வாடப் போகும் வாழ்க்கை ஆதாரம்
மா.பா. குருசாமி
நமது நாட்டில் உலகமயமாக்கலின் விளைவாக மிகப்பெரிய நிறுவனங்கள் தொழில், வாணிபத்தில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கின்றன.
உற்பத்தியிலும், விற்பனையிலும் சிறிய அளவில் நடைபெறும் தொழில்களை ஓரங்கட்டிவிட்டு, கோடிக்கால பூதங்களாக பெரிய நிறுவனங்கள் கோலோச்சப் போகின்றன. இவற்றால் ஒவ்வொரு துறையிலும் வாழ்க்கை ஆதாரத்தை இழந்து லட்சக்கணக்கான மக்கள் தவிக்கப் போகின்றனர். இதற்கோர் எடுத்துக்காட்டு சில்லறை வாணிபம்.
வேளாண்மையில் இன்றும் கோடிக்கணக்கான மக்கள் சின்னஞ்சிறு அளவில் இரண்டு ஏக்கர், மூன்று ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்கின்றனர். இவர்கள் சாகுபடி செய்யும் உணவு தானியங்களும், காய்கறிகளும், தொழிலுக்கு வேண்டிய மூலப் பொருள்களும் நாடு முழுவதும் இருக்கின்ற நுகர்வோருக்கும் தொழிற்சாலைகளுக்கும் செல்கின்றன.
இதேபோல பெரிய, சிறிய தொழிற்கூடங்களில் உற்பத்தியாகின்ற எண்ணற்ற ஏராளமான பொருள்கள் கோடிக்கணக்கான நுகர்வோர்களுக்குச் செல்கின்றன. இவை எப்படிப் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கும். இவை மொத்த வியாபாரிகளிடம் கைமாறி, இடைப்பட்ட வணிகர்களிடம் சென்று, இறுதியில் சில்லறை வியாபாரிகள் கைகளுக்கு வருகின்றன. அவர்களிடமிருந்து நுகர்வோருக்குப் போகின்றன.
சில்லறை வியாபாரிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையினர் லட்சக்கணக்கில் முதலீடு செய்து பெரிய கடைகளாக அமைத்து, எல்லா வகைப் பொருள்களும் ஓரிடத்தில் கிடைக்கின்ற வகையில் இருப்பு வைத்து விற்பனை செய்பவர்கள். பெரும்பாலும் இப்படிப்பட்ட கடைகள் நகரங்களில் இருக்கும். இவர்களிடம் நுகர்வோர் மட்டுமன்றி சிறிய வியாபாரிகளும் பொருள்களை வாங்குவார்கள்.
இரண்டாம் வகையினர் ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து சிறுகடைகளாக, பெட்டிக்கடைகளாக அமைத்துக் கொண்டு வாணிபம் செய்பவர்கள்.
மூன்றாம் பிரிவினர் நூற்றுக்கணக்கில் முதலீடு செய்து கூடைகளில், பெட்டிகளில், தள்ளுவண்டிகளில் பொருள்களை வைத்து தெருத்தெருவாக பொருள்களை விற்றுப் பிழைப்பவர்கள்.
மொத்தத்தில் நாடு முழுவதும் கணக்கெடுத்தால் பல லட்சம் பேர் சில்லறை வாணிபத்தில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பதை அறியலாம். இவர்களுக்கு வாணிபம் வாழ்க்கை முறை. விற்றால் சாப்பாடு; இல்லையேல் பட்டினி.
அளவும் விளைவும்: நமது நாட்டில் சில்லறை வாணிபத்தின் அளவு எவ்வளவு இருக்கும்? கருத்தியல் அடிப்படையில் நுகர்பொருள் உற்பத்திக்குச் சமமாக சில்லறை விற்பனை இருக்குமென்று கூறலாம்.
நமது நாட்டில் மிகுதியாக மக்கள் தொகை இருப்பதால் உலகில் நமது நாடு பெரிய சந்தையாகக் கருதப் பெறுகின்றது. இதனால்தான் வளர்ச்சி பெற்ற நாடுகளும், மிகுதியாக ஏதாவது ஒன்று அல்லது சில பொருள்களை உற்பத்தி செய்யும் நாடுகளும் அவர்களது எச்சப் பொருள்களை நமது நாட்டில் வந்து கொட்டத் தயாராக இருக்கின்றன.
