருந்தும், திருக்குறளிலிருந்தும் மேற்கோள்காட்டி அற்புதமாய் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர் தோழர் ஜீவா. 1952 சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களைக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றபோது, வடசென்னை வேட்பாளராக வெற்றி பெற்ற ஜீவா, சட்டமன்றத்தில் பேச ஆரம்பித்தால் வெளியே நிற்கும் உறுப்பினர்களும் உள்ளே வேகவேகமாய் வந்து அமர்வார்களாம். “”பயிற்று மொழி தமிழாய் இருக்க வேண்டும்” என்று அப்போதே சட்டமன்றத்தில் முழங்கினார். 1956-லேயே சென்னை மாகாண அரசு தமிழை ஆட்சிமொழியெனப் பிரகடனம் செய்தது. எல்லாம் ஏட்டிலேயே இருக்கிறது என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

மாநில முதல் அமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்குமான உறவு அன்று எப்படிப்பட்டதாக இருந்தது?

ஜீவாவின் வீட்டருகே உள்ள பள்ளி ஆண்டு விழாவிற்கு முதல்வர் காமராஜரும், அன்றைய செங்கல்பட்டு மாவட்டக் கலெக்டர் திரவியமும் போகும்போது ஜீவாவையும் அழைத்துச் செல்ல எண்ணி அவரது குடிசை வீட்டிற்கு காரில் சென்றனர்.

“”ஜீவா! அருகில் உள்ள பள்ளி ஆண்டு விழாவிற்கு வருகிறீர்களா?” என்றபடியே உள்ளே நுழைந்தார் காமராஜர்.

“”நான் வர வேண்டுமென்றால், கால் மணி நேரம் நீங்கள் காத்துக் கிடக்க வேண்டும்” என்று உள்ளிருந்து குரல் கேட்டது.

உள்ளே ஜீவா, ஈர வேட்டியை உலர்த்தியபடி நின்று கொண்டிருந்தார். மாற்று வேட்டி கூட இல்லாமல், துவைத்த கதர் ஆடை காயும் வரை இடுப்பில் துண்டு கட்டிய நிலையில் நின்ற ஜீவாவைப் பார்த்து காமராஜர் திகைத்துப் போனார்.

“”ஜீவா! எவ்வளவு நாளைக்கு இதே குடிசையில் இருப்பது?” என்று கேட்டார்.

பளிச்சென்று பதில் கூறினார் ஜீவா. “”மக்களெல்லாம் மாடி வீட்டில் வாழ்கின்றபோது நானும் மாடி வீட்டில் வாழ்வேன்”.

கோடிக்கணக்கில் தன் பெயரிலும், குடும்பத்தாரின் பெயரிலும் ஏனைய பினாமிகள் பெயர்களிலும் சொத்து சேர்க்கும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே? ஜீவா எங்கே?

காந்திஜியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் இயக்கத்திலும், பின்னர் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும், இறுதியில் பொதுவுடைமை இயக்கமே மனித குல விடுதலைக்கு மாற்று என பொதுவுடைமை இயக்கத்திற்கு வந்தபோதும், இறுதிவரை கதராடையையே உடுத்தி வந்தார். அவரது அன்னையார் இறந்தபோது ஈமக்கிரியை சடங்கிற்காக கதராடை கொடுக்காமல் மில் துணியைக் கொடுத்ததால், தாய்க்கு கொள்ளி வைக்க மறுத்து விட்டார் ஜீவா.

1946-ல் அவரது தலைமறைவு வாழ்க்கையின்போது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர். ராதா, டி .கே. பகவதி மற்றும் குத்தூசி குருசாமி போன்றோர் அவருக்கு உதவி செய்தனர்.

தமிழகத்தின் பொதுவுடைமை இயக்க முன்னோடிகளில் ஒருவரான சிங்காரவேலரின் தொடர்பு கிட்டியபோது, பகத்சிங்கின் “”நான் ஏன் நாத்திகனானேன்?” என்ற நூலை மொழிபெயர்த்து வெளியிட்டதற்காக காரைக்குடியில் போலீஸôர் அவரது காலில் விலங்கிட்டு அழைத்துச் சென்று காவலில் வைத்தனர்.

குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்ற சிற்றூரில் பிறந்த சொரிமுத்துப்பிள்ளை என்ற மூக்காண்டி, ஜீவானந்தமாகப் பரிணமித்து, தமிழக அரசியலுக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுக்கும் வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அவரது நூற்றாணடு தொடங்கும் இந்நாளில் அவரது எளிய வாழ்க்கை, சோர்வுற்ற இளைஞர் களுக்கு நம்பிக்கையளிக்கட்டும்!

