அபூர்வ ரயில் விபத்து
பிகார் மாநிலத்தில் பாகல்பூர் என்னும் இடத்தில் அபூர்வமான ஒரு ரயில் விபத்து நடந்துள்ளது. இதில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ரயில் தண்டவாளத்துக்கு மேலே சாலைப் போக்குவரத்துக்காகக் கட்டப்பட்டிருந்த பழைய பாலம் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கீழே ரயில் சென்று கொண்டிருந்த நேரம் பார்த்து மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இது தற்செயலாக ஏற்பட்டதாகக் கூறமுடியாது. அப்பாலம் 150 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகும். அது பழுதடைந்துவிட்ட காரணத்தால் அப்பாலத்தை இடித்து அகற்றுவது என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து மேம்பாலத்தின் பகுதிகளை இடிப்பதில் ஈடுபட்டது.
- ஏற்கெனவே இரண்டு வளைவுகள் இடிக்கப்பட்டுவிட்டன. இடிப்பு வேலைகளின் போது இடிபாடுகள் கீழே தண்டவாளத்தின் மீது விழுந்திருக்கின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து தடைபட்டது. தண்டவாளத்தின் மீது விழுந்த இடிபாடுகள் அகற்றப்பட்டவுடனேயே ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேம்பாலத்தின் மீதிப்பகுதியும் மூன்றாவது வளைவும் இடிக்கப்படாத நிலையில் ரயில் போக்குவரத்தை மீண்டும் அனுமதித்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. முழுவதுமாக இடிக்கப்படாத நிலையில் மேம்பாலத்துக்கு அடியில் ரயில் சென்ற சமயம் பார்த்து பாலம் இடிந்ததற்கு காரணம் இருக்க வேண்டும். ஏற்கெனவே ஆட்டம் கண்டிருந்த பாலம் ரயில் வந்த அதிர்ச்சியால் முற்றிலும் இடிந்து விழுந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
விபத்துக்கு ரயில்வேதான் காரணம் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். வழக்கம்போல சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்துத் தவிர்ப்பு விஷயத்தில் ரயில்வே இலாகா போதுமான அக்கறை செலுத்தவில்லை என்பதையே இந்த விபத்து காட்டுகிறது.
கடந்த 30 அல்லது 40 ஆண்டுகளாகவே ரயில்வே விஷயத்தில் விரும்பத் தகாத போக்கு ஒன்று காணப்படுகிறது. அதாவது வட்டார மக்களின் நிர்பந்தம் காரணமாக அல்லது வாக்குகளைத் திரட்டும் ஆர்வம் காரணமாக புதிதுபுதிதாகத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் காட்டப்படுகின்ற அதே அளவு முனைப்பு பராமரிப்பு விஷயத்தில் அல்லது விபத்துத் தவிர்ப்பு விஷயத்தில் காட்டப்படுவதில்லை. அண்மையில் தமிழ்நாட்டில் ஆளில்லாத “லெவல் கிராஸிங்’ ஒன்றில் ஷேர் ஆட்டோ மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் பலர் உயிரிழந்தனர்.
நாட்டில் இன்னமும் சுமார் 21 ஆயிரம் ஆளில்லாத லெவல் கிராஸிங்குகள் உள்ளன. சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் ரயில் பாலங்களில் 51 ஆயிரம் பாலங்கள் 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. அதாவது அவை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. பாகல்பூரில் ரயில்வண்டி மீது இடிந்த விழுந்த மேம்பாலம் 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். ஆளில்லாத லெவல் கிராஸிங்குகளின் பிரச்சினையைத் தீர்க்க அவ்விடங்களில் மேம்பாலங்களைக் கட்டுவதானால் ரூ. 4 லட்சம் கோடி தேவை என ஒரு மதிப்பீடு கூறுகிறது. வயதாகிப்போன 51 ஆயிரம் ரயில் பாலங்களை புதுப்பிப்பதானால் இதே போல சில லட்சம் கோடி ரூபாய் தேவைப்படலாம். இப்போதுள்ள அளவில் ரயில்வே இலாகாவிடம் இதற்குப் போதுமான நிதி வசதி இல்லை. பழைய பாலங்களைப் புதிப்பிப்பதற்குள் கடந்த நூற்றாண்டில் கட்டப்பட்ட பாலங்கள் பழையதாகிவிடும் என்ற நிலைதான் உள்ளது. ரயில்வேயின் நிதி வசதியைப் பெருக்குவதிலும் அதன் செயல்பாட்டை மேம்படுத்துவதிலும் புதுப்புது வழிகளைப் பின்பற்றுவதில் அமைச்சர் லாலுபிரசாத் பரவலான பாராட்டுதலைப் பெற்றுள்ளார். ஆளில்லாத லெவல் கிராஸிங்குகள், பழைய பாலங்கள் ஆகிய இரு பிரச்சினைகளைத் தீர்க்க அவர் தனியார் துறை மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் ஒரு புதுமையான வழியை கண்டுபிடிக்க முற்படவேண்டும்.