திறமையின்மைக்குச் சான்றிதழ்
சமீபகாலமாக அரசியல்வாதிகளும் பத்திரிகைகளும் அடிக்கடி எழுப்பும் கூக்குரல், நீதிமன்றம் அநாவசியமாக நிர்வாக விஷயங்களில் தலையிடுகிறது என்பதுதான். சொல்லப்போனால், அது உண்மையும்கூட. நீதிமன்றத் தலையீடு என்பது “ஹெல்மெட்’ அணிவதா, வேண்டாமா என்பதுவரை தொடர்வது துரதிருஷ்டவசமானது என்றுதான் சொல்ல வேண்டும்.
இதுபோல, நீதிமன்றம் அன்றாட நிர்வாக விஷயங்களில் தலையிடுவதற்கு என்ன காரணம் என்று சிந்தித்துப் பார்த்தால், அதற்கான விடை கிடைக்கும். தங்களது கடமையில் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தவறும்போது நீதிமன்றத்தின் மூலம்தான் நியாயம் கிடைக்கும் என்கிற நிலைமைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். நீதி கேட்டு ஒரு சராசரி குடிமகன் நீதிமன்றத்தைச் சரணடையும்போது அவனுக்கு நியாயம் வழங்க வேண்டிய நிர்பந்தம் நீதிபதிகளுக்கும், நீதித்துறைக்கும் ஏற்பட்டு விடுகிறது.
ஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாவதுவரை படித்த மாணவன் அதே பள்ளிக்கூடத்தில் 11 ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது இயற்கை நியதி. இதை அனைத்து பள்ளிக்கூட நிர்வாகங்களும் கடைப்பிடித்தாக வேண்டும் என்று உறுதி செய்ய வேண்டிய கடமை மாநில பள்ளிக் கல்வித் துறைக்கு உண்டு.
சி.பி.எஸ்.இ. முறையில் நடத்தப்படும் பள்ளிகளில் பத்தாவது வகுப்பில் படித்த மாணவனை பிளஸ் ஒன் வகுப்பில் சேர்த்துக் கொள்ள நுழைவுத் தேர்வு மற்றும் புதிய நன்கொடை என நிபந்தனைகள் விதிக்கக்கூடாது என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகாவது, மாநில கல்வித் துறை தங்களது அதிகார வரம்பிற்குட்பட்ட பள்ளிகளில் இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதா என்று உறுதி செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஓர் அரசாணை பிறப்பித்து அத்தனை பள்ளிக்கூட நிர்வாகத்தையும் கட்டுப்பட வைத்திருக்க வேண்டும்.
அரசு இந்த விஷயத்தில் எந்தவித முடிவும் எடுக்காமல், குறைந்தபட்சம் அரசாணைகூட பிறப்பிக்காமல் இருந்தது எதனால் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சென்னை எழும்பூரிலுள்ள டான் பாஸ்கோ பள்ளி நிர்வாகம் தனது பள்ளியில் பத்தாவது படித்துத் தேறிய முகமது வாசிப் என்ற மாணவனுக்கு 11 ஆம் வகுப்பில் இடம் தராமல், அதிக நன்கொடை அளித்த, அவரைவிடக் குறைந்த மதிப்பெண் பெற்ற வெளிப்பள்ளிக்கூட மாணவனுக்கு இடம் அளித்தபோதுதான் பிரச்னை வெடித்தது. முகமது வாசிப் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டதன் பேரில் நீதிமன்றம் தலையிட நேர்ந்தது.
பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பில் இடம் கொடுத்த பிறகுதான் மற்ற பள்ளி மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதே பள்ளியில் படித்த மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது, கட் – ஆஃப் மதிப்பெண் நிர்ணயிப்பது, புதிய அட்மிஷனாகக் கருதி நன்கொடை பெறுவது போன்ற நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது நீதிமன்றம்.
தான் செய்ய வேண்டிய கடமைகளைத் தட்டிக் கழிக்க அரசு ஏன் முயல வேண்டும் என்பதுதான் புரியவில்லை. அதிகார வர்க்கம் எப்போதுமே எந்தப் பொறுப்பையும் சுமக்காமல் முடிந்தவரை தட்டிக் கழிக்கப் பார்க்கும் என்பது தெரிந்த விஷயம். ஆனால், ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் அப்படி இருந்துவிட முடியாது. பொதுமக்கள் நன்மையைக் கருதி தைரியமாக முடிவெடுக்க வேண்டிய கடமை அமைச்சர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உண்டு.
அளவுக்கு அதிகமான நன்கொடை வசூலிக்கும் பள்ளிகள் மீது எந்த நடவடிக்கைகளும் இல்லை. தெருவுக்குத் தெரு காளான்போலப் பெருகி வரும் நர்சரி மற்றும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தப்படுவதில்லை. இதைப்பற்றி அரசின் கல்வித்துறை கவலைப்படுவதாகவே இல்லை. எந்தவிதப் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்ளாமல், நீதிமன்றத் தீர்ப்பாக உத்தரவுகள் வருவதற்குக் கல்வித் துறை காத்திருக்கிறது என்பதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.
திறமைசாலி என்று கருதப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த விஷயங்களில் ஏன் தடுமாறுகிறார் என்பது புரியவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவு அரசின் திறமையின்மைக்குத் தரப்பட்டிருக்கும் சான்றிதழ்.