நமது மக்களிடம் வளர்ந்து வருகின்ற நுகர்வுக் கலாசாரம் கையில் பணமிருந்தால், கடன் கொடுக்க ஆளிருந்தால் எதனையும் வாங்கலாம் என்ற மனப்பான்மையை வளர்த்திருக்கிறது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு “செல்போன்’.
இந்த அங்காடி முறை வளர்ச்சியையும், சில்லறை வாணிபத்தில் வெளியில் தெரியாமல் இலைமறை காயாக இருக்கும் வளத்தையும் வாய்ப்பையும் புரிந்து கொண்டதால் மிகப் பெரிய நிறுவனங்கள் சில்லறை வாணிபத்தில் முதலீடு செய்ய வரிந்து கட்டிக் கொண்டு முன்வருகின்றன.
வரப்போகும் ஆபத்து: நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெரு நகரங்களில் பேரங்காடிகளை அமைத்து வருகின்றனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் சில்லறை வாணிபம் பேரங்காடிகள் மூலம் நடைபெறுகிறது. ஓர் அங்காடிக்குள் நுழைந்தால் வேண்டிய எல்லாப் பொருள்களையும் அங்கு வாங்கலாம். அங்குள்ள மக்களுக்கு அது ஏற்ற முறையாக இருக்கிறது. நமது நகர மக்களுக்கு பேரங்காடிப் பழக்கம் வந்து கொண்டிருக்கிறது.
தென் மாநிலங்களில் ஸ்பென்சர்ஸ் டெய்லி, நீல்கிரிஸ், சுபிக்ஷா, திரிநேத்ரா ஆகிய பெரிய நிறுவனங்கள் நகரங்களில் பேரங்காடிகளை அமைத்து ஓரளவு வெற்றிகரமாகச் சில்லறை வாணிபத்தில் ஈடுபட்டு வருகின்றன. வடக்கு, மத்திய மாநிலங்களில் பண்டாலூன் ரீடெய்ல் என்ற நிறுவனம் 60 உணவுப் பொருள் பேரங்காடிகளை அமைத்திருக்கிறது.
இவற்றையெல்லாம் பார்த்த ரிலையன்ஸ் நிறுவனம் நாம் கற்பனை செய்ய முடியாத அளவில் மிகப் பெரிய திட்டத்தோடு சில்லறை வாணிபத்தில் நுழைந்திருக்கிறது. 2006 நவம்பர் மத்தியில் ஹைதராபாதில் ஒரே நாளில் அதிரடியாக 11 “ரிலையன்ஸ் பிரஷ் அவுட்லெட்ஸ்’ என்னும் மிகப்பெரும் விற்பனை நிலையங்களை அமைத்ததன் மூலம் நாட்டையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
ரிலையன்சின் திட்டம் மிகப் பெரியது. 2010 – 11இல் இந்தியாவில் சில்லறை வாணிபத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாயோடு முதலிடத்தில் இருக்க வேண்டுமென்பது நோக்கம். அதன் தொடக்கம் 22 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு.
ரிலையன்சோடு போட்டி போட்டுக் கொண்டு இன்னும் சில பெரிய நிறுவனங்கள் சில்லறை வாணிபத்தில் பங்கு பெற பெரும் முதலீட்டோடு அங்காடி ஆடுகளத்தில் நுழையப் போகின்றன.
ஆதித்யா பிர்லா குழுமம் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப் போகிறதாம். பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கோப்பர்ஸ் என்ற நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சில்லறை வாணிபத்தில் பெரிய நிறுவனங்கள் 412 பில்லியன் டாலர் முதலீடு செய்யுமென்று மதிப்பிடுகிறது.
