பாரதிதாசன் பல்கலை. விரிவுரையாளருக்கு இளம் விஞ்ஞானி விருது
திருச்சி, பிப். 14: பாரதிதாசன் பல்கலைக்கழக தொலை உணர்வு மைய விரிவுரையாளர் சொ. இலக்குமணனுக்கு மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் “இளம் விஞ்ஞானி’ விருது வழங்கியுள்ளது.
இவருக்கு ஆய்வு நிதியாக ரூ. 10.80 லட்சமும் வழங்கப்படுகிறது.
தமிழக கடலோரப் பகுதிகளில் தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும், சுனாமி பேரழிவு, இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றால் கடலோர வேளாண் நிலங்கள், சதுப்பு நிலங்கள், இறால் வளர்ப்புப் பகுதிகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள் ஆகியன எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இவற்றுக்கான மறுசீரமைப்பு ஏற்பாடுகள் குறித்தும் இவர் ஆய்வு செய்ய இருக்கிறார். இந்த ஆய்வை செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட நுண்ணிய புகைப்படங்களைக் கொண்டும், புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தின் மூலமும் மேற்கொள்ள உள்ளார்.