தொடர்ந்து சரியும் விளம்பரப் பலகைகள்…
சென்னையில் திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே சரிந்து விழுந்த விளம்பரப் பலகை. (உள்படம்) காயமடைந்த ரெஜீனா.
சென்னை, டிச. 18: சென்னையில் விளம்பரப் பலகைகள் சரிவது தொடர் கதையாகி வருகிறது. செப்டம்பர் 27-ம் தேதி பலத்த காற்று வீசியபோது எழும்பூர் லட்சுமிபதி ருக்மணி சாலையில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பரப் பலகை சரிந்து விழுந்தது. இதில் ஒருவரும் பாதிக்கப்படவில்லை.
சாலையில் மையப் பகுதிகளில் வைக்கப்படும் சிறிய விளம்பரங்கள், சாலைகளில் சரிந்து விழுகின்றன. இதனால் போக்குவரத்தும் தடைபடுகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பரப் பலகை திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றில் சரிந்து விழுந்தது. அந்த வழியே சென்ற ரெஜினா என்ற பெண் காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
இச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றபோதும் விளம்பரப் பலகைகளைச் சோதனையிடவோ, விதிகளைக் கடுமையாக்கவோ இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேமம் என்ற இடத்தில் அண்மையில் இதுபோல் பெரிய விளம்பரப்பலகை சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 14 வயது சிறுவன் உடல் நசுங்கி இறந்தார். 13 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, உறுதித்தன்மை இல்லாத விளம்பரப் பலகைகளை அப்புறப்படுத்த திருவனந்தபுரம் மாநகராட்சி உத்தரவிட்டது. விளம்பரப் பலகை வைக்க விண்ணப்பிப்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்புப் பொறியாளரிடமிருந்து சான்றிதழ்பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ஹைதராபாதிலும் விளம்பரப் பலகைகள் வைக்க கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சட்டசபை, தலைமைச் செயலகம், ராஜ்பவன் செல்லும் சாலைகளில் விளம்பரங்கள் வைக்கத் தடை விதிக்கப்பட்டது. இதேபோல் எல்.சி.டி. விளம்பரப் பலகைகளுக்கும் தடை விதித்து, நகரில் வைக்கப்பட்டிருந்த ஒரு சில எல்.சி.டி. விளம்பரப் பலகைகளைளும் அப்புறப்படுத்தப்பட்டன.
விதிகளை மீறி விளம்பரப் பலகை வைக்கும் ஏஜென்டுகளுக்கு முதல்முறை ரூ. 5 ஆயிரம் அபராதமும், இரண்டாவது முறை ரூ. 10 ஆயிரமும், மூன்றாவது முறை என்றால் உரிமத்தை ரத்து செய்து, ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்கிறது ஹைதராபாத் மாநகராட்சி.
சென்னையில் விளம்பரப் பலகைகளின் அளவுக்கு ஏற்ப, பலமான தாங்குக் கம்பிகள் வைக்கப்படுவதில்லை. இதனால் பலத்த காற்று வீசும்போது பாரம் தாங்க முடியாமல் சாய்ந்து விடுகின்றன என்று போக்குவரத்துப் போலீஸôர் தெரிவிக்கின்றனர்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விளம்பரப் பலகைகள் தகுந்த அளவீடுகளின்படி வைக்கப்பட்டுள்ளனவா என்று சோதனையிட அரசு உத்தரவிட வேண்டும்.
மழை, பலத்த காற்று போன்ற இயற்கைச் சீற்றங்களுக்குப் பின் அந்தந்த விளம்பரங்களின் உரிமையாளர்கள் மூலம், விளம்பரத்தைத் தாங்கி நிற்கும் கம்பிகளின் உறுதித் தன்மையைச் சோதனையிடவும் உத்தரவிடப்பட வேண்டும். விதிகளை மீறும் விளம்பர ஏஜென்டுகளுக்குக் கடுமையான அபராதம் விதிக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் வைக்கப்பட்டுள்ள சில விளம்பரப் பலகைகள் எல்.சி.டி., மின் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவை காற்றினால் விழும்போது மின்சாரம் தாக்கும் வாய்ப்பும் இருப்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.