இந்த பெரும் பூதங்களான நிறுவனங்கள் ஆயிரங் கோடிகள் என்ற கணக்கில் முதலீடு செய்கின்றபோது சிறிய, பெரிய நகரங்களில் எல்லாம் இவற்றின் கிளை அங்காடிகள் இருக்கும். குறைந்த விலையில் விற்பனை செய்வதாகக் கூறுவார்கள். பொருள்களை மொத்தமாகக் கொள்முதல் செய்வதால் அவர்களால் குறைந்த விலைக்கு வாங்க முடியும். சிறிய உற்பத்தியாளர்கள், விவசாயிகள் அவர்களிடம் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவார்கள். வாங்கும் விலையை அவர்கள்தான் நிர்ணயிப்பார்கள். அவர்களோடு சாதாரண வியாபாரிகளால் போட்டி போட முடியாது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை விலையில் 10 அல்லது 15 சதவீதம் தள்ளுபடி தருவார்கள். இது போதாதா நமது மக்களைக் கவர்வதற்கு? நடுத்தர, மேல்மட்ட மக்கள் இத்தகைய முறையால் பல நன்மைகள் கிடைப்பதாக நம்புவார்கள். இதனால் சங்கிலித் தொடராக இருக்கும் பேரங்காடிகள் கொடி கட்டிப் பறக்கும்; சில்லறை வணிகர்கள் செல்லாக் காசுகளாவார்கள்.
இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் நகரங்களோடு நின்றுவிடாது. இவர்கள் முகவர்கள் மூலமாகவோ புதிய விற்பனை முறைகளின் மூலமாகவோ கிராமங்களிலும் ஊடுருவுவார்கள். கைக்கு எட்டிய தூரம்வரை இவர்களது சில்லறை வாணிபம் பரந்து விரியும்.
பொருளாதாரத்தின் ஏகபோக நடவடிக்கைகள் செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்கும்; ஏழைகளை மேலும் ஏழைகளாக்கும். சிந்திக்கக்கூடிய நடுத்தர மக்கள் கிடைக்கும் சில்லறை நலன்களுக்காக நாட்டு நலனை அடகு வைக்க நினைக்கக் கூடாது.
குவிதல் முறைக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். காட்டு வெள்ளப் போக்காக வரும் பெரும் முதலீட்டால் சில்லறை வணிகர்களை அழியாமல் காப்பது அரசின் கடமை. வருகிற ஆபத்தை சில்லறை வணிகர்களும் சிறு உற்பத்தியாளர்களும் உணர வேண்டும்; அறிய வேண்டும்; இணைய வேண்டும்; போராட வேண்டும்.
நமது நாட்டில் கடைநிலை மக்களைக் காக்காமல், கவனிக்காமல் வளத்தையும் வளர்ச்சியையும் காண இயலாது.
(கட்டுரையாளர்: இயக்குநர், குமரப்பா ஆராய்ச்சி நிறுவனம், தாயன்பகம், திண்டுக்கல்).
==================================================
ஒரு விவசாயியின் எதிர்காலம்?
ச. குப்பன்
எனக்குத் தெரிந்த நண்பர் ஒரு சிறு விவசாயி.
அவருக்கு ஏரிப் பாசனத்தில் நிலமிருந்தது. ஏரிக்கு நீர் வரும் வழிகளில் கல்குவாரிக்காக பள்ளம் தோண்டி கற்களை வெட்டியெடுத்ததால் ஏரியானது முழுவதுமாக நிரம்பி பல ஆண்டுகளாகிவிட்டன. அதனால் விவசாயம் செய்வதற்குச் சிரமமான நிலையில் இருந்தபோது நிலவள வங்கியொன்று புதிய குழாய் கிணறு அமைப்பதற்கு அவருக்கு கடன் கொடுத்தது. டீசல் விற்கும் விலையில் நீர் இறைக்க டீசல் எஞ்சினைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால் கையும்காலும்கூட மிஞ்சாது என்பதால் குழாய் கிணற்றிலிருந்து நீர் இறைக்க மின் மோட்டார் அமைத்தால் நல்லது என எண்ணினார்.
மின்வாரியமானது தொழில்துறைகளுக்கெல்லாம் கேட்டவுடன் மின் இணைப்பு கொடுத்துவிடும். ஆனால் ஒரு விவசாயி விண்ணப்பிக்கும்போது மட்டும் வரிசை முன்னுரிமைப்படி தோராயமாக பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் மின் இணைப்பு கொடுப்பதற்கு உத்தரவிடுவார்கள். இதற்கு மாற்று வழியாக மின்வாரியத்தில் ரூ. 25 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தினால் உடனடியாக இணைப்பு கிடைக்கும் என்பதால் மின்மோட்டார், இதர உபகரணங்கள் மற்றும் மின்வாரிய வைப்புத்தொகையையும் சேர்த்து நிலவள வங்கியில் நீண்டகாலக் கடனாகப் பெற்று குழாய் கிணறு தோண்டி மின் மோட்டாரும் அமைத்தார்.
