சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: நடுநிலைப் பாதையே சோனியாவின் கருத்து
புது தில்லி, பிப். 8: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய நடுநிலைப் பாதையை பின்பற்ற வேண்டும் என்றுதான், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் சோனியா காந்தி வலியுறுத்தி இருப்பதாகக் கருத வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் பார்தி -வால் மார்ட் கூட்டு தொழில் முயற்சியின் பின்னணியில், மன்மோகன் சிங்குக்கு எச்சரிக்கையுடன் செயல்படுமாறு ஆலோசனை கூறி சோனியா காந்தி கடிதம் எழுதியதாகக் கூறப்படுவது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி இவ்வாறு பதில் அளித்தார்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தடை செய்ய வேண்டும் என்றோ அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளே இல்லாமல் அதை அனுமதிக்க வேண்டும் என்றோ இரு வேறு அதீதங்களை அந்தக் கடிதம் வலியுறுத்துவதாகக் கருதக் கூடாது.
சாதாரண மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் கொண்டுள்ளது. ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்புகளுடன் கூடிய நடுநிலைப் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலை என்றார் அபிஷேக் சிங்வி.
சோனியா காந்திக்கும் மன்மோகன் சிங்குக்கும் இடையில் கலந்துரையாடல் இல்லை என்ற பாஜக குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.
சில்லறை வியாபாரத்துக்கு பாதிப்பு
சில்லறை வியாபாரத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கும் முன் அது குறித்து முழுமையாக அலசி ஆராய வேண்டும், நாட்டையும் சாதாரண மனிதனையும் பாதுகாப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இதைப் பரிசீலனை செய்த பிரதமர் மன்மோகன் சிங் இவ் விஷயத்தை வர்த்தக அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு வெளிநாட்டினர் முதலீடு தேவை என்பதால் பல்வேறு பெரிய தொழில்களில் முதலீடு செய்ய அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் சிறிய தொழில்களில் கூட அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.
சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கும் சில்லறை வியாபாரிகளுக்குப் போட்டியாக சில இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கறி முதல் பருப்பு, உளுந்து வரை பல்வேறு பொருள்களை விற்பனை செய்யும் மையங்களைத் தொடங்கியுள்ளன. இத்தகைய மையங்களில் விற்கப்படும் பொருள்களின் விலை சந்தை விலையை விட சற்றே குறைவாக உள்ளது. காரணம் பொருள்களை உற்பத்தியாகும் இடத்துக்கே சென்று கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும் விற்பனை மையங்கள் அதி நவீன வசதியுடன் உள்ளன.
இது தவிர, ஒரு குறிப்பிட்ட தொகைக்கு பொருள்கள் வாங்கினால் அவற்றை வீட்டுக்கே அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தொடர்ந்து வாங்கினால் சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. இத்தகைய கவர்ச்சிகரமான திட்டங்களால் மக்கள் சாதாரண வியாபாரிகளைப் புறக்கணிக்கும் போக்கு காணப்படுகிறது.
நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான சில்லறை வியாபாரிகள் உள்ளனர். தமிழகத்தில் சென்னையில் மட்டும் லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். பெரிய நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் சிறு வியாபாரிகள் திணறுகின்றனர். இந்த நிறுவனங்கள் இப்போது பெரிய நகரங்களில் மட்டுமே தங்கள் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளன. காலப்போக்கில் சிறிய நகரங்களுக்கும் அவை விரிவுபடுத்தப்படலாம்.
இதனால் வட்டிக்கு வாங்கி சில ஆயிரங்கள் அல்லது சில லட்சங்கள் முதலீடு செய்து தொடங்கப்பட்ட சிறு கடைகள் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து விடும் என்று வணிகர் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் காலப்போக்கில் சிறு கடைகள் அழிந்தபிறகு, பெரிய நிறுவனங்கள்தான் சந்தை விலையை நிர்ணயம் செய்யும். அப்போது மக்கள் நலன் புறந்தள்ளப்பட்டு லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும். இதனால் விலைவாசி அதிகரிப்பதுடன், இந்த விற்பனையகங்களிலேயே பொருள்கள் வாங்க மக்கள் நிர்பந்திக்கப்படுவார்கள். இதன் காரணமாக, பல லட்சம் பேர் வேலையை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும். வணிகம், விவசாயம், நெசவு போன்ற தொழில்கள் பெருமளவு பாதிக்கப்படக்கூடும் என்றும் வணிகர் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே ஆன் லைன் என்ற ஊக வர்த்தகம் மூலம் பல்வேறு பொருள்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன.
எனவே, பல லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாக இது உள்ளது. இதில் அரசு துரிதமாகத் தலையிட்டு, பல்வேறு அமைப்புகளைக் கொண்ட குழு அமைத்து, இதன் பாதிப்பைக் கண்டறிந்து, சிறு வியாபாரிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஏழைகள் நிறைந்த நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும். அது பல்வேறு தொடர் பிரச்சினைகளுக்கு வழி வகுத்துவிடும்.சில்லறை வியாபாரத்துக்கு பாதிப்பு