புதிய ஊரக சாலைகள் அமைக்க ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு
புது தில்லி, மார்ச் 28: நடப்பு நிதியாண்டில், நாட்டில் புதிய ஊரக சாலைகள் அமைக்க ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமரின் கிராம முன்னேற்ற திட்டத்தின் கீழ், மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ், ஆயிரம் மக்கள் வசிக்கும் அனைத்து கிராமங்களிலும் அனைத்துப் பருவநிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய தரமான புதிய சாலைகள் அமைக்கப்படும்.
மலைக் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களில் புதிய சாலைகள் அமைக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் நாட்டில் 66,802 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 1.46 லட்சம் கி.மீ. புதிய சாலைகள் அமைக்கப்படும். மேலும், 1.94 லட்சம் கி.மீ. பழைய சாலைகளும் புதுப்பிக்கப்படும்.
இத்திட்டம் 2005-06-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்ட இரு ஆண்டுகளில் 10,303 கிராமங்களுக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. 36,341 பழைய சாலைகள் மேம்படுத்தப்பட்டன. 2005-06 ஆம் நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ.4,219.98 கோடியும், 2006-07-ம் நிதியாண்டில் ரூ.5,376.28 கோடியும் செலவழிக்கப்பட்டதாக ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங் தெரிவித்தார். சாலை அமைப்புப் பணிகளில் தரத்தைப் பாதுகாக்க, மூன்றடுக்கு தரக் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் கூறினார்.
இப்பணிகளில் மக்களின் பங்களிப்பை உறுதிசெய்ய பணி நடைபெறும் இடங்களில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பணிகளின் நிதி நிர்வாகங்கள், தொழில்நுட்ப ஆய்வு ஆகியவை ஆன்லைன் மூலமாக கண்காணிக்கப்படுகிறது என அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங் தெரிவித்தார்.
========================================================
தமிழகத்தில் சாலை மேம்பாட்டுக்கு ரூ.77 கோடி: டி.ஆர். பாலு அனுமதி
புதுதில்லி, மார்ச் 29: மறுசீரமைக்கப்பட்ட மத்திய சாலை நிதித் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் சாலை ரூ.77.70 கோடி செலவில் சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு அனுமதியளித்துள்ளார்.
தமிழகத்தில், மாநில நெடுஞ்சாலைகள், முக்கிய மாவட்ட சாலைகள் மற்றும் இதர மாவட்டச் சாலைகளில் 26 சாலைகளில் விரிவாக்கப் பணிகளும் வலுப்படுத்தும் பணிகளும் நடைபெறும்.
முக்கியத் திட்டங்கள் விவரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம் -சோமங்கலம் சாலை மேம்பாட்டுக்கு ரூ.9 கோடி.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி -பட்டுக்கோட்டை -செங்கப்பட்டி சாலை ரூ.4.56 கோடியில் விரிவுபடுத்தப்பட்டு, மேம்படுத்தப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யார்-வந்தவாசி-போளூர் சாலை சதார்ரங்கல் சாலையுடன் இணைக்க ரூ.3.84 கோடி செலவிடப்படும்.
ஆற்காடு -விழுப்புரம் சாலைக்கு ரூ. 4.19 கோடி செலவிடப்படும்.
செய்யூர் -வந்தவாசி -போளூர் சாலையை மேம்படுத்தி, விரிவுபடுத்த ரூ.3.71 கோடி.
வேலூர் மாவட்டத்தில் திருவாளம் -காட்பாடி -வேங்கடகிரி கோட்டா சாலையில் பழுதுநீக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.4.10 கோடி செலவிடப்படும்.
சித்தூர் -திருத்தணி சாலையை மேம்படுத்த ரூ.4 கோடி செலவிடப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் பெண்ணாகரம் -நாதன்முறை சாலை மேம்பாட்டுக்கு ரூ.3.50 கோடி.
சேலம் மாவட்டத்தில் பொன்னம்மாபேட்டை முதல் வலசையூர் வீராணம் சாலை வழியாக சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.3.50 கோடி செலவிடப்படும்.
சென்னையில் ரூ.3 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கப்படும்.
திருவாரூர் மாவட்டத்தில் உளிக்கோட்டி -தளிக்கோட்டை-வடசேரி சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.5 கோடி செலவிடப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை -திருத்தணி -ரேணிகுண்டா சாலை மற்றும் இச் சாலையில் இடம் பெற்றுள்ள மேம்பாலத்தைப் புதுப்பிக்க ரூ.2.50 கோடி.
கரூர் மாவட்டத்தில் தோகமலைப்பட்டி சாலையில் பாலம் அமைக்க ரூ.1 கோடி செலவிடப்படும்.
திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சேலம், சிவகங்கை, கோவை, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திண்டுக்கல், சென்னை, தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, திருவள்ளூர், கரூர், ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் சிதம்பரத்திலும் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.