`சிம்புவுடன் நடிக்க மாட்டேன்’ : நடிகை பாவனா அறிவிப்பு
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பாவனா. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இதையடுத்து வெயில், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார். தற்போது பரத்துடன் கூடல் நகர், மாதவனுடன் ஆர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பாவனா நடிகர் சிம்புவுடன் நடிக்க மாட்டேன் என்ற பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மலையாள பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
சிம்புவுடன் நான் நடிக்கப்போவதாக அவர் பத்திரிகைகளில் பேட்டி அளித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் நான் அந்த படத்தில் நடிக்க மாட்டேன். சிம்புவுக்கு இப்போது மக்கள் மத்தியில் நல்ல இமேஜ் இல்லை.
சில மாதங்களுக்கு முன்பு வரை சிம்புவுக்கு நல்ல பெயர் இருந்தது. ஆனால் இப்போது இன்டர்நெட்டில் சிம்பு, நயன்தாராவுக்கு முத்தமழை கொடுக்கும் படம் வந்ததோடு சிம்புவின் இமேஜ் மிகவும் குறைந்து விட்டது. கெட்ட பெயர் சம்பாதிப்பது மிகவும் சுலபம். ஆனால் அந்த கெட்ட பெயரை நல்ல பெயராக மாற்றுவது ரொம்ப கஷ்டம்.
சென்னை செல்லும்போது என்னை வந்து பாருங்கள். கதையை கேளுங்கள் என சிம்பு கூறி இருந்தார். ஆனால் அந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன். காரணம் எனது பெயரை நான் கெடுத்துக்கொள்ள விரும்ப வில்லை.
தமிழில் சித்திரம்பேசுதடி படம் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. தொடர்ந்து ஆர்யா படத்திலும் நடித்து வருகிறேன். அந்த படத்தில் எனது உடம்போடு ஒட்டியபடி இருக்கும் பனியன் டிரெஸ் அணியவேண்டும் என டைரக்டர் சொன்னார். ஆனால் அதற்கு நான் மறுத்து விட்டேன்.
எனக்கு கவர்ச்சியில் விருப்பம் இல்லை. நடிப்பில் தான் நாட்டம். அசின் போன்றவர்கள் நம்பர் ஒன்னாக மாறியது கவர்ச்சியை காட்டி இல்லையே. நடிகை சந்தியா எனது நெருங்கிய தோழி. பரத் இரட்டை வேடங்களில் நடிக்கும் கூடல் நகர் படத்திலும் நான் நடித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.