அந்த ஆண்டு சிறிதளவு கூடுதலாக மழை பொழிந்தால் நன்செய் பயிர் செய்யலாமே என நெற்பயிரை நட்டு பராமரித்து வந்தார். இதற்கான நடைமுறை மூலதனமாக கைமாற்று வாங்கி சரி செய்தார். நெல் அறுவடையாகி களத்து மேட்டிற்கு வரும்போது கைமாற்றாக வாங்கிய கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்தும்படி நெருக்கியதால் விளைந்து வந்த நெல்லை வேறுவழியின்றி மிகக் குறைந்த விலைக்கு விற்று கடனைத் தீர்த்தார்.
சரி நிலவள வங்கி மற்றும் இதுபோன்ற கடன் தொல்லையைத் தீர்ப்பதற்கு பணப்பயிரான கரும்பைப் பயிரிட விரும்பினார். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே கரும்புப் பயிரைப் பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
எனவே தனியார் சர்க்கரை ஆலைகள் நல்ல விலை கொடுக்கின்றனரே என்று பதிவில்லாமல் பயிரிடலாமே என மனைவியின் காதில் மூக்கில் இருந்த நகைகளை அடமானம் வைத்துப் பயிரிட்டார். அந்த ஆண்டு கரும்பு விளைச்சல் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருந்ததாலும் சர்க்கரை ஆலையில் பதிவு செய்யாது கரும்பைப் பயிரிட்டதாலும் “அடிமாட்டு விலைக்கு’ விற்றார்.
கரும்பும் பழி வாங்கிவிட்டது என கலங்கி கரும்பின் வேர்கட்டையை பறித்துப்போட்டுவிட்டு, நிலத்தை உழுது, எள்ளைத்தான் விதைத்துப் பார்ப்போமே என முடிவெடுத்தார்.
அறுவடையின்போது இதுவும் (எள்ளும்) சரியான விலையில் விற்பனை ஆகாததால் வேறு கூடுதல் பணியாக ஆடு வளர்க்கலாம் என்று நிலவள வங்கியிலிருந்து மேலும் கடன் பெற்று ஆடுகள் வாங்கி வளர்த்தார். அந்த ஆடு முழுவதும் நோய் வந்து இறந்து போனதால் இழப்பை ஈடுகட்டுவதற்காக காப்பீட்டு நிறுவனத்தை அணுகியபோது பிரிமீயத் தொகை வாங்குவதற்கு மட்டும் குழைய குழையத் தேடி வந்தவர்கள் இழப்பீடு கேட்கும்போது மட்டும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வரியில் இதற்கான விதி சேர்க்கப்படவில்லை என்றும் அதனால் இந்த இழப்பீடு தொகை கிடைக்காது எனவும் கூறி கைவிரித்து விட்டனர். சரி வேறு என்னதான் செய்வது என எண்ணி மீண்டும் தன்னுடைய நிலத்தில் கத்தரி பயிரிட்டார். திருஷ்டிபடும்படி கத்தரி செடி ஆள் உயரம் வளர்ந்து நல்ல காய் காய்த்தது. இவருடைய துரதிர்ஷ்டம் அந்த ஆண்டில் விளைச்சல் அதிகமாக இருந்ததால் காய் பறித்த கூலி, ஏற்றிச் சென்ற பேருந்துக் கட்டணம் மற்றும் இறக்குக் கூலியைக் கூட கத்தரிக்காயின் விற்பனை வருவாயில் சரிக்கட்ட முடியவில்லை.
இந்த நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்காக இவருடைய நிலத்திற்கு அருகில் சென்ற ஓடையில் பெரிய குழாய்க் கிணறு ஒன்றை அமைத்து நீரை உறிஞ்சியதால் இவருடைய சிறிய குழாய்க் கிணற்றில் நீர் வற்றிவிட்டது. அரசு நிர்வாகத்துடன் போட்டி போட்டுக் கொண்டு அந்த அளவுக்கு ஆழமாக குழாய்க் கிணறு அமைக்க வசதி இல்லாததாலும் நிலவள வங்கிக் கடனை உடனே திரும்பச் செலுத்தவேண்டிய நிர்பந்தத்தினாலும் என்ன செய்வது என்று தத்தளித்தார்.
