மேலும் 2 ராணுவ தளம்: உல்பா எதிர்ப்பு
குவஹாட்டி, செப். 17: அசாமில் மேலும் 2 இடங்களில் ராணுவ தளம் அமைக்கும் முயற்சிக்கு உல்பா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நகான் அருகிலுள்ள மிசா மற்றும் குவாஹாட்டியின் புறநகர்ப் பகுதியில் உள்ள சங்சாரியில் ராணுவ தளங்கள் அமைக்க ராணும் முயன்று வருகிறது.
இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உல்பா அமைப்பின் தலைவர் பரேஷ் பரூவா, செய்தி நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமை அறிக்கை அனுப்பியுள்ளார்.
ராணுவ தளங்களுக்கு இடம் ஒதுக்கப்படுவதால் அங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் இடம் பெயர வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இது மக்களிடையே நிலையற்ற தன்மையைத் தோற்றுவிக்கும்.
இத் திட்டம் நிறைவேறினால், இப்பகுதியில் உள்ள டீ பயிர்கள் அழிக்கப்படும். இங்குள்ள வன விலங்களும், தாவரங்களும் கூட அழிக்கப்படும். இது மாநிலத்தின் இயற்கைச் சமன்பாட்டையே பாதிக்கும்.
ராணுவத்தின் இச்செயல் அமைதியை விரும்பும் அசாம் மக்கள் மீதான அத்துமீறலாகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.