————————————————————————————————————————————————

ஜீவாவின் வாழ்வும் வழியும்

ஆர். நல்லகண்ணு

2007 ஆகஸ்ட் 21. பொதுவுடைமை இயக்கத் தலைவர் ப. ஜீவானந்தம் நூற்றாண்டு நிறைவு நாள்.

ஓராண்டாக ஜீவா எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டு நூலாக வந்துள்ளது; விடுதலைப் போராட்டமே அவருடைய முதல் மூச்சாக வெளிப்பட்டது. தன்னைப் பெற்ற தாயின் இறுதிச் சடங்கு முடிந்து வீடு திரும்பிய வேளையில் உறவு முறையினர் கொடுத்த புதுத் துணியும் கதராகத்தானிருக்க வேண்டுமென்று பிடிவாதம் செய்தவர்.

அவர் பிறந்த “பூதப்பாண்டி’யில் கட்டுப்பாட்டை மீறி, தலித் சிறுவர்களை மேல் ஜாதிக்காரர் தெருக்களில் அழைத்துச் சென்றதற்காகக் கல்லெறியும் அடியும் மிதியும் பட்டவர்.

உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும், இவருடைய செயலுக்கு அச்சிற்றூர் இடம் கொடுக்காததைக் கண்டு ஊரைவிட்டு வெளியேறினார்; செட்டிநாட்டுக்குச் சென்றார்; “சிராவயல்’ என்ற ஊரில் “ஆசிரமம்’ நடத்தினார். எல்லா ஜாதி சிறுவர்களுக்கும் படிப்பு சொல்லிக் கொடுத்தார்.

ஜீவாவின் “ஜாதி மறுப்புக் கொள்கையும்’ “தலித்’ மக்களின் மீதுள்ள பற்றையும் கடிதங்கள் மூலம் தொடர்புகொண்ட மகாத்மா காந்தி தமிழகம் வந்தபோது ஜீவானந்தம் என்ற இளைஞனைப் பார்க்க விரும்பினார்; காரைக்குடியின் காங்கிரஸ்காரர்களிடம் தெரிவித்தார்; “சிராவயலில் இருக்கிறார்; அவரை அழைத்து வருகிறோம்’ என்று சொன்னதும் மகாத்மா காந்தி மறுத்துவிட்டார்; அந்த இளைஞனைத் தாமே போய்ப் பார்க்க வேண்டுமென்று சொன்னதும், காந்தியை சிராவயலுக்கு அழைத்துச் சென்றார்கள். ஜீவாவைச் சந்தித்து உரையாடினார்; ஆசிரமம் நடத்த உமக்கு ஏதாவது சொத்து இருக்கிறதா? என்று மகாத்மா கேட்டதும் ஜீவா “”இந்த நாடு தான் என் சொத்து” என்றாராம்.

மகாத்மா பெருமகிழ்ச்சியடைந்தார்; “ஜீவா’ நீதான் இந்த நாட்டின் மதிப்புமிக்க சொத்து’ என்று தட்டிக்கொடுத்துப் பாராட்டினார்; இந்நிகழ்ச்சி 1930-ல் நடந்தது.

பெரியார் நடத்திய வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்திலும் சிறுவனாகவே ஜீவா கலந்துகொண்டார். சேரன்மாதேவி பரத்வாஜ் ஆசிரமத்தில் ஜாதி வேற்றுமையை எதிர்த்து நடந்த சம்பவத்திலும் பங்கேற்றார்.

சுதந்திரம், ஜாதி மறுப்பு, தீண்டாமை ஒழிப்பும் அவர் உள்ளத்தில் ஊற்றெடுத்துக் கிளம்பிய உயிர்மூச்சாகும். பெரியாருடன் சேர்ந்து பகுத்தறிவு, சுயமரியாதை இயக்கத்திலும் ஈடுபட்டார்.

தன்னுடைய சுதந்திர வேட்கையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் தனக்குச் சரியான புரிதலைத் தேடி அலைந்தார்.

தமிழ் இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், திருக்குறள், ஐம்பெரும் காப்பியங்கள், கம்பராமாயணம் மற்றும் பக்தி இலக்கியங்கள் போன்ற அனைத்து தமிழ் இலக்கியங்களையும் படித்து உள்வாங்கிக் கொண்டார்.

அரசியலில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முறியடிப்பது முதல் கடமை; ஏகாதிபத்திய அரணை உடைத்துவிட்டால், மானிட சக்தி விலங்கொடித்து, வீறுகொண்டெழுந்துவிடும் என்று உணர்ந்தார்.

இரண்டாவது உலகப்போரில் சோவியத் எழுச்சி உலக இளைஞர்களுக்கு வழிகாட்டியது; ஜீவாவை ஒத்த வயதுடைய இளைஞன் மாவீரன் பகத்சிங். நவயுக சோஷலிஸ்ட் சமிதியை அமைத்தார்.