இச்சமயத்தில் நிலவள வங்கியில் கடன் பெற்று நிலுவையாக உள்ளவர்களின் கடனுக்கான வட்டியில் பாதியையும் மற்றும் அசல் தொகை முழுவதையும் செலுத்தினால் எஞ்சிய பாதி வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. உடனடியாக 25 சதவீதம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சுற்றத்தாரிடம் கைமாற்றுக் கடன் வாங்கி கால்பங்கு தொகையை அவர் செலுத்தினார்.
குழாய்க் கிணற்றில் நீர்வற்றிவிட்டதால் தொடர்ந்து நிலத்தில் பயிரிட முடியவில்லை; என்ன செய்வது என நிலத்தை விற்று நிலவள வங்கி மற்றும் இதர கடன்களையாவது தீர்த்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என எண்ணினார். இதுதான் சமயம் என அவருடைய நிலத்தை மிகக் குறைந்த விலைக்குக் கேட்டனர். கடனை மட்டும் சரி செய்கிற அளவுக்காவது தொகை வந்தால் போதும் என்று நிலத்தை விற்று கடன் அனைத்தையும் தீர்த்துவிட்டார்.
இந்த நடவடிக்கை முடிந்த சமயத்தில் புதியதாகப் பொறுப்பேற்ற அரசு நிலவள வங்கியில் நிலுவையில் உள்ள கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது என அறிவித்தது. அது மட்டுமன்றி, அவருடைய ஊரின் அருகாமையிலுள்ள தரிசு நிலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப் போவதாகவும் அறிவித்தது. அதனால் அவர் விற்ற நிலத்தை அவரிடம் அடி மாட்டு விலைக்கு வாங்கியவர் “யானை விலை குதிரை விலையாக’ மிக அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் கண்டார். ஆனால் இவரோ இப்போது ஒரு நிலமற்ற ஏழை கூலி விவசாயத் தொழிலாளியாகப் பிழைப்பைத் தேடி நகரத்தை நோக்கிச் சென்றார். இவருடைய இந்த நிலைமையை யாரிடம் சென்று முறையிடுவது?
இத்தகைய விவசாயிகளைக் காப்பதற்கு என்னதான் செய்ய வேண்டும்? ஒவ்வொரு கிராமத்திலும் அறுவடை சமயத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை நல்ல விலை கிடைக்கும்போது விற்பதற்கு ஏதுவாக சிறிது காலம் பாதுகாப்பாக விளைபொருள்களை வைத்திருப்பதற்கான குளிர்பதன கிடங்கை அமைக்க வேண்டும். அதுவரையில் நடைமுறைச் செலவை ஈடுகட்டுவதற்காகக் குறைந்த வட்டியில் இந்த விளைபொருள்களை அடமானம் வைத்துக் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதன்மூலம் இவரைப் போன்ற விவசாயிகளுக்கு விளைவித்த பயிர்களிலிருந்து முழு வருமானமும் கிடைக்கும். அவர்களின் வாழ்வும் ஏற்றும் பெறும்.
வங்கிகள் நடைமுறை மூலதனம் வழங்கும்போது பயிர்கள் மூலம் சரியான வருமானம் கிடைக்காதபோது அடுத்த பயிருக்கான கடனை முந்தைய கடனை அடைத்தால்தான் மறுபடியும் கடன் கொடுக்க முடியும் என மறுக்கக் கூடாது. அதற்குப் பதிலாக மேலும் சிறிது கடனைக் கொடுத்து நொடிந்த விவசாயிகளை கைதூக்க உதவ வேண்டும்.
விவசாயிகளின் பயிர்கள், கால்நடைகள் போன்றவற்றுக்கு இழப்பு ஏற்படும்போது காப்பீட்டு நிறுவனங்கள் சரியான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க தகுந்த ஏற்பாடு செய்தால் மட்டுமே அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த முடியும். அதை மட்டும் செய்தாலே போதும். விவசாயிகள் தற்கொலை பெருமளவில் தடுக்கப்பட்டுவிடும்.
(கட்டுரையாளர்: தலைமைக் கணக்கர், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மூங்கில்துறைப்பட்டு).
==================================================