லாகூர் சதி வழக்கில் சிறை வைக்கப்பட்டபோது “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற நூலை எழுதினார். அதை ஜீவா தமிழாக்கம் செய்து வெளியிட்டார். அந்நூலில் “பிரிட்டிஷ் ஷார் நம்மை ஆள்வது ஆண்டவன் அருளால் அல்ல; நம்மிடையே உள்ள பிளவைப் பயன்படுத்தி பிரித்தாலும் சூழ்ச்சியால் இரு நூற்றாண்டுகளாக ஆண்டு வருகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பகத்சிங்கின் அந்த ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்ததால் ஜீவாவுக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது; “குடியரசு’ப் பதிப்பாசிரியருக்கு அபராதமும், தண்டனையும் வழங்கப்பட்டன.

பகத்சிங்கின் வழக்கில் தண்டிக்கப்பட்டு பட்டுகேசுவர தத் மற்றும் சிலர் சென்னை சிறையில் இருந்தார்கள்; அவர்களோடு ஜீவாவும் சிறையிலிருந்தார்; தத் மூலம் கிடைத்த மார்க்சிய நூல்களை ஜீவா கற்றுத் தேர்ந்தார்; ஜீவா சிறந்த மார்க்சிய அறிஞராக வெளியே வந்தார்.

1937-ல் சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனசக்தி வார இதழ் தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியராக ஜீவானந்தம் பொறுப்பேற்றார். அன்றிலிருந்து 1963 ஜனவரி 18-ல் ஜீவா மறையும் வரை அவரே ஆசிரியராகச் செயல்பட்டு வந்தார்; அவர் தொடங்கிய அதே ஜனசக்திதான் 70-வது ஆண்டில் தின இதழாக இப்போது நடத்தப்பட்டு வருகிறது.

ஜீவா முற்போக்கு இயக்கத்தில் பன்முகப் போராளியாகத் திகழ்ந்து வந்தார்.

இலக்கியத்தில் கலை, கலைக்காகவே என்ற கருத்து நிலவி வந்த காலம்; ரசனைக்காகவே கலை பயன்பட வேண்டுமென்று கருத்து வலுவாக இருந்த காலத்தில் “கலையும் இலக்கியமும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் இயக்கங்களில் நம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டும்’ என்று வாதிட்டு நிலைநிறுத்தினார்.

கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் என்று பாரதி பாடியதை ஆதாரமாகக் கொண்டார். மானுடத்தின் மேன்மைகளை விளக்கினார். வள்ளலாரின் “கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’ என்பதையும், இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகு இயற்றியான் என்ற திருக்குறளையும் “அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்’ என்ற சிலப்பதிகாரத்தின் அடிகளையும் தனது பொதுவுடைமைக் கருத்துகளுக்கு ஆதரவாக மக்களிடம் பரப்பி வந்தார்.

பாரதியின் பெருமையைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பினார்; “பாரதியைச் சிலர் இழிவுபடுத்திய காலத்தில் பாரதியை “மகாகவி’ என்று உலகறியச் செய்த பெருமை, ஜீவா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், வ.ரா., திரு.வி.க., வெ. சாமிநாதசர்மா ஆகியோருக்கு உண்டு. தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்ததில் ஜீவா, பி. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ் மூவரும் மூலவர்களாக விளங்கினார்கள்.

ஜீவாவின் பாடல்களுக்கு முன்னுரை எழுதிய சாமிநாத சர்மா “ஜீவா சிறந்த கவிஞர் மட்டுமல்ல, கர்மயோகி’ என்று பாராட்டினார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், “துன்பச் சுமைதாங்கும் அன்புத் தோழன் ஜீவானந்தம்’ என்று தனது இரங்கற்பாவில் குறிப்பிட்டார்.

முற்போக்கான அரசியல்வாதி, ஜாதிமறுப்பு, பகுத்தறிவு சிந்தனையாளர், மார்க்சிய அறிஞர், தொழிலாளர், விவசாயிகள் போராட்டங்களில் களம் கண்டவர்; இலக்கிய வழிகாட்டி ஜீவா, தாம் வாழ்ந்த காலத்தில் எல்லாத் தளங்களிலும் தடம் பதித்தவர்; ஜீவாவின் வாழ்வும் வழியும் புதிய தலைமுறைக்கு ஒளிவீசும் கலங்கரை விளக்காகும்.

(கட்டுரையாளர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்).

Posted in Bio, Biography, Independence, India, Jeeva, Jeevanandham, Jeevanantham, Kumari, Lifesketch, Old, Politics, Tamil, Tamil Nadu, TN | 1 Comment »